Featureமுகிழ்த்தது முத்து

மத்தாப்பு!…. 4…. ( ஈழத்து எழுத்தாளர் ஐவரின் படைப்பு )

மத்தாப்பு!…. ( ஈழத்து எழுத்தாளர் ஐவரின் படைப்பு )
1. வர்ணம் —– பச்சை —– இ.நாகராஐன்.
2. வர்ணம் —– சிவப்பு —– கனக. செந்திநாதன்.
3. வர்ணம் —– நீலம் —— சு.வேலுப்பிள்ளை.
4 .வர்ணம் —— மஞ்சள் —– குறமகள்.
5. வர்ணம் —— கத்தரி —— எஸ்.பொ. —–

மத்தாப்பு!….. 

  அறுபது   ( 60 ) வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல்

குறமகள்

 

இவரது இயற்பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். காங்கேசந்துறையில் பிறந்து வளர்ந்த இவர் இடம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார். பயிற்றப்பட்ட ஆசிரியர், ஆசிரியப் பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர். 1954 முதல் எழுத ஆரம்பித்த இவர் இறக்கும் வரையும் (2016) எழுதிவந்தார். குறமகள் கதைகள், உள்ளக்கமலமடி, இராமபாணம் (கட்டுரை), ஈழத்து ரோஜா, குருமோகன் பாலர் பாடல்கள், மாலை சூட்டும் நாள் (கவிதை) என்பவை இவரது படைப்புக்களில் சிலவாகும்

`மத்தாப்பு’ ….. ( 4 ) ….வர்ணம் ….  மஞ்சள்…… குறமகள்

 

மாரிமுத்துவைச் சிறைக் கதவுகள் வரவேற்றன.

சிறை வரவேற்கவா செய்தது?

தன்னிரு கரங்களாலும் வாரியணைத்து இறுகப் பிணைத்து அவன் இளமையையும் இன்பத்தையும் தானே பருகிச் சுவைத்தாயிற்றே. ஆகா! எப்பேர்ப்பட்ட அருமையான அரவணைப்பு. பெற்ற தாய்! அவள்கூட இத்தகைய அன்பணைப்பைத் தரவில்லை. கொண்ட மனைவி அவள் தந்த அரவணைப்போ இரண்டு வருடங்களே. அன்புத் தனயன்! இரு கைகளாலும் அப்புவின் கழுத்தைக் கட்டியணைத்து முத்தமிட்டது ஒரு வயது முடியும் வரைதான். எரிமலையாகிவிட்ட உள்ளம் கண்ணீரை உலரவைத்து அக்கினிக் காற்றாக்கிப் பெருமூச்சாக வெளிப்படுத்தியது.

டூமீல்….சிறைப்பட்டிருந்த நட்சத்திர மலர்கள் சிரிப்பை சிந்தி ஆகாயத்தில் சிதறி மலர்ந்தன. ஆம். விடுதலை என்றால் ஒரு கணத்தில் கருகிப்போகும் மத்தாப்புக்கூடக் களிப்புடன் சிரிக்கிறதே. ஆனால் மாரிமுத்து… அவன் பஞ்சடைந்த – நீர்மல்கிய கண்களுக்கு எல்லா நிறங்களும் ஒரே மஞ்சள் நிறமாகத்தான் தெரிந்தது. எல்லா வர்ணங்களையும் தன்னுள் அடக்கி ஒளி-மஞ்சள் வர்ணத்தையே வெளியே காட்டும் சூரியனைப் போல் – எல்லாவித உணர்ச்சிகளையும் உள்ளடக்கிக் காவி உடுத்துவரும் சந்நியாசியோ இம்மாரிமுத்து.

கூட்ட நெரிசல் கண்ணுக்குத் தெரிந்தது.

மகன்! அந்த மகனுக்குக் கல்யாணம். ம்.. அந்த மகன் பிறந்த நாட்கள்..

