‘நாடோடிகள்’……!…. ( சிறுகதை ) …. தேவகி கருணாகரன்.
எமது தாய் நாடான சிறீலங்காவில் நடந்த போரின் தாக்கத்தால் என்னைப் போன்ற பல தமிழர்கள் உயிருக்குப் பயந்து, பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, ஊரை விட்டுப் பல நாடுகளிற்கு வெளியேறி விட்டார்கள். ‘திரை கடலோடி திரவியம் தேடு’ என்ற நிலைமை போய் இப்போ ‘உயிருக்குப் பயந்து ஊரை விட்டு ஓடு’ நிலை வந்திருந்தது. கட்டிட பொறியியலாளரான என் கணவரும் நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் பெயர்போன தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பெற்றுக் கொண்டு, கூடவே எம்மையும் அழைத்துக் கொண்டு ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து ஒன்றில் நைஜீரியா வந்து விட்டார். அப்போ நைஜீரியா ஒரு கூட்டாட்சி குடியரசு நாடாகவிருந்தது, ஷெஹு ஷாகாரி ஜனாதிபதியாகவிருந்தார். பிரித்தானியரின் ஆட்சி காலம் போலவே ஆங்கிலம் அரசாங்க மொழியாக இருந்தது..
கட்டிட நிறுவனம் அனுப்பியிருந்த ஏரோ ஃப்லோட் என்ற ருசிய விமானத்தில் முதலாம் வகுப்பு டிக்கட்டை கண்டதும் எனக்கு ஒரே சந்தோசம். சிறீலங்கா உழைப்பிலே எங்கே முதலாம் வகுப்பு டிக்கட் வாங்குவது. நிறைய எதிர்பார்ப்போடு, முக்கியமாக நான், கானோ மாநிலத்தில் போய் இறங்கினேன். விமான நிலையத்தில் கடூனா
மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல காத்துக் கொண்டிருந்த கம்பனி வாகனத்தில் ஏறிக் கொண்டோம். மாலை நாலு மணியிருக்கும், இதமான குளிர், மங்கலான நிலை, புகை போல் மூடுபனி எங்கும் பரவியது. ஆறு அடிக்கு மேல் தெளிவாகத் தெரியவில்லை. வண்டிச் சாரதி ’ஹ! அல்லா,’ என அலுத்துக் கொண்டான். எப்படி இந்த மூடுபனி என கேட்டதற்கு, சாரதி,
“சேர்! இது ஹமட்டான் காலம், இது மூடுபனியில்லை, வறண்ட தூசிக் காற்று. சகார பாலைவனத்திலிருந்து எழுந்து வட மேற்கு, ஆபிரிக்காவைக் கடந்து வீசுகிறது. அதனால் தான் இந்தப் புகைபோன்ற நிலை. ஹமட்டான் காலத்தில் வெப்பநிலை குறைவாகவும் ஈரத்தன்மை தாழ்வாகவும் இருப்பதால் உடலின் தோல் காயும், சொண்டு வெடிக்கும். நீங்கள் முன்னெச்சரிக்கையா கிரீம் பூச வேணும்.” என்றான் ஆங்கிலத்தில்.
