`மத்தாப்பு’ குறுநாவல்!…. 5 … ( ஈழத்து எழுத்தாளர் ஐவரின் படைப்பு )
மத்தாப்பு!…. ( ஈழத்து எழுத்தாளர் ஐவரின் படைப்பு )
1. வர்ணம் —– பச்சை —– இ.நாகராஐன்.
2. வர்ணம் —– சிவப்பு —– கனக. செந்திநாதன்.
3. வர்ணம் —– நீலம் —— சு.வேலுப்பிள்ளை.
4 .வர்ணம் —— மஞ்சள் —– குறமகள்.
5. வர்ணம் —— கத்தரி —— எஸ்.பொ. —–
மத்தாப்பு!…..
அறுபது ( 60 ) வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல்
எஸ்.பொன்னுத்துரை
எஸ்.பொ என அறியப்படும் எஸ்.பொன்னுத்துரை சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் எனப் பல பரிமாணங்களில் இயங்கியவர். 1989 இல் அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்ததுடன், சென்னையில் `மித்ர’ என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து பல நூல்களை வெளியிட்டுள்ளார். இலங்கையிலும் நைஜீரியாவிலும் ஆசிரியப்பணி புரிந்த இவர், அக்கினிக்குஞ்சு இதழின் பிரதம இலக்கிய ஆலோசகராகஇருந்தவர். சடங்கு, தீ, ஆண்மை, வீ, மாயினி, நனவிடை தோய்தல், இனி ஒரு விதி செய்வோம், வரலாற்றில் வாழ்தல் இவர் எழுதிய நூல்களில் சில. `தீ’ நாவல் ஒரு திருப்புமுனையாகவும் சர்ச்சைகளுக்குரியதுமாகவும் இருந்தது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதை 2010 இல் பெற்றுக்கொண்டார்.
வர்ணம் (5) – கத்தரி
எஸ்.பொ
அர்த்த சந்திரன் அஸ்தமிக்க, வானத்தில் இருள் குவிகிறது…
அரைத்தூக்கத்தில் கண் சிமிட்டும் விண்மீன்கள்.
செழுங்கிளை தாங்கி இருள் விரிக்கும் ஆலமரம்.
அதன் கீழே இருபத்தைந்து வருட வாழ்க்கை பாதையிலே மனதை மேயவிடும் மாரிமுத்து.
ஒரு வினாடிப் பொழுதின் பின்னத்தில் வானத்தின் இருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பும் மத்தாப்பின் ஒளித்துளிகள். வெள்ளிகளுக்கு ஒளியூட்டும் நினைவுடன், மருந்து கொடுத்தவேகத்தில் மேலெழும் ஒளிப்பந்துகள், அந்தரத்தில் பயணம் தடைப்பட்டுக் கீழே இறங்கி, மறுபடியும் சூன்ய இருளுடன் இருளாக… ஒளிப்பந்துகள் சதிராடிய அரங்கமும்,ஒளிவீதியும் மறைய…
மீண்டும் வானத்தில், வண்ணத்திற்கு ஒன்று வகைக்கு ஒன்றாகப் பூக்கும் மலர்களைப்போல எழில்காட்டும் மத்தாப்பின் ஒளிப்பந்துகள்!
ஆலமரத்தின் மேலே சிந்தும் ஒளித்துளிகள். வானிலிருந்து அறுந்த நட்சத்திரங்கள் தன் சென்னியில் விழும் மயக்கத்தை மாரிமுத்துவுக்குத் தருகிறது. கணத்தின் துகட்பொழுதில் பரவிய ஒளிப்பிரவாகத்தில், ஆலின் அடியில் அதனுடன் தழுவி வளரும் அரசங்கன்றொன்று அவன் கண்களிற்படுகின்றது. அவன் கைதியாக முல்லைப்பற்றுக் கிராமத்தை விட்டுச் சென்ற அந்தக் காலத்தில் அந்த மரம் அங்கு கிடையாது.
இப்பொழுது?
இருப்பன இல்லையாகி, இல்லாதன இருப்பனவாகி, சிறியன உப்பிப் பருந்துப் பெரியனவாகி, பெரியன முதுமை எய்தி, தேய்ந்து, அணுவணுவாக மங்கிப்போகும் விந்தைகளும், அனந்தகோடி அநித்திய மாற்றங்களும் நிகழும் வாழ்க்கையின் ஒற்றைவழிப் பாதையைத் திரும்பி நோக்கும் மாரிமுத்து, தன் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய…..
வாழ்க்கை?
காலவெள்ளத்தின் நீர்ப்பரப்பிலே சுழிந்து, குமிழ்ந்து, சூனிய உள்ளடக்கத்தை வைத்து உருவம் காட்டி, அற்ப வினாடிப்பொழுதின் சிறுபின்னத்தில் நித்திய யாத்திரை செய்ய முனைந்து, அநித்தியத்ளதிற்குள் நித்தியமாகிவிடும் நீர்க்குமிழியாக…. இல்லை ஆலங்கிளைகளுக்கு மேலே, அரைத்தூக்கத்திற் கண் சிமிட்டும் நட்சத்திரங்களுக்குக் கீழே, அந்தர வெளியில், ஒளியின் சித்து வியைளாட்டுக்களில் பம்மாத்துக் காட்டி, மீண்டும் சூனியத்துடன் சூனியமாகிவிட…. அந்த ஒளிப்பந்துகளை தன்வயிற்றிற் சுமந்து, பின்னர் தீயின் வாதனையில் அவற்றைப் பிரசவித்த கொட்டு, வெறும் கொட்டாகச் சம்பல் படிந்த அழுக்கு நிலையில் கிடக்க, அதைச் சடலமென்று சொல்லிக் கட்டையுடன் கட்டையாக அடுக்கி இடுகாட்டில் சாம்பராக்கிவிட….
அப்புறம்?
அந்த வினாவின் உள்ளடக்கமான சூனியம் மாரியின் உள்ளத்திற் பரவிப் படர்கின்றது…. மத்தாப்பிலிருந்து எழும் பச்சை ஒளிக்கதிரின் பசுமையுடன் அரசமரத்தடியில் அவனுடைய வாழ்க்கையின் திசையை மாற்றியமைத்த அந்தச் சம்பவம் உரம் உண்டு வளர்கின்றது.
கதிர்காமத்தைவிடடுப் புறப்பட்ட மாரிமுத்து, அப்புகாமியுடன் மலைநாட்டிற்கு வந்தான். அப்புகாமிக்கு மாத்தளை தான் பிறந்த மண். அங்கு ஏதாவது வேலைதேடிக் கொள்ளலாமென்ற நம்பிக்கையை, அவன் மாரியின் உள்ளத்தில் வளர்த்திருந்தான். குற்றமற்ற தன்னைக் கொலைகாரனாகக் கற்பித்த முல்லைப்பற்று அவனுக்கு பிணம் எரியும் சிதையாகத் தோன்றியது… அவர்கள் கண்டியை அடைந்தார்கள்.
அங்கு மாத்தளைக்குச் செல்லும் பஸ்ஸிற்காக அவர்கள் காத்திருக்கும் பொழுது, அந்த பக்கமா வந்த தரகர் தம்பையா, மாரியை அடையாளம் கண்டுகொண்டார். முல்லைப்பற்றிலிருந்து ஏழு மைல் தூரத்திலுள்ள பட்டினமே அவருடைய சொந்த ஊராயினும், சுற்றுவட்டாரத்திலுள்ள பிராந்தியமெல்லாம் அவருக்குத் தண்ணீர் பட்டபாடு. ஆளும் வெகு ‘சுழியன்’ புகையிலைத் தரகு, மாட்டுத் தரகு, கல்யாணத்தரகு முதலிய பல துறைகளிலும் பாண்டியத்தியமுள்ள சகலகலாவல்லவர். சிறையில் பல வருடங்கள் வாடி அல்லலுற்று, உருக்குலைந்து போயிருக்கும் மாரியை இப்பொழுதும் அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது என்றால், அதற்கு அவருடைய தரகுக்கலை ஞானமும், ஞாபக சக்தியுமே
காரணங்களென்பது உண்மை. கண்டிக்கு, முதலாளி சங்கரப்பிள்ளையின் மகளுடைய கல்யாண விஷயமாக வந்திருக்கிருறார்.