“இஞ்சை உங்களைத்தானே! பட்டினத்திலை படங்காட்டுறாங்களாம், வள்ளி திருமணமாம்.”

“அதுக்கென்ன அதுபாட்டுக்கு நடக்கட்டன். என்ரை வள்ளிக்குத்தானே திருமணம் எப்போதோ முடிஞ்சு போச்சே”

“போங்கோ, எங்கடை காடியவத்தை கூத்திலை காக்கொத்துக் கந்தரின்ரை மேனெல்லே வள்ளிக்கு ஆடினது.”

“ஓ! ஓ! அந்த வள்ளி இப்ப என்னையல்லே ஆட்டுது.”

“சும்மா பகிடியை விட்டுட்டு… இந்த வசுக்கோப்பிலை ஆம்பிளையும் பெம்பிளையும் சேந்து ஆடுறாங்களாம். பெரிய யானை வருதாம்…”

“உனக்கார் உந்தப் புதினமெல்லாம் சொன்னது? கூட்டாளி நாகம்மாவோ?”

“டேய்! அது ஆசைப்படுது! அதுக்கு நூறு குறுக்குக் கேள்வி!” – இது தாயின் குறுக்கீடு.

“பின்னைச் சரி, வாவன் இந்த பெண்களும் வாயிலை வயித்திலை வந்தவுடனை அதிலை ஆசை இதிலை ஆசை எண்டு தாங்கள் நினைச்சதை முடிச்சுப்போடுவினம். நல்ல சாட்டுயாவெண்டு.”

 

ஆசையோடு பேசினான். ஆவலோடு வண்டியில் அலுங்காமல் நலுங்காமல் அழைத்துச் சென்றான். அவன் மாத்திரமா சென்றான் – அந்த முல்லைப்பற்றுக் கிராமமே திரண்டு போனது. யாழ்ப்பாண முத்தவெளியிலே அடிக்கப்பட்ட கூடாரத்தில் ‘வள்ளி திருமணம்’ என்னும் பேசுகிற படக்காட்சி நடந்து கொண்டிருந்தது. அது அவர்கள் வாழ்விலே ஒரு பொன்னாள். நினைத்து நினைத்து அப்பசுமையான எண்ணத்தை வாழ்நாள் முழுவதும் ரசிக்கலாமே. படம் பார்த்துவிட்டு வந்தபின் மாரிமுத்துவும வள்ளியம்மையும் இந்தப் ‘புதினமான புதினத்தை’ வாய் ஓயாது பேசி மகிழ்ந்தனர். கிழவன் குமரனான அதிசயம் அவர்கள் மனதில் என்றும் நிலைத்ததால் தங்கள் குலக்கொடிக்கு குமாரசாமி என்றே பெயரிட்டனர்.

அக் குமாரசாமி – இன்று எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு மணமகன். அவனுக்கு ஆசையோடு பெயரிட்ட அன்னை… மத்தாப்பு பல வர்ணங்களை எழுப்பி ஒரு கணநேரம் உலகை ஒளி மயத்திலாழ்த்திவிட்டுக் கரித்துகள்களாக மாறிப் பறந்தது. அவளுந்தான் தியாகத்தின் திருவுருவாகத் தன்னைக் கருக்கிக் கொண்டாளோ?

மாரிமுத்து சிறைக்குச் சென்றபோது குமாரனுக்கு வயது ஒன்று கோட்டடியில் வள்ளியம்மையும், குழந்தையும், சிவகுருவும் நின்றிருந்தனர். வழக்கின் போக்கையும் நீதியின் தடுமாற்றத்தையும் கண்டு வழக்கு என்ன முடிவையடையுமென்று எல்லோரும் ஊகித்திருந்தனர். வழக்கு முடிந்தது! வள்ளியம்மையின் கண்களை சந்திக்கவே அஞ்சினான் மாரிமுத்து கல்லாக்கிக் கொண்ட தன் மனதை கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் அவள் எங்கே கலைத்துவிடுவாளோ என்று பயந்தான். பார்க்க வேண்டுமென்ற அவா கட்டை மீறியபோது பார்க்கவே பார்த்தான். அவனால் நம்பவே முடியவில்லை.

