முகிழ்த்தது முத்து

`மத்தாப்பு ’….. 3….. ( குறுநாவல் ) …… ஈழத்து எழுத்தாளர் ஐவரின் படைப்பு.

மத்தாப்பு!…. ( ஈழத்து எழுத்தாளர் ஐவரின் படைப்பு )
1. வர்ணம் —– பச்சை —– இ.நாகராஐன்.
2. வர்ணம் —– சிவப்பு —– கனக. செந்திநாதன்.
3. வர்ணம் —– நீலம் —— சு.வேலுப்பிள்ளை.
4 .வர்ணம் —— மஞ்சள் —– குறமகள்.
5. வர்ணம் —— கத்தரி —— எஸ்.பொ. —–

மத்தாப்பு!….. 

  அறுபது   ( 60 ) வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல்

சு.வேலுப்பிள்ளை

சு.வே என அழைக்கப்படும் இவர் ஒரு தமிழ் பண்டிதர். நாவற்குழியில் பிறந்த இவர் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர். ராஜாஜியினால் சிலாகிக்கப்பட்ட எழுத்தாளர் என்ற பெருமை கொண்டவர். உருவகக் கதைகள் எழுதியதில் முன்னோடி. குகன் என்ற பாத்திரத்தை மையமாக வைத்து இராமாயணம் முழுவதையும் ஒரு சிறு நூலாக ஆக்கியிருக்கின்றார். வெளிவந்த நூல்கள் மண்வாசனை (சிறுகதைத்தொகுப்பு), பாற் காவடி(சிறுகதைத் தொகுப்பு), மணற்கோவில் (உருவகக்கதைகள்), சிறுவர் கதை இலக்கியம். சிறந்த நாடக ஆசிரியரும் கூட.

`மத்தாப்பு’ ….. ( 3 )….  வர்ணம்– நீலம்….. சு.வேலுப்பிள்ளை.

ஊர்வலம் மூலை திரும்பி நின்றது. திரும்பிய வேகத்தில் ‘பெற்றோல் மாக்ஸி’ன் ஒளிவெள்ளம் வேலிப் பூவரசுகளிடையே சிக்கிச் சிதறுண்டு சுழன்றது. அந்த ஒளித் துளிகள் இரண்டொன்று மாரிமுத்துவின் கண்களிலும் பட்டுக் கணத்தில் மறைந்தன.

நாதஸ்வர வித்துவான் ‘செஞ்சுருட்டி’ இராகத்தைத் தொட்டுச் சுவைக்கத் தொடங்கிய விதத்திலிருந்து எப்படியும் அந்த ஊர்வலம் நகர்வதற்கு அரைமணி நேரமோ முக்கால் மணிநேரமோ செல்லுமென மாரிமுத்துவுக்குத் தோன்றியது. ‘செஞ்சுருட்டி’ கணத்துக்குக் கணம் உயிர்த்துடிப்புடன் மெருகேறி, இழைந்தும் சுருண்டு, ஊர்ந்தும், ஓடியும் அந்தர வெளியெங்கும் மனமோகன மயக்கத்தை அள்ளித் தெளித்துக்கொண்டு உயர்ந்து சென்றது. அந்தக் கானமழையில் நனைந்து தன்னிலை மறந்து ஒரு நிலை, ஒரு கணப்போது அவனுக்குச் சித்தித்தது.

“டுமீல்” – மாரிமுத்து சிந்தனை கலைந்து வானவெளியைப் பார்த்தான். மருந்தோடு தீ கலந்த வேகத்தில், மாற்றத்தில் மத்தாப்பிலிருந்து நீலப் பூக்களும் இரண்டொரு சிவப்புப் பூக்களும் ஆகாயத்தில் மலர்ந்து மறைந்தன.

மாரிமுத்துவின் மனமத்தாப்புக்கு நினைவு தீவைத்து விட்டது.