“நீ…” என்று சிறையைப்பற்றி விசாரிக்க நினைத்த அவர், மாரியின் முகத்தில் தேன்றிய சுருக்கங்களினால் பின்னடைந்து, கேட்கக் கருதிய கேள்வியை விடுத்து, “இங்கை எப்ப வந்தனீ?” என்பதுடன் முடித்துக்கொண்டார். தரகர் தம்பையாவின் சிறப்பியல்புகளூள் ஒன்று மணமறிந்து பேசுவதும்.
“வேலையொண்டு தேடுகிறனண்ணை?”
“வேலை றோட்டிலையா போட்டுக்கிடக்குது?”
“மாத்தளையில் ஏதோ…”
“இங்க, நீ என்னோட பேக்கதை கதைக்காமல் வா. இஞ்சையுள்ள மூலைக்கடையொண்டிலை சேத்துவிடுறன்… ஏன்? சங்கரப்பிள்ளை முதலாளியும் என்ரை கூட்டாளிதான். அவனிட்டையே வேலை இருக்கு வா.”
மாரிமுத்து அப்புகாமியைப் பார்த்துத் தயங்கினான். ஆனால் அப்புகாமி ஒன்றும் ஆட்சேபிக்கவில்லை.
அடுத்த தினமே மாரிக்கு சங்கரபிள்ளையிடம் வேலை கிடைத்தது.
கீரிமலை – சுதுமலை மலைவளங்களும் தொண்டமானாறு போன்ற தினமும் நதிவளமும் பெற்றும், வானம் பொய்க்கும் புண்ணிய பிராந்தியமான யாழ்ப்பாணப் பகுதியின் மக்கள், வறுமையுடன் நடத்தும் நித்திய போராட்டங்கள் காரணமாகத் தென்னிலங்கையிலும், மலைநாட்டிலும் பல ‘மூலைக் கடைகள்’ நடத்திவருவதை யாவரும் அறிவார்கள். கப்பலோட்டிய தமிழனின் வீரமெல்லாம், மூலைக்கடை வியாபாரத்தில் முடங்கிக் கிடப்பினும், ஒரு புகையிலைக் கட்டின் மூலதனத்தில் நிறுவப்படும் அவை சீக்கிரமே பொருள் குவிக்கும் பெரிய ஸ்ரோர்களாக மாறுவதற்கு அவர்களுடைய கருமித்தனம் மட்டுமல்ல, சாமர்த்தியமும் காரணமென்பதையும் நினைத்துப் பெருமைப்படலாம்.
தன் சாமர்த்தியத்தினால் முன்னுக்கு வந்துள்ள பலருள் சங்கரப்பிள்ளையும் ஒருவர். அவரிடம் ‘லகர’த்தில் மூலத்தனமுள்ள ஸ்ரோர் மடடுமெல்லாமல், மூன்று நான்கு லொறிகளுமிருந்தன. பேச்சுடன் லேசாகத் தனது லொறி ஒன்றிற்கு ஒரு கிளீனர் தேவைப்படுவதாகவும், தனக்கு இந்தச் ‘சிங்கள மோடை’யன்களில் நம்பிக்கையில்லாததினால், ஓர் ஊர் பிறந்தவனையோ
அல்லது இந்தியனையோ தேடி வருவதாகவும் தெரிவித்திருந்தார். தரகர் தன் கைவரிசையைக் காட்டி, தனக்குக் கண்டியிலுள்ள செல்வாக்கை நிரூபித்ததுடன், மாரிமுத்துவுக்கும் கைமேலே வேலையும் சம்பாதித்துக் கொடுத்துவிட்டார்.
மாரிமுத்துவுக்கு பொறியியற் சூட்சுமம் இணைக்கப்பட்டது போலானான். இயந்திரமாக இயங்கினான். லொறி ஸ்டேஷனுக்கும், கடைகளுக்கும் மாறிமாறிச் சென்று திரும்பும். சாமான்கள் ஏற்றப்படும் – இறக்கப்படும் மாரிமுத்து மாதமுடிவில் சம்பளம் கிடைப்பதுடன், நாள் தவறாமல் முதலாளியிடம் ஏச்சும் பேச்சும் ‘கிம்பள’மாகக் கிடைக்கும். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது வேலை செய்துவந்தான் மாரிமுத்து.
அடிக்கடி மகன் குமாரசாமியின் எண்ணமும், ‘அடி சக்கை’ சிவகுரு தம்பதிகளின் நினைவும் மனதிற் கிளை விடும். சிவகுருவைப் போன்ற ஒரு தங்கமான நண்பனைப் பார்த்து, மகனைப் பற்றி விசாரித்து… ‘அவர்களை பொறுத்தவரையில் நான் நினைவிலிருந்து அழிந்துவிட்ட கனவு போன்றவன். ஏன் அவர்களைப் பார்த்து அவர்களுடைய நிம்மதியைக் குலைக்கவேண்டும்?’ என்று எதிர்வாதம் செய்து தழைக்கும் கிளைகளைத் தறிப்பான். இந்த விவகாரம் சிறுவர்கள் விளையாடும் ‘கிரி கிரி’ப் பந்து மாதிரி…
இதற்கிடையில் இரு ஆண்டுகள், கலியுகத்தின் கால வெள்ளத்தில் சுழிந்துசென்று, இறந்தகாலமென்ற கடலுக்குள் மறைந்தன. அப்பொழுது ஒரு நாள்…. மாரிமுத்துவின் உடல்நிலை தளர்ந்து, உள்ளத்தில் சோர்வு குமைந்தது. கைகளும் கால்களும் குத்தலுடன் உளைந்தன. ஒவ்வோர் அங்க அணுவிலும் ஊசிகொண்டு குத்திப் பிய்ப்பதைப்போன்ற வலி. தனக்குக் ‘காய்ச்சல் காய்வதாக’ முதலாளியிடம் தெரிவித்தான். அவருடைய உள்ளம் ரூபா நோட்டுகளிலான மலட்டுத் திடல். ‘நாளைக் காலமை ஆஸ்பத்திரிக்குக் போய் மருந்துத் தண்ணி வாங்கலாம்’ என்று விஷயத்தைச் சுண்டங்காயாக்கி விட்டார். இருப்புக்கொள்ளாத வேதனை மாரிக்கு. நெருஞ்சிக் காடாகக் குத்தும் படுக்கையில் புரள முடியவில்லை. நோய் தன் உடலில் பாய்ச்சியிருக்கும் பலஹீனத்தையும் மறந்து, வேதனையை மறக்கும் வேட்கையில், கால் இழுத்துச் செல்லும் வழியே நடக்க ஆரம்பித்தான். தான் கண்டியிலிருந்து தென்கும்பரைக்குச் செல்லும் பாதையில் நடந்து செல்வதை நிதானிக்கிறான். இரவு நேரமாகிவிட்டது. தூரத்திற்குத் தூரம் மின்சார கம்பங்கள். பல்புகள் என்றழைக்கப்படும் கண்ணாடி குமிழிகளுக்குள் சிறைப் பட்டுவிட்ட மின்மினிப் பூச்சிகளின் சோபித்ததுடன் அவை மங்கிய ஒளியைப் பரப்புகின்றன.
அவன் எவ்வளவு நேரம் நடந்தானா? எவ்வளவுதூரம் நடந்தானோ? தலை
சுற்றுவதாகப் பிரமை தட்டுகிறது. மயக்கம் தன் விட்டத்திற்குள் விற்பூட்டும் பூட்டுகிறது. நினைவும் உணர்வுமற்ற ஒரு கயிற்றரவு நிலையில் அவதானிக்கிறான்.
வீதியன் ஓரத்தில் ஒரு அரசமரம். அதைச்சுற்றி ஒரு மேடை, அதில் இன்னமும் புத்தர் சிலை திருப்பள்ளி கொள்ளவில்லை…. அவ்வளவுதான். பிரக்ஞை இழந்தவனைப்போல் அந்த மேடையிலே சரிகிறான்… நோயின் வேகம். முனகல் சத்தம். மனித ஸ்பரிசத்தில் சுருண்டுவிடும் சரக்கட்டையைப்போல சுருண்டுபடுக்கிறான். கண்டிப்பகுதிக் குன்றுகளின் உச்சியை முத்தமிட்டு வீசிவரும் சீதளவாடை அவன் உடலை ஊசியாய்த் துளைக்கிறது. அவன் மேலும் கூனிக் குறுகுகின்றான். அவனுடைய அங்கம் முழுவதும் சாரணின் ஒரு பகுதிக்குள் ஆமையாகி நிலையில்.. உலகமே மரணாவஸ்தைக்குள் அமுங்கிப் போவதாகவும், இறந்துபோன வள்ளியம்மை இரு கைகளையும் அகலவிரித்துத் தான்வாழும் அமர உலகிற்கு அவனையும் அழைப்பதான நிழலுருவ நினைவுகள்… முனுகல்.. பிதற்றல்…
இரண்டாரு சேவல்களின் அலறல். இரவுமங்கை தனது நிர்வாண தோலத்தில் வெட்கமுற்று ஒளித்தோடி மறைய நினைவு கொள்ளும் வேளை!
