கல்…புல்…காகம்…..45…(நாவல்)…..சங்கர சுப்பிரமணியன்.
ஒருவழியாக பெண் பார்க்கும் படலம் முடிந்தது. விமலாவும் மனோகரனும் ஏற்கனவே
காதலர்கள் என்பதால் பெண்பார்ப்பது உறவினருக்கும் மற்றவர்களுக்குமாக நடைபெற்ற
ஒரு சம்பிரதாயம் மட்டுமே. பெண்பிடித்திருக்கிறதா அல்லது மாப்பிள்ளை பிடிச்சிருக்கா
என்ற பேச்சுக்கே இடமில்லாததால் நிச்சயதார்த்தம் என்று நாள் கடத்தாமல் இன்னும்
நான்கு மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று இருவீட்டாரும் முடிவு
செய்தனர்.
முடிவுசெய்தபடியே மாப்பீள்ளை வீட்டார் ஊருக்கு சென்றவுடன் சோசியரை பார்த்து
திருமணம் நடத்த இரண்டு மூன்று நாட்களை குறித்து வாங்கினர். பின் இரு வீட்டாரும்
சேர்ந்து ஒருநாளை முடிவுசெய்து திருமணவேலையில் ஈடுபட்டனர். திருமணம் நடத்த
மண்டபம் பார்ப்பது பட்டுப்புடவை திருமாங்கல்யம் வாங்குவது பத்திரிகை அடிப்பது
என்று எல்லா வேலைகளும் வேகமாக நடந்தன. விமலாவுக்கு நகைகளைப் பார்த்து
பார்த்து வாங்குவதிலேயே நாட்கள் போனதே தெரியவில்லை. எல்லோரும் எதிர்பார்த்த
மாதிரி விமலா மற்றும் மனோகரனின் திருமணம் வெகு சிறப்பாக நடந்தது.
திருமணம் நடந்து பத்து ஆண்டுகள் பறந்தோடின. அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளில்
ஓர் ஆண்குழந்தையும் பிறந்து அவனுக்கு தமிழரசு என்று பெயர் சூட்டினர். இப்போது
தமிழரசு மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.
அவனுக்கு தீபாவளி பண்டிகை என்றால் மிகவும்
கொண்டாட்டம். சிறுகுழந்தைகளுக்கே உண்டான மகிழ்ச்சி. புது உடை, பட்டாசு, பலகாரம்
என்ற எதிர்பார்ப்புகளுடன் இருக்க அந்த தீபாவளி பண்டிகையும் வந்தது. மிகவும் நன்றாக
தீபாவளியைக் கொண்டாடினர். தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை. எப்போதும் ஒருமணிக்கே
சமையல் முடிந்து மதியம் இரண்டு மணிக்குள் சாப்பிட்டுவிடுவார்கள். ஆனால் அன்று
சமையல் முடியவே மணி இரண்டாகிவிட்டதால் தமிழரசு,
“அம்மா பசிக்குது சோறு குடுங்க” என்று விமலாவிடம் கேட்டான்.
“இரு தமிழ், கொஞ்சம் பொருத்துக்க. பாட்டி பூசைபண்ணி முடிச்சதும் சாப்பிடலாம்” என்று
மகனுக்கு சொன்னதை கேட்ட அவளது மாமியார்,
“விமலா, குழந்தைதானே அவன் ஏன் பசியா இருக்கணும். அவனுக்கு சாப்பாட்டை ஊட்டு”
“இல்லை அத்தை, இவ்வளவு நாளா விரதமாயிருந்து காக்கைக்கு சோறு வைத்து காகம்
உண்டபின்தான் சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றி வருகிறீர்கள். நீங்கள் சாப்பிடும்போது
உங்களுடன் இருந்து சாப்பிடுவதுதான் இதுவரை நம் வழக்கம். இன்று அதைமீற வேண்டாம்.
அவன் ஒன்றும் கைக்குழந்தை இல்லை. இன்னும் கொஞ்சநேரம்தானே பரவாயில்லை”
என்றாள்.
அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மனோன்மணி பூசையை முடித்து ஒரு
இலையில் பிரசாதத்துடன் காக்கைக்கு வைக்க மொட்டை மாடிக்கு சென்றாள். அங்குள்ள
கைப்பிடிச் சுவரில் இலையை வைத்துவிட்டு காகத்தை கூவி அழைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது விமலாவும் மனோகரனும் தமிழரசுடன் வந்தனர். காகம் வரவேயில்லை.
“என்னம்மா, அப்பாவை இன்னும் காணோம். மற்ற அமாவாசையில் உடனே வந்திடும் அப்பா
இன்றைக்கு பேரனுக்கு பசிக்கும்போது சீக்கிரம் வரவேண்டாமா? என்றான்.
“மனோ, சும்மாயிரு. உனக்கு எல்லாவற்றிலும் கேளியும் கிண்டலும்தான். பாட்டி காதில்
பட்டால் வருத்தப்படுவார்கள்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு அண்டங்காக்கை
பறந்து வந்து இலையருகே அம்ர்ந்தது.
“அம்மா, அப்பா வந்துட்டார்” என்று சொல்லும்பேது அந்த காகம் இலையிலிருந்தவற்றை கொத்தி
உண்ண ஆரம்பித்ததும் அம்மா முகம் மலர்ந்தாள்.
அப்போது மனோகரன் அம்மாவைப்பார்த்து அம்மா இந்த அளவுக்கு அப்பாவை உன்னைத்தவிர
வேறு யாரும் அவமானப் படுத்தியிருக்கமாட்டார்கள் என்றான். அதைக்கேட்டு பதறியவள் என்ன
மனோ நான் உன் அப்பாவை அவமானப் படுத்திவிட்டேனா என்று பதறினாள். அதற்கு மனோ
இல்லையா பின்ன அப்பா அந்த அண்டங்காக்கை மாதிரி அவ்வளவு கருப்பாகவா இருந்தார் என்று
சொல்லவும் மனோன்மணி வாய்விட்டு சிரிக்க விமலாவும் மனோகரனும் கூடவே சேர்ந்து
சிரித்தனர். சிரித்து முடிந்ததும் அம்மாவிடம் மனம் விட்டுபேசினான். அம்மா உங்களைப்பற்றி
எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் புரட்சி செய்பவர். மூடப்பழக்க வழக்கங்களில் அவ்வளவு
நம்பிக்கையும் கிடையாது. அப்படியிருக்கும் நீங்கள் ஊருக்குத்தான் உபதேசம் செய்வீர்களா?
நீங்கள் பின்பற்ற மாட்டீர்களா? கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன் என்று வாழ்ந்ததோடு
மட்டுமின்றி இப்ப இந்த காக்கையையும் அப்பாவந்து சாப்பிட்டுவிட்டு போனதாக எண்ணி அவ்வளவு
மகிழ்ச்சி அடைகிறீர்களே என்றுகேட்டான்.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே மனோன்மணியின் மாமியார் மேலேவந்து என்ன ஒரே
சிரிப்பும் பேச்சுமா இருக்கு. குழந்தை தமிழரசுக்கு பசின்னு அப்பவே சொன்னானே அவனுக்கு
கீழகூட்டிப்போய் சாப்பிடவைக்கிறேன். நீங்கள் வரும்போது வாங்கன்னு சொல்லி தமிழரசை
அழைத்துச் சென்றாள்.
மாமியார் சென்றதும் நிதானமாக பேச ஆரம்பித்தாள் மனோன்மணி. மனோ, உன் கேள்விக்கெல்லாம்
இப்போது பதில் சொல்றேன் கேள். உன் அப்பாவுக்கு விபத்தில் கால் ஊணமாகி மனநிலையும்
பாதிக்கப்பட்ட போது என் மாமாவும் அத்தையும் வீட்டுக்கு வந்து எங்க அப்பாவிடமும் என்னிடமும்
என் சிறுவயதை எண்ணி என்னை மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்கள். அவர்களுக்கு
நம் இருவரையும் வைத்து காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தால் அப்படி வற்புறுத்தவில்லை.
