முகிழ்த்தது முத்து

புத்தன் பரம்பரை!… ( சிறுகதை )…. பத்மா. சோமகாந்தன்.

கோவில்மணி ‘டாண், டாண்’ என்று ஓசை எழுப்பியது. சுபசிங்கா பல தடவைகள் தன் கண்களை இறுக இறுக மூடிப்பார்த்தான். அவனுடைய முரட்டு சுபாவத்தை அறிந்தாற்போலும், நித்திராதேவி அவனை அணுக அஞ்சினாள். சுபசிங்கா படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான். அவனுக்கு ஒரே அலுப்பாயிருந்தது. எழுந்திருக்க முயன்றான். கால், கை, மூட்டுகள், யாவும் நோவுகண்டிருந்தது. அந்தக்கிராமத்திலேயே முரட்டு வீரத்தில் முதலிடம் வகிக்கும் சுபசிங்கா, இப்படியான நிலமை தனக்கு ஏற்படுமென்று எதிர்பார்க்கவில்லை. ‘பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்’ – என்ற குறளின் உண்மையை அறிந்திருக்க அவன் என்ன குறள் கற்றவனா? எத்தனையோ, படித்துப் பட்டம் பெற்ற அறிஞர்கள் கூட அநியாயத்துக்கும் அகந்தைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும்போது படிப்பு வாசனை தெரியாத சுபசிங்கா எம்மாத்திரம்? கொள்கை, தியாகம், நீதி, நேர்மை என்பவற்றை ‘ஏதோ கறிச்சரக்காக்கும்’ என எண்ணிக் கொண்டிருக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான் சுபசிங்கா. படுக்கையில் கிடந்துழலும் சுபசிங்காவைப் பார்த்த அவன் மனைவி மெனிக்காவுக்குப் பரிதாபமாயிருந்தது. அவள் தன் கணவனை நோக்கி. ‘அன்று தடுத்தேனே, கேட்டியா சிங்கா? என் சொல்லைக் காதிலும் விழுத்தாது விட்டாயே, அன்று உன் உதவியை நாடியவர்கள் இப்போ எங்கே?’ என அரற்றினாள், அவள் வேதனை விம்மலாக வெளிக்கிளம்பியது. குடித்து விட்டு வைக்கப்பட்டிருந்த சாராயப் புட்டியின் அடியைத் துடைத்தெடுத்து வந்து சுபசிங்காவுக்கு நோக்கண்டிருந்த இடங்களில் தேய்த்து விட்டாள். அதிலே சிறிது சுகம் கண்டு சுபசிங்கா கண்ணயர்ந்தான். காடையர் தலைவன் சுபசிங்காவுக்கு அன்றொரு நாள் கிடைத்த வரவேற்பு! ஆஹா!! அன்றையதினம் அவன் உள்ளம் மகிழ்ச்சியில் கிளர்ச்சி கொண்டு கூத்தாடியது. ஆனால் இன்று….? மோட்டார்க்காரில் தொட்டுப் பார்க்கும் அனுபவம்கூட அற்றிருந்த சுபசிங்கபாவுக்கு மேத்தானந்தா காரில் ஏறிச்சவாரி செய்யும் முதல் அனுபவத்தைக் கொடுத்ததுடன் நிறுத்தினாரா? இல்லையே! சாராயப் புட்டிகள், கள்ளுமுட்டிகள், இறைச்சிவகை, பணம் இப்படிப்பட்ட எத்தனை வகையான பரிசுகள் – ‘அதிர்ஷ;டம் கூரையைப் பிய்த்துக் கொண்டுதான் அடித்திருக்கிறது’ என்ற எண்ண அலைகளிலே மகிழ்வு ஊஞ்சலாடினான் சுபசிங்கா அன்று. ஒருநாள் மேத்தானந்தா சுபசிங்காவை அழைத்து, ‘நாளை கொழும்பு காலித்