மாரிமுத்துவுக்கு மயக்கம் தெளிவுபடாத விழிப்பு ஏற்படுகிறது. கரம் நீட்டியழைத்த வள்ளியம்மை எங்கே? சிலந்திவலை விரித்திருந்த பனித்திரையை ஊடறுத்து ஒரு உருவம் மரத்தடிக்கு வருவதைக் கவனிக்க முடிகிறது.
அந்த உருவம் தனது கையோடு கொண்டு வந்த பெட்டியை இறக்கிவைத்துப் படுத்துக்கிடக்கும் அவனை அவதானிக்கிறது. பின்னர், அவனுக்குச் சமீபமாகவந்து குந்தி, தீக்குச்சியொன்றினைக்கிழித்து, அதன் இருட்தலையில் ஜனித்த சுடரில் அவனுடைய முகத்தைப் பார்க்கிறது. ஏதோ பயம் தெளிந்ததைப் போன்று, அரசமரத்தின் மேடையில் மூன்று கற்களை எடுத்து அடுப்பாக அடுக்கி, அதற்குள் திணித்த விறகுகளில் தீயை மூட்டுகிறது.
“உம்..உம்..” – மாரிமுத்துவின் முனகல்.
“அற கவுத?” – யாரது வினவும் அந்த ஒலியில் பெண்மை தொனிக்கிறது. பதில் சொல்ல அவனுடைய நாக்கு உன்னுகிறது. ஆனால் முனகல் ஒலியைத் தவிர வேறெதுவும் புறப்பட மறுக்கிறது.
அந்த உருவம் – அவள் – அவனுக்குச் சமீபமாகவந்து நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறது. அந்த விரல்களிற் சுருதி கூட்டிக் கிளம்பும் பரிவும் பாசமும்…ஒருகால் வள்ளியம்மை ஆவி உலகைவிட்டு, இந்த அரசமரத்தின் கீழே வந்து..
“அம்மே சனிப்ப நத்த?”
சங்கரப்பிள்ளை சிபாரிசு செய்த தர்மாஸ்பத்திரியின் நிறத்தண்ணீர் கொடுக்கக்கூடிய குணத்திலும் பார்க்க இதந்தரும் அந்தச் சொற்கள்… மனிதத் தன்மையின் மிக உயரந்த குணங்கள் ராக லயமாக இழையும் குரல்.. இந்த ஊர்வலத்திற் ‘செஞ்சுருட்டி’ இராகத்தினைப் பொழிந்தவனால் மட்டுமல்ல, நாதஸ்வரத்தையே தனது அடிமையாக்கிக் கொண்ட இராஜரத்தினம்பிள்ளையாலே கூட எழுப்ப இயலாத இனிமை அந்தக்குரலில் இருப்பதாக மாரிமுத்துவுக்குப் படுகிறது.
மாரிமுத்து எழுந்திருக்க முனைகிறான்..
“தமுச கொயிகரி யண்டெப்ப..” – எங்கும் போக வேண்டாமென்று சொல்கிறாள். அவனால் யாரிடம், எங்கே போகமுடியும்? முல்லைப்பற்றுக்கா? அவனைப் பெற்றுச் சீராட்டி வளர்த்து மணப்பந்தலிற் பார்த்துத் தங்கள் கடமையை முடித்து மோட்சகதியை அடைந்துவிட்ட பெற்றோரிடமா? இரண்டு வருடங்கள் அவனுடைய சுகபோகங்களுக்குத் தன் உடலை ஈடு வைத்து, இன்பம் அளித்து, இன்று இனிய கனவாக மறைந்து விட்ட வள்ளியம்மையிடமா? பிஞ்சு வயதிலே தன் தந்தையின் முகம் மறந்து, அனாதையாகப் படித்து முன்னேறிக் கொண்டிருக்கும் குமாரசாமியிடமா? தன் நட்பிற் சுகங்காணாத சிவகுருவிடமா? அவனுக்கு இந்த அவனியில் உற்றார் யார்? உறவினர் யார்? நனி சிறந்தாம் – பொன்நாடாம் – பிறந்த மண்ணாம்! மண்ணாங்கட்டி! இருக்கும் பொழுது மாடுகளைக் கள்ளிப்பாலின் துணையுடன் கொன்றும் அனாதையான வேலைக்காரப் பொடிச்சியைக் கிணற்றிலே அடித்துப் போட்டுக் கிரதாகச் செயல் செய்தும், செத்தபின்னருங் குற்றமற்ற மாரிமுத்துவைச் சிறைக் கம்பிகளை எண்ணவைத்த ‘இருமரபுந் துய்யவந்த’ விசுவலிங்கம் நடமாடிய பொட்டற்காடு அது! பொய்ச்சாட்சி சொல்லும் முத்துவேலன் தழைத்த கள்ளிப்பற்றை! அதற்கா? இல்லை,இல்லை… ஊரவன் என்று வெளிச்சம் போட்டு, இரத்தம் உறிஞ்சும் அட்டையாக வேலைவாங்கும் சங்கரப்பிள்ளையிடமா? இலவச மருந்முத் தண்ணீர் பெற்றுத்தருவார் என்றோ? மண்டையை வெடித்துக் கிளம்பும் சிந்தனை அலைகள். எழுந்து நடக்க இயலவில்லை. கால்கள் சக்தியையும் இயக்கத்தையும் இழந்து விட்டனவாக… படுத்துக்கிடக்கிறான். மனித உள்ளங்களின் வேதனைகளுக்கும்
போராட்டங்களுக்கும் இரங்காது, மாற்றங்களில் மருட்சியடையாது, உருண்டோடிக் கொண்டிருக்கும் காலவெள்ளம், அதன் சுழிப்பிற் பல வினாடிக் குமிழ்கள் குமிழ்ந்து மடிகின்றன.
“தமிச பொண்ட” அவள் கொடுப்பதைக் குடிக்கிறான்.
அவள் கொடுத்த கொத்தமல்லித் தண்ணீரா அல்லது அவள் செலுத்தும் அனுதாபமா தன் உடலுக்கு இதந்தருகிறது என்பதை அவனால் இனங் கண்டுகொள்ள முடியவில்லை. இருப்பினுஞ் சோர்வு நீங்காத நிலையிற் படுத்துக் கிடக்கிறான்.
பொழுது புலர்கிறது. அவனை அங்கயே படுத்திருக்கும் படியும், அப்புறமாக மருந்து வாங்கலாமென்றும் ஆறுதல் கூறித்தன் தினசரி வியாபாரத்திற்கு ஆயத்தஞ்செய்கிறாள். அடுப்பில் சட்டியை ஏற்றி, மாவை ஊற்றி அப்பம் சுடுகிறாள். சுடச்சுட அப்பம் விலை போகிறது; வாடிக்கைகாரர்கள் – வாழ்க்கையின் அடித்தளமான உடலைப் பிழிந்து உழைத்து வாழும் பஞ்சைகள் அரசமரத்தை சுற்றி அரைப்பசி போக்கி…
அப்பஞ் சுட்டுக் கொண்டே வியாபாரத்தைச் சாமர்த்தியமாகக் கவனிக்கும் அந்த பெண்ணை மாரிமுத்து வியப்புடன் பார்க்கிறான்.
