முகிழ்த்தது முத்து

கருவறை எழுதிய தீர்ப்பு!… ( சிறுகதை )……. தி.ஞானசேகரன்.

 

நடுச்சாம வேளை. டெலிபோன் மணி அலறியது. தூக்கக்கலக்கத்துடன் ரிசீவரை எடுத்து ‘ஹலோ’ என்றேன். “கோல் ஃபுறம் ஸ்ரீலங்கா, புரபெஸர் சுந்தரலிங்கத்துடன் பேசவேண்டும்.” “ஸ்பீக்கிங்.” “மிஸ்டர் பெரேராவின் நண்பன் பேசுகிறேன். அவரது மகன் சுனில் இறந்துவிட்டான். பெரேரா இத்தகவலை உங்களுக்குத் தெரிவிக்கும்படி கூறினார்.” “வட்.. வட் ஹப்பின்ட்?” “விடுதலைப் போராளிகள் சுனில் ஓட்டிச்சென்ற போர் விமானத்தைச் சுட்டு விழுத்திவிட்டார்கள்.

சுனிலின் உடல் கருகிய நிலையிலேதான் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாகக் கிடைத்தது. மரணச் சடங்குகள் நாளை மறுதினம் இராணுவ மரியாதையுடன் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.” “ஓ மை காட்” எனக்குத் தலை சுற்றுவதைப்போல இருந்தது. ரிசீவரை வைத்துவிட்டுப் படுக்கையில் அமர்ந்தபோது மனைவி விபரம் கேட்டாள்; கூறினேன். “சுனில் இராணுவத்தில் பைலட்டாகச் சேர்வதை அநுமதிக்க வேண்டாமென்று ஆரம்பத்திலேயே நீங்கள் பலமுறை பெரேராவிடம் சொன்னீர்கள்; அவர்கள் கேட்கவில்லை. பெரேராவின் மனைவி ஸ்ரீமணிதான் பாவம், ஒரே மகனை இழந்ததில் பெரிதும் துடித்துப்போவாள்.” எனது மனைவியின் குரலில் வேதனை தொனித்தது. கவலையுடன் இருந்தவள் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டாள். என்னால் தூங்க முடியவில்லை. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். முப்பது வருடங்களுக்கு முன்பு நான் கொழும்பு மருத்துவக்கல்லூரியில்

விரிவுரையாளராக இருந்தபோது எங்களது வீட்டிற்கு அயலிலேதான் பெரேராவின் வீடும் இருந்தது. அவர் அப்போது இராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். அப்போதுதான் அந்தப் பயங்கரமான இனக்கலவரம் வெடித்தது. சிங்கள இனவெறியர்கள் தமிழர்களைத் தேடிக் கொன்று குவித்தார்கள். தமிழர்களது உடைமைகளைக் கொள்ளையடித்துத் தீவைத்துக் கொழுத்தினார்கள். என்னையும் என் மனைவியையும் தெருவுக்கு இழுத்துவந்து உடலிலே பெற்றோல் ஊற்றித் தீவைப்பதற்கு ஆயத்தமானபோது அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. ‘டுமீல் டுமீல்’ என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் பறந்து வந்தன. ‘ஐயோ அம்மே’ என அலறியபடி சிலர் துடித்து விழுந்தனர். பலர் ஓடித் தப்பினர். பெரேரா துப்பாக்கியுடன் வந்து எங்களைக் காப்பாற்றித் தனது வீட்டில் அடைக்கலந் தந்தார். அதன்பின் நான் வெகுகாலம் இலங்கையில் இருக்கவில்லை. மனைவியுடன் புலம்பெயர்ந்து லண்டனுக்கு வந்து விட்டேன். மருத்துவக் கல்லூரி ஒன்றில் எனக்கு விரிவுரையாளராக வேலை கிடைத்தது. சில வருடங்களிலேயே மகப்பேற்றுத்துறைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றேன். சிலவருட இடைவெளிக்குப்பின் பெரேரா மூன்றுமாத லீவில் தனது மனைவியுடன் லண்டனுக்கு வந்தார். திருமணமாகி வெகுகாலமாகியும் குழந்தைகள் இல்லாததால் என்னிடம் வைத்திய உதவியை நாடினார். நான் அவரையும் மனைவியையும் பரிசோதித்தேன். பெரேராவின் ‘ஸ்பேர்ம் கவுன்ற்’ றிப்போர்ட்டைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெரேராவினால் ஒரு குழந்தைக்குத் தந்தையாக முடியாது. அவரது ஸ்கலிதத்தில் உயிருள்ள விந்துகள் இருக்கவில்லை. ஆனாலும் அவரது மனைவி ஸ்ரீமணியின் உடலமைப்பில் எவ்விதக் குறைபாடும் இல்லை. அவளால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும். நான் இதனைக் கூறியபோது பெரேரா பெரிதும் மனக்குழப்பம் அடைந்தார். குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்க்கலாமா? என என்னிடம் அபிப்பிராயம் கேட்டார்.

