`மத்தாப்பு’!….. 2 …… ( குறுநாவல் )…. ஈழத்து எழுத்தாளர் ஐவரின் படைப்பு.
மத்தாப்பு!…. ( ஈழத்து எழுத்தாளர் ஐவரின் படைப்பு )
1. வர்ணம் —– பச்சை —– இ.நாகராஐன்.
2. வர்ணம் —– சிவப்பு —– கனக. செந்திநாதன்.
3. வர்ணம் —– நீலம் —— சு.வேலுப்பிள்ளை.
4 .வர்ணம் —— மஞ்சள் —– குறமகள்.
5. வர்ணம் —— கத்தரி —— எஸ்.பொ. —–
மத்தாப்பு!…..
அறுபது ( 60 ) வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல்
வர்ணம் (2) – சிவப்பு ….. கனக.செந்திநாதன்
இரசிகமணி, இலக்கிய செல்வர் போன்ற பட்டங்களைக் கொண்டவர். `நடமாடும் நூல்நிலையம்’ என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். 1939 முதல் உபகுப்தன், பரிதி, செவ்வேல், பரதன் என்ற புனைபெயர்களில் எழுதியவர். கரவைக்கவி கந்தப்பனார் என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை ஈழகேசரியில் அறிமுகம் செய்தவர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் மாணாக்கராகிய இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தார். குரும்பசிட்டி சன்மார்க்கசபையில் பல பதவிகளை வகித்து சேவையாற்றினார். யாழ்.இலக்கிய வட்டத்தை உருவாக்கி வளர்ப்பதில் பெரும் பங்காற்றினார்.
சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், கட்டுரை முதலான பல்துறைகளில் எழுதியவர். வெண்சங்கு (சிறுகதைகள்), ஈழத்து இலக்கிய வளர்ச்சி (ஆய்வு), வெறும் பானை (நாவல்), விதியின் கை (நாவல்), ஒருபிடி சோறு (நாடகம்), ஈழம் தந்த கேசரி, கவின்கலைக்கு ஓர் கலாகேசரி, கலை மடந்தையின் தவப் புதல்வன், நாவலர் அறிவுரை, கடுக்கனும் மோதிரமும், திறவாத படலை என்பவை இவரது படைப்புக்களில் சில……
`மத்தாப்பு!…. வர்ணம் (2) – சிவப்பு
கனக. செந்திநாதன்
ஊர்வலம் முன்னேறியது….
அடுத்த மத்தாப்பு வெடித்தது. எல்ல நிறங்களும் ஒன்றன் பின் ஒன்றாய் மேலெழுந்தன. முடிவில் சிவப்பு,
ஒரு கணம், ஆலமரம், பூமி, ஆகாயமெல்லாம் இரத்த நிறச் சிவப்பாக மாறிவிட்டன. ஆலமுண்ட ஐயன் மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணைத் திறந்து விட்டானோ என்னவே? என்று கவிகள் வர்ணிக்கலாம். அல்லது பூரண சந்திரனாகிய குழந்தை மேகக் கல்லுடன் மோதி அதன் பெருவிரலில் இருந்து விழும் இரத்தத்துளி அது என்று கற்பனைப் புலவர்கள் கதை அளக்கலாம். ஆனால் மாரிமுத்துவுக்கு அந்தச் சிவப்பு மத்தாப்பு தன் கண்களின் கோபச் சிவப்பையே ஞாபகப்படுத்தியது.
“உதுகளும் ஒரு மாடுகளா!’ என்று தன்னுடைய ‘கடலையும் – திரையையும்’ பார்த்துக் கேட்டுச் சிரித்தாளே அந்தச் சிறுக்கி என்பதை நினைக்க, வந்த கோபத்தில் தன் கண்கள் எப்படிச் சிவந்தன என்பதை இன்று அவன் நினைவுத் திரையில் கொண்டு வந்தான்.
