முகிழ்த்தது முத்து

‘மான்ஹால்’ (Manhole)…. ( சிறுகதை ) வ.ந. கிரிதரன்.

ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. “கொட் டோக்” (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்’தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், ‘சிக்கிட்ஸ்’ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான்.

‘ஏன் சிரிக்கிறாய்’ என்றேன்.

‘பார்த்தாயா காலத்தின் கூத்தை. ‘

‘காலத்தின் கூத்தா…’

‘காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன’

சிறிது நேரம் ஆகாயத்தைப் பார்த்தான், அதில் முழுமதியை ரசித்தான்.

நேரத்துடனேயே இருட்டத் தொடங்கிவிட்டது. இன்னமும் மாநகரத்தின் பரபரப்பு குறையவில்லை.

ஆளுக்கு ஆள் அரக்கப் பரக்க நடந்துகொண்டிருந்தார்கள். இதற்கிடையில், எனக்கும் ஒரு சில ‘கஸ்டமர்’கள் வந்தார்கள். எனது வாடிக்கையாளர்களில் ஒருவனான நைஜீரியா டாக்ஸி டிரைவர் டாக்ஸியை வீதியோரம் நிறுத்திவிட்டு வந்தான்.

‘ஹாய். எப்படியிருக்கிறாய் ‘சீவ் (Chief)’ வென்றேன்.

‘பிரிட்டி குட் மான். நீஎப்படி’ யென்றான்.

‘எனக்கென்ன. நான் எப்பொழுதுமே ஓ.கே.தான்’ என்று விட்டுச் சிரித்தான். அருகிலிருந்த சாமியும் சிரித்தான்.

இவன் உண்மையிலேயே ஒரு ‘சீவ்’ இவனது சொந்த நாடான நைஜீரியாவில் இவனை நம்பி இவனிற்குக் கீழ் மூவாயிரம் பேர்களிருக்கின்றார்கள், இவனது இனம் நைஜீரியாவிலுள்ள பல ஆதிக் குடிகளில் ஒன்று. ஒவ்வொரு முறையும் இவனது ஒப்புதலிற்காக பத்திரங்களை இங்கு அனுப்புவார்கள். இங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்றவன், ‘வின்ரர் இல் இங்கு டாக்ஸி ஓடுவான், ‘சமர் என்றதும் நைஜீரியாவிற்கு ஓடிவிடுவான். இவனது மக்களிற்கு இவன் இங்கு டாக்ஸி ஓடுவது தெரியாது. தெரிந்தால் இங்கிருக்க விட்டு வைக்க மாட்டார்கள் என்பான். இவனைப்போல் வேறு பல ‘சீவ்’களும் டாக்ஸி ஒடுவதாக ஒரு முறை இவன் கூறியிருந்தான்.

அப்பொழுதுதான் அருகிலிருந்த சாமியைப் பார்த்தான். ‘ஹாய் சீப். எப்படியிருக்கிறாய்.” என்றான். ஆபிரிக்க ‘சீவ்’ கனேடிய ‘சீவ் வைப் பார்த்துக்

குசலம் விசாரிக்கின்றான். சாமியின் இனத்தவர்கள் ஒரு காலத்தில் அமெரிக்கக் கண்டத்தையே ஆண்டவர்கள். ஆண்ட பரம்பரையின் வாரிசுகளில் ஒருவன் இன்று சிறுபான்மைக்குள் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,.

சாமி பதிலிற்குச்சிரித்தான். ஆபிரிக்கச் ‘சீவ் கனேடியச் ‘சீவ் விற்கு சிகரெட் ஒன்றைத் தந்துவிட்டுச் சென்றான். நல்லவன்’ என்றுவிட்டுச் சாமி சிகரட்டை ஊதிப் புகையை விட்டான். எனக்கு அவன் காலத்தின் கூத்தைப் பற்றிக் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.