அவள் – அலிஸ்நோனா – காவியத்தின் தலைவியாவதற்கேற்ற அழகியல்ல. ‘வளிசாக’ முப்பத்தைந்து வயதிருக்கும் கிழவியென்று சொல்லிவிட இயலாத வாலிப வனப்பு; காலியான கற்பூரப் பெட்டியிலிருந்து எழும் வாசனையைப் போல மயக்கந்தரும் ஒருவகை வாலிபம். அழகு அலைகளுடன் சுருண்டு கிடக்குங் கேசத்தில். ஒரு மயிராவது நரைக்கவில்லை. சதைப் பிடிப்பான வட்டமுகம். அதில் வியர்வை துளிகள் அரும்பியிருப்பினும் அவை வழிந்தோடும் வாய்க்கால்களை இன்னும் வயதின் முதிர்ச்சி அவள் முகத்திற் கோடு கிழிக்கவில்லை. காரின் பிற்புறத்தை அப்படியே அடைத்து விடவல்ல மாமிசமலையல்ல: சோளக்கொல்லைக் கதிருமல்ல. கடை வாயிற் புன்னகை புஷ்பிக்கும் இதழ்களில் மறைவிடம் தேடிக்கொண்ட பற்களுக்கிடையில் வெற்றிலை மென்று சுவைத்தபடி தன் வேலைகளைச் சுறுசுறுப்பாகக் கவனிக்கிறாள். சுறுசுறுப்பினாலும் பெண்களுக்கு அழகு சேருகிறது. இடையிடையே அவள் மாரிமுத்துவின் மீது கண்களை திருப்பி, ‘கொஞ்சநேரத்தில் வேலை முடிந்துவிடும்; உடனே நான் வருவேன்’ என்று கொஞ்சும் நயனமொழிகளைத் தன் பாஷையிற் சிந்துகிறாள்…
சிந்தனைத் தொடரை குலைத்து, மத்தாப்பிலிருந்து மேலெழும்பும்
ஒளிப்பந்துகள்.. நீலத்துளிகளை அது அதிகஞ் சிந்தி, சுற்றுப் பிரதேசத்தையும் தன் நிறத்திற்குள் அமுக்கிறது?
பிள்ளையார் கோவிலிலிருந்து திரும்பும் ஊர்வலத்திருந்து கிளம்பும் ஓசைகள் தவில்காரர்களும், நாதஸ்வரக்காரர்களுந் தங்களுடைய திறமைகளையெல்லாம் பிழிந்து பொழிகிறார்கள். தங்கள் கலைத்திறமையைச் சபைமெச்ச அங்காடிப் பொருளாக்கிறார்கள். திறமையாவது, மண்ணாவது… வாங்கிய பணத்திற்கு மாரடித்துத் தொலைகிறார்கள்….
குமாரசாமி கணவனென்ற அந்தஸ்தை அடைந்துவிட்டான். அவனும் இந்தக் காலத்து இளமட்டங்களைப் போன்று காதலென்ற விவகாரத்திற்குள் சிக்குண்டு, அதன் பேறாகக்..
காதல்?
அது அவன் வாழ்க்கையிற்கிடைத்தது. உண்மை. இரண்டே இரண்டு வருஷக் குடும்பவாழ்க்கை, அப்புறம் சிறை, சிறையிற் சிக்கிக்கொண்டவர்களிடையே எத்தனையோ சுயதிருப்திப் பழக்கங்கள் குடிபுகுந்துவிடுகின்றன. ஆனால் இந்தப் பழக்கங்களுக்கு மாரிமுத்துவின் உடல் வளைந்து கொடுத்துவிடவில்லை. வள்ளியம்மையின் மரணச் செய்தியுடன் தனது காதல் உணர்வுகள் மரித்து விட்டதாகவே அவன் நம்பினான். காதல் உணர்ச்சி, பனிப் பிரதேச மரங்களைப்போல, இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்தி, வஸந்த காலத்திற் குருகு தளிர்த்து, பட்டுப்போகும்வரை உடலிற் பரவிக்கிடக்கிறது. சிறையில் வாடிய காலத்திலும், சங்கரப்பிள்ளையின் கிளினராக – இயந்திரமாக – உழைத்த இரண்டாண்டு காலத்திலும், பட்ட மரமாகக் காட்சி தந்த அந்த உணர்ச்சிகள், அலிஸ்நோனாவின் குடிசையில் வாழத் தொடங்கியதிருந்து, வஸந்த காலத்தின் அணைப்பினை அனுபவிக்கும் பாவனையில் துளிர்விட்டு…
அலிஸ் வற்புறுத்தி அவனைத் தன் குடிசைக்கு அழைத்து வந்தாள். திறமை வாய்ந்த ஒரு ‘வெதமாத்தையா’ வைக் கொண்டு வைத்தியம் செய்வித்துப் பூரணகுணம் ஏற்படச் செய்து விட்டாள். செல்வந்தரான சங்கரப்பிள்ளையின் நெஞ்சிற் புகமறுத்த மனித பாசம், அந்தக் குடிசைக்குள் அலிஸ்நோனா உருவத்தில் நடமாடுவதாக மாரிமுத்துவுக்குப் பட்டது.
அவள் ஒரு புதிர். அவளைப்பற்றிப் பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் நிலவின. அவளை மனைவியாக ஏற்றுக் குடும்பம் நடத்திய பண்டா, ஐந்து
ஆண்டுகளுக்கு முன்னர் வேறொரு ‘கும’ருடன் ஓடிப்போய்விட்டான். போனவன் திரும்பவில்லை. ‘வழக்கு வைத்துப் படி வாங்கலாம்’ என்று பலர் ஆலோசனை நல்கினார். ஆனால் தன்னை வெறுத்து, வேறொருத்தியைத் தன் நெஞ்சிலும் மார்பிலும் வளரத்தி வாழும் அவனுடைய பிச்சைச் சம்பளத்திலும் பார்க்கத் தன் உடலைவருத்தி உழைத்துச் சம்பாதித்து வாழ்வது மேலென அவள் கருதினாள். அவள் சுடும் அப்பஞ் சுவையானது; அவள் பேச்சும் அப்படித்தான். வாலிபம் – அவள் வயதுக்கொவ்வாது அவளுடலிற் குடிபுகுந்திருக்கும் வாலிபம் – குளுமையானது. வெற்றிலைச் சிவப்பேறிய இதழ்களின் ஓரங்களில் நர்த்தனமாடும் புன்னகையையும், சுருட்கேசம் கொண்டவளின் குணங்களைப்பற்றி நவயுக காமசூத்திர ஆசான்கள் கொடுக்கும் விளக்கத்தினையும், ஆதாரமாக வைத்துக்கொண்டு; அவளைப்பற்றித் தங்கள் உள்ளத்திற்குமையும் இச்சைகளுக்குத் திரை கட்டி கதைபரப்பினார்கள் பலர். வாடிக்கையாக அப்பந் தின்பவர்கள் பாக்கித் தொகையை ‘தாளாக’ச் செலுத்துவது, கதைக்கு இறக்கை கட்டியது. ‘இவள் நடத்தை கெட்டவள். அதுதான் அவள் புருஷன் விட்டுட்டு ஓடினான். இல்லாவிட்டாள் இவள் தன் புருஷனிடம் பராமரிப்புப் பணம் கோரி வழக்கு வைத்திருக்கமாட்டாளா?’ என்று தர்க்கம் பேசுவது அபிநயித்தனர் சில மைனர்கள்! ஆனால் மாரிமுத்துவுக்கு, அவள் மனிதப் பண்பினைக் காப்பாற்ற மனுஷியாகவே வாழும் பெண்ணாக மட்டுமே தோன்றினாள்.
வானத்தில் சிந்திய நீல மத்தாப்பு ஒளிபரப்பும் நிறத்தின் சாயலை பூரணமாகப் பெற்ற மஹாவலி கங்கை ஓடிகடகொண்டிருக்கிறது. கண்டாரை மயக்கித் தன் காலடிப்படுத்தும் சின்னமேளக்காரியின் அபிநயத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது: கரையிலே அமர்ந்து நீரோட்டத்தின் வாக்கிலே கால்களை விட்டிருந்த மாரிமுத்துவின் உள்ளத்திற் சிந்தனைகள் குதிருகின்றன.
“நோனா எனக்கு உயிர்பிச்சை தந்தாள். அவள் உதவிக்கு என்ன கைமாறு செய்ய முடியும்? உடல் குணமாகிவிட்டது. இன்னமும் அவளுக்குப்பாரமாக அவளுடைய குடிசையில் வாழ வேண்டுமா?” அந்தச் சிங்களத் தேவடியாள் வீட்டுக்குப் போ உனக்கு இங்கை வேலையில்லை’ என்று சங்கரப்பிள்ளை கையை விரித்துவிட்டாரட. அவருக்கு என்னிலும் பார்க்க வாலிபனான இந்தியக்காரக் ‘கிளீனர்’ கிடைத்துவிட்டான். இன்னொரு வேலை சம்பாதித்துத்தர தரகர் தம்பையா எப்பொழுது வருவாரோ? உதவக்கூடிய அப்புகாமியோ சிறைப்பறவை, பாவம், அவன் மறுபடியும் சிறைக்குச் சென்றுவிட்டான்… இனி?