பாஞ்சாலியின் சிரிப்பு பாரத யுத்தத்தையே ஆக்கிவிட்டதை அவன் நாட்டுக் கூத்தில் கண்டிருக்கிறான். ஆனால் இந்த வள்ளியம்மையின் – ஆமாம் அதுதான் அவள் பெயர் – சிரிப்பு தன்னை எப்படி ஆக்கிவிட்டது என்பதை இன்று நினைக்கும் போது அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிரித்தான்.
பல வருடங்களுக்குப் பிறகு சிரிக்கும் சுதந்தரமான சிரிப்பு அது. சிரித்தான். பலம் கொண்ட மட்டும் சிரிக்க ஆசைதான். ஆனால் தன்னை யாரும் அடக்கமாகவே சிரித்தான்.
மனிதன் வாலிப உணர்ச்சிகளின் போறாய் ஆராயாது செய்யும் செயல்களைப் பின்னால் எண்ணிப் பார்க்கும்போது, ‘எப்படி முட்டாள் தனமாக நடந்து கொண்டோம்’ எண்றெண்ணித் துக்கப்படுகின்றான்: சிரிக்கிறான். மாரிமுத்துவும் மனிதன் தானே? அதிலும் அதிகப் படிப்பில்லாத – வெள்ளையுள்ளம் படைத்த- அசல் கிராமத்தான் அல்லவா?
அவள் சிரிப்பினால் ஏற்பட்ட கோபவெறியில் இரண்டு மாடுகளுக்கும் மாறிமாறித் துவரங் ‘கேட்டி’யினால் வெளுத்தான். ரோசங் கொண்ட மாடுகள் நாய்ப்பாய்ச்சலில் பாய்ந்தும் அவன் அடிப்பதை நிறுத்தவில்லை. அணிலின் முதுகிலுள்ள வரிகளைப் போலக் ‘கடலுக்கும் – திரைக்கும்’ எத்தனையோ வரிகள் நீளமாகக் கன்றிச் சிவந்து போயிருந்தன.
“வாயில்லாச் சீவன்களைப் போட்டு ஏன் தம்பி அடிக்கிறாய்?” என்ற ஒரு முதியவரின் கேள்விதான் அவனை இந்த உலகுக்குக் கொண்டு வந்தது. மாரிமுத்துவின் முன்கோபம் முல்லைப்பற்றுக் கிராமத்திலேயே
பிரசித்தமானது. திடீரென்று பொங்கி எழும் புயல்வேகம், அடுத்தகணம் அடங்கவிடக் கூடியதுதான். ஆனால் அந்த ஒரு கணத்தில்……
“அடியாமல் என்ன செய்கிறது” என்ற பதிலோடு நாணயக் கயிறுகளை அவன் சுண்டி இழுத்தான். மாடுகளுக்குகூட அவன் செயல் புரியவில்லை. அவைகள் நுகத்தடி மேலெழும்ப அந்தரத்தில் முன்னங்கால்களை உயரத் தூக்கி உடனே நின்றன.
“நானும் அந்தச் சந்திவரைக்கும் வாறேன்” என்றார் பெரியவர். ‘சரி! ஏறுங்கோவன்’ என்றான் மாரிமுத்து.
வண்டி புறப்பட்டது. ‘மாடுகள்’ அன்ன நடைபோட்டன.
“மாடுகளின்மேலை இவ்வளவு கோபமேன் தம்பி.”