‘ஏதோ. காலத்தின் கூத்து’ என்றாயேயென்றேன்.

‘பார்த்தாயா. இந்தியனான நீ இங்கே நடைபாதையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றாய், இந்தியனான நான் நடைபாதையில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றேள். ஆபிரிக்கனான அவன் நடுரோட்டில் வாகனமோட்டி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றான்’ என்றவன் பாராளுமன்றக் கட்டடத்தைக் காட்டினான் ‘அங்கிருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக்கின்றார்கள். காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன.’

இதனைத் தொடர்ந்து ஒரு சிறுபாடலை அழகாகப் பாடினான்.

‘காலம் சுயாதீனமானதோ.

காலம் சார்பானதோ.

ஆனால் நிச்சயமாகக்

காலம் பொல்லாதது’

இந்தச்சாமியின் பூர்வீகம் மர்மம் நிறைந்திருந்ததாகப்பட்டது. இவன் பாடிய பாடலின் கருத்து அவ்வளவு அறிவுபூர்வமாகவிருந்தது. பூர்வீகத்தில் பெளதீக விரிவுரையாளனாகவிருந்த எனக்கு இந்தப்பூர்வீக இந்தியன் புதிர் நிறைந்தவனாகவே பட்டான். எனக்கு கடந்த மூன்று மாதங்களாக இவனைத் தெரியும். இவனைப் பற்றி இதுவரையிலான என் அனுபவத்தின் வாயிலாக நான் அறிந்தவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம். இவனொரு பூர்வீக இந்தியன், அடிக்கடி நடைபாதைகளில் போத்தலும் ஆட்டமுமாகக் காணப்படும் இவனது இனத்தவர்களிலிருந்து வித்தியாசமாகவிருந்தான் சிகரட் தவிர இவன் மதுவைத் தொடுவதில்லை. இவனிற்குக் குடும்பம் என்று இப்பொழுது எதுவுமில்லை, முன்பு ஏதுமிருந்ததா? தெரியவில்லை. இவன் தன் பூர்வீகத்தைப் பற்றி இதுவரை ஏதும் கூறியதில்லை. ஒரு முறை அறிய முயன்ற பொழுது தட்டி மழுப்பிவிட்டான். அதன்பிறகு நானும் கேட்கவில்லை இவனும் கூறவில்லை. நடைபாதை வழியே போகும் மனிதர்கள் போடும் தர்மத்தில் இவனது வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கின்றது நாள் முழுக்க சிகரட் பிடிப்பான், இவன் சிகரட்டிற்காக பணமெதுவும் செலவழிக்க மாட்டான். அருகிலுள்ள கட்டடங்கள் முன்பாக நடைபாதைகளில் காணப்படும் சிகரட் துண்டுகளைப் பொறுக்கி வந்து குடிப்பான்.

சாப்பாட்டைப் பொறுத்த வரையில் அருகிலுள்ள டோனட் கடையில் அடிக்கடி காப்பி வாங்கிக் குடிப்பான், சிலவேளைகளில் டோனட் வாங்கிவருவான். இரவில் நான் ஒவ்வொருநாளும் ‘கொட்டோக்கும், குடிப்பதற்கேதாவது யூஸ்’சும் கொடுப்பேன்.

இலவசமாக வாங்க மாட்டான். கையிலிருப்பதைத் தருவான். வேண்டாமென்றால் கொடுப்பதை வாங்கமாட்டான். பெரும்பாலும் அதிகமான வேளைகளில் மோனத்திலாழ்ந்திருப்பான் அல்லது என்னுடன் அளவளாவுவான். இயற்கைக் கடன்களைக் கழிப்பது முகங் கழுவுவதெல்லாம் அருகிலுள்ள ஆஸ்பத்திரி