துறைமுகத்தில் தமிழர்கள் கூட்டங் கூட்டமாக வந்திருப்பார்கள். அவர்கள் வரும் காரணம் ஒரே இன வெறிதான். சிங்களச் சகோதரர்களாகிய எங்களையெல்லாம் சூறையாடி, அடித்து நொருக்கி, எங்களை ஒரு கை பார்த்துவிட்டுப் போகிறார்கள். எமது அன்னை ஸ்ரீலங்காவே தமிழரிடம் அடிமையாகப் போகிறாள். நாட்டு நிர்வாகம் யாவும் அவர்கள் கையிலேயே ஆகிவிடும். எமது சுதந்திரமே பறிபோய்விடும். தமிழரை நாம் அடக்கியொடுக்கி வைத்தால்தான் நாம் ஒருவாறு தலையெடுக்க முடியும். பணம், நிலம், பட்டம், பதவியெல்லாமே தமிழருக்காகிவிடும். எமதுதாய் – சிங்கள அன்னை தனிமையில் கதறுவாள். இலங்கைத் தமிழருக்குப் பக்கபலமாக இந்தியாவில் உள்ள பலகோடி தமிழரும் முன்வந்துள்ளனர். சிங்கள மொழியையும் சிங்கள இனத்தையும் அழிப்பதே அவர்களுடைய நோக்கம். எனவே நாம் காரியத்தில் கவனமாக – கண்விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும். யூன்மாதம் 1ந் திகதி கொழும்பில் நீங்கள் நடந்து கொள்வதில்தான் எமது எதிர் காலமும் எமது அன்னை சிங்கள மாதின் சுபீட்சமும் தங்கியுள்ளது.

‘சிங்களம் வாழ்க! தமிழ் வீழ்க!’ என ஒரு குட்டி ‘லெக்சரே’ அடித்துவிட்டார். படித்துப்பட்டம் பெற்ற மேத்தானந்தா தன் இனத்தைத் தமிழினம் ஒதுக்க முன்வந்துள்ளது எனக்கூறியது சுபசிங்காவுக்கு முழுதும் நியாயமாகவே பட்டது. இனவெறி மாத்திரமல்ல, குடிவெறியும் – தான் ஒருசெயல்வீரன் – மேத்தானந்தாகூட தன்னிடம் உதவி கோரி வருகிறாரே என்ற எண்ணவெறி, கிறுக்கு யாவும் சேர்ந்து சுபசிங்காவுக்கு உற்சாகமளித்தது. அவனது உற்சாக உணர்ச்சியின் உவப்பு நடனமிட்டது. ‘சிங்களம் வாழ்க! தமிழ் வீழ்க! சிங்களம் வீழ்க! தமிழ் வாழ்க! என அவன் குரல் உச்சஸ்தாயியில் – தடுமாறி – ஒலி செய்தது. சுபசிங்கா தன் இனத்திற்காகவும் நாட்டுக்காவும் கடமை செய்யும் நாள் நெருங்கிட்டதென்பதை ‘பீக்’, ‘பீக்’ என்ற மேத்தானந்தாவுடைய காரின் குழற்சத்தம் அறிவுறுத்தியது. சில சிங்களவரின் செயல்கண்டு சீற்றங் கொள்ளும் ‘புத்தன் இதயம்’ கொண்ட சில சிங்கள மக்களைப்போல் சீறி உறுமியபடி அதன் பின்னே வந்து நின்றது ‘வான்’. சுபசிங்காவின் தலைமையில் அந்தக்கிராமத்து வெறியர்கள், குடிகாரர்கள் யாவரும் தம்மை ஏற்றச் செல்லவந்த வாகனங்களுள் ஏறி அமர்ந்து கொண்டனர். ‘காரும் வானும் கொழும்பு நோக்கி ‘விர்’ எனப் பறந்தன. போகும்போது தனக்குத் தெரிந்த இழிவான – பேசக்கூடாத வார்த்தைகளைச் சுபசிங்கா ஞாபகப் படுத்திக்கொள்ள மறக்கவில்லை. காலி முகத்துறையிலே ‘அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டைபோல’ வாகனங்களினின்றும் வெளியேறினர் சுபசிங்காவும் அவனது சகாக்களும். சுபசிங்காவுக்கு சுதந்திர உணர்ச்சி இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவனது கிராமத்திலே குடிப்பதும், குழறுவதும், ஆடுவதும், பாடுவதுமாக அவன்

