Featureமுகிழ்த்தது முத்து

மத்தாப்பு!…. ( நாவல் ) …. ஈழத்து எழுத்தாளர் ஐவரின் படைப்பு.

மத்தாப்பு!…. ( ஈழத்து எழுத்தாளர் ஐவரின் படைப்பு )
1. வர்ணம் —– பச்சை —– இ.நாகராஐன்.
2. வர்ணம் —– சிவப்பு —– கனக. செந்திநாதன்.
3. வர்ணம் —– நீலம் —— சு.வேலுப்பிள்ளை.
4 .வர்ணம் —— மஞ்சள் —– குறமகள்.
5. வர்ணம் —— கத்தரி —— எஸ்.பொ. —–

மத்தாப்பு!….. 

  அறுபது   ( 60 ) வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல்

1. வர்ணம் —– பச்சை —– இ.நாகராஐன்.

மதுரகவி என்று அழைக்கப்படுபவர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1948 ஆம் ஆண்டளவில் எழுத்துலகத்திற்குள் பிரவேசித்தார். `ஈழகேசரி’, `தமிழன்’ பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ள இவர் பல புனைபெயர்களில் எழுதிக் குவித்தார். சிலம்பன், ரவிவரன், வி.ஆர்.என், ஆறென், இ.நா என்ற புனைபெயர்களில் சிறுகதைகளையும் ; கவியரசன், ஈனா, கூட்டுக்கவிராயன், இடிமேகன், ரமேஸ்வரன், ரவி, ரவீந்திரன் ஆகிய பெயர்களில் கவிதைகளையும் ; அரிமா, தனஞ்செயன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகளையும் எழுதியவர்.

நிறைநிலா, சத்தியம் நிலைக்கும் – சிறுகதைத்தொகுப்புக்கள், சிலம்பு சிரித்தது – கவிதை நாடகம், வாழ்க்கை ஒரு வசந்தம் – நாவல், குயில் வாழ்ந்த கூடு – காவியம் இவரின் படைப்புகள். தவிர பல சிறுவர் பாடல்களை எழுதியவர். நீதிக்கரங்கள் (காவியம்), மத்தாப்பு (நாவல்), மணிமகுடம் (மூவர் எழுதிய நாவல்) என்பவை இவர் கூட்டாக எழுதியவை.

வர்ணம் (1) – பச்சை

இ.நாகராஜன்

நாள் முழுவதும் உழைத்துக் களைத்து நெஞ்சு நொந்த சூரியன் இரத்தம் கக்கிய வண்ணம் சரிந்தான். அவன் பிரிவைக் கண்டு பிலாக்கணம் வைப்பதுபோல் புள்ளினங்கள் கரைந்த வண்ணம் வீதியிலுள்ள மரங்களை நாடிப் பறந்து கொண்டிருந்தன.

ஒன்றின் அழிவிலே தான் இன்னொன்று உதயமாக வேண்டுமென்ற நியதிக்கு எடுத்துக் காட்டாக உலகைச் சுற்றி வனைந்த இருளெனும் அழுக்குத் துணியை நீக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தான் அர்த்த சந்திரன். உலகின் அரவம் சங்கமத்துக்கு முன் முழுமூச்சுடன் கலகலக்கும் சமயம், பட்டினத்து நாகரீகத்தைக் கொஞ்சமும் எட்டாமலிருக்கும் முல்லைப்பற்றுக் கிராமத்ததை நோக்கி அந்த உருவம் நடந்து கொண்டிருந்தது.

பருவத்தின் வாளிப்பையும் அதனோடு இணைந்து நிற்கும் ஆசாபாச உணர்ச்சிகளையும் ஒன்றாக பலியிட்டுத் தளர்ந்த உடல், சதா சோகமென்ற உளி கீறிய வடுத்தோய்ந்த முகம்; முக்கால்வாசி நரைத்தும், கால்பகுதி நரைக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் சிகையும், தாடியும் அந்த முகத்தை இன்னும் கோரப்படுத்தியிருந்தன. சதை வடிந்து எலும்பெடுத்த கங்காளத்தின் மொத்தமான நிலையை நெருங்கிப் பார்த்தால் தான் புரிந்து கொள்ளலாம்.

அந்த உருவந்தான் மாரிமுத்து.