எமக்கு குவார்ட்டஸ் ஒழுங்கு செய்யும் வரை ஒரு மாதம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது கணவரும் வேலையை, ஒப்புக்கொண்டு அவருடைய பாவிப்புக்கு என கொடுக்கப்பட்ட வாகனத்தை சாரதி செலுத்த தினமும் வேலைக்குப் போய் வந்தார். அந்த ஹோட்டலில் தங்குபவர்கள் எல்லோரும் வேற்று நாட்டவர் என்பதால், மேல் நாட்டு உப்பு சப்பு இல்லாத உணவு தான். இரண்டு மூன்று நாட்களுக்கென்றால் சகித்து கொள்ளலாம், ஆனால் ஒரு மாதம் எப்படி? வெளியே ரோட்டுக் கரையில் கோழிக் கால்களும், முழுக் கோழிகளும் எண்ணெய் பூசி நெருப்பில் வாட்டும் கம கம வாசனை காற்றோடு கலந்து எங்கள் நாசியை வருடிக் கொண்டு போகவும், நாக்கில் எச்சில் ஊறும். ஆனால், ஈ மொய்த்த தூசி படிந்த உணவு எங்கள் உடம்பிற்கு ஒத்துப்போகாது என அவற்றை வாங்கிச் சாப்பிடுவதில்லை. காச நோய், மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்கள் அவ்வூரில் மலிந்து கிடந்தது. அதோடு மலேரியா காய்ச்சல், அதை தடுப்பதற்கு தினமும் மலேரியா குளுசை எடுத்துக் கொண்டு வந்தோம், ஆனால் ஒவ்வோரு குளுசைக்கும் ஒவ்வொரு முடியாகக் கொட்டிக் கொண்டும் வந்தது.
வீடு தயாராகினதும் நாங்கள் பால் காய்ச்சி வீடு குடிபுகும்போது, கடூனாவில் இருந்த நமக்கு அறிமுகமான சில குடும்பங்களும் அறிமுகமில்லாத தமிழ் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து வந்து கலந்து கொண்டு உதவினார்கள். ஹோட்டலில் தங்கியிருக்கும் போது ஊருக்காகவும் எங்கள் உறவுகளுக்காகவும் ஏங்கி நான் கண்கலங்கிய போது என் நிலைமையைப் பார்த்து கண்கலங்கிய கணவருக்கும் எனக்கும் எங்கள் சனங்களைக் கண்டதும் மனதுக்கு நிம்மதியாகவிருந்தது. எல்லா வசதிகளும் கொண்ட பங்களா, பேஜோட் 505 . காரும் டிரைவரும், மனம் குளிர சம்பளமும் எங்களுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. அப்போ ஒரு நைஜீரிய நயரா ஒரு பிரித்தானிய பவுணுக்கு சமனாகவிருந்தது. எங்களுடைய பிரத்தியேக செலவை விட எங்களுக்கு வேறு செலவு இருக்கவில்லை இதனால் லண்டன் வங்கியின் பலன்ஸ் ஏறிக்கொண்டே போயிற்று. இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அந்த ஊரில்
நாங்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்த சவால்களை பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
நாங்கள் வீட்டிற்கு குடிபுகுந்து இரண்டு நாட்களில் பக்கத்தில் குடி இருந்த நைஜீரிய, கிரிஸ்தவ பெண்மணி, யஸ்மின், தன் பதின்ம வயது மகன் மூசாவோடும் மகள் கரீமாவோடும் வீட்டிற்கு வந்து தன்னை அறிமுகப்படுத்தி. ஏதேனும் உதவி தேவை என்றால் தயங்காமல் கேளுங்கள் எனக் கூறி தன் ஊருக்கு எங்களை வரவேற்றார், ஒரு நாள் என் மகள்மார், வருணியும் கவிதாவும் முன் தோட்டத்திலே பந்து வீசி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து வீட்டு மூசா கம கம வென வறுத்த கடலை வாசத்துடன் ஒரு தட்டில் உணவு கொண்டு வந்து நீட்டியிருக்கிறான். பொழுதுபட்டுக் கொண்டிருந்தது, இரவு உணவை நான் தயாரித்துக் கொண்டிருந்தேன். மகள்மாருக்கு ஒரே பசி, ஆவலோடு நாக்கில் எச்சில் ஊற, தட்டில் இருந்ததை கையில் அள்ளி வாயில் போடப் போன போது தான் அது வறுத்த ஈசல் கறையான் என்று தெரிந்தது. ’கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை’ மெய்யாகிவிட்டது. ”நன்றி, நாங்கள் இது சாப்பிடுவதில்லை,” எனச் சொல்லி வீட்டுக்குள் ஓடி வந்துவிட்டார்கள். அதற்குப்பின் மழை பெய்யமுன், வீட்டு மின்சார விளக்கைச் சுற்றி ஈசல் பறக்கும் போது ஒரு பாத்திரத்திலே தண்ணீர் நிரப்பி விளக்கின் கீழ் வைத்து அதில் விழும் ஈசல்களை சேர்த்து அவர்களுக்குக் கொடுப்போம். நைஜீரீயா மக்கள் விரும்பி உண்ணும் மிகவும் ஒரு ருசியான தீன்பண்டம் அது.