“அதையேன் கேட்கிறியள் ரோட்டிலை ஐம்பது ஆடுகள் கூட்டமாக நிக்க இந்த மாடுகள் வெருளுகுதே, நாளைக்கு இதுகள் என்னண்டு சவாரியோடப் போகுது? நூற்றி இருபைத்தைந்து பவுண் கொட்டி அளந்தேன். வெருண்டாலும் காரியமில்லை. பெரியவரே! ஒரு பெட்டைச் சிறுக்கி ‘உதுகளும் ஒரு மாடுகளா? என்று சிரிச்சுப்போட்டாளே, அதை நினைக்க…”
“அதுக்காக மாடுகளை அடிக்கலாமோ தம்பி. அதிலை ஆடு மேய்ச்ச பொட்டையா சிரிச்சது? அவள் இந்த மாஞ்சோலை கிராமத்தின் அல்லிராணியாச்சே ஆரும் வாய் கொடுத்துத் தப்பமுடியாது தம்பி. உனக்குச் சவாரி சின்னத்தம்பியைத் தெரியுமே? அவன்ரை மகள் தம்பி இவள். அவனோ சவாரி சவாரி என்று திரிந்ததாலை குடும்பமே நாசமாய்ப் போச்சு. காணி பூமி எல்லாம் வித்து மாடுகள் வாங்கினதுதான் மிச்சம். அந்த வள்ளிப்பெட்டைக்கும் வயசாப்போச்சு, கலியாணந்தான் பொருந்துதில்லை. சீதனமும் இல்லை. எல்லாத்தையும் தான் அவன் அழிச்சுப்போட்டானே. பரம்பரையாய் வந்த ஆடுகள் தான் மிச்சம்.கொஞ்சம் வாய்தான் என்றாலும் வெள்ளை உள்ளம் தம்பி அந்த பெண்ணுக்கு. ஆடுகள் என்றால் உயிர் அதுக்கு. அல்லது வீட்டை விட்டு வெளிக்கிடுமா உதுகளை மேய்க்க?” என்று கிழவனார் சொல்லிவிட்டு, “ஒரு கிள்ளுப் பொயிலை தா தம்பி” என்றார். மாரிமுத்துவின் உள்ளம் நிம்மதி அடைந்து விட்டது. வேண்டிய தகவலைச் சேர்த்துவிட்டானே. ஒரு கிள்ளுப்போயிலை கேட்ட பெரியவருக்குப் பாதிப் புகையிலையையே கிழித்துக் கொடுத்துவிட்டான்.
முச்சந்தி வந்துவிட்டது. கிழவனார் விடை பெற்றுக் கொண்டார். வண்டி மூலையில் திரும்பி முல்லைப்பற்றுக் கிராமத்தை நோக்கியது.
அவன் மனதிலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறிய விஷயத்திற்கு இப்படிக் கோபம் வந்துவிட்டதே என்பதை நினைத்து அவன் சிரித்துவிட்டான். மாடு, வண்டி, சலங்கைஒலி, கடபுடாச் சத்தம் ஒன்றும் அவனுக்கு இப்போது கேட்கவில்லை. கேட்பது ஒன்றே ஒன்றுதான் ‘உதுகளும்ஒரு மாடுகளோ’ என்பது தான் அது. நினைவில் மிதப்பதும் அவளின் சிரிப்பொலிதான்.
நாட்டுக் கூத்தில் வரும் ‘திரிலோகமும் புகழும்’ இராசா, பூஞ்சோலையில் உலாவும் அடுத்த நாடடு இராச குமாரியைப் பார்த்து ‘காதலாகினேன் நானே, செந்தேனே என் மானே’ என்று பாடும்போதெல்லாம் அது என்ன பண்டம் என்று அவனுக்கு விளங்குவதில்லை. ஒருவேளை இதுதான் அந்தக் காதலோ?…..
மனநினைவு பின்னே தங்கிவிட வண்டி முன்னேறியது.
முல்லைப்பற்றுக் கிராமத்தின் பிள்ளையார் கோவிலின் ‘காண்டாமணி’ ‘டாண் டாண்’ என அடித்தது. ‘அப்பனே! பிள்ளையாரே!’ என்று தலையில் மூன்று முறை குட்டிக் கொண்டான் மாரிமுத்து. வயல் வெளியை அடுத்த மாந்தோப்பு வளவின்முன் வண்டி நின்றது.
முற்றத்துச் சாக்குக்கட்டிலில் காலைத் தொங்க விட்டபடி புகையிலையைச் சுருட்டிக் கொண்டு ஒரு முதியவர் இருந்தார்.
சலங்கை சத்தங்கேட்டதும் அவர் பார்வை வெளிக்கடவையை நோக்கியது. அங்கே மாரிமுத்து மாடுகளுடன் வந்து கொண்டிருந்தான்.