அங்கு வந்து சேர்ந்த நோனா அவனுடைய சிந்ததனைகளைக் கலைத்தாள்.
“நாங் எல்லா இடமும் உங்களை பார்த்தாங்; ஏங்க போனது நீங்க? சங்கரப்பிள்ளை மொதலாளி வேலைபோனது சுட்டி கவலைப்பட வேணாங்,
நாங் வளி சொல்றது. நாங் ஐஞ்சு நூறு றுப்பியலா வைச்சிருக்கிறது. அந்த மரத்துக்கிட்டை ஒரு தேக்கடை போடுவாங்.”
தானே தேநீர்க்கடை வைத்துத் தந்து, அவன் வாழ்க்கையை வளப்படுத்த முனையும் அவளுக்கு என்ன பதில் சொல்லுவான்.
“யோசிக்க வாணாங்; நாங் சொல்றதுக்கு நீங்க சம்மதந் தானே?”
சொந்த ஊரில் மனைவியை விட்டு, உத்தியோகம் பார்க்கும் ஊரில் பிரமச்சாரி வேடம் புனைந்து, வேறு பெண்களைச் சுவைத்துப் பார்க்கும் ஹாலிவூட் நெறி இன்று வாலிபர்களின் உள்ளங்களில் நுழைந்திருக்கிறது. உண்மைக்குத் திரைபோட்டு மறைத்துப் பொய்மையையே பேசிப் போலியாக வாழ்ந்து, கணவனும் மனைவியும் இரு வேறு திசையிற் பீடுநடை போடுகின்றனர் இக்காலத்தில், ஒருவர் மனதிலுள்ளதை மற்றவர் அறியாத நாகரீகம் இப்போது புகுந்துள்ளது. இந்த நாகரீகம் புகாத அந்தக் காலத்தைச் சேர்ந்தவன் மாரிமுத்து. அவன் தன் வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி அவளுக்குக் கூறியிருக்கிறான். அவளுந் தன்னுடைய துயர்மண்டிய வாழ்க்கையை அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். பொதுவான துயரிழை இருவரையும் நெருக்கமாகப் பிணைத்து வருவதையும் அவன் உணருகிறான்.
“என்னை நம்புங்க, அந்தச் சில்வா ஆளு நம்பளுக்கு மிச்சங் கரைச்சல் தாறது. நீங்கதாங் நம்மளுக்கு உதவி செய்ய வேணுங்.”
சில்வாவிடமிருந்து அவளைக் காப்பாற்றுவதற்றுவதற்கு?
வாழ்க்கையென்ற தனி வழிப் பாதையில் நடந்து செல்வதற்கு, பேச்சுக்கும்- சௌகரியத்திற்கும் ஒரு வழித்துணை தான்ன தேவை. வயது செல்லச் செல்ல மனிதன் இந்த தேவையை அதிகம் அதிகமாக உணருகிறான். வழித்துணை பெறும் பிரயத்தனந்தான் காதலா? கொம்பருக்கு அழகு, படர் கொடி. வள்ளியம்மை என்ற கொடி கருகிவிட்டது என்பதற்காக, இன்னொரு கொடியைத் தாங்கும் வலிமையைக் கொம்பர் இழந்துவிட்டதா?
மாரிமுத்து சம்மதந் தெரிவிக்கிறான். அரசமரத்தடியிற் தேநீர்க்கடை முளைத்தது. மாரிமுத்துவும் நோனாவும் பிரயாசையுடன் உழைத்தார்கள். உள்ளங் கலந்த நிலையில் அந்நியோன்யமாக வாழத் தலைப்பட்டார்கள். அன்பு என்ற தங்கச் சங்கிலி அவர்களைப்
பிணைத்தது. சிங்களத்தி தமிழன் என்ற இன உணர்ச்சிகளை கிடையாது. மொழிப்பிரச்சனையேயில்லை அவள் பேசும் தமிழ் அவனுக்கு விளங்கும்: அவனுடைய உணர்வும் அவளுக்கு புரியும்.
தேநீர்க் கடையில் உருவான தம்பாத்திய வாழ்க்கை நிம்மதி நிறைந்ததாக இருந்தாலும், சில்வாவின் போக்கு விசுவலிங்கத்தை ஞாபகப்படுத்தியது. ‘அடிசக்கை’ தம்பதிகளையும், மகன் குமாரசாமியையும் சாவதற்கு முன்னர் ஒரு தடவை பார்த்துவிட வேண்டுமென்ற நினைவுகள் சந்திவான முகிற் கூட்டங்களின் உருவிலட மொய்த்தன…இந்தத் துன்ப நினைவுகளை முற்றாக ஈடு செய்தது நோனாவின் அன்பு. இல்வாழ்க்கையின் பயனாக நோனா தாய் என்ற அந்தஸ்தை எய்தவில்லையாயினும், வருடங்கள் பல ஓடி மறைந்தன.
மணமக்கள் சகிதமாக ஊர்வலம் வீட்டை நெருங்குகின்றது.
“ஆல்போற் தளைத்து அறுகு போல் வேரூன்றி பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழட்டும்” என்று மாரிமுத்துவின் சூனிய உள்ளத்தை வெடித்துக் கிளம்பும் ஆசிமொழிகள். வான இருளைப் பிளந்து மத்தாப்பின் ஒளிப் பூக்களை அந்தரத்திற்கு அனுப்புவதில் ஒரு வேகம் ஏற்படுகிறது. வெளியை ஒளியிற் குளிப்பாட்டும் அந்த ஒளிப் பூக்களில் அநேகமானவை மஞ்சளுஞ் சிவப்புமாகக் காணப்படுகின்றன. சிவப்பு மனித இரத்தத்தையும், மஞ்சள் அக்கினியின் தீநாக்குகளையும் மாரிமுத்துவுக்கு ஞாபகப் படுத்துகின்றன….
நினைத்துப் பார்த்தாலே உடல் பதைபதைக்கும் அந்தக் கோரச் சம்பவம்…. 1958ஆம் ஆண்டின், மே மாதத்தில் ஜனித்த ஒரு நாள் ஆரம்பத்தில் மனிதன் தன் கருத்துக்களை ஒலியினாற் புலப்படுத்தினான். பின்னர் தன் பொழுதுபோக்குக் கற்பனையிலுதித்த குறியீடுகளினால், சௌகர்யத்திற்காக, மொழியினை உண்டாக்கினான். வசதியாகத் தன்கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு வாழ்வதற்கு மொழி ஒரு சாதனம். அதற்குமேல் மொழியல்ல வாழ்க்கை. உலகின் சிறந்த பொக்கிஷம் மனிதன்; அவனை அணிசெய்வது மனிதத்தன்மை. மனிதத்தன்மையை இழந்து, மனிதர்களையே அழித்து மொழியைக் காக்கப் புறப்படுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம். பசிப்போரட்டத்திற் திருடர்கள், கொலைகாரர்கள், விபசாரிகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அப்போராட்டத்தில் மனிதன் நித்தம்நித்தம் சாம்பிச் சாகிறான். அதைப்பற்றி ஒருவருக்குங் கவலையில்லை! ஆனால் மனிதனே உண்டாக்கி மனிதனே கற்பித்து, காலவெள்ளத்தின் மாற்றங்களுக்கும் அழிவுக்கும் உள்ளாகும் மொழிக்காக மனிதன் தன் மனிதப் பண்பையே இழந்து, மனிதனையே
பலிவாங்கும் மிருகப்புத்தி எவ்வளவு சீக்கிரம் காட்டுத்தீயாகப் பரவிவிடுகிறது?…
“தெமள ஜாதி நெதிவேவ! பாஷா தெக்கக் அப்பிட்ட எப்பா. சிங்களத்தமய் அப்பிட்ட ஓண” – ஒரு கோஷம்.
“ஸ்ரீயை எதிர்ப்போம்; சிறையை நிறைப்போம்” – எதிர்க் கோஷம்.