மகள்மார்களுக்கு கடூனாவிலே உள்ள ஃப்டெரல் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு இடம் கிடைத்தது. ஆரம்பப்பள்ளி பயிற்சிச் சான்றிதழ் பெற்றிருந்ததால் எனக்கும் கடூனாவில் இருந்த ’லபாயி’ சர்வ தேச ஆரம்பப் பள்ளியில் வாத்தியாராக வேலையும் கிடைத்தது. அந்த நைஜீரிய குழந்தைகளுக்கு பாடமும் பாட்டும் சொல்லிக் கொடுப்பதில் நான் மிகவும் சந்தோசப்பட்டேன். காரில் போய் பள்ளிக்கூட வாசலில் இறங்கவும் என் மாணவிகள் ஓடி வந்து எலிசபத் ராணி காலத்தைப் போல் ஒரு காலை மடித்து வணங்கி வரவேற்பார்கள். மாணவர்கள் போட்டியிட்டு எனது பாக்கைத்தூக்கிக் கொண்டு போவார்கள். அந்தப் பிள்ளைகள் பத்து வயதுக்குள் தான் இருப்பார்கள் ஆனால் அவர்கள் மிக அழகாக ஆங்கிலப் பாட்டுப் பாடுவார்கள். நடனமோ சொல்லிக் கொடுக்காமலே தாளம் பிசகாமல் பாட்டுக்கு ஆடுவார்கள், வி. ஜானகி பாடிய ’கோகுலத்து பசுக்கள் எல்லாம்’ என்ற பாடலுக்கு, அவர்கள் என்னிடம் கோலாட்டம் பயின்று மிகவும் அழகாக பொது மேடையில் ஏறி ஆடினார்கள். நைஜீரிய நாட்டுப் பிள்ளைகள், இந்திய ஆடை ஆபரணங்களோடு ஆடுவதை பார்த்து மகிழ்ந்து எல்லோரும் பாராட்டினார்கள். அந்த நடனம் ஊடகங்களை மிகவும் கவர்ந்திருந்ததால் அதை டெலிவிசனிலும் ஒளிப்பரப்பினார்கள்.
இருண்ட கண்டத்தவர் கறுப்பாகவும் பார்க்க பயங்கரமாகவும் இருப்பார்கள் என்னும் அபிப்பிராயத்தோடு தான் அந்தக் கண்டத்திற்குள் காலெடுத்து வைத்தேன். ஆனால் ஒரு மாதத்திற்குள் என் அபிப்பிராயத்தை
மாற்றிக் கொண்டேன். ’கறுப்பு அழகு’ என்று ஒரு பண்பாட்டு இயக்கம் அமெரிக்காவில் 1960 ஆரம்பிக்கப்பட்டு இயங்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால் அந்த கூற்றை நான் இங்கு வேறு அர்த்தத்தோடு பார்த்தேன். அதாவது ‘கறுப்பும் அழகு தான்’
என்று. நைஜீரிய பெண்களின் மினுமினுக்கும் கறுத்த நிறமும் நேர்த்தியான அழகான முக வெட்டும், சிகீரியா ஓவியத்தின் ஒயிலான உடற்கட்டின் வசீகரமும் சேர்ந்து பார்ப்போரைச் சுண்டி இழுக்கும். அதே போல்தான் நெடிந்து உயர்ந்த ஆண்களின், கருங்காலி மேனியும், கம்பீர உடல் கட்டும், சுருட்டைச் சடையும், எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும். எத்தனையோ தரம் என்னை அறியாமல் அவர்களை கண்வெட்டாமல் பார்த்திருப்பேன் .