“என்னடா மாரி, மாடுகள் நல்லாக் களைச்சிருக்கு. யாரோடையும் சவாரி விட்டியா?” கிழவனின் பொக்குவாயில் புன்னகை. மகனுடைய சவாரிப் பைத்தியத்தை அவர் நன்றாக அறிந்திருந்தவர்தானே.
“இல்லை அப்பு, கொஞ்சம் பெலமாய் விட்டுக் கொண்டு வந்தனான்: அதுதான் களைத்திருக்கு” என்று சொல்லிக்கொண்டே மாடுகளைத் தொட்டிலிற் கட்டி விட்டு நாக்கு நுரையை வழித்தெடுத்து ஏரியிற்பூசி ‘நாலு தட்டு’த் தட்டினான். வைக்கலை மடித்து முறுக்கி கழுத்தையும் உடம்பையும், கால்களையும் உரோஞ்சினான். அப்போதுதான், தான் வைத்திருந்த துவரங் ‘கேட்டி’ மாடுகளின் முதுகில் விளையாடியிருக்கும் விளையாட்டை அவன் நிதர்சனமாக கண்டான். ‘இரண்டு சொட்டுக் கண்ணீர்’ அவன் கண்வழியே உருண்டோடியது.
வைக்கோலை உதறித் தொட்டிலுக்குள் போட்டு அளவை அசைபோட ஆரம்பித்தபோதுதான் அவன் மனம் குளிர்ந்தது. அந்த நேரத்தில்தான் “மாரிவாவேன் சாப்பிட!” என்ற தாயின் குரல் கேட்டது.
எப்போது சாப்பிட்டாலும், ‘நீ சாப்பிட்டாயா? அப்புவுக்கு மருந்து கொடுத்தியா? பசுமாட்டுக்குத் தவிடு வைத்தியா? என்றெல்லாம் கேட்கும் மகன் இன்று ஒன்றும் பேசாமல் பாதி சாப்பிட்டுமுடிந்ததும் ‘போதும்’ என்று சொல்லிவிட்டு எழுந்ததைக் கண்டதும் கிழவிக்கு ஏதோ போல இருந்தது. “என்னடா மாரி வழியிலை ஆரோடையும் சண்டையா?” என்று அவள் கேட்டுவிட்டாள். “இல்லை. எனக்கு பசியில்லை” என்று முணுமுணுத்தபடி முற்றத்துக் கயிற்றுக் கட்டிலின் மேல் போய்ச் சரிந்தான்.
மாடு, கன்று, தோட்டம், வீடு ஆகியவற்றைப் பற்றியே இதுவரை யோசித்த அவன் மனத்திரையில் இன்று ‘அவள்’ அடிக்கடி வந்து சிரிப்புக் காட்டினாள். மேலே அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தபடி அவன் படுத்திருந்தான். சந்திரன் ரோகிணித் தையலுடன் கூடிச் சரசமாடுவதுபோல அவனுக்குப் பட்டது. ஒரு
சோடி ‘மாம்பழ’ வெளவால்கள் ஆகாயத்தில் இணை பிரியாது நீந்திச் செல்வது அவன் கண்ணுக்குத் தெரிந்தது. பக்கத்து முருங்கையில் சேவலும் பேடும் அருகருகாக உறங்குவதைக் கண்டு அவன் மனம் மகிழ்ந்தது.
எப்படி கண்களை மூடி அப்படி இப்படிப் புரண்டுபடுத்துப் பார்த்தாலும் நித்திரை வருவதாயில்லை. வள்ளியம்மையின் சிரிப்பு அவனை வதைத்தது.
சாமக்கோழி கூவிச் சற்று நேரஞ்சென்ற பின்தான் அவன் கண்ணயர்ந்தான். அந்த நித்திரையிலும் அவன் கண்ட கனாக்கள்.