சவாரிப் போட்டியில் முடிசூடா மன்னனாக விளங்கிய விஸ்வலிங்கம் மண்கவ்விய செய்தி சனக்கூட்டத்திற் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. இவ்வளவு நாளும் சாதாரண மனிதனாக விளங்கிய மாரிமுத்து, அப்பொழுது வெற்றி வீரனாக நிமிர்ந்துநின்றான். உலகையே அலட்சியஞ் செய்யும் ஒரு புன்முறுவல் அவன் இதழ்க்கடையில் மலர்ந்திருந்தது. அவனைக் கண்ணாரக்காண ஆவல் கொண்ட சனக்கூட்டம் நெரிந்து திணறியது.

ஒருவாறு கூட்டம் கலைந்தபோது, ஆலமரத்தின் கீழே, வண்டிக் கிராதியைப் பிடித்துக்கொண்டு நின்ற விசுவலிங்கத்தின் கண்களை மாரிமுத்துவின் கண்கள் சந்தித்தன. அந்தக் கண்கள் கோபத்திலும் குரூரத்திலும் தோய்ந்து இரு அக்கினித் துண்டங்கள் போன்று காட்சியளித்தன. ஒரு கணநேரம் மாரிமுத்து திடுக்கிட்டான். அடுத்தகணம் தன்னைச் சமாளித்துக்கொண்டு, வண்டியில் மாடுகளைப் பூட்டி ஆசனத்தட்டில் ஏறி அமர்ந்தான். சின்னத்தம்பியும் ‘அடிசக்கை’ சிவகுருவும் ஏறி இருக்க, வண்டி ‘ஜல் ஜல்’ என்ற சத்தத்துடன் புறப்பட்டது.

அலட்சிய பாவத்துடன் அள்ளிச் சொருகப்பட்ட தலைப்பாகை; இரத்தச் செம்மைபடர்ந்த முகத்தில் துளிர்த்து நின்ற வியர்வை முத்துக்கள்; முறுக்கேறிய தோள்களிலும் மார்பிலும் எண்ணெய்க் கசிவுடன் கூடிய ஒரு பளபளப்பு; இவையெல்லாம் அந்திவானின் செவ்வண்ணத்துடன்கூடி அவனில் விளையாடிய போது, அந்தத் தோற்றம் சின்னத் தம்பியின் மனதில் ஒரு வகை அங்கலாய்ப்பை உண்டாக்கியது. அதனால்தானோ அவர், “தம்பி சால்வைத் துண்டை எடுத்து உடம்பைப் போர்த்திக் கொள்” என்றார். மாரிமுத்து சால்வையால் தன்னைப் போர்த்திக் கொண்டே, “விசுவலிங்க அண்ணரின் கண்களைப் பார்த்தியளோ” என்றான்.

“ஓம், ஓம்; பார்த்தேன். பயங்கரமாயிருக்கு; அதுதான் யோசிக்கிறேன்.”

“அதற்கென்ன யோசனை. அவர் என்ன பெரிய கொம்போ?”

“சீச்சி! அப்படிச் சொல்லாதை தம்பி. அவரைப்பற்றி நீ கேள்விப்படவில்லையோ.”

“ஓ, நல்லாய்க் கேள்விப்பட்டேனே. பெரிய சாதிமான்; நடப்புக்காரன்; சண்டியனும் கூட.”

“நீ முல்லைப்பற்றில் இருக்கிறதாலை அவரைப் பற்றி உனக்குத் தெரியாது. இந்த மாஞ்சோலைக் கிராமத்திலை பெரிய காணிபூமிக்காரன் அவர்தான். அவர் சுண்டுவிரலை அசைத்தால் இந்த ஊர் ஆடும். முந்தி பாட்டான்காரன் ஒருத்தர் உடையாராய் இருந்து ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்குமாய் காணியும் வயலுமாக வாங்கிச் சேர்த்து வைத்துவிட்டுக் கண்களை மூடினார். இந்த மனிசன் அதை வைத்துக்கொண்டு ஊரைக்கசக்கி மணக்கிறான். இப்ப நான் செய்யிற வயலும் அவரிட்டை குத்தகைக்கு எடுத்ததுதான்”

“அடிசக்கை, அதுதான் அம்மான் பயப்படுகிறார். வயலை மறிச்சுப் போடுவாரோ, இல்லையோ?’ – சிவகுரு நளினம் பண்ணினான்.