என்னுடன் வேலை செய்த சக ஆசிரியையின் அழகை ரசித்ததோடு, அவர் முகத்தில் இருந்த குறிகளின் காரணத்தையும் கேட்டேன். அதற்கு அவர் ”நைஜீரியாவில் நூற்றுக்கு மேற்பட்ட இனங்களும் பேச்சு மொழிகளும் இருக்கின்றன. கடூனாவில் பெரும்பாலோர் ஹவுஸா இனம். மற்ற முக்கியமானவை யரூபா, இக்போ இனங்கள். குழந்தையாக இருக்கும் போதே தங்கள் தங்கள் குலத்தின் அடையாளத்தை முகத்தில் கத்தியால் வெட்டி, கீறி, அல்லது எரித்து பதிவு செய்வார்கள். இம் முகக் குறிகளையும், பேசும் மொழியையும் கொண்டும் இனங்கண்டு கொள்வோம்,” என்றார். இந்த குறியீடுகள் அவர்களுடைய அழகிற்கு அழகு சேர்த்ததாக, எனக்குத் தெரிந்தது.
நாங்கள் அங்கு இருக்கும் போதுதான் ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து மூன்றில் மேஜர் ஜெனரல் முகமது புகாரி திடீரென சட்ட விரோதமாக ஜனாதிபதி, ஷெஹு ஷாகாரியின் மக்களாட்சி அரசாங்கத்தைக் கவிழ்த்து இராணுவ அரசாங்கமாக மாற்றி, தலைவரானார். அதைத் தொடர்ந்து 1985 இல் மேஜர் இப்ரகாம் பபகிண்டா பலாத்காரமாக இராணுவ அரசாங்கத்தின் தலைவர் ஆனார். இவை எல்லாம் தலை நகரமான லேகொசில் நடந்ததால் கடுனாவில் எந்தப் பதற்றநிலையையோ பாதிப்பையோ நாங்கள் உணரவில்லை. ஆயினும் அடிக்கடி முக்கியமான இராணுவ அதிகாரிகள் வாகனங்களில் செல்லும் போது சனத்தை விலத்துவதற்கு அபாயச் சங்கொலி, சைரன் அலற, ரோட்டில் உள்ள சனத்தை விலத்த திறந்த இராணுவ வாகனங்களில் நின்றபடி திமிரோடு, நீட்டுச் சவுக்கை விசுக்கிக் கொண்டு போவார்கள். முதன் முறை இதைக் கண்டதும் நாங்கள் பயந்துபோனோம். எங்கள் ஊரிலேதான் ஆமிக்காரன் என்றால் இங்கேயுமா? நாங்கள் தானே பொடிநடையாக ஒரிடமும் போவதில்லை, அதனாலே எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்கவில்லை.
ஆபிரிக்க்க் கண்டம் என்றதும் காட்டு மிருகங்களின் நினைப்புத்தான் வந்தது, அவற்றை அடிக்கடி காணலாம் என எதிர்பார்த்தேன். ஆனால், நைஜீரியாவின் நிலபரப்போ 923,768 சதுர கிலோ மீட்டர். அதிலே கடூனா ஒரு சிறு பகுதி. இங்கே . சுமைதாங்கிகளான ஒட்டகங்களைத் தான் காணக்கூடியதாகவிருந்தது. ஆனால் நாங்கள் குடியிருந்த பகுதியில் பாம்புகளுக்கு மட்டும் குறைவேயில்லை. ஒரு நாள் கவிதா தனது
படிக்கும் மேசை லாய்ச்சியை திறந்த போது உள்ளே ஒரு பாம்புச் செட்டை கிடந்தது. பயந்துபோய் வீடு முழுவதும் தேடினோம், ஒரு பாம்பும் கண்ணில் படவில்லை. இரண்டு நாள் கழித்து எல்லோரும் மதியம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அறைச் சுவர் ஓரமாக ஒரு பாம்பு நெளிந்து நெளிந்து போவதைக் கண்டோம். பாம்பின் தோல் மினு மினுத்துக் கொண்டிருந்தது. கழற்றி விடப்பட்டிருந்த அந்த செட்டையும் இந்த பாம்பின் நீளமும் ஒன்றாகவேயிருந்தது அப்படியென்றால் பாம்பு அழையாத விருந்தாளியாக எங்களுடன் கூடவே இருந்ததை நினைத்ததும் உடம்பெல்லாம் உதறியது.