நான் நவீன மருத்துவ முறைகளை அவருக்கு விளக்கினேன். வேறொரு ஆணின் விந்தினைப் பெற்று குழாய் மூலம் ஸ்ரீமணியின் கருப்பைக்குள் செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யலாம். இந்த முறையில் கருத்தரிக்கும் போது தாயினது ‘ஜீன்ஸ்’ குழந்தைக்கு வருவதால் பெற்றோரது ஐம்பது வீதப் பரம்பரை அலகுகள் குழந்தைக்கு வந்துவிடுகின்றன. தத்தெடுக்கப்படும் குழந்தையை வேறொருவரது குழந்தையாகவே சமூகம் கணிக்கிறது. ஆனால் செயற்கை முறையில் கருத்தரித்துப் பிறக்கும் குழந்தை பெற்றோரது குழந்தையாகவே சமூகத்தின் கணிப்பைப் பெறுகிறது” என்றேன். பெரேரா செயற்கைமுறைக் கருத்தரித்தலுக்கு விருப்பம் தெரிவித்தபோதும் ஸ்ரீமணி தயக்கம் காட்டினாள். “டொக்டர், அப்படியானால் நீங்கள் ஏன் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறீர்கள்? உங்கள் மனைவியையும் நீங்கள் கூறிய செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்திருக்கலாமே” என என்னை மடக்கினாள். நான் வேதனையுடன் கூறினேன், “அதுதான் விதி…. எனது மனைவிக்கு ‘ஃபைபுறோயிட்’ எனப்படும் கருப்பைக் கட்டிகள் வளர்ந்து தொல்லை கொடுத்ததால், அவளது கருப்பையையே சத்திரசிகிச்சை மூலம் நீக்கவேண்டி ஏற்பட்டுவிட்டது. அவள் கருத்தரிப்பதற்குச் சந்தர்ப்பமேயில்லை.” அதன் பின்புதான் ஸ்ரீமணி ஒருவாறு செயற்கைமுறைக் கருத்தரித்தலுக்குச் சம்மதம் தெரிவித்தாள். மறுவாரத்தில் ஒருநாள் பெரேராவும் மனைவியும் ஒரு புதிய பிரச்சினையுடன் என்னைச் சந்தித்தார்கள். “ஸ்ரீமணி மனோரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள். நேற்றிரவு என்னை நடுச்சாமத்தில் எழுப்பி, தனக்கு வெள்ளைத்தோலும் பூனைக் கண்ணும் செம்படைத் தலைமயிருமாக ஒரு குழந்தை பிறக்கக் கனவு கண்டதாகக் கூறினாள்” எனப் பெரேரா சொன்னார். அவரைத் தொடர்ந்து ஸ்ரீமணி, இரண்டு நாட்களுக்கு முன்னரும் இதேபோன்று நீக்குரோ இனக் குழந்தையொன்று தனக்குப் பிறக்கக் கண்டதாகக் கூறினாள். “உங்களது மருத்துவ முறைப்படி ஸ்ரீமணிக்கு பிறக்கும் குழந்தை ஒரு ஸ்ரீலங்கனின் தோற்றத்துடன் இருக்குமா?” எனக் கவலையுடன் கேட்டார் பெரேரா. ஸ்ரீமணியின் மனக்குழப்பம் எனக்குப் புரிந்தது. என்னிடம் பயிற்சிபெறும் பலதேசத்து மாணவர்களை அவள் எனது ‘கிளினிக்’ கில் பார்த்திருக்கிறாள்.