“மறிச்சால் மறிக்கட்டுமே. விசுவலிங்கத்தின் வயல் இல்லாமலே உலகத்திலே எத்தனையோ பேர் சீவிக்கிறார்கள்” மாரிமுத்துவின் குரல் கணீரென ஒலித்தது.

“இந்த வயலுக்காக நான் பயப்படவில்லைத் தம்பி. மானத்துக்குத்தான்

பயப்படுகிறேன். அந்த மனிசன் ஒரு முரடன். எந்த பழிபாவத்துக்கும் அஞ்சமாட்டான். இந்த ஊரிலை கோயிலுக்கும் அவன்தான் மனேச்சர்; பள்ளிக்கூடத்துக்கும் அவன் தான். எல்லாத்துக்கும் அவனேதான். இதெல்லாத்தையும் விட அவன்ரை மைனர் விளையாட்டுக்கள்தான் படு மோசம்…. பார் தம்பி, போன தை மாசம் அவன் ஒரு வேலைக்காரப் பொடிச்சியைப் புதிதாய்க் கொண்டு வந்தான். தகப்பன் தாய் இல்லைப் போலிருக்கு; பஞ்சப்பட்டால் வீட்டு வேலைக்;கு வந்ததென்று கேள்வி, பொடிச்சிக்கு ஊரும் புதிசு; மனிசரும் புதிசு, ஆளும் கொஞ்சம் சிவப்பி, அவளை மோசம் பண்ணிப் போட்டு வேறிடம் பார்க்கும்படி சொல்லிவிட்டான். அந்தப் பொடிச்சி அவனைக் கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுதாம். அந்தப் பாவி இரங்கவில்லை. மறுநாள் அவள் பள்ளிக்கூட கிணத்துக்கை மிதந்தாள்.

சவத்தை சோதிச்சுப்பார்த்த டாக்குத்தர் அவள்…அதுதான் தம்பி, அழகான பெண்கள் இந்த ஊரிலை இருக்கப்படாது. வள்ளியம்மையை நினைத்தால் நெஞ்சு ‘பக்’ என்கிறது” – சின்னத்தம்பியின் கண்கள் கலங்கின.

“அடிசக்கை, அப்பிடியோ சங்கதி?”

அவரவர் சிந்தனையோட்டத்தில் லயித்திருந்தனர். நீண்ட மௌனம் தூங்கியது.

மாரிமுத்துவுக்கு வள்ளியம்மை என்ற பெயரைக் கேட்டபோது நெஞ்சு குளிர்ந்தது. வள்ளியம்மையின் நினைவு அவன் அங்க அணுக்கள் எங்கும் செறிந்து கிளுகிளுத்தது. முன்பு தன்னையும் தனது மாடுகளையும் கேலி பண்ணிச் சிரித்த அவள் இப்போது வெற்றி வீரனாக நிற்கும் தன்னைக் கண்டு என்ன நினைப்பாள்; எப்படிப் பார்ப்பாள் என்று அந்த நினைவு கற்பனை பண்ணியது. அவன் மனத்திரையில் வள்ளியம்மை தோன்றி, தட்டி மறைவில் நின்று சரசம் புரிந்தாள். நாணம் படர்ந்து செம்மைச் சிவப்பேறிய அவள் முகத்தில், அவளது மனக்கனவுகள் கொள்ளையாய்த் தேங்கிக் கிடப்பதுபோலவும், பெருந்தாகம் கொண்ட கண்கள் தான் பாராதபோது தன்னைப்பார்த்து அழைப்பது போலவும், தான் பார்த்த போது தட்டி மறைவில் மறைந்து விட்ட அவள் கால்விரல்கள் உள்ளக் கதைகளை எழுதிக்காட்டுவது போலவும அவனுக்குப்பட்டது. மாரிமுத்துவின் ‘கூடு’ ஆசனத்திலிருக்க, அவனுள்ளே உள்ள ‘அவன்’ வள்ளியம்மையிடம் போய்விட்டான்.