அவள் கண்ணீல் ஒரு அசாதாரண ஒளி – நம்பிக்கை பொழியும் முகம்- எல்லாவற்றையும் வென்றுவிட்ட உறுதிபெற்ற உள்ளம். துயரமெல்லாம் மூடி உள்ளடக்கி முத்திரையிட்ட வாய், இவற்றோடு அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது செல்வக் குமாரனும் கைகளைத் தட்டித் தட்டி ‘அப்பு, அப்பு’ என்று ஆரவாரித்தான். அதன்பின் தான் அவனும்

நெஞ்சுறுதியோடு அன்பு பொழியும் அனுதாபப் பார்வையை அவர்கள் மீதுசெலுத்திவிட்டு உயிரோடு புதைக்கப்படும் சிறைச்சாலைக்குள் மறைந்துவிட்டான். அன்று இந்த வாத்தியார் குமாரசாமி ‘அப்பு, அப்பு’ என்று வாணீர் வடிய வடியக் கூப்பிட்ட காட்சி…

ம்…ம் சிறை வாழ்க்கை! அந்த நரக வேதனை சொல்லியா தெரியவேண்டும்? அதுவும் வாலிப முறுக்கேறிய மாரிமுத்துவின் உள்ளம் தொடக்க காலத்திலே புரட்சி செய்யத்தான் செய்தது சிறையதிகாரிக்கு யார் குற்றஞ் செய்தாலென்ன செய்யாவிட்டாலென்ன. அவன் கடமையைச் செய்துகொண்டே வந்தான். சவாரி மாடுகள் அவனை இழுத்த காலம் போய், தண்ணீர் வண்டியை அவன் இழுக்கும் காலம் வந்தது.

வள்ளியம்மை அமுது படைக்க உண்டு உரமேறிய உடல், மற்றச் சிறைக் கைதிகளுக்குச் சமைத்துப் போட்டு நலிந்தது. ஏர் பிடித்து வயலுழத கைகள் மடத்தில் ஏந்திக் கல்லுடைத்தன. அன்று வள்ளியின் ‘உதுகளும் ஒரு மாடுகளோ’ என்ற வார்த்தையைக் கேட்டுக் கோபத்தில் மாடுகளுக்குச் சவுக்கினால் அடித்தஅடி இன்று சிறையதிகாரி மனைவியுடன் சண்டையிட்டுவிட்டு வந்த கோபத்தினால் அவனுக்கு கிடைத்தது.

நரகத்தையும் மோட்சத்தையும் அனுபவிக்க நாம் வேறு பிறவி எடுக்கத் தேவையில்லை. ஏதோ ஒரு வழியில் அவை நம் கண் முன்னேயே நடைபெறுகின்றன. சூடியன், கூத்தியன், சூதாடி என்றெல்லாம் பெயர் பெற்ற விசுவலிங்கம் எப்படித்தான் கௌரவப் போர்வையைப் போர்த்தாலும் இவற்றை அனுபவிக்காமலா போகப் போகிறான்?

வருடம் ஒன்று பறந்தது. வள்ளியம்மையையும் இரண்டு வயதுக் குமாரனையும் கூட்டிக்கொண்டு வெலிக்கடைக்கு வந்தான் சிவகுரு. முல்லைப்பற்றுக் கிராமமெங்கே! வெலிக்கடைச் சிறைச்சாலை எங்கே? ஆச்சரியத்தால் விக்கித்துப் போய்விட்டான் மாரிமுத்து. அவள் வனப்பு – வாளிப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமற் போய்விட்டது. கஞ்சி கூடக் குடிக்காது காசு சேர்த்து வந்த மர்மத்தை அறிந்தபோது அவன் கண்கள் கண்ணீரைச் சிந்தின. உள்ளம் வெடித்தது. இந்த தடவை அவளாலும் கண்ணீரைக்கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கணம் பிரிவின் ஆராமையால் இருவரும் கோழைகளாக மாறிவிட்டனர்.