வீரத்தின் விளைநிலமாக ஒரு காலத்தில் வாழ்ந்த தமிழ் மகனின் மறம் தார்ச்சட்டிகளில் மண்டின. எழுத்து அழிப்பு இயக்கம். எதிர்ப்புக்கு எதிரான தமிழ் அழிப்பு இயக்கம். ‘தார்பூசிச் சாமோ தமிழ்’ என்ற கோஷம் வெண்பா உருவில் ஒலிக்கிறது. ஆனால் தார்பூசிச் சிங்களம் மட்டும் செத்துவிடுமோ?
கண்டிநகரம் அல்லோல கல்லோலப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் பண்பாடு என்ற சேலைக்குள் மறைக்கப்பட்டிருந்த மிருகவெறி விழிப்புக்கொள்கிறது. சிங்களம் பேசும் மிருகங்கள், தமிழ்பேசும் மிருகங்களைத் தாக்குகின்றன. தார்பூசும் இயக்கம், இரத்தஞ் சிந்தும் இயக்கமாகக் கோர உருவும் எடுக்கிறது. சிங்கத்தின் இரத்தத்தையே குடிக்கும் சிங்கத்தைப் பார்த்திருக்கிறோமா? ஆனால் தன் இனத்தின் இரத்தத்தையே ‘குடிக்க’ வேட்கைகொண்டு வெறிகூத்தாடும் மனித மிருகங்கள்?
மூலைக்கடைகள் கொளுத்தப்படுகின்றன… தன் வேலைக்காரனுக்கு மருந்து வாங்கிக்கொடுக்க மறுக்கும் கருமியின் சொத்துக்களை செந்தீயின் சர்ப்பநாக்குகள் தீண்ட மறுக்குமா?
மஞ்சள் – சிவப்பு – நீலம் ஆகிய வர்ணக் கலவைகளாலான தீ நாக்குகள்… வீதியிற் சிந்தப்படும் மனித இரத்தம்…..
ஊழிக் காலத்தின் ஒத்திகை…
தேநீர்க்கடையை அடைத்த நோனா, மாரிமுத்துவைத் தன் குடிசைக்கு அழைத்துவந்து, கொல்லையிலுள்ள பீப்பாவிற்குள் அடைத்து வைக்கிறாள். “நோனா! நான் தமிழன். நான் செத்தால் என்ன? நான் வாழ்க்கையை ஐம்பது ஆண்டுகளுக்குமேலாக அனுபவித்துவிட்டேன். இனி வாழ்ந்து தான் என்ன பயன்? எனக்குப் புனர்ஜன்மமளித்த உத்தமி நீ. என் உயிரைக் காப்பாற்றும் போராட்டத்தில் உன் உயிரைப் பணயம் வைக்காதே என்னை விட்டுவிடு..” என்ற கருத்தினை உள்ளடக்கி எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் தமிழனின் இரத்தத்தைக் குடிக்க இச்சைகொண்ட மிருகக்
கூட்டத்தினரிடமிருந்து ஒரு தமிழனைக் காப்பாற்றும் வெறி நோனாவின் உள்ளத்தில் அதி தீவிரமாகப் பரவியிருந்தது. மிருகக் கூட்டத்தினரிடமிருந்து ஒரு தமிழனைக் காப்பாற்ற ஒரு பேதை தன்னந் தனியாக நடத்தும் போராட்டம்.
“நம்ம இரண்டு ஆளுங் மனிசங்கதானே?” மனிதனின் துல்லிய உணர்ச்சிகளிற் பூக்குஞ் சொற்கள்.
மனிதனின் பலஹீன உணர்ச்சிகளைத் தூண்டி, அதனுள் மூண்டெழும் ஹோமத்தீயில் தங்கள் பதிகளை அறுவடை செய்து, தலைவர்களாக வாழ முனையும் மொழி வெறியர்கள் (அவர்கள் சிங்களவராக இருந்தாலென்ன, தமிழராக இருந்தாலென்ன?) குடிசைவாழ் குத்துவிளக்காம் அலிஸிடம் பாடம் கற்க வரவேண்டும். பாராளுமன்ற தந்தக்கோபுரத்தில் அமர்ந்து இறைமாட்சித் தர்மங் கற்க முனைவதை விடுத்து, அலிஸீகள் வாழும் மண்குடிசைகளில் மனிதத் தன்மையின் இலட்சணங்களை முதலிற் பயின்றுகொள்வது மேல்.
இரத்தவெறி கண்ட கூட்டமொன்று அலிஸின் குடிசைக்கு முன்னால்தான் நிற்கின்றது. அலிஸின் காதல் விவகாரத்திற் தன்னை, ஆப்பிழுத்த குரங்காக உவமித்துக்கொண்ட சில்வா அக்கூட்டத்திற்குத் தலைமைதாங்குகின்றான். கர்ஜனை செய்யுங் குரலிற் ‘கொஹெத அற பற தெமள மினிஹா?’ என் கேட்கிறான். சில்வாவின் தடித்த குரல் மாரிமுத்துவுக்குப் பழக்கமானது. தன் இரத்தத்தை பச்சையாக குடித்துவிட வேண்டுமென்ற தாகம் அந்த குரலிற் குவிந்து கிடப்பதையும் உணர முடிகிறது.
“ஏய்?” – நோனாவின் உறுதியான குரல்.
“அப்பிட்ட ஓண, எத்துளே இன்னவதே?”
“நே”
“பொறு கியாண்ட எப்ப.”
அதைத் தொடர்ந்து நோனா, ஏதோ சிங்களத்தில் சரமாரியாகப் பேசுகிறாள்.
“அறிவுகெட்ட மூடப்பிண்டங்களே! நான் சிங்களத்தி; நீங்கள் சிங்களவர்கள். ஆனால் உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்; நீங்கள் அக்கா, தங்கைகளுடன் பிறந்ததுண்டா? அவர்களுடைய புருஷன்மார்களை நரமாமிசப் புலாற்கடையிற் கூறுபோட்டதுண்டா? அல்லது சிங்களச் சரிதான் உயர்ந்த சாதி என்பது உங்களுடைய நினைப்பா? நான் அன்று ஒரு சிங்களவனுக்கு
வாழ்க்ககைப் பட்டிருந்தேன். அவன் தன் சிற்றின்ப வேட்டையிலே என்னைப் பரிதவிக்க விட்டுச் சென்றான். சில்வா! நீ மகா அயோக்கியன். மாரிமுத்துவின் துணை மட்டும் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால் அப்பத் துண்டினை இறாஞ்சும் காகத்தினைப்போல எத்தனையோ பேர் என்னுடைய கற்பைச் சூறையாடி இருப்பர். ஒரு சகோதரியின் மானத்தைக் காக்கவக்கின்றிச் சொறிநாய்களைப் போல நீங்கள் அரசமரத்தைச் சுற்றிவந்தகாலத்தில், அந்தத் தமிழன் என் மானத்தைக் காப்பாற்றினான். அந்தத் தமிழன் உடல் என்னைத் தீண்டியதால் என் உடல் அழுக்காகிவிட்டதா? தமிழனாவது? சிங்களவனாவது? நாம் முதலில் மனிதராக வாழவேண்டும்” அவளைத் தன் கற்பனையில் நாடகத் தமிழ் பேச வைத்து மாரிமுத்துவின் உள்ளம் பூரிக்கின்றது.
குடிசையின் வாசலில் ஊழிப்பேயின் சுடலை நடனம்.
“அம்மே! அம்மே!” என்ற ஈனக்குரல். மாரிமுத்துவின் இரத்தத்தைத் தேதுடிவந்த அவர்கள் அலிஸ் நோனாவின் தமிழனுடன் வாழ்ந்த ஒரு சிங்களத்தியின் – இரத்தத்தைக் கண்டு திருப்தியுடன் திரும்புகின்றார்கள்.
பேதையின் மரணாவஸ்தை கொப்பளிக்கும் அனுங்கல்.
அன்று பரணிபாடி இன்று ஒலிபெருக்கிக்குழாயில் வீராப்புடன் பேசுவதுடன் ஒடுங்கிவிட்ட தமிழ் வம்சத்தின் சாபக் கெட்டை நினைத்து வருந்து, தான் பீப்பாவிற்குள் ஒளித்துக்கிடந்த கோழைத்தனத்திற்கு வெட்கி, வாசலுக்கு வருகிறான் மாரிமுத்து….
இரத்தம் – தியாக இரத்தம் – சிந்திக்கொண்டிருக்கும் அவளுடைய தலையை ஆதரவுடன் தன் மடியில் வைத்துக் கொள்ளுகிறான்.