காலமங்கை இருட்போர்வையினால் உலகை மூடினாள். வண்டிச் சத்தத்தைக் கேட்டுத் தெருநாய்கள் தங்கள் பார்ஷயில் ஏசியும் பேசியும் திட்டின. இவைகளை மாத்திரமல்ல. விசுவலிங்கத்தின் வண்டி தனக்குபின்னே வருகிறதென்பதைக் கூட அவன் அறியாத நிலையில் வள்ளியம்மையோடிருந்தான்.

“முளைத்து மூன்றிலை விடாத பூடுகள் திட்டிப்புலச் சவாரியில் என்னை வெல்லவோ” என்ற விசுவலிங்கத்தின் ஆங்கார ஒலி அவனை வள்ளியம்மையிடமிருந்து பிரித்தது.

“பார் பார், தம்பியவைக்கு நல்ல பாடம் படிப்பிச்சுக் காட்டிறன். முல்லைப்பற்றாருக்கு மாந்தோப்பு விசுவலிங்கத்தைப் பற்றித் தெரியாது போலை” – இப்படித் தொடர்ந்தது விசுவலிங்கத்தின் குரல்.

“ஓமண்ணை, அதுதானே கேட்கிறேன். எங்கேயோ இருந்து வந்து எங்களுக்கு நடப்புக்காட்டவோ? உவங்களை விடக்கூடாதண்ணை. விடக்கூடாது” – ஓத்தூதப் பிற்பாட்டும் பாடியது ஒரு குரல்.

மாரிமுத்து திரும்பிப் பார்த்தான். அவன் முகத்தில் கோபம் கொப்பளித்தது; உதடுகள் துடிதுடித்தன. “தம்பி, சும்மாயிரு. வண்டியை வீட்டுக்கு விடு. என்னாணை ஒன்றும் பேசாதே” – சின்னத்தம்பி பேசியபோது தெறித்து வந்த பயத்தைப் பார்க்க மாரிமுத்துவுக்குச் சிரிப்புத்தான் வந்தது. மாரிமுத்து நிமிர்ந்திருந்து ‘ஏய்..ஏய்’ போட்டான். நாலுகாற் பாய்ச்சலில் ஓடிய மாடுகள் சின்னத்தம்பி வீட்டுப் படலையில் நின்றன. வண்டித்தட்டி திறந்து ஆயத்தமாயிருந்தது. வள்ளியம்மையின் மனக்கதவுந் திறந்து தன்னை வரவேற்பதற்கு ஆயத்தமாயிருப்பது போல மாரிமுத்துவுக்குத் தோன்றியது.

“தம்பி மாட்டை அவிழ், கொஞ்சம் ஆறிப் போகலாம்” என்றார் சின்னத்தம்பி. அவர் மகளைக் கூப்பிட்டு “வள்ளி வென்று போட்டோம்” என்றார்.

“இல்லை…நாங்கள்..” மாரிமுத்து வெக்கப்பட்டான்.

“என்னடா அம்மான் கேட்கிறார். கொஞ்சம் ஆறித்தான் போனாலென்ன?” என்று சிவகுரு மாரிமுத்துவுக்குப் பேருதவி புரிந்தான். சின்னதம்பி மயிலையை| அவிழ்த்து வள்ளியம்மையிடங் கொடுத்தார்.

மாரிமுத்து `கடலை’ அவிழ்த்துக் கொண்டே வள்ளியம்யைப் பார்த்தான். அவள் மயிலையின் கன்னத்தைத் தனது பட்டுக் கன்னத்துடன் அணைத்துக் கொண்டு மாரிமுத்துவைப் பார்த்து, கண்ணாள் மயக்கினாள்! மாரிமுத்துவுக்கு இன்ப வேதனையில் தேகம் புல்லரித்தது. அவள் செய்ததைப்போலத் தானும் செய்யாமலிருக்க அவனால் முடியவில்லை. தன் `கடலை’யின் கன்னத்தைத்