அநியாயமாக ஒருவன் தண்டிக்கப்பட்டால் அவன் துக்கத்தால் அழுவதில்லை. அவமானத்தால், ஆத்திரத்தால் துடிப்பான். தன்மீது சோடித்துவைத்த பொய்ச்சாட்சிகளைக் கண்டு பொருமுவான். அவர்களைத் தயார்பண்ணி வைத்தவர்கழளக் கண்டு பொங்குவான். பழிக்கு பழி வாங்கவேண்டுமென்று துடிப்பான். அதுவும் தண்டனையை அனுபவிக்க அனுபவிக்க இப்படியான வெறிஏறிக் கொண்டே போகும். எப்பேர்பட்ட நல்லவர்களும் அபாண்டப்பழி சுமத்தப்பட்டவுடனே தம் நல்ல குணங்களை இழந்துவிடும் வாய்ப்பை பெறுகிறார்கள். கயவர்களாக மாறிவிடுவார்கள்.

சமூகமே ஒரு பொதுநலவாதியை சமூக விரோதியாக்கிவிடும். அந்நிலையில் தானிருந்தான் மாரிமுத்து. அவன் நல்ல பண்புகள் அவனையறியாமலே விடை பெற்றுக் கொண்டிருந்தன. அந்த நிலையைக் கடந்து அவன் வெற்றிபெறுவானானால் அவன் தான் மனிதருள் மனிதனாக கருதப்படுவான். ஆனால் அவனும் ஓர் சாதாரண மனிதன்தானே? அதுவும் தனது ஆசைக்கனி – அன்புக்கிளி வள்ளியம்மையின் உடம்பைக் கண்டதும் அவன் ஆண்மை பொங்கியெழுந்தது.

எவனாலோ அவள் வாழ்வு பறிபோவதா?

“அது எங்கடை விதி ராசா. கடவுள் விட்ட வழியைக் காணுவம்.” வாயாடி வள்ளியம்மையா பேசுகிறாள். ஆற்றாமையோடு பெருமூச்செறிந்தான் மாரிமுத்து.

“அநியாயம் செய்தவர்களைச் சாமி தண்டிப்பார். நீ என்னாணை ஏறுமாறாய் ஒண்டும் செய்து போடாதை!” – இது சிவகுரு

“அது என்னத்தைச் செய்யும்? இஞ்சை பார் எலும்பெலும்பாய் தெரியுது”

“அது போகட்டும் சிவகுரு. உன்னாலைதான் வள்ளியம்மை எனக்குக் கிடைத்தாள். அதைப்போல இப்பவும் உன்னாலைதான் என் குடும்பம் மானத்தோடு வாழுது. என்ரை பிள்ளையை நல்லாய்ப் படிப்பித்து ஆளாக்கிவிடு, அவனை அடிக்கடி இஞ்சை கூட்டிவராதை.

“அவன்ரை பிஞ்சுமனம் வேதனைப்படும். சின்னனுகள் கெதியாக ஆத்திரப்பட்டுப் படிப்பபை விட்டுவிடுங்கள். அவன் தலையெடுத்த பிறகு நான் சுத்தவாளியென்று அறிந்தால் போதும். வள்ளி, பிள்ளையைக் கவனமாக பார்த்துக்கொள். அவனாலும் அப்பன் குற்றமற்றவன் என்பதை ஊருக்குக் காட்டட்டும். என்ன வள்ளி நீ உப்பிடிப் போனால் ஆர் குழந்தையைப் பார்க்கிறது?”