விடிந்தது. அவசரம் அவசரமாக தோட்டவேலைகளை முடித்துக்கொண்டு அவன் புறப்படத் தயாரானான். வண்டியைப் பூட்டி ஆசனத் தட்டில் அமர்ந்து அவன் புறப்பட ஆயத்தமாகும் போது யாரோ கைத்தட்டி,’மாரிமுத்து’ என்று கூப்பிடும் சத்தம் கேட்டது. ‘இதேதடா சனியன்’ என்று அவன் வாய் அவனை அறியாமலே சொல்லியது. திரும்பிப் பார்த்தான். அவனுடைய அருமை நண்பன் சிவகுரு ஓடிவந்து கொண்டிருந்தான்.
அவன் ஏதோ சொல்ல வாயெடுக்கமுன் “ஏறு வண்டியில்… ஒரு அவசர காரியம்.. மாஞ்சோலை வரைக்கும் போயிட்டு வருவம்” என்றான் மாரிமுத்து. “அடிசக்கை! நானும் அங்கை தான் போகவந்தேன்” என்று துள்ளி ஏறிக்கொண்டான் சிவகுரு.
தனக்கு நேற்று நேர்ந்த அவமானத்தை – அவளின் சிரிப்பை – பெரியவர் அவளைப் பற்றிச் சொல்லியதை மாரிமுத்து சொல்லச் சிவகுரு’அடிசக்கை’ சிவகுருவின் நாவோடு உடன் பிறந்த ‘வாய்வாதம்’.
எல்லாவற்றையுங் கேட்டு முடித்ததும் இந்த ‘அடிசக்கை’ சிவகுரு அருமையான யோசனையொன்றை வெளியிட்டான். சவாரிமாடு பார்க்கப் போகிற சாட்டிலே சின்னத்தம்பி வீட்டுக்குப் போய் முடியுமானால் வள்ளியம்மையும் பார்த்து சோடி சரிவருமானால் பெரியவர்களைக் கொண்டு தானே இந்தக் காரியத்தை முடித்துவைக்கிறேன் என்பது தான் அது.
அவன் யோசனையின்படியே சின்னத்தம்பியின் வீட்டுப் படலையின் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் உள்நுழைந்தார்கள்.
“சின்னத்தம்பி அம்மான் நிற்கிறாரோ?” என்ற சிவகுருவின் கேள்விக்கு ‘ஓம் நிற்கிறார். ஆரது தேடுகிறது? அப்பு உன்னை இங்கை யாரோ தேடுகினம்” என்று சொல்லிக்கொண்டே வள்ளியம்மை எட்டிப்பார்த்தாள்.
ஒரு கணம் அவள் மனம் ‘திக்’ என்றது. ‘இந்த ஆள் ஏன் இங்கை வந்தார்; நேற்று நான்…என்ன செய்து விட்டேன்..? சரி, பார்ப்போமே’ என்று அவள் மனம் வினாவும் விடையுமாக அங்கலாய்த்தது.
“யார் பிள்ளை வந்து நிற்கிறது?” என்ற கேள்வியோடு வந்த சின்னத்தம்பி மாரிமுத்துவை கண்டதும், “ஓ! நீயே? என்ன சங்கதி? மாடு கீடு பார்க்க வந்தியளோ? பிள்ளை அந்த பலகைத் தடிகளை எடுத்து வந்து போடு, தம்பியள் இருக்க” என்று உபசரித்தார். பலகை தடிகளோடு அவள் வந்தாள். மாரிமுத்து
நிமிர்ந்தே பார்க்கவில்லை, அவளும் பார்க்கவில்லை. எங்கயோ இருந்த வெட்கம் அந்தநேரம் பார்த்து ஓடிவந்து ஒட்டிக்கொண்டது. சிவகுருவின் கண்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தன. ‘அடிசக்கை! ஜோடி பிழையில்லை’ அவன் மாரியின் காதில் ‘குசு குசு’த்தான்.