அவர்கள் யாரிடமாவது விந்தினைப் பெற்று தனது கருக்கட்டலுக்குப் பாவித்து விடுவேனோ என அவளது உள்மனம் பயப்படுகிறது. நான் சிரித்துவிட்டு, “பயப்படாதீர்கள் இங்கு ‘விந்து வங்கி’ ஒன்று இருக்கிறது. அதில் விந்து வழங்கத் தகுதியானவர்கள் பலரது விந்துகள் சேகரிக்கப்பட்டு உறை நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களைப் பற்றிய விபரங்களும் எம்மிடம் உள்ளன. பெரேராவின் உயரம், தோற்றம், நிறம் முதலியன பொருந்தக்கூடிய ஒருவரது விந்திணை உங்களது கருக்கட்டலுக்குப் பாவிப்பேன். பிறக்கும் குழந்தை ஒரு ஸ்ரீலங்கனின் தோற்றத்துடனேயே பிறக்கும்” என அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். ‘ஆர்ட்டிபிஷல் இன்ஸெமினேஷன்’ முறையில் ஸ்ரீமணியைக் கருத்தரிக்கவைத்தேன். மூன்றாம் மாதமே அவர்கள் ஸ்ரீலங்காவிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். ஸ்ரீமணிக்கு ஆண் குழந்தை பிறந்தபோது பெரேரா அடைந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை. எனக்கு உடனே டெலிபோன் செய்து ஆயிரம் நன்றிகள் கூறினார். குழந்தை அச்சொட்டாக ஒரு ஸ்ரீலங்கனின் தோற்றத்துடனேயே இருக்கிறது என்றார். ‘சுனில்’ என்ற தனது பாட்டனாரின் பெயரையே குழந்தைக்கு வைக்கப்போவதாகச் சொல்லிக் குதூகலித்தார். அதன்பின் சுனிலின் வளர்ச்சிக்கட்டம் ஒவ்வொன்றின் போதும் என்னிடம் டெலிபோன் செய்து உரையாடி மகிழ்வார். அபிப்பிராயங்களைப் பரிமாறுவார், ஆலோசனைகள் கேட்பார். சுனில் வளர்ந்து இளைஞனாகி இராணுவ விமானம் ஓட்டும் பைலட்டாகப் பயிற்சிக்குத் தெரிவானபோது அந்தத் தொழில் ஆபத்தானது, வேண்டாம் என நான் தடுத்தேன். ஆனால் சுனில் பைலட் ஆவதில் பிடிவாதமாக இருப்பதாகப் பெரேரா கூறினார். சுனிலின் வீரதீரச் செயல்களைப் பெரேரா அடிக்கடி என்னிடம் கூறுவார். போராளிகளின்மேல் குண்டுமழை பொழிந்து எவ்வாறு அவர்களைத் துவம்சம் பண்ணினான் என விபரிப்பார். அப்போ தெல்லாம் இனம்புரியாத வேதனை என்னை வாட்டும். ‘ரிவிரஸ’ இராணுவ நடவடிக்கையின்போது குண்டுமழை பொழிந்து யாழ்ப்பாண மக்களை அநாதைகளாக்கி விரட்டியடிக்க உதவியவன் சுனில்தானா? உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நவாலித் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உயிருடன் சமாதி கட்டியவன் அவன்தானா? இரவில் படுக்கையில் சாயும் போதெல்லாம் இத்தகைய எண்ணங்களினால் என்மனம் தத்தளிக்கும், ஆனாலும் விடுதலைப் போராளிகளினால் அடிக்கடி விமானங்கள் சுட்டுவிழுத்தப் படும்போது என்மனம் துணுக்குறும்.

சுட்டுவிழுத்தப்பட்ட விமானம் சுனில் ஓட்டிச்சென்றதாக இருக்கக் கூடாதேயென மனசு பிரார்த்திக்கும் ; இருதலைக் கொள்ளி எறும்பாய்த் துடிக்கும். மறுநாள் நான் சுனிலின் மரணச்சடங்குகளில் பங்குபற்றுவதற்காக ஸ்ரீலங்காவிற்குப் புறப்பட்டேன். அப்போது என்மனைவி என்னை ஆச்சரியத்துடன் நோக்கினாள். ஆனாலும் தடையேதும் கூறவில்லை. பெரேரா இனக்கலவரத்தின்போது எங்களைக் காப்பாற்றியது அவள் நினைவில் வந்திருக்கலாம். பெரேரா என்னைக் கண்டதும் விரைந்து வந்து என்னைக் கட்டிக்கொண்டு கதறி அழுதார். ஸ்ரீமணி என் காலடியில் விழுந்து மயக்கமடைந்தாள். சுனிலின் கருகிய உடலை நான் பார்த்ததும் என்னுள் அடக்கிவைத்திருந்த சோகம் அத்தனையும் திரண்டு பிரவாகித்தது. எனது உடல் குலுங்க விம்மிவிம்மி அழுதேன். சுனில் எனது விந்து! என் மகன்! என்ற உண்மையை நான் யாரிடந்தான் சொல்ல முடியும் ?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.