மறைந்த இவருக்கு 80 வயதாகிறது. ‘விசாரணை கமிஷன்’ என்ற நாவலுக்காக இவர் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றுள்ளார். மேலும் அவர் எழுதிய ‘தொலைந்து போனவர்கள்’ என்ற நாவல் தொலைக்காட்சி தொடராக வெளியானது. இதனை தவிர 7க்கு மேற்பட்ட நாவல்களையும் 11க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். எழுத்தாளர் சா.கந்தசாமி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1940ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி பிறந்தார். இவருக்கு ரோஹிணி என்ற மனைவியும், 2 மகன்கனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர் 1968ல் எழுதிய ‘சாயாவனம் புதினம்’ பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் கொடிகட்டி பறந்தார். மேலும் இப்புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. இத்தனை பெருமைகளை உடைய இவர் கடந்த நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டுள்ளார். இதனால் சிகிச்சைக்காக இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக நேரில் வரமுடியாததால் பல்வேறு கட்சி தலைவர்களும், எழுத்தாளர்களும், பத்திரிக்கையாளர்களும் இவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர். சிலர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, மறைந்த கந்தசாமியின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.