‘வாஸ்ளும்’ களில்தான். எப்போதாவது சிலசமயங்களில் எங்கோவொரு ஹாஸ்டலிற்குச் சென்று குளித்துவிட்டு வருவான். இதைத்தவிர இவனது வீடு உலகமென்றால் அவன் அமர்ந்திருக்கின்ற அந்த மான் ஹோல்தான். இவனது கந்தல்களடங்கிய மூட்டையொன்றை அதற்குள் தான் வைத்திருககின்றான். அந்த மூட்டைக்குள் அப்படியென்னதானிருக்கின்றதோ. இவனைப் பற்றி இவ்வளவுதான் இதுவரையில் அறிந்திருந்தேன். இனிமேல்தான் மேலதிகமாக

ஏதாவது அறிய முயல வேண்டும்.

இன்னுமொரு இரவு அசைந்தபடி சிறிது ஓய்ந்திருந்தது. பிஷினசும் சிறிது மந்தநிலையிலிருந்தது. சாமி எதனையோ சிந்தித்தான், பின் சிரித்தான்.

‘ஏன் சிரிக்கிறாய்’ என்றேன்.

“உலகமெல்லாம் இந்தியர்கள் நிறைந்திருக்கிறார்கள்’ என்று விட்டுச் சிரித்தான், ஏதோ தத்துவமொன்றைக் கூறிவிட்டது போன்றதொரு திருப்தி முகத்தில் படர்ந்திருந்தது.

‘உண்மையில் நீயும் இந்தியனில்லை, நானும் இந்தியனில்லை’ யென்றேன்.

‘நான் இந்தியனில்லையென்பது சரி, இந்திய உபகண்டவாசி யாருமே இவர்களிற்கு இந்தியன்தான், ஈஸ்ட் இன்டியன்’

‘ஆனால் பலரிற்கு ‘பாக்கி’ ‘யென்றேன். இதைக் கேட்டதும் சாமி பலமாகச் சிரித்தான். ‘இங்கென்னவென்றால் இந்தியனைப் ‘பாக்கி யென்கிறார்கள், பாக்கிஸ்தான்காரனையும் இந்தியனென்கின்றார்கள். அங்கென்னவென்றால் பாகிஸ்தான்காரனும் இந்தியனும் ஆளிற்கால் அடிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்’ என்றேன்.

இதற்கும் சாமி சிரித்தான். அப்பொழுது தான் சிரிப்பையும் மீறிச் சாமியின் முகத்தில் படர்ந்திருந்த சோர்வினை அவதானித்தேன்.

‘என்ன உடம்பிற்’ கென்றேன், ‘ஒன்றுமில்லை இலேசான காய்ச்சல்’ என்றான். நான் எப்பொழுதுமே ஒரு அஸ்பிரின் பார்ட்டில், பிளாஸ்டர் பக்கற் வைத்திருப்பது வழக்கம்.

‘ஆஸ்பிரின் வேண்டுமா’ வென்றேன். ‘இலேசான காய்ச்சல் சரியாய் விடும்’ என்றான். நானும் வற்புறுத்தவில்லை.

மறுநாள் நான் கடையை விரித்தபோது ஒன்றை அவதானித்தேன், சாமியை அவனிருப்பிடத்தில் காணவில்லை. வழக்கமாக அவன்தான் வரவேற்பான். மனதிற்கென்னவோ மாதிரி உணர்ந்தேன். இந்த மூன்று மாதங்களாக இன்று நான் முதல் முறையாக சாமியின் வரவேற்பை இழந்திருந்தேன். வழக்கமாக நான் கடையை விரிப்பது பத்துமணியளவில்தான். அதற்கிடையில் சாமி தனது காலைக் கடன்கள், சாப்பாடு எல்லாவற்றையும் முடித்து விட்டுத் தனது சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டிருப்பான். அந்த ஒளிமிகுந்த கண்களின் ஞாபகம் வந்தது. அந்தப்புன்னகை நினைவில் தெரிந்தது. சிலவேளை ‘லேட்டா’கச்சாமி எழும்பியிருப்பானோ அப்பொழுதுதான் முதல்நாளிரவு இலேசான காய்ச்சலுடன் சாமியிருந்தது ஞாபகத்தில் வந்தது. காய்ச்சல் அதிகமாகி ஆஸ்பத்திரியில் முடங்கியிருக்கின்றானோ என எண்ணினேன். சிறிது நேரத்தில் நான் வியாபாரத்தில் மூழ்கினேன். வியாபாரம் சிறிது மந்த நிலையை அடைந்தபோது

