முகிழ்த்தது முத்து

ஆயுள் தண்டனை!…. ( சிறுகதை ) ….. திக்குவல்லை கமால்.

“ரெண்டு புள்ளப் பெத்த பொம்பள” – இப்படிச் சொன்னால் எவருமே நம்பமாட்டார்கள். ஒல்லியான உடம்பு. அச்சொட்டான அங்கங்கள். புன்னகை பூக்கும் கீற்று உதடுகள். துடிக்கும் கண்கள். உண்மையில் இருபது வயதைக் கூட அவள் இன்னும் தாண்டவில்லைத்தான். அவளது வாழ்க்கையில் எல்லாமே அவசர அவசரமாக நடந்து முடிந்துவிடுவது போல..

நேற்றைய சம்பவம் அவளை வெகுவாகப் பாதித்து விட்டது.

பிள்ளைகள் இருவரும் நித்திரையாகி விட்டார்கள். மூன்றரை வயதில் ஒன்றும் இரண்டரை வயதில் இன்னொன்றுமாக இரண்டிருந்தால் இனிக் கேட்கவா வேண்டும்.

ரீவியைத் தட்டிவிட்டு அமர்ந்த போதுதான் முன் வாசலில் அந்த பெல் சத்தம் கேட்டது.

“ஆ..ரஸ்மின்… இந்தப் பொக்கத்துக்கு வர நெனச்சீக்கி”

அவன் சைக்கிளை விட்டு இறங்காமலே காலைக் குத்திக்கொண்டு நின்றான்.

“சும்மா வந்த… மச்சனில்லையா?”

“வெளன போனது இன்னேம் வரல்ல”

“சாச்சி காயிதமனுப்பினா?”

அவன் ·ஃபர்ஸானாவின் பெரியம்மாவின் மகன். இவளுக்கு ஆண் சகோதரர்களென்று எவருமே கிடையாது.

“உம்ம இப்ப காயிதமனுப்பியல்லேன்”

“அதெனா?’ அவன் ஆச்சரியத்தோடு கேட்டான்.

“அடுத்தூட்டுக்கு ·போன் வந்தாப் பொறகு அடக்கெட உம்ம பேசிய”

“சரிசரி அப்ப லேசிதானே”

அதற்குமேல் பேசக் கிடைக்கவில்லை.மோட்டபைக் வந்து நின்றது.

“மச்சன் இப்பவா வார” – ரஸ்மின் முந்திக்கொண்டு கேட்டான்.

“ம்..” என்றவன் அதே வீச்சில் உள்ளே போய்விட்டான்.

“நான் பொறகு வாரன் ·ஃபர்ஸானா” ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் அவன் புறப்பட்டான்.

அவளுக்கு மாப்பிள்ளை மீது அடங்காத கோபம் பொங்கியது.

“பேசி முடிஞ்சா.. இனம் கொஞ்சம் பேசேலேன்”

உள்ளே சென்றவன் காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பி நின்று இப்படிக் கேட்டான். முகத்திலே கருமை அப்பிக் கிடந்தது.

“மனிசத் தனமில்லாத மூதேவியொண்டு” அவள் சபித்துக் கொண்டாள்.

“புள்ள ரெண்டும் கட்டில்ல.. அங்கலே ரீவியப் போட்டு வெச்சீக்கி..வெக்கம் கெட்ட பேச்சிக்கு மட்டும் கொறச்சலில்ல” வார்த்தைகள் தடிப்பாக விழுந்தன.

“எனக்கு நானாமாரோடையாலும் கொஞ்சம் பேச வழில்ல இந்த மனிசனால” கோபம் பொத்துக்கொண்டு பாய்ந்தது.

“ம்..நானாமாருதான்”

“அதை அங்கீகரிக்கத் தயாரில்லாத பாங்கு அவனது வார்த்தைகளில்.

“எண்ட தல நஸீபு”

கைகளால் தலையில் அடித்துக் கொண்டு அடக்க முடியாத அழுகையோடு **காம்பராவுக்குள் புகுந்தாள். கதவைப் படாரென அடித்துப் பூட்டினாள்.

அவனுக்கு இது பழகிப் போன சங்கதி.

எப்படியாவது மனைவியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்ற கடுமையான முயற்சியில் இப்பொழுதெல்லாம் அவன் முழுமையாகவே இறங்கி விட்டான்.

·ஃபர்ஸானாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சென்ற வெள்ளிக் கிழமையும் இப்படித்தான்.

“ஃபர்ஸானா தாத்தா கோல்”

பக்கத்து வீட்டுச் சிறுவன் கத்தினான்.

