திருமதி.நிவேதா உதயராயன்!…. ( படைப்பாளி )….. இலண்டன்.
விவசாயமும் கலையும் செழிப்புற்று விளங்கும் இணுவில் கிராமத்தில் பிறந்து வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்று, நாட்டின் போர்ச் சூழல் காரணமாக 1985 இல் தன் பெற்றோருடன் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்து அங்கு 18 ஆண்டுகள் வாழ்ந்தபின் மீண்டும் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்து 17 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்துகொண்டிருப்பவர் திருமதி நிவேதா உதயராசன்.
இவரின் பெற்றோர் இருவரும் இலங்கையிலும் ஆசிரியசேவையாற்றியவர்கள். “தமிழாலயத் தந்தை” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர் இவரின் தந்தை அமரர் திரு இராமலிங்கம் நாகலிங்கம், யேர்மனியில் இருநூறுக்கும் அதிகமான தமிழ்ப்பள்ளிகளை தமிழாலயம் என்னும் பெயரில் நிறுவி, புலம்பெயர் சிறுவர்கள் தமிழ்க் கல்வி கற்று தமிழர் என்ற அடையாளத்துடன் வாழவேண்டும் என்ற நோக்கில் முப்பது ஆண்டுகள் சேவை செய்தவர்கள்.
தந்தையின் வழியில் நிவேதா உதயராயனும் பிரித்தானியாவில் மிச்சம் பகுதியில் தமிழ்ப்பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்திவருகின்றார். சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையிலும் ஓவியம் வரைவதிலும் தையல் கலை, கர்நாடகசங்கீதம், வானொலி நாடகங்கள் என்று பல்துறை சார்ந்து தன் திறமையை வெளிப்படுத்தியவர். பின்னர் தமிழ்மொழியின் பால் ஏற்பட்ட பற்றினால் கவிதைகள், சிறுகதைகள் என யாழ் இணையத்தில் எழுத ஆரம்பித்து இதுவரை நான்கு நூல்களை வெளியீடு செய்துள்ளார். துணிவாக எழுதும் இயல்பினால் பலராலும் அறியப்பட்டவர். இவரின் முதலாவது நூலான “வரலாற்றைத் தொலைத்த தமிழர்” மற்றும் முதலாவது சிறுகதைத் தொகுப்பான “நிறம்மாறும் உறவுகள்” என்னும் நூல்கள் இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியிலும் லண்டனிலும் 2014ம் ஆண்டு வெளியீடு செய்யப்பட்டது. அதன்பின் இவரின் நினைவுகளின் அலைதல் என்னும் கவிதைத் தொகுப்பு 2017 இன் புத்தகக் கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டது. நான்காவது நூலான “உணர்வுகள் கொன்றுவிடு” என்னும் சிறுகதைத் தொகுப்பு 2019 மாசி மாதம் இவர் பிறந்து வளர்ந்த ஊரான இணுவில் அறிவாலயத்தில் சிறப்பாக வெளியிடப்பட்டது. பிரித்தானியாக் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை உறுப்பினராக, பயிற்சிப்பட்டறை ஆசிரியராகவும் கடமையாற்றும் இவர் பலராலும் அறியப்பட்டவர். இணுவிலில் பிறந்து 35 ஆண்டுகளுக்குமேலாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது தாய்மொழியையும் பண்பாட்டையும் மறக்காது சேவையாற்றிவருகிறார்.