முகிழ்த்தது முத்து

நெல்லிமரப் பள்ளிக்கூடம்!…. ( சிறுகதை ) ……. நந்தினி சேவியர்.

அந்தப் பள்ளிக்கூடம் கட்டப்பட்ட காலம் பற்றி இவனுக்கு எதுவும் தெரியாது.

இவனது அம்மா அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும், இவனது மாமா குஞசியப்புமார் எல்லாம் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும் இவன் அறிந்திருந்தான்.

மதுர மரங்கள் சூழப்பெற்ற வயல் வெளித் தாமரைக் குளத்தைத் தாண்டி வரம்பினால் நடந்து ஒரு மண் ஒழுங்கையால் ஏறி இவன் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு போயிருக்கிறான்.

பெரிய தாட்டான் குரங்குகள் வாகை மரங்களில் தாவுகின்ற குழைக்கடைச் சந்தியால் திரும்பி கேணியடியால் செல்லும் பிறிதொரு பாதையாலும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு இவன் போயிருக்கிறான்.

சுற்றிவர மாமரங்கள் சூழப்பெற்ற கிடுகால் வேயப்பெற்ற இரண்டு மடுவங்கள் கொண்டது தான் அந்தப் பள்ளிக்கூடம்.

இவனது அப்பு இவனைத் தோளில் உட்கார வைத்து ஒரு சரஸ்வதி பூசைக்கு மறுதினம் அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது இவனுக்கு ஞாபகம்.

கந்தசாமி, செல்லம், சபாரத்தினம், சந்தியாப்பிள்ளை பூமணி, கோயிலம்மா, ராசலிங்கம், சின்னான் என்கின்ற கதிரவேலு ஆகியோருக்கு ஏடு திறந்ததும் அதே நாள்தான்.

தொய்வுக்கார மீனாட்சியம்மா என்கின்ற ரீச்சர் தான் இவனுக்கு ஆனா, ஆவன்னா சொல்லிக் கொடுத்த முதல் ரீச்சர்.

பள்ளிக்கூட வாயிலில் நெடுத்து வளர்ந்திருந்த சர்க்கரை நெல்லி மரத்தின் கீழ் வட்டமாக இருந்து ‘அறஞ் செய விரும்பு’ என்று கத்திக் கத்தி ஆத்திசூடி வரிகளைப் படித்ததும் இவனுக்கு நினைவிருந்தது.

வேறு பாடசாலை மாணவர்கள் ‘உமா வாசகம்’ படிக்க இவனும் நெல்லி மரப்பள்ளிக்கூட மாணவர்களும் பாலபாடம், பாலபோதினி படித்ததும் இவனுக்கு ஞாபகத்திலிருக்கிறது.

மிக நோஞ்சானாக இருந்த இவனை நாலாம் வகுப்பு காசிநாதன் `கடுகர்’ என்று செல்லமாக கூப்பிட்டதும் இவனுக்கு நினைவிருக்கிறது.

முரடான காசிநாதன் பின் நாட்களில் `சண்டியன் காசி’யாகியதும் இவனது நினைவிலில்லாமலில்லை. நெல்லிமரப் பள்ளிக்கூடத்தில் இவன் படித்த காலத்தில் பெரிய சூரியகிரகணம் ஒன்று வந்ததும் இவனுக்கு நினைவிருக்கிறது.

பொன்னையா வாத்தியார் கண்ணாடி ஒன்றில் கரும்புகை பிடித்து அதற்குள்ளால் மாணவர்களைச் சூரியன் பார்க்க வைத்ததும் இவன் நினைவில் உண்டு.

பொன்னையா வாத்தியார் கரும்பலகையில் கீறும் பூனைக்குட்டிகளின் படமும் இவனுக்கு ஞாபகமிருக்கிறது.

பொன்னையா வாத்தியாரின் மோட்டார் சைக்கிள், அச்சைக்கிளின் பின்புறமுள்ள மருந்துகள் உள்ள பெட்டி எல்லாம் அவனது ஞாபகத்திலுண்டு. பொன்னையா வாத்தியார் ஒரு முறிவு நெரிவு வைத்தியரும், விசகடி வைத்தியரும் கூட.

நெல்லி மரப்பள்ளிக்கூடத்தின் பொறுப்பாளராக – பொறுப்பாளர் போல -அவர் இருந்தாலும் தலைமை ஆசிரியர் பொறுப்பு மீனாட்சியம்மா ரீச்சருக்குத்தான்.