தன் கன்னத்துடன் அணைத்தவாறு அவளைப் பார்த்தான். அப்பொழுது அவள் கண்களிற் கிடந்த எழுதாக் காவியம் அநந்தம்! அநந்தம்! வள்ளியம்மை `மயிலை’யின் ஏரியை அன்புடன் மிருதுவாகத் தடவிக்கொண்டே சென்றாள். மாரிமுத்துவுக்கு மலர்க்கரமொன்று தன் தோள்களிற் பட்டும் படாமலும் ஊர்ந்து செல்வதுபோலத் தோன்றியது. கண்மூடி அந்த அனுபவத்தை உள்வாங்கிச் சுவைத்தான்.

வள்ளியம்மை தயாரித்து வந்த கோப்பியயை அவள் கையால் வாங்கிக் குடித்தபோது கோப்பியின் சுவை இல்லையாகி மறைந்துவிட, அதில் ஏதோ ஒரு புதுச்சுவை தெரிந்தது. அன்புக்குச் சுவையுண்டானால் அதுதான் இதுவா! கோப்பி குடித்து முடிந்தவுடன் `அடிசக்கை’ சிவகுரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு திட்டிப்புலச்சவாரியைப் பற்றி வர்ணிக்கத் தொடங்கினான். மாரிமுத்துவோ வள்ளியம்மையின் உதட்டில் நெளிந்த உணர்ச்சிக் குவியல்களை எண்ணிக் கொண்டிருந்தான்.

மாரிமுத்து வண்டியைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குப் புறப்படும் போது இருண்டு விட்டது. அரிக்கன் லாம்புடன் வள்ளியம்மையும் சின்னத்தம்பியும் வந்து வழியனுப்பி வைத்தனர். வண்டி படலையைக் கடக்கும்போது, “அவயளைக் கொஞ்சம் கவனமாகப் பார்த்துப் போகச் சொல்லுங்கோ, அப்பு” என்றாள் வள்ளியம்மை. மாரிமுத்து அவளைப் பார்த்து கண் சிமிட்டினான். சின்னத்தம்பி மகளைப் பார்த்து பூரித்தார். அப்போதுதான் சின்னத்தம்பிக்கு இரு இளம் உள்ளங்கள் பேசாமற் பேசி ஒட்டி உறவாடிய மர்மம் விளங்கியது.

நாலு நாட்களின் பிறகு ஒருநாள், தோட்டத்துக்குப் போய் விட்டு வீடுதிரும்பிய மாரிமுத்து, தன் பெற்றோரும் சிவகுருவும் ஏதோ ஒன்றைப்பற்றி வெகு ரசிப்போடு பேசிக்கொண்டு இருப்பதைக் கேட்டு முற்றத்து வேலி மறைவில் நின்று விட்டான்.

“அடிசக்கை, கேள் ஆச்சி அப்படி. முந்தாநாள் விசுவலிங்கத்தின்ரை கையாள், சின்னதம்பி யண்ணையின்ரை மோளுக்கும் விசுவலிங்கத்துக்கும் சம்மந்தம் பேசிவந்தார். முடியாதென்றால் அந்த ஊரிலை வாழ ஏலாது. முடியுமென்றால் கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த மாதிரி…” என்றான் சிவகுரு.

“ஏன் கசக்குதோ, விசுவலிங்கத்துக்குக் கொடுக்க, சாதிமான், நல்ல முதிசகாரன்” மாரிமுத்துவின் தந்தை எகத்தாளமாககட கேட்டார்.