சின்னத்தம்பியே சம்பாஷணையைத் தொடங்கினார். அந்த ஊரில் நிற்கிற சவாரி மாடுகளின் நிறம், குணம், குறி எல்லாவற்றையும் பற்றி ‘ஒரு பாட்டம்’ பேசி முடித்தார். தன்னிடம் இருக்கிற ‘களுகண் சோடி’யின் வீரப்பிரதாபங்களைப்பற்றி ஒரு ‘பாரதம்’ அளந்து கொட்டினார். மாடுகளின் கதை எங்கெல்லாமோ போய் சென்ற கிழமை நடந்த ‘திட்டிப்புலச்’ சவாரியில் வந்து நின்றது.
சின்னத்தம்பி அம்மான் சொன்ன ஒரு விஷயத்தை மாத்திரம் சிவகுரு ‘அடிசக்கை’ போட்டு வரவேற்றான். மாஞ்சோலைக் கிராமத்தின் முடிசூடா மன்னனான இரு மரபுந்துய்யவந்த விசுவலிங்கத்தின் ‘பூச்சியின் சோடியை’ எப்படியென்றாலும் நாளைக்கு நடக்கப்போகும் சவாரியில் சின்னத்தம்பி அம்மானின் ‘களுகன் சோடி’ வென்று விசுவலிங்கத்தை ‘தலை இறங்கப்’ பண்ணவேண்டும் என்பது தான் அது.
சிவகுரு ‘இந்தச் சந்தர்ப்பத்தை நன்றாக உபயோகித்து மாரிமுத்துவின் சோடியில் ‘கடலை’யும், சின்னத்தம்பி அம்மானின் ‘களுகன்’, சோடியில் ‘மயிலையை’யும் நாளைக்குப் பூட்டவதென்றும் சவாரியில் மாடுவிடுவது மாரிமுத்து என்றும் இந்தச் ‘சோடி’க்கு முன்னால் விசுவலிங்கத்தின் ‘பூச்சியன் சோடி’பட்டது என்றும் உற்சாகமாகப் பேசிமுடித்தான்.
சின்னத்தம்பி அம்மானும் சிவகுருவின் இந்த யோசனை சரிதான் என்று வரவேற்றார். “பிள்ளை! இரண்டு இளநீர் எடுத்து வா; தம்பிமாருக்கு வெட்டிக்கொடுப்போம்” என்ற இதமான வார்த்தையைக் கேட்டதே ஒட்டியிருந்து கதை கேட்ட வள்ளியம்மைக்கும் உச்சி குளிர்ந்தது.
அவள் இரண்டு இளநீரும் கத்தியும் கொண்டுவந்தாள் அதோடு ஒரு ‘வெடிகுண்டை’யும் தூக்கிப் போட்டாள்.
“உவையின்ரை மாட்டை நம்பிச் நம்பிச் சவாரி விடாதை அப்பு. நேற்று எங்கடை தெருவிலை ஆடுகளைக் கண்டே வெருண்டது அந்த மாடுகள். குறுக்கை இழுத்துக்கொண்டு ஓடினாலும் ஓடும்.” மாரிமுத்துவுக்கு ரோசம் பிறந்துவிட்டது. ‘நாளைக்கு விசுவலிங்கத்தின்ரை’ என்றது அவன் வாய், அவனை அறியாமலே.
அவள் மறுமடியும் சிரித்தாள். நேற்றைய சிரிப்பல்ல: இதமான சிரிப்பு… கடைக்கண் பார்வை, சின்னத்தம்பியும் எதையோ நினைத்தவராய் ‘சரி பார்ப்போம்’ என்று சொல்லிவைத்தார். ‘சரி பார்ப்போம்’ என்று இந்த வார்த்தை வெளிப்படையாக ஒரு பொருளுமற்ற சொற்கூட்டந்தான். ஆனால் ‘உள்ளர்த்தம்’ எவ்வளவோ நிறைந்தது.
•
வண்டியில் மாடுகள் பூட்டப்பட்டன. வள்ளியம்மை தான் தங்களது களுகன் சோடியில் ‘மயிலை’யைத் தொட்டிலில் இருந்து அவிழ்த்து வந்து
தகப்பனாரிடங் கொடுத்தாள். தனது மகளின் கைராசியில் சின்னத்தம்பிக்கு ஒரு நம்பிக்கை.