இரண்டு ஜதைக் கண்களில் பிரளய காலத்தின் அன்புப் பெருக்கு. மாரிமுத்துவின் கண்களிலிருந்து புரளும் கண்ணீர்த் திவலைகளைத் துடைத்துக் கொண்டே நோனா, ‘நீங்க ஊருக்கு போறதுதாங் நல்லங், சில்வா மிச்சங் கரைச்சல் தருவாங். நீங்க தப்பிறதுதான் எனக்குவேணுங். ஊருக்குப் போறது… உங்கட பிள்ளை குமாரசாமியைப் பாருங்க. நீங்க நல்ல மனுஷனென்பது சுட்டி உங்க மொகத்தைப்பார்த்துத் தெரிஞ்சுடுவாங்க. நீங்க…போறதுதானே?…சத்தியம் சொல்லவேணும்…ஊருக்குப் போங்க…
முல்லைப்பற்றுக்கா?
இங்கு இரத்தம்!
அங்கு?
இங்கு சில்வாக்கள் நடமாடுகிறார்கள்…
அங்கு விசுவலிங்கங்கள் நடமாடினார்கள்…
தலையைத் தனக்குச் சமீபமாகக் கொண்டு வரும்படி சைகை காட்டுகிறார்கள். அவன் தன்னுடைய தலையை அவளுடைய முகத்துக்கு நேரே குனிகிறான். அவள் தன்னுடைய கழுத்தில் மின்னிய சங்கிலியைக் கழற்றி அவனுடைய கைகளிற் கொடுத்து, “நம்ம செயினைத் தாராங், எடுத்திட்டுப் போங்க, ஒங்க மகன் சின்னமாவொடை – நம்ம – உபகாரம் இதுதாங், மகண்ட பொஞ்சாதிக்கிட்டே இதைக் கொடுக்கவேணுங்…’ மூச்சுத் திணறியபடியே பேசுகிறாள். அவியுஞ் சுடரும்; அதற்கு நெய்யூற்ற இயலாது தவிக்கும் மனிதனும்… “நம்பளுக்குத் தங்க மிச்சங் அதரய் தர்றீங்கென்னா ஊருக்குத்தான் போடிவேணுங்…” – அவள் பேசிய கடைசி வாரத்தைகள்…. இராணுவச் சம்பாத்தின் கீழ் அமைதி ஏற்பட்டது.
அவன் நெஞ்சில் அமைதி ஏற்படவில்லை.
விரக்தி!
ஊர்வலம் கல்யாண வீட்டை அடைந்துவிட்டது.
மத்தாப்பின் ஒளி மறைத்தூறல்..பச்சையும் – நீலமும் – மஞ்சளும் – சிவப்பும் – அப்புறம் கத்தரிச்சிதர்கள் சதிராடி மறைகின்றன.
நண்பன் சிவகுருவைப்பார்த்து ஒருவார்த்தை பேசி…மகன் குமாரசாமியை ஒரு தடவை பார்த்து நோனாவின் அன்புப் பரிசை அவன் மனைவியிடம் ஒப்படைத்து…
நீலமும் சிவப்பும் கலந்து பிணைந்து கத்தரிச் சித்தர்கள் ஒளியூட்டிய வானம் மாரியின் உள்ளமாகக் கறுக்க… அந்த நிறம் மட்டும் அவனுள்ளத்திலே சுழல்கிறது.
சிவப்பும் நீலமும் கலந்து கத்தரி நிறமாவது போல…. அலிஸ் நோனாவும், மாரிமுத்துவும் தம்பதிகளாக வாழ்ந்தது போல…
தமிழும்…சிங்களமும்…
முல்லைப்பற்றின் மாவடிப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்புடன் தன் படிப்பை மூட்டைகட்டி வைத்து விட்டு மாட்டுவண்டியின் ஆசனத்தில் குந்த ஆரம்பித்தவன் மாரி, அவனால் அவிழ்க்கக்கூடிய ஓரு முடிச்சை அவிழ்க்க இயலாது அரசியற் தலைவர்கள் தவிக்கிறார்களே…
மாரியும் அவிழ்க்க இயலாது முடிச்சு ஒன்றுடன் நெஞ்சு குமைக்கிறான்.
அந்தச் சிங்களத்திக்குக் கொடுத்த சத்தியத்தின் பெயரால் முல்லைப்பற்றுக்கு வந்துவிட்டான். அவள் தந்த சங்கிலியை?
கோவிலில் கூட்டம் மெலிந்து, அமைதி குடிகொள்ளுகிறது, வானத்தில் பவனி வந்த மத்தாப்பில் ஒளிஜாலங்கள் இனிய கனவாக…
மனம் என்ற கொட்டிலிலிருந்து வெடித்துக் கிளம்பும் சிந்தனை மத்தாப்பு.
தப்பிப் பிறந்த தெய்வம் அலிஸ், அடுப்பின் வெக்கையில் கிடந்து, உடலைக் கசக்கிப் பிழிந்து வியர்வைத் துளியிலே விளைந்தது இந்தப் பொன். நான் ஒருநாள் முந்தி வரவில்லை: ஒருநாள் பிந்தி வரவில்லை. சரியான வேளை. எல்லாம் பிள்ளையார் செயல். அவள் – என் மருமகளாக வந்துள்ள மகராசி – ஏற்றுக் கொள்வாளா? ஊரைக் கலக்கி, இவ்வளவு ஆடம்பரங்களையும், வாண வேடிக்கைகளையும் செய்து காசைக் கரியாக்கிக் களிப்புக்கொள்ளும் அந்தப் பணக்கார வீட்டுப்பெண், கேவலம் நடைப்பிணமாக வந்திருக்கும் என்னை மாமா என்று ஏற்றுக் கொள்வாளா? அல்லது பரிசைத்தான் பெற்றுக் கொள்வாளா? விலை மதிக்க முடியாத இதை வெறும் அற்பமாக நினைத்து…
மகன் குமாரசாமி?
வெலிக்கடைச் சிறையில் இரண்டு வயதில் என்னைப் பார்த்திருக்கும் அவனால், இந்த உருவத்தில் கற்பனைகூடச் செய்துபார்க்க இயலாது. அவனைப் பொறுத்த வரையில் நான் என்றோ காலமாகிவிட்டவன். கனவிலும் கனவாகிவிட்ட ஒரு பிறவி. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் உனக்கு
என் ஞாபகம் வந்ததா? நான் நல்லாக வாழ்வது உனக்கு பிடிக்கவில்லையா? நீ துரதிர்ஷ்டக்காரன், வாழக்கொடுத்து வைக்காதவன். என் தாய் வள்ளியம்மையை அணுஅணுவாகச் சாகடித்தாய். ‘கொலைக்காரன் மகன்’ என்ற அவச்சொல்தான் நீ எனக்குத் தந்துசென்ற ஆஸ்தி… இப்பொழுது உன்னைப் பீடித்த சனி என்னையும் பீடித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவா என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? கல்யாணப் பந்தலில் உன் மகனை அவமானப்படுத்த வேண்டுமென்று எத்தனை காலமாய்த் திட்டம் போட்டிருந்தாய் என்று அவன் என்னைக் கேட்டால்..? வேண்டாம். அவனுடைய இன்பத்தை நான் பாழாக்க வேண்டாம். இந்த வைபவத்தில் முல்லைப்பற்று எப்படி என்னை மறந்து விட்டதோ, அப்படியே மிகுதிக் காலத்திற்கும் என்னை மறக்கட்டும்… நோனாவின் ஆசை நிராசையாக வேண்டுமா? மனதில் அரும்பும் எத்தனை ஆசைகள் மொடடில் கருகிவிடுகின்றன?…
தனக்கும் தன் மகன் குமாரசாமிக்கும் இடையில் ஒரு சுவர் எழுப்பப்பட்டிருப்பதை அவனால் உணரமுடிகிறது. அந்தச்சுவர் – காற்றில் ஊஞ்சலாடும் ஆலம்விழுது காலப்போக்கில் வைரித்த மரமாக மாறிவிடுவதைப் போல – உறுதி பெற்றுவிட்டதாகத் தோன்றுகிறது. கல்யாணப் பத்திரிகையில் ‘வம்புப் பிள்ளையல்ல’ என்று சொல்லும் வகையில் மாவன்னா என்ற தன் முதலெழுத்தை அச்சடிக்க வழங்கியதுடன் தன் தந்தைக் கடன் முடித்துவிட்டதாக அவனுக்குப் படுகிறது.