தோசை சுட்டுச் சாப்பிடுவோம் என்றால் நைஜீரியாவில் உளுந்து கிடையாது. வீட்டைச் சுற்றி பெரிய தோட்டம் இருந்ததால், நண்பர் கொடுத்த உளுந்தை எங்களுக்கு நியமிக்கப்பட்ட பணியாளைக் கொண்டு பயிரிட்டோம். பயிர் நன்றாக வளர்ந்து உளுந்தை அறுவடை செய்யப் போன போது பணியாள் பயிர்களுக்கிடையே கருநாகம் இருப்பதாகக் கூறி அறுவடை செய்யப் பயந்தான். அது மட்டுமா கண்கொத்திப் பாம்புகளும் தோட்டத்தில் இருக்கிறதாகவும் சொன்னான். இதனால் இரவிலே வெளியே போவதையும் நிறுத்திக்கொண்டோம், கடூனாவின் பெரிய சந்தையிலே கூடையில் மலைப்பாம்பு விற்பனைக்கு வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறோம்.
துணி மணி வாங்குவற்கும் மரக்கறி, கறி வகைகள்வாங்குவதற்கும் கடூனாவில் உள்ள பெரிய சந்தைக்குத்தான் போகவேணும். முதல் முறை போகும் போது எங்கள் நண்பருடைய குடும்பத்தோடு தான் போனோம். நாங்கள் மரக்கறி வாங்கிக் கொண்டிருக்க, நண்பரின் மகன் செயோனும் கவிதாவும் கதைத்துக் கொண்டிருக்க, ஒரு நைஜீரிய இளந்தாரி, செயோனை அணுகி, ”உன்னுடைய சகோதரியை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அவளை எனக்கு கல்யாணம் கட்டித்தாறியா?” எனக் கேட்டிருக்கிறான். ”முடியாது!” என நறுக்கென பதிலளித்து விட்டு, உடனே எங்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்து விட்டான் செயோன்.
நைஜீரிய பண்பாட்டில் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்கிறீர்களா எனக் கேட்பது அந்த குடும்பத்தை பெருமைப்படுத்துவதாக கருதப்படும். இங்கு பலதார மணம், (polygamy) வழமையிலிருந்தது.. வட நைஜீரியாவில் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள். இஸ்லாமிய மரபின் ஷாரியா சட்டப்படி, ஒருவன் நாலு மனைவிமார் வைத்திருக்கலாம் ஆனால் செல்வந்தனாயிருந்தால் சட்டத்தை மீறி ஐந்து ஆறு பெண்களை மணந்து கொள்கிறார்கள். எங்கள் ஊரைப் போல் அன்றி ஆண்கள் தான் பெண்ணின் விலையாக பெண்ணின் பெற்றோருக்கு தங்கள் வசதிப்படி பணமாகவோ பொருளாகவோ கால்நடையாகவோ கொடுக்க வேண்டும். ஒருவனின் பொருளாதரத்தை அவன் மணந்திருக்கும் மனைவிகளின் எண்ணிக்கையில் இருந்து அனுமானுத்திக் கொள்ளலாம்
மனைவிமார் எல்லோரும் ஒரே வீட்டில் தான் குடியிருப்பார்கள். மூத்த மனைவி சொல்வதைத்தான் மற்ற மனைவிமார் கேட்கவேண்டும். நான் பணிபுரியும் தனியார் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் அவரது அல்ஹாஜி கணவருக்கு ஐந்தாவது மனைவி. ஒரு நாள் அவரது கணவரும் மூத்த மனைவியும் இவரைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களை மரியாதையாக வரவேற்கும் முகமாக மண்டியிட்டு வணங்குவதைக் கண்டேன். இந்த சம்பவத்தைச் சொல்லி தலைவிக்காகப் பரிதாபப்பட்டப்போது, என் கணவர், ”இது இவர்களின் பண்பாடு, இதை அவர்கள் அவமானமாகக் கருதுவதில்லை என்றார்.