இருட்டி விட்டிருந்தது. சாமியை இன்னும் காணவில்லை. என்மனதை மீண்டும் எதுவோ செய்வதை உணர்ந்தேன். இரவு பத்து மணியளவில் நைஜீரியா ‘சீவ் வந்தான் ‘எப்பிடி பிஸினஸ்’ என்றான். அப்பொழுது தான் ‘மான் ஹோல்’ வெறுமையாயிருப்பதை அவதானித்தான்.

‘சீவ் எங்கே. ‘யென்றான்.

‘இன்று முழுக்க அவனைக் காணவில்லை எங்கு போனானோ

தெரியவில்லை.”

‘நேற்றிரவு ஏதாவது சொன்னானா. ‘

‘சிறிது காய்சலுடன்தானிருந்தான், அஸ்பிரினும் வேண்ட மறுத்து விட்டான். ‘

‘அவன் வேறெங்காவது தங்குவதுண்டா. ‘எனக்குத் தெரிந்து அவன் இந்த ‘மான்ஹோல்’ மூடியின் மேல்தான் படுப்பது வழக்கம். அவனுடைய உடமைகளைக் கூட இந்த மான்ஹோலிற்குள் தான் வைத்திருப்பான்.

“அப்படியா.’ ஆபிரிக்க ‘சீவ் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கி நினைவிற்கு வந்தான்.

‘எனக்கொன்று தோன்றுகின்ற’ தென்றான்.

‘என்ன’

‘ஒரு வேளை அவன் தன் இருப்பிடத்தை மாற்றி விட்டானோ. எதற்கும் மான் ஹோலைத் திறந்து பார்த்தால் தெரிகின்றது. அதற்குள் அவனது பொக்கிஷங்களில்லையென்றால் அவன் தன்னிருப்பிடத்தை மாற்றிவிட்டானென்று அர்த்தம். ‘

இவ்விதம் கூறிவிட்டு அவன் மான்ஹோல் மூடியைத் திறந்தான். திறந்தவன் ‘என் கடவுளே. ‘ என்று கத்தினான். இங்கே வந்து பாரென்றழைத்தான். எட்டிப் பார்த்தேன். உள்ளே தனது மூட்டை முடிச்சுகளை மார்போடனைத்தபடி சாமி குடங்கியிருந்தான். அடக் கடவுளே. இன்று முழுக்க இதற்குள்ளேயா கிடந்திருக்கின்றான்.

‘ஏ சீவ். சீவ். ‘ நைஜீரிய ‘சீவ் சத்தமிட்டு அழைத்தான். அசைவொன்றையும் காணவில்லை. இதற்கிடையில் சென்று கொண்டிருந்தவர்கள் சுற்றிவரக் கூடினர். நைஜீரிய ‘சீவ்’ மான் ஹோலினுள் குதித்தான். தொட்டுப் பார்த்தான்.

‘போய்விட்டான்’ என்றான்.

தொலைவில் இருளில் ரொமானெஸ்க் கட்டக்கலைப் பாணியிலமைந்திருந்த ஒண்டாரியோ பாராளுமன்றம் அழகாகப் பிரகாசமாகத் தெரிந்தது. ‘அங்கிருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சாமி கூறியது நினைவில் தெறித்தது.

தேடல் – யூலை, ஒகஸ்ட் 1996. பதிவுகள்.காம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.