“உம்மாவாயீக்கும்.. ஓடிவாரன்”

அவள் அனுமதி கேட்டுக் கொண்டு நிற்கவில்லை.

பத்து நிமிடமாக உரையாடல் தொடர்ந்தது.

“எனத்தியன்…·ஃபர்ஸானா உம்ம செல்லிய?”

“வரோணுமாம்”

“கொமரு குடுக்கவா..? இல்லாட்டி ஊடுகெட்டவாமா..? இன்னம் ரெண்டு வருஷத்து நிண்டிட்டே வரச்செல்லு”

இப்படிக் கதை ஆரம்பித்துவிட்டது. கோல் வரும் நேரமெல்லாம் முகம் கோணாமல் கூப்பிட்டு உதவும் அவர்களோடு இணக்கமாக நடந்து கொள்ள வேண்டுமென்பதில் அவள் கவனமாக இருந்தாள்.

“ம்.. இவளவு நேரமும் கோல்ல கதக்கியத்துக்கு ஓங்கடும்ம சவுதீல ராஜாத்தியா”

அவளது சுணக்கத்துக்கு வேறு அர்த்தம் கற்பித்துக் கொண்ட கணவனின் நக்கல் அவளுக்குப் பிடிக்கவில்லை.

“ஒங்களுக்கு எனத்த புடிச்சீக்கோ தெரிய. எனக்கு வேல ஒத்தனொத்தனோட பேசித்திரீததுதான்”

“ஹிஹ்ஹி” – சிரிப்பு.

“ஒங்களோட அந்த டைமில கதச்சதுக்கு சிரிச்சதுக்கு எல்லோரேடேம் எனக்குக் கதக்கத் தேவில்ல. இந்த மட்டுகெட்டதனம்

ஓங்கிட்டீக்குமெண்டு நான் மனாவிலயாலும் நம்பல்ல…”

“ம்..கோவம் மட்டும் வார. போன கதயலால வேலில்ல. இதூப்பொறகாலும் நான் சொல்லியத்த கேட்டு நடந்துக்கோ”

“ம்..கேக்காம நடக்கிய மாதிரியேன் நீங்க செல்லிய”

நினைத்து நினைத்துக் கவலைப்பட இப்படி ஓரிரண்டு சந்தர்ப்பங்களா என்ன?

·ஃபர்ஸானாவுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். வாப்பாவினால் மூன்று குமர்களையும் கரை சேர்க்க முடியாதென்பது உறுதியாகத் தெரிந்ததால் அவளது உம்மா சவூதிக்குப் புறப்பட்டுப் போய் முழுசாக ஆறு ஆண்டுகள்.

இரண்டு வருடத்துக்கொரு முறை வந்து இரண்டு சகோதரிகளைக் கரை சேர்த்து விட்டாள்.

·ஃபர்ஸானாவுக்காகத்தான் மீண்டும் பயணப்பட்டாள்.

·ஃபர்ஸானாவின் மூத்த சகோதரியில் உறவினர்தான் அவளது கணவன் அஸாம். தாத்தா வீட்டுக்கு வந்துபோன பழக்கத்தில் இருவருக்குமிடையே உறவேற்பட்டுவிட்டது. சுறுசுறுப்பாக தொழில் வேறு செய்து கொண்டிருந்தான் அப்போது.

“இந்தக் கூத்து சரிவாரல்ல. விஷயத்த முடிச்சி வெக்கியதுதான் நல்லம்… பாத்துப் பாத்தீந்து வேலில்ல”

“அவளுக்கு வயசு போதவேன். இப்பதானே பதினாறு. இன்னம் ரெண்டு வருஷமாலும் பொகோணும்”

“ரெண்டு வருஷம் போறதுக்கெடேல எனத்தெனத்த நடக்குமோ தெரிய”

“உம்மக்கு காயிதம் போட்டிட்டு எல்லாரும் சேந்து விஷயத்தச் செய்யோண்டியதுதான்..குடுக்கல் வாங்கலப் பொறகு பாத்துக்கொளேலும்”

குடும்ப அனுபவசாலிகள் ஃபர்ஸானா விடயமாக தங்களுக்குள் கலந்துரையாடி இறுதி முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

இரண்டொரு கிழமைக்கு மேல் நீடிக்கவில்லை. ·ஃபர்ஸானா – அஸாம் திருமணம் இனிதே நடந்தேறியது.

உல்லாச வாழ்க்கைதான். இளைய மகளின் காரியம் லேசாக நடந்துவிட்ட மகிழ்ச்சியில் உம்மாவும் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

மூன்றே வருடத்தில் இரண்டு பிள்ளைகளையும் பெற்றுப் போட்டுவிட்டார்கள்.