ஒரு நாள் காலையில் வீட்டில் உள்ள எல்லோரும் வேலை, பள்ளிக்கூடம் என போய்விட்டோம். வழக்கம் போல மதியம் ஒரு மணிக்கு எங்கள் வாகனச் சாரதி, வருணியையும் கவிதாவையும் பள்ளிக்கூடத்திலிருந்து ஏற்றிக்கொண்டு வந்து வீட்டில் இறக்கிவிட்டுத் திரும்பிப் போயிருக்கிறான். வாகனம் போனபின் தான் வீட்டுக் கதவு ஆவென்று திறந்திருப்பதை பார்த்திருக்கிறார்கள். மனம் திக் திக்கென அடிக்க உள்ளே எட்டிப் பார்த்திருக்கிறார்கள். வீட்டுக்குள் பொருட்கள் அல்லோலகல்லோலமாக சிதறி கிடப்பதைக் கண்டதும், பயத்தில் உடல் நடுங்க அடுத்த தெருவில் இருந்த ஒரு இந்திய சக மாணவியின் வீட்டுக்கு ஒடிவிட்டார்கள். கள்ளர் வீட்டில் இருந்த டெலிவிசன், ரேடியோ, கமரா, எல்லா மின்சார உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு போயிருந்தார்கள். என் நகைகளை ஒரு நெஸ்கபே டின்னில் போட்டு தட்டுமுட்டு பொருட்களுடன் கபோர்டில் வைத்திருந்தேன். கபோர்ட் பொருட்களை வெளியே எடுத்துப் போட்டிருந்தார்கள். நான் பார்த்தபோது நெஸ்கபே டின் ஒரு பக்கமாக உருண்டு கிடந்தது, என் நகைகள் வைத்தபடியே டின்னுக்குள் இருந்தன. பொலிசுக்கு அறிவித்தோம் ஆனால் எந்த பிரயோசனமும் இல்லை. கள்வர்கள் வெளிநாட்டவர் வீடுகளை தேடித் தேடி களவாடுவது அங்கு வழமையாம். எப்போ? எங்கே? எந்நேரம்? என்று தெரியாது பயந்து பயந்து வாழ வேண்டியிருந்தது.
எமது சொந்தக்காரர் ஒருவர் கட்சீனா மாவட்டத்தில் தனியாளாகத்தான் தங்கி இருந்தார். இரவு அவர் படுத்திருக்கும் போது வீட்டுக்குள் கள்ளன் புகுந்துவிட்டான். கள்ளன் வேண்டியதை சுருட்டிக்கொண்டு போகும்வரை நடுங்கிக் கொண்டு, நல்லா இழுத்துமூடிக் கொண்டு படுத்திருக்கிறார். பொருள் போனால் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் உயிர் போனால்?
எங்களுக்கு நாலு தெருத்தள்ளி குடியிருந்த இரங்கநாதன், ஒரு நாள் வியர்த்து விறுவிறுக்க தன் நண்பரோடு வீட்டிற்கு வந்தார். ”தங்கச்சி, இவர் சம்பந்தர் சிறீலங்காவிலே இருந்து வந்திருக்கிறார். முதல்லே எங்களுக்கு நல்லா ஸ்டொராங்கா கோப்பி போட்டுத் தாங்கோ,” என்றார். ஒரு நாளும் கோப்பி வேணும் என்று கேட்கமாட்டாரே, மறு கேள்வி கேட்காமல் ஸ்டொராங் கோப்பியா போட்டுக் கொடுத்தேன்.