“போ அண்ணை, குலமும், பணமும் ஆருக்குவேணும்? கொஞ்சமாவது மனிச

ஒழுக்கம் வேண்டாமோ? பெரிய மனிசனாட்டம் வேஷம் போட்டாற் காணுமோ. அஞ்சு நாளைக்கு முந்தி `சுப்பர்வளவு’ மூத்ததம்பி வீட்டோடு நடப்புக் காட்டி இருக்கிறார். மூத்ததம்பியின்ரை மூத்தவன் இவனைப்போல ஒரு போக்கிரிதானே? `விசுவலிங்கத்துக்கு முடிவு கட்டுகிறேன்’ என்று திரிகிறானாம். ஒருநாளைக்கு நிச்சயமாய் அவன் கையாலை இந்த விசுவலிங்கம் சாவான். அதுகிடக்கட்டும், சின்னத்தம்பியம்மான் பொடிச்சியை வீட்டிலை வைச்சிருக்கப் பயப்படுகிறார். அந்தப் படுபாவி என்ன செய்வானோ? அது தான் உங்களோடை கதைக்கச் சொன்னார்.”

“எதைப்பற்றி..”

“ஓமடா தம்பி எங்கடை செல்லாச்சி அக்கையும் சொன்னா, பொடிச்சி நல்ல சிவப்பியாம். கொஞ்சம் வாய்க்காறி என்றாலும் காரியக்கட்டியாம்” என்றாள் மாரிமுத்துவின் தாய்.

“என்னடி சொல்லுகிறாய்”…தந்தையின் குரல் அதட்டியது.

“சுரக்காய்க்கு உப்பில்லை எண்டுதான். இந்த மனுசனுக்கு ஒன்றும் விளங்காது. வள்ளியை எடுப்பமெண்டுதான்…”

“ஓ அப்படியா, மாரிமுத்துவுக்கு மனமோ?”

“அடிசக்கை இனியென்ன நாள் பார்க்க வேண்டியது தான்.”

சிவகுரு இவ்வளவு தூரம் முன்னேறி, சிரத்தையுடன் காரியம் பார்ப்பான் என்று மாரிமுத்து சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அப்பொழுதுதான் அங்கே வந்தவன் போல மாரிமுத்து வாசலில் ஏறினான். சிவகுரு அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “சரி நான் வரட்டுமா, மாப்பிள்ளை” என்று கூறிக்கொண்டு நடந்தான்.

அடுத்த பூரணை இரவு; இரண்டு வீடுகளிலும் பன்னீரும் சந்தனமும் மணத்த. குத்துவிளக்கும் பூரணக்கும்பமும் பொலிந்து விளங்கின. தவிலும் நாதஸ்வரமும் இணைந்து இசையெழுப்பின. பொட்டும் பொருத்தமுமாக கலியாணம் நடைபெற்றது. அக்கினி சாட்சியாகவும் சபையோர் சாட்சியாகவும் அம்மி மிதித்து, அருந்ததி கண்டு, மாரிமுத்துவும் வள்ளியம்மையும் மணமக்களாயினர்.

மறுநாட்காலையில் இருட்டோடு எழுந்து மாட்டுப் பட்டிக்குச் சென்ற மாரிமுத்து திடுக்கிட்டு நின்றான். உலகமே சுழலுவது போலவும் பின்னர் அது பிளந்து தன்னை விழுங்குவது போலவும் உணர்ந்தான். தான் காண்பது கனவா, நனவா, என அறியாது தடுமாறினான். கண்கள் ‘பொல பொல’ எனக் கண்ணீர் சொரிந்தன. நாத் தடுமாற ‘ஐயோ…யோ…போய் விட்டாயா…இராசா’ என்று கதறிக் கொண்டு ஓடினான். அங்கே அவன் உயிருக்குயிராய் நேசித்த `கடல்’, சவாரிப் போட்டியில் வெற்றி மாலை சூடிய காளை, பிணமாய்க் கிடந்தது. உறைந்த கள்ளிப் பாலைக் கொண்டுள்ள சட்டியொன்றும் வேறு நஞ்சுக் கொடிகளும், இலைகளும் பக்கத்திற் கிடந்தன. இது யார் செய்த வேலை? ஆம், வஞ்சந் தீர்ப்பதற்கு அவன்தான் செய்திருக்க வேண்டும். அந்த விசுவலிங்கம்தான் செய்திருக்க வேண்டும். இந்த வாயில்லாப்பிராணியில் வஞ்சம் தீர்த்துவிட்டானே பாவி…கலியாணச் சந்தடியில்… என்று எண்ணம் பரந்தது. அதற்கிடையில் மக்கள் கூடிவிட்டனர். முல்லைப்பற்றிலிந்து கலியாணத்திற்கு வந்தவர்களுக்கு இது பெரிய அதிசயமாகப்படவில்லை. விசுவலிங்கம் இதுவுஞ் செய்வான்: இதிற்கொடியதுஞ் செய்வான் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் வாய்விட்டுப்பேசப் பயம். மாரிமுத்துவுக்குத் தன் `கடலை’க் கொன்றவன் கடவுளாயிருந்தாலும் அவனை வஞ்சம் தீர்க்க வேண்டும் போல் தோன்றியது. கையில் அலவாங்குடன் உருத்திரமூர்த்தியைப் போல் நடந்தான். அவனைத் தடுத்து நிறுத்தி ஆறுதல் கூறுவதற்கு அவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல.