“இதுகளைப்பற்றி நீ கவலைப்படாதே நான் எல்லாம் பார்த்துக்கொள்ளுறன். நானுமல்லே மாடவிழ்க்கப்போறன். வள்ளியின் கூட்டாளி நாகம்மாதான்.”

“ஓ.. ஓ.. பேந்தென்ன வள்ளிபாடு கொண்டாட்டந்தான். கூட்டாளிகளுக்கை போராட்டம் தொடங்கினால்தான் திண்டாட்டம்..”

கதைகள் சுற்றிச் சுழன்று புறப்படும் நேரம் வந்தது. மிகக் கஷ்டத்துடன் ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டு விடைபெற்றுக் கொண்டனர். மாந்தோப்பு வளவு, வழக்குக்காக விலைப்பட்டதை மட்டும் சொல்லவில்லை. அடுத்த வருடம் காண்போமென்ற அசட்டு நம்பிக்கையை நினைவில் வைத்துக்கொண்டு பிரிந்தனர்.

நினைவா அது? கனவு. ஆம். கனவேதான். சிறைக் கூடத்திற் கிடைத்தனர் சில சிங்கள நண்பர்கள். அவர்களிடம் சகோதர மொழியையன்றி வேறு எத்தனையோ கலைகளையுங் கற்றுக் கொண்டான் மாரிமுத்து. முடிவில் நாட்டில் மஞ்சள் உடைக்கிருக்கும் மதிப்பைத் தமக்குப் பயன்படுத்த யோசித்தான். ஆம்! சிறையை விட்டுத் தப்பி ஓடிச் சிலநாள் ஒளித்திருந்து. பின் பிக்கு வேடமணிந்து ஊருக்கு ஓடிவருவதென்ற திட்டம். மஞ்சள் அங்கி! மங்கலப் பொருளாயிருப்பதும் மஞ்சள் ஆனால் இலையுதிர் காலத்திலும் உலகமெல்லாம் மஞ்சள் போர்வைக்குள் தான் காட்சியளிக்கிறது. மனிதன் வாழ்வு வெறுத்து சன்னியாசம் கொள்ளும்போதும் மஞ்சள் உடைக்குள் தான் நுழைகிறான். மரஞ்செடி கொடிகளும் மஞ்சள் நிறம் பெற்றவுடன் மங்கிவிடுகின்றன. மஞ்சள் அங்கியில் மாறுவேடம் புனைய நினைத்த மாரிமுத்துவின் வாழ்க்கையும் மங்கத் தொடங்கியது.

பின்னிரவு பதுங்கிப் பதுங்கிச் சென்றுகொண்டிருந்த மாரிமுத்துவின் தலையில் ஒரு குண்டாந் தடியடி, சிறைக் காவலரிடம் தப்பியும் நகர்காவலரிடம் தப்ப முடியாத மாரிமுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

“துரிதிருஷ்டம் படைபடையாத் தொடர்ந்து வரும்” என்பதற்கு மாரிமுத்துவின் வாழ்வு ஒரு சான்றோ?