கோப்பியை குடித்து முடித்த இரங்கநாதன், பெருமூச்சு விட்டபடி சாய்ந்து அமர்ந்தவர்,” தங்கச்சி நேத்து இரவு நடந்ததை என் வாழ்நாளிலே மறக்கவே முடியாது,” என்றார். இடையில் ஓமோம் என ஆமோதித்தார் அவர் நண்பர் சம்பந்தர்.
“கம்பனி வேலையாட்களுக்கு நாளைக்கு சம்பளம் குடுப்பதற்காக பாங்கிலே நாப்பத்தாயிரம் நயாரரா மாத்தி வீட்டுக்கு கொண்டு வந்திருந்தனான். படு பாவிகள் இதை என்னன்டோ அறிந்திட்டாங்கள். ஒரு கள்ளக் கூட்டமே நடுச்சாமத்திலே வீட்டுக்குள்ளே உள்ளடுறதுக்கு யன்னல் கம்பியை வெட்டும் சத்தம் கேட்டு நாங்கள் முழித்துட்டோம். பிரீப் கேசில் இருக்கும் பணத்திலே கொஞ்சத்தை ஆவது எடுத்து எங்கேயாவது ஒளித்து வைப்போம் என்று கம்பிநேஷன் நம்பரை போட்டு திறக்கப் பாத்தேன், பயத்தோடு கை நடுக்கமும் சேர எனக்கு இலக்கம் போடமுடியாமல் போயிட்டுது. இவன் சம்பந்தன் பயத்திலே கட்டிலுக்கு கீழே ஒளிக்கப் பாத்தான். கட்டிலுக்கு கீழே போகக் கூடிய உடம்பா இது” நண்பரின் உடலைக்காட்டி சிரித்தார். “தலையும் உடலின் மேல்பகுதிதான் கட்டிலுக்கு கீழ், மிகுதி உடம்பு வெளியேதான். பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்ட கதைதான். உள்ளே துப்பாக்கியோடு வந்த கள்ளர்கள், பிரீப் கேசின் பூட்டை உடைத்து காசு இருக்கா என்டு செக் பண்ணிட்டு பிரீப் கேசோட போயிட்டாங்கள். அவங்கள் போகும்வரை நான் மூச்சே காட்டவில்லை. கட்டிலுக்கு கீழேயும் போகமுடியாமல் வெளியேறவும் முடியாமல் இருந்த இவரை ஒரு மாதிரி வெளியே இழுத்து எடுத்த பின் மெல்ல வெளியே போய்ப் பாத்தோம். வீட்டை சுற்றி நைஜீரிய அயலவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். ஒருவர் என்னைப் பாத்து, உங்களை காப்பாற்ற வந்திருந்தால் எங்களுக்கு தான் ஆபத்து, சொரி மாண். இப்படி துப்பாக்கியோடு வந்தால் விடுப்புத்தான் பார்ப்போம். வந்தது ஒரு பெரிய காங், என்றார்கள்.” என்றவர் அப்பாடா என பெருமூச்சுவிட்டார்
நைஜீரீயர்கள் கதைக்கும் போது நாங்கள் ’ஐசே’ என்பது போல் ஆங்கிலச் சொல்லான மான் (man) போட்டுத்தான் கதைப்பார்கள்.
தொடர்ந்து, இரங்கநாதன் ”காலையில் பொலிசுக்கு முறையிட்டோம். அவர்கள் நீங்கள் எப்போதும் உங்கள் காவலுக்கு ஒரு துப்பாக்கி வைத்திருக்க வேணும், கள்ளர்களைக் கண்டு பிடிக்க பாக்கிறோம் என்றார்கள். அவர்கள் தோரணையில் இருந்து காசை மீட்க எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள் எண்டு விளங்கியிட்டுது,” என்றார்.