உள்ளம் கரை காணாத ‘ஏனென்று கேட்பாரற்ற’ காட்டுக் கழுதைபோலச் சுதந்திர உணர்ச்சியுடன் உலாவித்திரிந்தவன் சுபசிங்கா. அத்தகைய சுபசிங்கா தன் வாழ்கையில் என்றுமே காணாத அணுபவியாத சுதந்திரத்தை அன்று கண்டான், காலி முகக்கரையில், கோவில்களில் கொலு வைத்திருக்கும் கற்சிலைகளைப் போலத் தமிழர்கள் கூட்டங் கூட்டமாயிருப்பதைக் கண்டான். முதல் நாள் மேத்தானந்தா காண்பித்த போட்டோக்களுக்குரிய உடல்களைத் துருவித் துருவிப்பார்த்தான். ஒரே வெள்ளையுடையையும், வெள்ளையுள்ளத்தையுமன்றி வேறேதையுமே அவனால் காண முடியவில்லை. கல்லுப்பிள்ளையார் போலிருந்தவர்களை உதைத்தான். ‘தமிழ் வாழ்க’ எனக் கோஷமிட்டுத் கொண்டிருந்தவர்களைக் கற்கள் கொண்டு தாக்கினான். முதுகிலறைந்தான், நெஞ்சில் குதித்தான். மேற்சட்டைகளை இழுத்துக் கிழித்தான். திடீரென அவன் பொதுவுடமையாகி விட்டதையெண்ண அவனுக்குச் சிரிப்பும் வரத்தான் செய்தது. தன் விருப்பப்படி, மண்டியிட்டிருந்த மக்களுடைய சட்டைப் பையினுள் கையை விட்டான். ஒரு இரண்டு ரூபாய்தான். அப்படியே அந்த நபரருகேயிருந்தவருடைய சட்டைப் பையில் ஏதோ தெரிந்தது. ஆவலுடன் எடுத்தான். கண்ணுக்கணியும் கண்ணாடியைவைக்கும் பெட்டி அது. அவனது ஏமாற்றம் அவனுக்கே ஆத்திரம் தந்தது. அறைந்தான் அந்தக் தமிழனுடைய கன்னத்தில். அவன் வாயும் ஏதேதோவெல்லாம் அரற்றிக்கொண்டது. கண்ணயர்ந்திருந்த சுபசிங்காவை இடுப்பில் ஏற்பட்ட வலி இவ்வுலகுக்கிழுத்தது. கருணையின் வடிவம் – அவனது தெய்வம் அவனுடைய கஷ்டத்தைப் பார்த்து கவலை கொண்டு ஆறுதல் கூறுவதுபோலத் தோன்றியது. சுபசிங்காவுக்கு ஐயோ! மற்றவர்களுக்கு அடிப்பதிலும் உதைப்பதிலுமே அமைதியும் ஆனந்தமும் கொண்ட சுபசிங்காவின் மேல் இரக்கம் கொள்ள இவ்வுலகில் ஒருவர் உண்டா? அப்படியானால்…. அந்த உருவம் மேத்தானந்தா தானா? கண்களை நம்பமுடியாமல் கசக்கிவிட்டுத் திரும்பவும் விழித்து விழித்துப் பார்த்தான் சுபசிங்கா. மேத்தானந்தாவின் இனவெறியும், சுயநலமும் கலந்த, இரக்கம் செத்த, இருள் படர்ந்த இதயத்தின் முன் நேர்மையும் கருணையும் கட்டிப்புரள அன்பு ஒளிவீசும் அந்த அழகொழுகும் வதனக் காட்சி அவனை ஆகர்சித்தது. சுபசிங்கா தன் நினைவு உணர்ச்சியையே இழந்தான். அன்பென்ற சீமையிலே கருணை என்ற சாயம் தீட்டப்பெற்ற உடை அவனை அழைத்துக் கொண்டது போன்ற ஓர் உணர்ச்சி. இனம் தெரியாத ஒரு சக்தி அவனை எழுத்திருக்கச் செய்தது. உடலில் நோவே இல்லை. உள்ளத்தில் ஒரு சிறு நோவைத் தவிர, ஓடினான். அவன் குடிசைக்கருகே சிற்றாறு ஒன்று அமைதியாக அழகு நடை பயின்று கொண்டிருந்தது. ஆற்றின் கரையிலே விழுந்து அன்னையிடம் மன்னிப்புக்காக