உடலாலும் உள்ளத்தாலும் நலியத் தொடங்கிய வள்ளியம்மை இன்னொருமுறை கணவனைச் சந்திக்கும் பாக்கியத்தைப் பெறாமலே, குமாரனைச் சிவகுருவிடம் ஒப்படைத்து விட்டுத் தீராத ஏக்கத்துடனும் மாளாத துயரத்துடனும் மடிந்துவிட்டாள். சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்துவுக்கு இது பேரிடி. எவளொருத்தியை அவன் வாழ்வின் இலட்சியம் என்று கருதியிருந்தானோ – எவளொருத்தியை தன் மனச் சிறையிலித்திச் – சீராகச் சிறப்பாக வைத்திருக்க வேண்டுமென்று கருதியிருந்தானோ – எவளொருத்திக்கு அன்பு பாராட்டி ஆசையைப் பொழிந்தானோ – எவளொருத்திக்கு அன்பு பாராட்டி ஆசையை பொழுந்தானோ – அவள் இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டாள். உள்ளத்தின் மூல வேரிலே ஆட்டங்கண்டது. உலகில் தனக்கென ஒன்று மில்லை என்ற சூன்ய நிலை, குமாரன் தொடு வானத்தில் ‘மினுக் மினுக்’ என்னும் ஒரு சிறு நட்சத்திரமாகத்தான் காட்சியளித்தான். அவனோ வழி காட்டப் போகிறான்? இனித் தான் யாருக்காக வெளியேறவேண்டும் என்ற விரக்தி மனப்பான்மையோடு எதிலும் பட்டும் படாமலும் சிறை வாழ்க்கையை மேற் கொண்டான். பெற்ற தாய், தந்தை, மனைவி, வீடு, வாசல் எல்லாவற்றையும் இழந்து விட்ட அவனுக்கு, சிவகுருவும் முல்லைபற்றுக் கிராமமும் ஒரு கனவுலக் காட்சியாகத் தெரிந்தது. அன்று

தொடக்கம் சிறைவாழ்வில் ஒன்றிவிட்ட மாரிமுத்து கூடிய சீக்கிரமே அதிகாரிகளின் நன்மதிப்புக்குப் பாத்திரனானான்.

இலங்கைச் சுதந்திரதினம் வந்தது. அந்த மகத்தான தினத்திற் கைதிகள் சிலருக்கு விமோசனம் கிடைத்தது… சுதந்திர தினத்திற்கு முதல் நாள் இரவு விடுதலையாக வேண்டிய கைதிகளின் பட்டியல் வாசிக்கப்பட்டது: அதில் பதினைந்து வருட சிறைத் தண்டனையை முடித்திருந்த மாரிமுத்துவின் பெயருங் காணப்பட்டது.

சிறைச்சாலைக் கதவுகள் அகலத் திறந்து கொண்டன. உரிமைகளை – உணர்ச்சிகளை அடக்கி யொடுக்கி வைத்த அந்தப் பாரிய சிறையின் அனுபவம் அப்பப்பா! மகா கொடுமை நிறைந்தது. மாரிமுத்து நெடுமூச்செறிந்தான். எதிர்பாராத விடுதலைதான்! ஆனால், இந்த விடுதலை இன்பத்தை அவன் எங்கே சென்று கழிப்பது? அன்னை தந்தை அழகான மனைவி அனைவரும் அழிந்தொழிந்தபின்…

ஏன் அவன் ஒரே மைந்தன்?

உள்ளுணர்வு எழுப்பிய அந்த ஒரு கேள்விக்குள் குறுகிச் சுருண்டு கொண்டான். ஆனால் தொடர்ந்து வந்த உணர்ச்சியிலே உதயமான ஞான உபதேசம்…

அந்த மகனைக் காணுவதினால் இதயம் நலம் பெறலாம். ஆனால் இதுவரை அனாதையாக வளர்ந்து நல்ல எதிர் காலத்தை நோக்கிச்செல்லும் அவனைக் குறுக்கிட்டுக் கெடுப்பதா?

வேண்டாம்!

விரக்தி கவிந்த மனநிலையுடன் ஒன்றும் தோன்றாது சிறைவாசலிலே நின்ற மாரிமுத்துவின் தோளில் ஸ்பரிசம் பட்டது திரும்பினான். அவனுடன் கைதியாகவிருந்து இன்று வெளியேறிய அப்புகாமியின் திட்டத்தை அவன் வரவேற்றான். சிறையிலே கிடந்து தவித்த அப்புகாமி கதிர்காமத்துக்கு நடந்து போகப் போகிறானாம்.

மாரிமுத்துவும் அவனது எண்ணத்துக்கு இசைந்தான். அது மாசி மாதம் நாலாம் திகதி. இலங்கை சுதந்திரம் பெற்ற நாள். அந்தநாள் தொடக்கம் காலியை நோக்கிச் செல்லும் பாதை வழியே இருவரும் நடக்கத் தொடங்கினார்.