மாரிமுத்து தனது ‘கடல்’ என்ற பேர்பெற்ற மாட்டை ‘வெளிக்கை’க்கும் சின்னத்தம்பியின் ‘மயிலை’யை ‘உள்க்கை’க்கும் பூட்டிவிட்டு ஆசனத்தட்டில் அமர்ந்தான். சின்ன தம்பியும் சிவகுருவும் ‘கடைக்கிட்டி’யில பிடித்துக் கொண்டு நின்றார்கள். மாடுகள் அந்தரத்திற் கிளம்பி எகிறிக்குதித்தன. “அப்பனே! பிள்ளையாரே! என் மானத்தைக் காப்பாற்று” என்று மனதில் நினைத்துக்கொண்டான் மாரிமுத்து.
வள்ளியம்மையும் வேண்டாத தெய்வமெல்லாவற்றையும் வேண்டினாள். கடைக்கிட்டியில் பிடித்தவர்கள் கையைவிட்டார்கள். புழுதிப்படலம் கிளம்பியது…. திட்டிப்புலப் பெருவெளியில் உள்ள அரச மரத்தடியில் சின்னத்தம்பியின் மயிலைக்குச் சோடியாக மாரிமுத்துவின் கடல் பூட்டப்பட்ட வண்டி வந்து நிமிர்ந்ததும் சவாரி பார்க்க வந்து நின்ற ரசிகர்கூட்டம் மொய்த்துக்கொண்டது.
பன்னிரண்டு சோடி மாடுகள் ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டன. சவாரி பொருத்துகிறவர்கள் அங்கங்கே நின்று ‘குசு குசு’த்தார்கள்.
முதலாவது சோடி புறப்பட்டுவிட்டது. சனங்கள் தெருவின் இருமருங்கும் துவரங்கம்புங் கையுமாக ஓடி நின்று உற்சாகமூட்டினார்கள். சீழ்க்கை வலித்து ஆரவாரித்தார்கள். இதோ இரண்டாவது சோடி, வாய்க்கவில்லை. ‘மெத்தப் படான்’ சனங்களின் உற்சாகம் குறைந்துவிட்டது. மூன்றாவது சோடியில் பின் வண்டி மாடுகள் குறுக்கை இழுத்துக் கல்லிலே ஏறி விழுந்து புரண்டுவிட்டன. சனங்களின் கூட்டம் அங்கே. சின்னத்தம்பியின் மாடுகள் ஓடப்போகுது என்று யாரோ குரல்கொடுத்தார்கள். எல்லோரும் மறுபடியும் கூடிவிட்டார்கள்.
புழுதிப்படலம் வானமண்டலத்துச் சூரியனை மறைத்தது. வண்டிகள் புறப்பட்டுவிட்டன. முன்வண்டியாக விசுவலிங்கத்தின் ‘பூச்சியன் சோடி’ அந்தர பவனத்தில் வருகின்றது. மாரிமுத்து நுகத்தோடு நுகம் அணைந்தவுடன் தன்னுடைய ‘கடலு’க்கு இரண்டு ‘இழுவை’ இழுத்துவிட்டு வாலைப்பிடித்துக் கிளப்பி ‘குங்காரம்’ இட்டான். அன்றுதான் அவன் வீரத்தின் கொடியேற்றநாள். அந்தப் பரீட்சையில் அவன் வெற்றி பெற்றேயாக வேண்டும். அல்லாது போனால்… வள்ளியம்மை வண்டிக்குப் பக்கத்தே நின்று ‘உதுகளும் ஒரு மாடுகளோ?’ என்று சிரிப்பது போல அவனுக்குப்பட்டது.
சிவகுரு, “சின்னத்தம்பிஅம்மான்!” என்று குரல் கொடுத்தான். சடார்! சடார்! துவரங்கம்புகள் பறந்தன. சீழ்க்கை ஒலி மிகுந்தது. சனக் கூட்டத்தின் ‘ஏய்! கை! சூ!’ என்ற கூச்சல் கடலொலியை மிஞ்சியது.