நான்தான் பிடிவாதமாக மறுத்தேன். விபத்துக்குமுன் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை அதிக ஆண்டுகள்
இல்லாவிட்டாலும் அது பல ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கைக்கு நிகரானது. அவர்கூட வாழாமலும்
என்னால் இருக்கமுடியாது. அவரை மறந்து இன்னொருவருடனும் என்னால் வாழமுடியாது.
அதேசமயம் வாழ எனக்கு வழியில்லாமலும் அவருடன் வாழவில்லை. என் அப்பா ஊரிலேயே பெரிய
பணக்காரர். வாழ்நாள் முழுதும் அவர் நம்மைவைத்து காப்பாற்றும் வசதி படைத்தவர். ஆதலால்
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற பத்தாம்பசலித்தனமான எண்ணத்துடன் நிச்சயமாக
வாழவில்லை.
இந்நாட்டில் வடக்கே பல ஆண்டுகளுக்குமுன் உடன்கட்டை ஏறுதல் என்றொரு வழக்கம் இருந்தது.
கணவன் இறந்தவுடன் அவன்மீது எல்லையற்ற அன்புள்ள மனைவி எரியும் அவன் பிணத்தின்மீது
விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொள்வாள். அப்படிப்பட்ட பெண் மிகவும் அபூர்வமாக இருப்பாள்.
ஆனால் பெரும்பாலான பெண்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இறந்த கணவனின்
பிரேதத்துடன் சேர்த்துவைத்து கட்டி எரித்து விடுவார்கள். அப்பழக்கம் இப்போது அடியோடு ஒழிந்து
விட்டது. ஒருவேளை இப்போது மட்டும் அப்பழக்கம் இருந்திருந்தால் நானே எரியும் நெருப்பில் பாயும்
பெண்ணாகத்தான் இருந்திருப்பேன். அந்த அளவுக்கு உன் அப்பாவும் நானும் வாழ்ந்தோம் என்றாள்.
“சரி, அம்மா. நீ சொல்வதன் நியாயம் புரிகிறது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற
முட்டாள் தனமான எண்ணத்துடன் கால் ஊனமாகவும் சுயநினைவுமின்றியும் இருந்த அப்பாவுடன்
சேர்ந்து வாழவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்த அமாவாசையன்று விரதம் இருந்து
காக்கைக்கு சோறு வைத்து அதை அப்பா வந்து சாப்பிட்டுபோவதாக எண்ணி மகிழ்கிறாயே அதை
எப்படியம்மா என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று மிகவும் அக்கறையுடன் கேட்டவன் அவனால்
சமாளிக்கமுடியாமல் திரும்பவும் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
அவன் அப்படிச் சிரித்ததும் கோபமடைந்த மனோன்மணி, “நன்றாகத்தானே இதுவரைவரை நியாயமாக
பேசிவந்தாய். இப்ப இப்படி சிரிக்கிறாயே? என் வாழ்க்கை உனக்கு சிரிக்குமளவுக்கு போய்விட்டதா?”
என்று கடிந்து கொண்டாள்.
“என்னங்க, அத்தை மனம் வருந்தும்படி பேசி இப்படி சிரிப்பது நல்லாவா இருக்கு?” என்று மனைவி
விமலாவும் சேர்ந்து மனோகரனை கடிந்து கொண்டாள்.
அம்மாவும் மனைவியும் ஒன்றுசேர்ந்து கடிந்து கொண்டதும் சிரிப்பை அடக்கிய மனோகரன்,
“அய்யோ அம்மா, விமலா மாமியாரும் மருமகளும்ளும் சேர்ந்து கொண்டு என்மேல் கோபப்படுவதை
முதலில் நிறுத்துங்கள். இப்போது நான் சிரித்ததற்குண்டான காரணத்தைச் சொல்கிறேன். அப்புறம்
நீங்களே திரும்பவும் சிரிக்க ஆரம்பித்து விடுவீர்கள்” என்றான்.