“அஸாமுக்கென்டா நல்ல சான்ஸொண்டு பட்ட.. மெலிஞ்ச கடுவன்.. நல்லோரு துண்டப் போட்டுக்கொண்டம். தெம்பிலி கொலேல காக்க நிண்ட மாதிரி”

அவனது நண்பர்கள் அவனைப் பகிடி பண்ணும்போது தான் பெரிய அதிர்ஷசாலியென்று பூரித்துப் போவான் அஸாம்.

ஒருநாள் கடற்கரையில் கூடிக் கதைத்துக் கொண்டிருந்தபோது ‘அழகிய மனைவியும் பொருத்தமற்ற கணவனும்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்காகவே அது பரிணாமடைந்துவிட்டது. எத்தனையோ அழகிகளின் கதை அங்கே அலசப்பட்டது.

அன்றுமுதல் அவள் அழகுக்குத் தான் பொருத்தம்தானா என்ற விஷச்செடி அவனுக்குள் சடைத்து வளரத் தொடங்கிவிட்டது.

“இவனோட இனி வாழ்ந்து வேலில்ல” இப்படிப் புலம்பினபடியே கட்டிலில் எழுந்தமர்ந்து கொண்டாள் ·ஃபர்ஸானா.

சற்று நேரத்துக்கு முன்புதான் கதவு பூட்டும் சத்தமும் வெளியே பைக் சத்தமும் கேட்டது. கூட்டாளிமாரோடு கூத்தாடிவிட்டு வழமைபோல்

பதினொரு மணிக்குத்தான் அஸாம் வருவான்.

லைற்றைப் போட்டு குழந்தைகள் இரண்டையும் ஒழுங்கமைத்துப் படுக்க வைத்தாள். அந்தப் பிஞ்சு முகங்களை ஊடுருவிப் பார்த்தாள்.

“ஒன்டாலும் என்னப் போலில்ல. சபட மொகம்.. கறுப்பு”

திரும்பிப் பார்த்தாள். அலுமாரியின் பக்கக் கண்ணாடியில் அவள் விம்பம் தெரிந்தது.

அந்த சோகத்துக்குள்ளும் அவள் என்ன மாதிரி அழகாகத் தோற்றமளித்தாள்.

“ம்…எனக்கு இப்பதான் இருவது வருஷம்.. நான் இன்னேம் பஸிந்துதான்.. என்னைக் கலியாணமுடிக்க இனி ஒருத்தரும் புரியப்படாட்டீம் காரியமில்ல. எனக்கு இந்தக் கத்தம் பொறப்பான வாண.. எனக்கொண்டும் வெளங்காத வயஸில அநியாயமா மாட்டிக் கொண்ட”

தாய்ப்பாசம் புயலாச் சுழன்றடிக்க…கண்ணீரோடும் கவலையோடும் அவள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாளா?

“நடந்தது நடந்திட்டி..மாப்புள பொணாட்டிக்கெடேல சண்ட தக்கம் வாரதானே.. சமாளிச்சிக் கொளோணும்.. உட்டுப்போட்டு நெனக்கீயதே பாவம்”

இப்படி உபதேசம் பண்ண எத்தனையோ பேர் வரத்தான் போகிறார்கள். இந்த அபத்த வாழ்க்கையிலிருந்து அவளை மீட்டெடுக்க எவரும் வரப்போவதில்லையே..

யோசித்தாள். முன் வாசலில் வந்தமர்ந்து கொண்டு யோசித்தாள். விளையாட்டுத் தனமான ஆசைகளின் விளைவுகளிலிருந்து அவள் தன்னை விடுவித்துக் கொள்ள முனைந்துவிட்டாளா?

வெளியே பைக் சத்தம் கேட்டது.

நேரம் பதினொரு மணி.

கதவைத் திறந்த அஸாம் திடுக்கிட்டான். ·ஃபர்ஸானா இப்படியொரு கோலத்தில் அமர்ந்திருப்பாளென்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளது முகபாவம் ஆரோக்கியமாக அவனுக்குப் படவில்லை. “·பர்ஸானா பதினொரு மணியாகீட்டேன்..வாங்க படுக்கோம்”

இதமாக ஒலித்தது அவன் குரல். இரவு நகரும்போது என்ன பிரச்சினையிருந்தாலும் ஆண் குரல்களெல்லாம் இப்படித்தான் ஒலிக்குமோ!

“ம்..படுக்க.. படுத்தது போதும்”

இறுதி முடிவாகத்தான் அவள் சொல்கிறாளென்பது அவனுக்கு இன்னும் புரியவேயில்லை.

மல்லிகை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.