ஒஸ்ரேலியாவில் வதியும் நீர்கொழும்பு “வீரகேசரி” லெட்சுமணன் முருகபூபதி தமிழ் கூறும் நல்லுலகில் நன்றாக அறியப்படும் புகழ் பூத்த எழுத்தாளர்.
“ காற்று வாங்கப் போனேன் ஒரு வேலை வாங்கி வந்தேன்- எழுத்துக்கு கிடைத்த முதல் சன்மானம் 20 ரூபா “ என்ற மகுடத்தில் சுவைபட எழுதி அக்னி குஞ்சு இணயத்தளத்தில் சேர்த்த பதிவினை பொன். இராஜகோபால் அருள்நாவலன் சில தினங்களுக்கு முன்னர் எனக்கு மின்னஞ்சல் செய்திட்டார். முருகபூபதியின் எழுத்துக்கு நான்ஒரு நல்ல வாசகனாவேன்.
கட்டுரையின் ஒரு கட்டம் என் மனதை நெகிழவைத்து ஒரு சொட்டு கண்ணீர் திவலையை முட்ட வைத்து விட்டது.
என் இனிமை வாய்ந்த நண்பர்களே அதை நீங்களும்வாசிக்க வேண்டாமா.
“ நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிளாளர்களின் பேச்சுமொழி தூக்கலாகவிருந்த சிறுகதையொன்றை எழுதினேன். அதைப் பிரசுரிக்க வீரகேசரி பொன். இராஜகோபால் முன்வரவில்லை. மல்லிகைக்கு அனுப்பினேன்.அது பிரசுரித்தது.
அதே கதையை நாடகமாக்கினேன். இலங்கை வானொலியில் * சங்கநாதம் * இளைஞர் நிகழ்ச்சியை தயாரித்துக் கொண்டிருந்த நண்பர் வி. என். மதிஅழகன் அதை ஒலிபரப்பினார்.
நீர்கொழும்பிலிருந்து எனது நண்பர்கைள அந்த நாடகத்துக்காக இலங்கை வானொலி கலையகத்துக்கு அழைத்துச் சென்றேன். எனக்கு 20 ரூபா சன்மானம் கிடைத்தது. அதுவே எனக்குக் கிடைத்த முதலாவது சன்மானம்.அந்தப் பணத்தை பல நாட்கள் செலவிடாமல் வைத்திருந்தேன்.
1972 ல் எனது முதல் எழுத்துக்கு கிடைத்த இருபது ருபா சன்மானத்தை மறக்கத்தான் முடியுமா?”
இந்த மட்டில் முருகபூபதி நிற்பாட்டி விட்டிருந்தால் அனேகமாக இந்த முகநூல் பதிவை போட முனைந்திருக்க மாட்டேன்.
அவர் வைத்த இந்த முத்தாய்ப்புத்தான் என் நெஞ்சைத் தொட்டுத் தூண்டி விட்டது.
“ கடந்து வந்த பாதையை மறந்து போனால் செல்லும் பாதை இருட்டாகிவிடும்.”
நண்பர்களே ! 1972 ல் இலங்கை வானொலி 5 ம் இலக்க கலையகம். அறிவிப்பாளர் சி.சண்முகம் இலங்கை வங்கி அனுசரணையில் பிரதி எழுதித் தயாரித்த வர்த்தக சேவை 15 நிமிட நாடகத்தில் நானும் நடித்து வெளியே வருகிறேன்.அங்கு காத்திருந்த விளம்பர முகவரான பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராஜன் “ “ராசன் இந்தா பிடி” என எனது கையில் பொத்தினார் ஒரு புத்தம் புதிய தாளை. பார்த்தேன். பரவசமானேன். கம ,கமக்கும் ஒரேஞ்- பிங் கலர் 5 ரூபா.
எழுதினேன் யாழ்ப்பாணம் , சண்டிலிப்பாய், கல்வளையில் வசிக்கும் எனை ஈன்று பேணி வளர்த்த அம்மாவுக்கு ஒரு கடுதாசி. அதில் “ “அம்மா நான் நடித்து சம்பாதித்த முதல் வரும்படி. உன் தாள்களுக்கே இந்தத் தாள் அர்ப்பணம்”. குண்டூசியால் குத்தி இணைத்தேன் அந்த நோட்டை. என்பலப்பினுள் வைத்தேன். 10 சத முத்திரையை ஒட்டினேன். போட்டேன் கடும் சிவப்பு நிற தபால் பெட்டிக்குள்.
அடுத்த இரண்டு நாள்களில் கடிதம் அம்மாவை எட்டியது.