அவர் நண்பர், சம்பந்தர், ”!வாரும் ”இரங்கா! போவம் எனக்கு அடுத்த ஃப்லைட்டிலே கொழும்புக்கு சீட் புக் பண்ணி விடும்,” என்றார்.
தங்கள் மனப்பாரத்தை என் மனதில் இறக்கிவிட்டுப்போனார்கள். இதற்குப்பின் எனக்கு வீட்டில் தனியே இருக்க ஒரே பயம்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, எமது கார் சாரதியும், மைகாடியும் (காவல்காரன்) லீவில் இருந்தார்கள். என் கணவர் மேசையடியில் இருந்து ஊருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். வருணி தன் சிநேகிதி வீட்டுக்கு போயிருந்தாள். நான் குசினியில் வேலையாயிருந்தேன். திடீரென்று திடும் திடும் என்ற சத்தம் கேட்டது, அடுத்து இரண்டு நைஜீரியர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
ஒருவன் கையில் துப்பாக்கியுடன் என் கணவரிடம் நேராக வந்து அவர் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்தபடி, ”உன் கார் திறப்பைத் தா,” என ஆங்கிலத்தில் உறுமினான். மற்ற முரடன் ஒரு கையில் கத்தியுடன் மறு கையால் என் வாயை அழுத்திப் பொத்திக்கொண்டான். என் மிதந்த முன் பற்கள் சொண்டை வெட்ட, இரத்தம் கசிய முழி பிதுங்க கணவரைப் பார்த்தேன். அவரும் முழி பிதுங்க என்னைப் பார்த்தார்.
”திறப்பு அறையில்” என கணவர் சொல்ல,
“உம்! அறைக்குப் போ,” என துப்பாக்கியை முகத்தில் விசுக்கியபடி உறுமினான். என் கணவரும் அறையை நோக்கி மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தார்.
“ஊம் கெதியாப் போ!!” என திரும்பவும் உறுமினான்,அந்தக் காப்பிலி.
இங்கு நடந்தவற்றை எல்லாம் உள்ளே மற்ற அறையில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த கவிதா, அறையை ஒட்டினாற்போல இருந்த டொய்லட்டில் வெளியே போவதற்கு இருந்த கதவைத் திறந்து கொண்டு, ஹவுசா மொழியில் ”பராவோ!! பராவோ!!” எனக் கத்தியபடி வெளியே ஒடினாள். பகல் வேளையானதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கத்தியும் பொல்லும் கொண்டு வீட்டுக்குள் ஓடி வரவும், அந்தத் தடியன்கள் முன் வாசலால் வெளியே ஓடி விட்டார்கள்.
கவிதாவை எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் நான் மட்டும், ”கார் போனால் என்ன? அந்த முரடன்கள் அப்பாவை நெற்றிபொட்டில் சுட்டிருந்தால் என்னவாகியிருக்கும்,” என்று நினைத்த போது உடம்பு நடுங்கி வியர்த்தது. ஏன் இப்போது இதை எழுதும் போது என் உடம்பு நடுங்குகிறது.
அன்றைக்கே நாங்கள் இனியும் இந்த நைஜீரியா வாழ்க்கை வேண்டவே வேண்டாம், எங்கள் ஊருக்கே திரும்பிப் போயிடலாம் என யோசித்தோம். ஆனால், அதற்கும் சாத்தியம் இல்லை. எங்கள் தாய் நாட்டின் போர் முடிவுக்கு வரும் அறிகுறி எதுவுமே இல்லை. எங்கள் பாடு ’இருதலைக் கொள்ளி எறும்பின்’ நிலை தான். ஊருக்கு போகிற கனவை மறந்து வேறு வழியைத் தேடினோம். அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயரும் விண்ணப்பத்தைத் துரிதப்படுத்தி ஆயிரத்து தொளாயிர்த்து எண்பத்து ஆறில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திற்குக் குடியேறினோம்.
நன்றி வீரகேசரி, நன்றி கணையாழி