“அப்படியா? காரணத்தைச் சொல் சிரிக்கிறோமா என்றுதான் பார்ப்ப்ப்மே?”
“ஓ! அப்படியா? காரணத்தைச் சொல்லவேண்டுமோ? சொல்றேன். அம்மா இப்பவந்து பிரசாதத்தை
சாப்பிட்டது என்னமாதிரி காக்கை?
“அதிலும் உனக்கு சந்தேகம் வந்து விட்டதா? நீயும் தானே பார்த்தாய். அது அண்டங்காக்கை என்பது
உனக்கு தெரியலையா?”
“அம்மா என்மீது கோபப்படாதே. அப்பா அண்டங்காக்கை மாதிரி அவ்வளவு கருப்பாகவா இருந்தார்?
உன்னைத்தவிர அப்பாவை இந்த அளவுக்கு யாராலும் கேவலப் படுத்தியிருக்க முடியாது அம்மா.
உன்மனசாட்சியைத் தொட்டுச்சொல்” என்று திரும்பவும் முன்பாக சொன்னதையே சொன்னான்.
இவ்வாறு மனோகரன் திரும்பவும் சொன்னதும் மனோன்மணி உட்பட அங்கிருந்த எல்லோரும் மறுபடியும்
விழுந்து விழுந்து சிரித்தனர். அவர்களின் சிரிப்பு அடங்க வெகுநேரம் ஆனது. ஒருவாறு சிரிப்பு அடங்கியதும்
மனோன்மணி நிதானமாகப்பேச ஆரம்பித்தாள்.
மகனை கூர்ந்து பார்த்த மனோன்மணி, எனக்கும் இந்தமாதிரி சடங்கு சம்பிரதாயங்களில் பெரிதாக
ஒன்றும் நம்பிக்கை கிடையாது. அப்படியென்றால் நம்பிக்கை இல்லாத ஒன்றை ஏன் அவ்வளவு உணர்வு
பூர்வமாக செய்கிறீர்கள் என்று கேட்கிறாயா? சொல்கிறேன் கேள். எல்லாம் உன் பாட்டிக்காகத்தான்.
உன்பாட்டிக்கு இது போன்றவற்றில் எல்லாம் மிகுந்த நம்பிக்கை. அவர்கள் மகன் விபத்தில் காலிழந்து
மனநிலை பாதிக்கப்பட்டு அந்தக் கொடுமைகளெல்லாம் பார்த்து மிகவும் துன்பமடைந்து விட்டார்கள்.
அவர்களுக்கு இந்த சடங்கு சம்பிரதாயங்களின் மூலம் அவர்களது மகன் மாதமொருமுறை வந்துபோவதாக
ஒரு அசைக்க முடியாதமுடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நாம் ஏன் கெடுக்கவேண்டும் என்ற
எண்ணத்தினால்தான் அமாவாசையன்று காக்கைக்கு சோறு வைக்கிறேன். உன் அப்பாவையே காகமாக்கிய
பின் அவர் சாதாரண காக்கை வடிவில் வந்தால் என்ன அல்லது அண்டங்கக்கை வடிவில் வந்தால் என்ன?
என்று சொன்னதும் அம்மாவின் கூற்றில் இருந்த நியாயத்தை உணரமுடிந்தது.
முற்போக்கு கொள்கை கொண்ட மனோன்மணி போன்றுதான் இன்றும் பலர் அவர்களது மனசாட்சிக்கும்
பொதுஅறிவுக்கும் சற்றும் பொருந்தாத ஒன்றை விருப்பமில்லா விட்டாலும் தமக்கு விருப்பமானவர்களுக்காக
செய்துவருகிறார்கள். இதெல்லாம் மாறும் என்று நாமும் நம்பிக்கையுடன் இருப்போம்.
-சங்கர சுப்பிரமணியன்.
(முற்றும்)