வருடங்கள் இரண்டு உருண்டு சென்றன.

மாரிமுத்து தந்தையானான்; வள்ளியம்மை தாயானாள். அவள் கையிலே பிள்ளைக் கனியமுதொன்று கிடந்து மாம்பழக் கன்னம் குழியச் சிரித்தது. மாரிமுத்துவுக்கு உலகத்து இன்பங்களனைத்தும் உருண்டு திரண்டு தன் மகனுருவிற் கிடப்பதுபோலத் தோன்றியது. நினைக்க நினைக்க நெஞ்சு இனித்தது. குழந்தையின் ஒவ்வொரு அங்க அசைவிலும், குறுநடையிலும்; குதலை மொழியிலும், ஆடிவரும் அழகிலும் மாரிமுத்து கவலைகளை மறந்தான்.

தன் மகனுக்கு வேடிக்கைகாட்டும் சாக்கில, மாரிமுத்து தன் மனைவியையும் கூட்டிக்கொண்டு மாந்தோப்பு வைரவர் கோவில் திருவிழாவுக்குச் சென்றான். அன்று அந்த வைரவர் கோவில் விசேட திருவிழா. ‘வைரவர் இருக்கிறாரா?’ என்று சந்தேக தோரணையில் கேட்குமளவிற்கு ஆரவாரம் பெருத்த திருவிழா. பேர்போன சிகரங்களும், முத்துச்சப்பரங்களும் முன்வீதியில் அணியணியாக நிமிர்ந்து நின்றன. சோடினை வேலைப்பாடுகளுக்கு அளவில்லை. ஒளிவெள்ளத்தில் வீதி இந்திர பவனம்போல் காட்சிதந்தது. உள்ளே

மூலுஸ்தானத்தில் ஒரு சுடர் விளக்கு எண்ணெயில்லாமல் துடித்து, இருளின் நெரிப்பினால் செத்துக் கொண்டிருந்தது.

பெரிய மேளச்சமா முடிந்துவிட்டது. சின்னமேளச்சாவின் ஆரம்பமாக சனக்கூட்டத்தினிடையே சலசலப்புப் பிறந்தது; சனம் கெம்பியது. இப்படிப்பட்ட தருணங்களிலே ஆளடக்க அந்த வட்டாரத்தில் விசுவலிங்கத்தைத் தவிர வேறு ஆளில்லை. அவர் மதயானைபோலச் சுற்றிக் சுழன்று ஆளடக்குவதே ஒரு தனி அழகு. அவர் கையிலே முறுக்கிக் கயிறாகத்திரித்த சால்வை கிடந்தது. அதனால், அடித்தும் தட்டியும் வாயால் உரப்பியும் ஏசியும் ஆளடக்கிக் கொண்டிருக்கின்றார். வயிற்றைத் தடவிக் கொண்டு அசைந்தாடிய இரட்டைப் பட்டுத் தங்கச் சங்கிலி அவரது வேலைக்கு இடைஞ்சல் கொடுத்தபோதிலும் செல்லமாக அதை எடுத்துத் தோளில் எறிந்துகொண்டு நடந்தார்.