மாரிமுத்துவின் ‘கடல்’ சரியான இடம்பார்த்து இறங்கியது. சின்னத்தம்பியின் மயிலையும் அதற்குச் சளைக்கவில்லை, பசாசு வேகம்; கால் மைலுக்கு இரண்டு வண்டிகளும் சரிசமனாக ஓடி வருகின்றன. இதோ! அதோ! முன் வண்டியாக வந்த விசுவலிங்கத்தின் மாடுகள் மாரிமுத்துவின் மாடுகளை விலத்தவிடுமா? விடாதா?… ஒருவருக்குந் தெரியவில்லை. மாரிமுத்து ஆசனத்தில் இருக்கவே இல்லை. ஏர்காலோடு
படுத்து மாடுகளின் அடி வயிற்றைத் தடவி ‘கூச்சம்’ எழுப்பினான். ஓடும் வண்டியில் இப்படியான சாகசவேலை மெத்த அபாயமானது. ஆனால் அன்று கூட அப்படிச் செய்து வெற்றி பெறாது விட்டால்… அவன் வாழ்க்கையே இருண்டு போய்விடுமே.
விசுவலிங்கத்தின் பூச்சியன்களை நெருங்கி அடித்து தெருவில் முன்னேறிவிட்டான் மாரிமுத்து. அப்பாடா! ஒரே ஆரவாரம். சீழ்க்கை ஒலி.
பாடாத பாடுபட்டுப் படிப்பித்த தன்மகன் பரீட்சையில் சித்தியெய்தி உத்தியோகத்திற்கு வெளிக்கிளம்பும் முதல் நாளன்று தாய் அவனைப் புதுவகைப் பார்வையொன்று பார்ப்பாளே. அதைப்போலத் தன் மாட்டை-கடலை-அவன் புதுவகையாகப் பார்த்து பூரித்தான். ‘நீ! ராசாதான்ரா’ என்று சொல்லி முதுகில் ஒரு தட்டுத் தட்டினான்.
தெருவோரங்களிலும் பற்றைக்குள்ளும் நின்று வேடிக்கைபார்த்த சனங்கள் அரசமரத்தடியில் வந்துகூடிவிட்டார்கள். பலர் மாரிமுத்துவையும் மாடுகளையும் மாறி மாறிப்பார்த்துப் புகழ்மாலை சூட்டினார்கள். ஆனால் சின்னத்தம்பி அம்மான் சொன்னவார்த்தைகள்தான் அவன் இதயத்தை அப்படியே குளிர்வித்தன. “மாரிமுத்து! என்ன செய்தாலும் உன்ரைகடல் கடல்தான். சரியான தருணம் பார்த்து இறங்கிச்சுதே. என்ரை மாடும் அவ்வளவு தோல்வி போய்விடவில்லைப்பார் எப்பிடி மாடுகளெண்டாலும் மாடுவிடுகிறதும் ஒருபழக்கம்தான். நீ ஆசனத்தட்டில் இருந்து இண்டைக்கு விட்டிராவிட்டால் ஒருக்காலும் விலத்தியிருக்கமுடியாது. சும்மா புளுகுக்குச் சொல்லயில்லை. உண்மை” என்று வ்ணித்தார். ‘உதுகளும் ஒரு மாடுகளோ?’ என்று கேட்ட வள்ளியம்மை தனது தகப்பனாரின் வார்த்தைகளை ஒருமுறை கேட்டால் என்று அவன் சிந்தனை ஓடியது.
சின்னத்தம்பியின் சொற்களும் மாரிமுத்துவின் சிந்தனை ஓட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். மறுபுறம் பாருங்கள்! கண்கள் கொவ்வப்பழம் போற்சிவக்க இவர்களைக் கறுவிப் பார்க்கிறாரே அவர் யார்? தெரியவில்லையா? மாஞ்சோலையின் முடிசூடாமன்னன் விசுவலிங்கம் அவர் தான். அவர் பார்வை! அந்தப்பார்வை என்ன செய்யும் என்று அவரை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.
தொடரும்…. மத்தாப்பு 3