இவன் முதலாம் வகுப்பில் படித்த காலத்தில்தான் தாமரைக் குளத்தடியில் நன்னியரின் மகன் செல்லையன் கண்டங்கருவாலை பாம்பு கடித்து மரணித்துப் போனான்.

பொன்னையா வாத்தியாரின் விசகடி வைத்தியம் சரிவராமல் நீலம் பரிந்து சின்னானின் அண்ணன் செத்துப்போனான்.

சரஸ்வதி பூசைக்கு பூ பிடுங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் இவனும் இவனைச் சேர்ந்தவர்களும்…. பல நாட்கள் தாமரைக் குளத்தடிக்கு போகாதிருந்ததும் இவனுக்கு நினைவிலிருந்தது.

சபாரத்தினம் தண்ணீர் அள்ளி வைக்கும் கரள் பிடித்த வாளியும், பால் பேணியும், அது வைக்கப்படும் குச்சுச் சுவரும் இவனுக்கு நினைவிலேயே இருந்தது.

பூமணி தண்ணீரள்ளி வார்க்க காசியும், கந்தசாமியும், இவனும் கைமண்டையில் தண்ணீர் குடித்தமையும் ஞாபகத்திலேயே இருந்தது.

இவன் அரிவரி முடித்து வகுப்பேறி முதலாம் வகுப்புக்கு வந்த சிலநாட்களின் பின்பு நெல்லிமரப் பள்ளிக்கூடத்திற்கு ஒரு புது வாத்தியாரும் ஆங்கிலம் படிப்பிக்கவென பெரிய தோடு போட்ட ரீச்சரும் வந்திருந்தனர்.

காசிநாதன் புதுவாத்தியாருக்கு `முட்டுக்காய் தலைவர்’ என்று பட்டப்பெயர் வைத்து கதைத்ததுவும் இவனுக்கு ஞாபகம்.

குண்டான அந்த வாத்தியார் தடிப்பான ஒரு மூக்குக்கண்ணாடி போட்டிருப்பார். காது நிறைய மயிர் சடைத்திருக்கும் அவருக்கு உண்மையிலேயே பெரிய தலை.

பல தடவைகளில் அந்த வாத்தியார் மாணவர்களை பிரம்பால் விளாசியதை இவன் அறிவான்.

பொன்னையா வாத்தியாரின் சாந்த குணத்திற்கு நேர் விரோதம் முட்டுக்காய் தலை பஞ்சாட்சர வாத்தியார்.

நெல்லி மரப் பள்ளிக்கூடத்திற்கு மேற்கேயுள்ள வேதக் கோயில் கிராமத்தின் மாணவர்களில் பலர் இந்தப் பள்ளிக்கூடத்திலேயே படித்தவர்கள்.

ஐந்தாம் வகுப்பு வரையேயுள்ள இந்தப் பள்ளிக்கூடத்தில் மிகக் குறைவான மாணவர் உள்ள வகுப்பு ஐந்தாம் வகுப்புத்தான் அதில் ஐந்து பேரே படித்தனர்.

நெல்லி மரப் பள்ளிக்கூடத்தை உருவாக்கியவர் ஒரு சைவப் பெரியார் என்பதை இவன் அப்போது அறிந்திருக்கவில்லை. இவனது அம்மா இராமு வாத்தியார் என்கிற ஒருவரைப்பற்றி அடிக்கடி கூறியிருப்பதும் இவனுக்குத் தெரியும்.

இவனது அப்பு வேதக் கோயில் கிராமத்திற்கு பெண் எடுக்க வந்தமையால் வேதக் கோயில் கிராமத்தவரானவர்.

இவனது அம்மாவும், மாமாவும் குஞ்சியப்புமாரும் நெல்லி

மரப்பள்ளிக்கூடத்தில் தான் படிக்தார்கள் என இவன் அறிந்திருந்தான். இவனது மாமாவும், சின்னக்குஞ்சியப்புவும் மூன்றாம் வகுப்பில் மூன்று வருடங்கள் படித்து பின் படிப்பை விட்டதுவும் இவனது அம்மா மூலம் இவன்

அறிந்தேயிருந்தான்.

இவனது மாமாவுடன் சேர்ந்து ஆரம்ப நாட்களில் தாமரைக்குளத்தில் தூண்டில் போட்டு கெழுத்தி மீன் பிடித்தமையும், நுளம்புக்காக மதுரங்காய்கள் பொறுக்கியமையும், செல்லையன் செத்த பிறகு தாமரைக்குளத்துப் பாதையை மறந்தமையும் கூட இவனுக்கு நினைவிலிருந்தது.