நாட்கள் நாற்பத்தைந்துக்கு மேலாகிவிட்டன. வீதியை வாசஸ்தலமாகக்கொண்டு அவர்கள் செய்த யாத்திரையின் முடிவு நெருங்கியது. அதோ கதிர்காமம்.

மாணிக்க கங்கையின் இன்ப அலைகள் சுரந்து கரை வந்து தொட்டு விளையாடும் வனப்பு, எழிலாந்த புள்ளினங்கள் சிறகடிக்கும் இன்பம். யாத்திரிகர்களின் ஸ்நானலயிப்பு, அனைத்தும் அவர்களைக் கவர்ந்தன.

நடந்த களைப்பும், நெஞ்சின் வாதையும் ஒன்றாக அந்த நதியில் ஐக்கியமாகிவிட்டதா? அப்புகாமியும் மாரிமுத்துவும் அந்த நதியில் குளித்துக் கோவிலுக்குச் சென்றனர்.

“முருகா! முருகா!”

பக்தர் குழாமின் பக்தி ஓலம். எங்கும் சுடர்விடும் கற்பூரத் தீ; இனிய பண்ணிற் தோய்ந்துவரும் தேவார இசை; சென்ற காலத்திய இன்னலும் எதிர்காலத்திய பிரச்சனைகளும் தலைகாட்டாத மோனம் சூழ்ந்த ஆலயத்தினுள் சென்று வணங்கி புனித இதயமுடன் வெளிவந்தனர் மாரிமுத்துவும் அப்புகாமியும்.

அங்கே மரத்தின் அடியொன்றில் நீண்ட தாடியும், மஞ்சள் அங்கியுமாக ஒருவன். அவன்….

மாரிமுத்து நிமிர்ந்து பார்த்தான். காலமென்ற புழுதியிலே சிறிது சிறிது மாற்றமடைந்திருந்தாலும் அந்தப் பிரகிருதியை மாரிமுத்துவினால் இனங்காண முடிந்தது.

நெருங்கினான்.

அந்த உருவம் – அதாவது தற்போதைய சந்நியாச நிலையிலிருக்கும் முத்துவேலுவும் – கவனித்தான். முத்துவேலுவின் கண்களில் சுரப்பதென்ன? உண்மைக் கண்ணீரா அல்லது நடிப்பா? மரிமுத்து பித்துப் பிடித்தவன்போல் நின்றான்.

முத்துவேலு நடந்து வந்து மாரிமுத்துவை அடைந்தான்.

“கதிர்காமத்தானின் சந்நிதிக்கு வந்தேன். ஆனால் எனது மனதிலே அரிக்கும்….”

“என்ன?”

“உன்னைப் பொய் சாட்சி சொல்லி மறியலுக்கு அனுப்பி வைச்சன். எனது வைராக்கியத்தைத் தீர்க்க வந்த நான்தான் கொலையாளி. ஆனால் அந்த பலன் அடுக்கடுக்காக எனது குடும்பமழிந்து ஒரேயடியாய்…”

விக்கலுக்கிடையே அவன் திக்கிச் சொன்னவை பல. மாரிமுத்து அவனைத் தேற்றி ‘போனவை போகட்டும்’ இந்தக் கதிர்காமத்தான் சந்நிதியில் உன்னை நான் மன்னித்து விட்டேன்’ என்றான். மாரிமுத்துவின் இச்செய்கை முத்துவேலுவின் மனத்தை உருக்கியது.

மாரிமுத்துவும், அப்புகாமியும், முத்துவேலுவும் கதிர்காமத்திலுள்ள தேநீர்க் கடையொன்றுக்குள்

புகுந்தனர்.

தொடரும்…. மத்தாப்பு…. 5

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.