அவர் கண்கள் தூரத்திலே ஒதுங்குகின்ற மாரிமுத்துவைக் கண்டுவிட்டன. தனது பிரதாபத்தை மாரிமுத்துவிற்கு காட்டுவதற்கு அதுதான் தக்க இடமென எண்ணினார். ஆளடக்குவதுபோல நுழைந்து நுழைந்து சென்ற மாரிமுத்துவுக்கு இரண்டடி கொடுத்தார். “இரடா, ஒருக்கா சொன்னால் தெரியவில்லையோ? இதென்ன திட்டிப்புலமென்ற நினைப்போ?” என்று உறுமினார். சபை சிரித்தது. மாரிமுத்துவுக்கு ரோஷம் பொங்கிக்கொண்டு வந்தது. இறந்துகிடந்த `கடல்’ நினைவுத் திரையில் தோன்றியது. அதன் பக்கத்திற் கிடந்த கள்ளிப்பால் சட்டியும் தெரிந்தது. அவனை அறியாமலே அவனது கைகள் சால்வையை எடுத்து அரையிற் கட்டிக் கொண்டன. “ஓய், உம்மைப்பற்றி நல்லாய் விளங்கும். மனிதரில் வைத்த கோபத்தை மாடாட்டில் தீர்க்கிற வீரனென்று தெரியும். வாலை முறுக்கினால் ஒட்ட நறுக்கி விடுவேன்” என்று கூறிக்கொண்டு வீறாப்புடன் நின்றான். அப்போது சமயசஞ்சீவியாகப் பக்கத்தில் நின்ற சிவகுரு அவனைப் பிடித்துக்கொண்டான். சிலர் விசுவலிங்கத்தைப் பிடித்துக் கொண்டனர். “சும்மா விடண்ணை அவன் கிடக்கிறான்” என்று ஆறுதல் கூறினர். திருவிழா முடிந்த போது சிவகுரு மாரிமுத்துவை அவனுடைய வீட்டுக்குப் போக வேண்டாமெனத் தடுத்தான். தூரத்தில் குறிவைத்துத் திரியும் விசுவலிங்கத்தின் கையாட்களை காட்டினான். கோவிலின் உள்வீதியின் வடமேற்கு மூலையில் அவர்கள் பேசிய விதத்தைச் சொல்லித் தடுத்தான். ஒருவழியாக மாரிமுத்துவையும் மனைவியையும் கோவிலுக்குப் பக்கத்திலிருந்த ‘சுப்பர்வளவு’ மூத்ததம்பி வீட்டுக்குக் கூட்டிச்சென்று படுக்கவைத்தான்.

பொழுது விடிந்தது. திருவிழாப் பார்த்துவிட்டுத் திரும்பிய விசுவலிங்கம் கொலைசெய்யப்பட்டார் என்ற செய்தி ஊரை ஒரு கலக்குக் கலக்கியது.

அதைத்தொடர்ந்து மாரிமுத்து கைது செய்யப்பட்டான். மூத்ததம்பியின் மூத்தமகன் மாரிமுத்து விசுவலிங்கத்தைக் கொலைசெய்ததைக் கண்ணாற் கண்டதாகக் கூறினான்.

விசுவலிங்கம் கொலை வழக்கு ஒருவருடத்துக்கு மேலாக நடைபெற்றது. அந்த வழக்கில், உண்மையால் பொய்யை வெல்ல முடியவில்லை. பொய்ச் சாட்சிகளின் சோடனையால் மாரிமுத்துவுக்கு இருபத்தைந்து வருடச்சிறைத் தண்டனை கிடைத்தது.

பால்வடியும் தனது அருமை மகனின் நிலவு முகமும், வள்ளியம்மை என்னும் சோக சித்திரமும் துடிதுடித்துச் சோரும் தாய் தந்தையரின் நினைவும் தன்னைப் பின்தொடர்ந்துவரச் சென்ற மாரிமுத்துவைச் சிறைக் கதவுகள் வரவேற்றன.

தொடரும்…. மத்தாப்பு 4

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.