மன்றாடினான். குளிர்ந்த உள்ளம் படைத்த நீரன்னை அவனை ஏற்று இறுகத்தழுவினாள். அவள் அனணைப்பிலே இன்பங்கண்ட – குளிர்மையில் மகிழ்வு கண்ட சுபசிங்கா முற்றிலும் புதியவனாக ஆற்றினின்றும் வெளியேறினான். அவன் உடலிலிருந்து தண்ணீர் ‘சொட், சொட்’டென ஒழுகிக்கொண்டேயிருந்தது. மொட்டாக, இருண்டு சுயநலத்தால் மூடப்பட்டிருந்த சுபசிங்காவின் இதயம் விரிந்து விட்டதென்பதை அவன் கரங்களிலிருந்த விரிந்த நிர்மலமான தாமரை மலர்கள் வலியுறுத்தின. அவனுடைய உள்ளம் மாத்திரமல்ல, உடலும்கூட எதையோ தேடி ஒடிக்கொண்டேயிருந்தது. பாழடைந்த பழசாப்போன கற்களின் மத்தியிலே புத்தருடைய சிலை ஒரு பக்கம் சாய்ந்து கிடந்தது. அதை எடுத்து நேராக, சரியாக வைத்தான் சுபசிங்கா. அந்தச் சிலையை தன் ஈரக்கரங்களால் துடைத்துச் சுத்தப்படுத்தினான். அந்தச் சிலைக்கருகே ஒரு அரசமரம், பல கிளைகள் பட்டுப் போய்விட்டாலும், ‘புத்தம்’ என்றுமே பட்டு மறைந்து விடக்கூடியதல்ல. ஒரு சுபசிங்காவினுடைய உள்ளத்திலாவது தளிர் விடவே செய்யும் என்று அறிவுறுத்துவதுபோல தளிர்விடும் சிறிய கிளையொன்று அந்தக் அரசமரத்துக்கு அமைதியை அளித்தது. சுபசிங்காவுக்கென தேநீர் கொண்டு வந்தாள் மெனீக்கா. படுக்கையிலே சுபசிங்கா இல்லாதிருந்தது, அவளுக்குப் பயத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது – அங்குமிங்கமாகத் தேடினாள். சத்தம்வரும் திசையை நோக்கி ஓடினாள். அங்கே! முளந்தாளில் மண்டியிட்டபடி சிலையின் முனனே உட்கார்ந்திருந்தான் சுபசிங்கா. அவன் கண்களிரண்டும் மகாவலிகங்கையின் கடமையில் ஈடுபட்டிருந்தன. அவன் உள்ளத்தை அன்பும் கருணையும் இறுக அணைத்துக் கொண்டன. ‘விஷயம் தெரியாது தவறுதலாக பிழைவிட்டது உண்மை. மன்னிக்க வேண்டும்’ என பல முறை அவனுடைய இதயம் ஓலமிட்டலறியது. ‘புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி’ என அவன் வாய் தோத்தரிக்கத் தொடங்கியது. புத்தனுடைய அன்புப் பிணைப்பிலே ஆனந்தமாக நீந்திக் கொண்டிருக்கும் சுபசிங்காவைக் கண்டதும் மெனிக்காவின் உள்ளம் ஆனந்தத்தால் கும்மாளமிட்டது. அவளும் அவன் அருகே அமர்ந்தபடியே. ‘புத்தம் சரணம் கச்சாமி புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி’ என தன்மை மறந்து உச்சரிக்கத் தொடங்கினாள். பிழையான பாதையால் வழிநடத்தப்பட்டுவந்து அறியாது தவறு செய்த அந்த இரு உள்ளங்களும்கூட தாம் புத்தனுடைய பரம்பரை தானா என எண்ண நாணிக் கொண்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.