பள்ளிக்கூடம் விட்ட பிறகு வயல் வெளியில் சின்னான் கதிரவேலுவும் சபாரத்தினமும் மல்யுத்தம் புரியும்போது கந்தசாமியே மத்தியஸ்தம் செய்வதும் கந்தசாமி சின்னானின் பக்கச் சார்பாக நிற்பதுவும், தான் சபாவின் பக்கம் நிற்பதுவும் இவனக்கு ஞாபகம்.

ஓரு தடவை செல்லம் தன் கல்லுச் சிலேற்றால் இவனை அடித்தபோது சபா தான் இவனுக்காக செல்லத்தின் சிலேற்றை வாங்கி உடைத்தமையையும் இதற்காக இவனது அப்பு செல்லத்திற்கு ஒரு புதுச் சிலேற் வாங்கிக் கொடுத்தமையும் இவனுக்க ஞாபகம்.

சின்னச் சின்னச் சண்டைகளில் சபாவும், காசியும் இவனுக்கு துணையாக இருந்தமையை இவன் மறந்திடவில்லை. ஆனால் முட்டுக்காய் தலையர் இவனை அடித்தபோது சபாவும், காசியும், கந்தசாமியும், செல்லமும், துணைக்கு வரவே முடியாமல் போனமை இவனுக்கு ஞாபகத்திலிருந்தது.

”வாத்தியார் இவன் கிணத்துக் கட்டிலை ஏறி துலாக் கயித்தைப் பிடிச்சவன்” ஜீவ காருண்யம் தான் இந்த விசயத்தை பஞ்சாட்சர வாத்தியாருக்கு சொல்லி வைத்தான்.

இரண்டாம் வகுப்பில் படிக்கும் கடுகரென்ற நோஞ்சானுக்கு அன்று விழுந்த அந்த அடிகள்….

இரண்டு பிரம்புக்ள முறிந்து தும்பு தும்பாக……..

அடுத்து வந்த நாட்களில் வேதக் கோவில் கிராமத்து மாணவர்கள் எவரும் பள்ளிக்கூடம் போகவில்லை….

கிராமமே உறுதியாக இருந்தது.

பொன்னையா வாத்தியாரின் மோட்டார் சைக்கிள் பல தடவைகள் வேதக்கோவில் கிராமத்திற்கு வந்து போனதைப் பலர் பார்த்தார்கள். ஒரு தடவை தொய்வுக்கார மீனாட்சியம்மா ரீச்சரும்…. அவரது கணவரும் வந்து போனார்கள்.

பஞ்சாட்சர வாத்தியாருக்கு மாற்றம் கிடைத்து கிழக்கு ஊர் போனதாக ஒரு வதந்தியும்…. சிலகாலம் கிராமத்தில் உலாவியது. யாரும் அதை காது கொடுத்து கேட்கவேயில்லை

வேதக் கோவில் கிராமத்தில் திடீரென பள்ளிக்கூடம் ஒன்று உருவாகியது. தென்னங்குற்றிகளில், பலகை அடிக்கப்பட்ட வாங்கு மேசைகளில் மாணவர்கள் படிக்கத் தொடங்கினார்கள்.

காசிநாதன் சண்டியனாக அறியப்பட்டது போலல்லாமல் சின்னான் கதிரவேலுவின் பெயர் வேதக் கோவில் கிராமத்திற்குமப்பால் பெருமையோடு பேசப்படும் வண்ணம் அவன் இறந்து போனான்.

நெல்லிமரப் பள்ளிக்கூடம் சில காலம் நெசவுசாலையாகவும்…. ஒரு தற்காலிக அச்சுக்கூடமாகவும் இயங்கி பின்னர் வெற்று நிலமாகி விட்டதாக இவன் அறிந்து கொண்டான்.

இவனது நண்பர்கள் சபா, ராசலிங்கம், சந்தியாம்பிள்ளை காசி, சின்னான் கதிரவேலு ஆகியவர்களைப் போல…… இவனது நினைவுகளில் இன்னும் பொன்னையா வாத்தியார், மீனாட்சியம்மா.. ரீச்சர், பஞ்சாட்சர வாத்தியார்…… அதோடு சிதைந்து போன…. நெல்லிமலைப் பள்ளிக்கூடமும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.