முகநூல்

ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி!…. ப. தெய்வீகன்

ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி என்பது மிக மிக அதிகம். அதுவும் சுமந்திரனுக்கு எதிரான ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி அதிகமோ அதிகம். நேற்றிரவு யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தையும் அதையொட்டி முழுவீச்சில் நடைபெற்றுவரும் பிரச்சாரத்தையும் ஓரளவுக்கு இவ்வாறு புரிந்துகொள்ளமுடியும்.
தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குக்கள் வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், எண்ணப்பட்ட வாக்குகள் பகுதி பகுதியாக அறிவிக்கப்படும். ஆனால், இறுதி அறிவிப்பு வரும்வரை எந்த முடிவுக்கும் வந்துவிடமுடியாது. இது உலகெங்கிலும் நடைபெறுகின்ற பொதுவான தேர்தல் வழமை.
மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவி சசிகலா அவர்களது விடயத்தில் நடைபெற்றதும் இதுதான். இறுதியாக வரவிருந்த பல தொகுதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னர், அவர்
மற்றவர்களைவிட முன்னிலையில் இருந்திருக்கலாம். முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்ட அவர், அதனை வெற்றியாகவே கண்டு பரவசப்பட்டிருக்கலாம். ஆனால், படிப்படியாக ஏனைய தொகுதி வாக்குகள் வந்து சேர்ந்தபோது, “அமைதிப்படை” படத்தில்
சுயேட்சை வேட்பாளர் நாகராஜசோழனுக்கு வாக்கு எகிறிக்கொண்டுபோனதுபோல – நிலமை மாறி – கீழிருந்த சித்தார்த்தனும் சுமந்திரனும் மேலேறியிருக்கிறார்கள். அவ்வளவுதான். சின்னக்குழந்தையும் புரிந்துகொள்ளக்கூடிய சிம்பிளான தேர்தல் நடைமுறை இது.
ஆனால், இவரது ஆத்திரம் ஆரோகணிப்பதற்கு காரணமாக அங்கு இன்னொரு சம்பவமும் நடத்துவிட்டது.
கொழும்பிலிருந்துகொண்டு உள்ளடி வேலைகளினால் தனது வெற்றியை தீர்மானித்துக்கொண்டிருக்கிறார் என்று எதிர்த்தரப்பினர் மத்தியில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிரச்சாரத்தை பொய் என்று நிரூபிப்பதற்காக, தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிட்டார் என்ற தகவல் உறுதியான பின்னர், யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிலிருந்த சுமந்திரன், மத்திய கல்லூரி வளாகத்துக்கு வந்தார்.
இந்த நேரத்தில், தான் நம்பியிருந்த வெற்றி கைதவறிப்போன விரக்தியிலிருந்த சசிகலா அவர்களும் அவரது மகளும் வாக்கெண்ணுமிடத்திலிருந்து கோபத்தோடு வெளியேறியிருக்கிறார்கள். தங்கள் தோல்விக்கு சுமந்திரனே பொறுப்பென்று பொரிந்து தள்ளிவிட்டுப்போயிருக்கிறார்கள்.
மத்திய கல்லூரி வளாகத்திற்குள் சசிகலா அவர்கள் கூறியதுபோலவும் – பின்னர் அவரது மகள் முகநூலில் பதிவுசெய்துள்ளதுபோலவும் – இந்த விடயத்தை சற்று ஆழமாக பார்த்தால் –
சுமந்திரனும் சயந்தனும் வாக்கெண்ணும் இடத்துக்கு வந்து அதிகாரிகளுக்கு அருகிலிருந்துகொண்டார்கள் என்றும் சுமந்திரனுக்கான வெற்றியை தன்னிடமிருந்து பறிந்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
1) யாழ் தேர்தல் களம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை முன்னதாகவே தெரிந்து, கண்ணுக்குள் எண்ணைவிட்டுக்கொண்டு பணிபுரிகின்ற அதிகாரிகள் மத்தியில் இது சாத்தியமா?
2) அப்படியே ஒரு சம்பவம் இடம்பெறக்கூடிய சூழ்நிலை அங்கு நிலவியது என்று எடுத்துக்கொண்டாலும், சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகள் 27 734. அடுத்த இடத்திலுள்ள சித்தார்த்தனுக்கு கிடைத்த வாக்குகள் 23 740. சசிகலா அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அதற்கும் கீழ்தானிருக்கவேண்டும். கிட்டத்தட்ட நாலாயிரம் வாக்குகள் வித்தியாசம். வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் கோத்தபாய ராஜபக்ஷவே வந்தால்கூட 4000 வாக்குகளை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு போட்டு, வெற்றியை பறிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா?
3) அப்படியே சசிகலாவுக்கு வாக்கு முறைகேடு நடைபெற்றிருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு அருகிலிருக்கும் சித்தார்த்தன்தானே அவரது முதல் குற்றவாளியாக இருக்கமுடியும். ஏன் சுமந்திரனை குற்றப்படுத்துகிறார்?
எது எப்படியோ, சுமந்திரன் அங்கு அதிரடிப்படையினர் சமேதராக வந்து இறங்க – சுமந்திரனின் வெற்றியென்பது எப்போதும் முறைகேடாக மாத்திரமே அவருக்கு கிடைப்பதற்கு சாத்தியமுள்ளது என்று தீராத நம்பிக்கைகொண்ட “இனிய தோழர்கள் கூட்டம்” அவரைக்கண்டவுடன் குதூகலமாக – சசிகாலா அவர்களும் மகளும் அந்தநேரம் பார்த்து அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேற – அத்தனை கமராக்களும் அது அறுசுவையாகிப்போனது.
ஆனால், இங்குள்ள மிக முக்கியமான விடயம் – சசிகலா அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர். அவரே சுமந்திரனுக்கு எதிராக இவ்வாறு நடந்துகொண்டதானது, தேர்தலில் கூட்டமைப்பு அடைந்துள்ள சரிவோடு இன்னமும் கூடுதல் கறையை ஏற்படுத்தியிருக்கிறது. It was truly an ugly event.
சசிகலா அவர்கள் தனக்கு உண்மையிலேயே இந்தத்தேர்தலில் துரோகமிழைக்கப்பட்டிருக்கிறது என்று கருதினால், இதனை நேரடியாக நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லலாம். அவரது வாக்குப்பெட்டி மீண்டும் பிரிக்கப்பட்டு எண்ணுவதற்கு நீதிமன்ற உத்தரவைப்பெறலாம். வழியில்லாமல் இல்லை.
இவை எதையும் கிஞ்சித்தும் தெரிந்துகொள்ளாமல், அவரின் அறியாமையை தங்களது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்தி, சுமந்திரனின் மீது சேறடிக்கும் கூட்டத்துக்கு சசிகலா அவர்கள் பலியாடாகவேண்டியதில்லை.
தேர்தல் முடிவுகளை கேட்டபடி கடைவாய்நீர் வடிய அப்படியே நித்திரையான சிலது, தூக்க கலக்கத்தில் எழுந்து நின்று “சுமந்திரனாம் அடியுங்கடா… அடியுங்கடா” – என்று கத்தியபடி அரைகுறையாக ஓடுவதை பார்த்தால், கொரோனாவே அஞ்சப்போகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.