அனுமார்வாலாக நீளும் சிந்தனையை ஆலமரத்திற்குச் சமீபமாகக் கேட்கும் பேச்சுக்குரல் வெட்டித் தறிக்கிறது. இரண்டு உருவங்கள் கோயிலிலிருந்து ஆலமர ஓரமாக நடந்து வருகின்றன. பன்னீர்த் தெளிப்பு – சந்தனப்பூச்சு, இவற்றிலிருந்து கிளம்பும் வாசனை ஆலமரத்தைச் சுற்றியும் பரவுகிறது. அந்தக் குரல்கள் பழக்கமான குரல்களாகப் படவே, உன்னிப்பாகக் கேட்கிறான்.
“சின்னதுகள், புள்ளையாரிடை புண்ணியத்தில் நல்லா இருக்கட்டும். ஆனால் நேக்குப் பந்திக்குப் போகப் படிக்கவில்லை. பொம்புளைப் பகுதியார் செட்டுப்பிடிச்சவ ளெண்டு நோக்கும் தெரியுந்தானேணை, இந்த நேரம் மாரிமுத்து வல்லோ இருக்கவேணும்.”
“உன்னாணை நீங்களும் ஒரு மனிசன். மாரியண்ணர் எப்படியும் கலியாணத்துக்கு வந்துடுவாரெண்டு வாய் புசத்திக் கொண்டிருந்தியளே?”
“அடிசக்கை! நீ ஒரு விசரி, நீயும் அவன் செத்துட்டானெண்டு நினைக்கிறீயா? அவன் எப்படியாவது எண்ட மேள் சிவகாமியின்ரை கலியாணத்துக்காவது வந்து குதிப்பான்.”
“உன்னாணை உந்தப் பேய்க்கதையை விடப்பா. மாரியண்ணை வந்து உன்ரை மேளைத் தன்மேனுக்குக் கட்டிக் குடுத்துத் தன்ரை மருமகளாக்கிக் கொள்ளுவாரெண்டு வாயுளையப் புசத்தினீங்க, பேந்து என்ன நடந்திருக்கு? உன்னானை உப்பிடிக் கதை கதைக்காதையப்பா.”
“அடிசக்கை! இந்தப் பெண்டுகளுடைய கதை உப்பிடித்தான் மாரியைப்போல ஒரு மனுசன் – ஒரு சிநேகிதன் – ஒரு தங்கக் கம்பி இனித்தான் முல்லைப்பத்தில் புறக்கவேணும்.”
அவர்கள் ஆலமரத்தையும், அதன் மறையில் நிற்கும் மாரிமுத்துவையும் தாண்டிச் செல்கிறார்கள். அவர்கள் ‘அடிசக்கை’ சிவகுருவும், அவனுக்கு எதற்கும் சளைக்காத மனையாளாக வாழும் ‘உன்னாணை’ நாகம்மாவுந்தான்.
“தங்கக்கம்பியென்று இன்றும் என்னைக் கருதும் சிவகுரு தன்மகள் சிவகாமியுடன் என் மகன் குமாரசாமியை இணைத்து எத்தனை இன்பக் கனவுகள் கண்டிருப்பானோ? நட்பின் பெயரால் அவன் அவர்களுக்குப் போட்டிருந்த முடிச்சு… அதனால் மானசீகமாக என் மருமகளாகிவிட்ட சிவகாமி…. அவளிடம் இந்தச் சங்கிலியைப் பரிசாகக் கொடுத்து..”
மறுகணம்….
“சிவகுரு என்னைக் கண்டால் சும்மா விடமாட்டான். என்ன இருந்தாலும் உன்ரை மகண்ட கலியாணந்தானே? என்று சொல்லுவான். சிவகுருவின் இஷ்டத்திற்கு விரோதமாகப் போக இயலாது. பின்பு?” சாண் ஏற முழம் சறுக்கும் சிந்தனைகள்.
மடியிலிருந்த சங்கிலியைக் கையிலெடுத்தான் மாரிமுத்து. அதற்கிடையில் சிவகுரு தம்பதிகள் வெகுதூரம் சென்று விட்டார்கள். உள்ளத்தில் எழுந்த ஒரு ஆசை – சிவகாமிக்கு அந்தச் சங்கிலியை பரிசு கொடுப்போம் என்ற ஆசை – உள்ளத்தில் கருகிவிடுகிறது.
நடுநிசி கடந்த மயான இருள்…
கொண்டல்சேர் கோபுரங்கொண்ட முல்லைப்பற்றுப் பிள்ளையார் கோவில் மௌனத்தில் அமுங்குகிறது….
கண்ணுக் கெட்டும் தூரம் வரையில் மனித நடமாட்டமே கிடையாது….
கோவிலின் கதவுகள் சாத்தப்படப்போகின்றன.
உள்ளம் உந்தும் வேகத்தில் மாரிமுத்து கோவிலை அடைகிறான்.
கோவிலின் கதவைப் பாதி சத்தியப்படியே, முன்னால் வந்து நிற்கும் மாரிமுத்துவைப் பார்க்கிறார் ஐயர். ஜயரை மாரியும் பார்க்கிறான். அவனுக்குப் பழக்கமான குடுமிக்காரக் கூன்முதுகு ஜயரல்ல. ஒருவேளை அவரின் புத்திரபாக்கியமாக இருக்கலாம். இந்தச் ‘சிலுப்பாக்கார’ ஐயர்.
“ஐயா!”
“என்ன வேணும்? பத்துமணிக்குத் தாலிகட்டு என்று சொல்லி இவ்வளவு நேரமும் வைத்து அந்தக் கலியாண வீட்டுக்காரர்கள் உயிரை வாங்கிவிட்டார்கள். எனக்கும் விழிப்பு; பிள்ளையாருக்கும் விழிப்பு! உனக்கு இப்ப என்ன வேணும்? பிரசாதமா?”
“இல்லை, பிள்ளையாருக்கு ஒரு நேர்த்திக்கடன், கொண்டந்தனான்.” என்று சொல்லி, மாரிமுத்து ஐயரிடம் அலிஸ்நோனாவின் சங்கிலியை ஒப்படைத்து “இதைப் புள்ளையாருக்குச் சாத்துங்கோ. கூட, இப்ப இங்கு கலியாணம் செய்துபோகும் மாப்பிள்ளைக்கும், பொம்பிள்ளைக்கும் என் பெயரால் ஒரு அரிச்சனை போடுங்கோ…” அந்த வார்த்தைகளில் உருக்கமும் பாசமும் மண்டிக் கிடப்பதை ஐயரால் உணரமுடிகிறது.
“பேஷாய்ப் போடுறன். அந்தப் புதுத் தம்பதிகள் மேலே உனக்கு இவ்வளவு கரிசனையென்றால், கல்யாணத்திற்குப் போகலாமே, ஏன் உன்னைப் பந்தியில் சேர்க்க மாட்டாங்களோ?..”
“நான் தீண்டத்தகாதவனல்லன்; நினைக்கப்படாதவன்!”
மௌனம். மாரிமுத்துவின் உள்ளத்தின் அழுகுரலாக, இலேசான விம்மல் சத்தம், பிள்ளையாரும் அர்ச்சகரும் அலிஸின் தங்கச் சங்கிலியால் பிணைக்கப்படுகிறார்கள். கோவிலின் கதவுகள் சாத்தப்படுகின்றன.
மாரிமுத்துவின் மடிப்பாரம் இலேசாகிவிட்டது.
மனப்பாரம்?
வெளியில் இருள்; மனதில் சூனியம்; நடக்கிறான்.
எங்கே?
முல்லைப்பற்றுப் பிள்ளையாருக்குத்தான் வெளிச்சம்.
செல்லும் வேகத்தில் அவன் கால்களை ஏதோ இடறுகிறது. அது மத்தாப்பின் கொட்டு. வான வெளியில் பச்சை – சிவப்பு – நீலம் – மஞ்சள் – கத்தரி ஆகிய வர்ண ஒளிப் பந்துகளைக் கக்கித் தள்ளிக் கருகிக் கிடக்கும் கொட்டு.
அதைத்தாண்டி மாரிமுத்து என்ற கருகிய மனிதக் கொட்டு நடக்கிறது….
கருகிய கொட்டுகள் இனி யாருக்குத் தேவை? இவையின்றி, மா.குமாரசாமி தம்பதிகளின் நான்காம் சடங்கு விமரிசையாக நடைபெறும்.
முற்றும்.