அவன் நடந்து செல்லும் எதிர் திசையிலே உலகத்தின் ஒவ்வோர் அணுவிலும் தனது பால்ஒளியைப் படரவிட்டுச் சூரியனை வென்று விடலாம் என்ற வேகத்தில் அடிவான விளிம்பை விட்டு மெதுமெதுவாகக் கிளம்பிக் கொண்டிருந்த நிலவுக்குச் சூரியனின் சேவையை ஈடுசெய்ய முடியாத பலவீனம், தொட்டந்தொட்டமாக ஒவ்வோர் மரவடிகளிலும் நிழல் இருளாக நின்று நிலவைப் பரிகசித்தது.

மாரிமுத்துவின் காலடியிலும் அந்தக் கருஞ்சாயல், அது அவனது நெஞ்சைப் பிரதிபலிக்கிறதோ என்னவோ!

இலட்சியமற்ற பைத்தியகாரனுக்கும், அவனுக்கும் எந்த விதமான வேற்றுமையும் இல்லை. நெஞ்சிலே நீக்கமற நிறைந்திருக்கும் வேதனையை ஆழ அமுக்கு-ஆன்றமைந்த ஞானியின் மனநிலையை வலிந்து பிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டவன் போன்று பொறிகளின் செயலைக் கட்டுப்படுத்தி இரவின் திரையிலே தன்னை மறந்து நடந்து கொண்டிருந்தான்.

கொண்டல் சேர் கோபுரம் கொண்ட முல்லைப்பற்றுப் பிள்ளையார் கோவில் சமீபத்தில் வெண்சாந்து பூசப்பட்டமையால் அந்த மங்கிய நிலவொளியிலும் சாடை காட்டியது. நீறென்ற வாதையில் மூடுண்ட அது மினு மினுத்தது. அவனது இதழ்க் கடையிலே முறுவல்.

”பெற்றதாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவவானிலும் நனி சிறந்தவனே”

அந்த மாகவிஞனின் எண்ணத்தின் நிதர்சன உண்மையா இது! கடந்த- இருப்பத்தைந்தாண்டுகளாகத் தலை காட்ட முடியாத அந்த நகைப்பு எதனால் வந்தது! தூர்ந்த கிணற்று நீர்போல் ஒட்டிக்கிடந்த கண்களில் இரண்டு துளி முத்துக்கள் பிறந்து இதழ்கடைவழியே உருண்டன.

”கணிங்!கணிங்!”

மாட்டு வண்டியொன்று அமைதியைக் குலைத்துக் கொண்டு முன்னேறியது. வெருட்சி கொள்ளும் காட்டுமான் போல் சற்று ஒதுங்கிக் கொண்டான். யாராவது தன்னைப் பார்த்துவிடப் போகிறார்களோ என்ற படபடப்பு நெஞ்சில்.

நத்தையாக ஊர்ந்த போதிலும் அந்த இடம் நெடு வழியாகவே இருக்கவேண்டுமென்ற அவன் எண்ணத்துக்கு இடக்குப் பண்ணுவதுபோல் கிராமத்தைக் கூறுபோடும் நாற்சந்தி குறுக்கிட்டது.

செழுங்கிளை தாங்கிய ஆலமரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த விழுதுகள் நிலத்திற்பட்டு வைரித்த மரங்களாக உருப்பெற்றிருந்தன. அவனது இளமைக் காலத்து விளையாட்டுச் சாதனங்களுள் அவையும் அடங்கும். காலம் என்னும் வேகம் அவனை மட்டும் அலைக்கழித்து முதுமையைக் கொடுத்துவிட அதனூடே நாளுக்குநாள் சிறுகத் தேய்ந்து அஸ்தமத்தை அடைய அவன் முற்பட்டிருக்கிறான். ஆனால் அவை காலத்தை எள்ளி நகைப்பது போல் வைரித்து விட்டன. என்ன செய்தாலும் மனிதன் பலவீனன்தானே!

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காதிருக்கச் சந்தியை விட்டுச் சிறிது ஒதுங்கி ஆலமர நிழலில் குந்தினான். சோர்ந்த உடலில் ஒருவித குளிர்மை.

”பிப்பி, பிப்பி”….

”டும், டும்”

தேர்ந்த விற்பன்னனின் நாதஸ்வரம், இன்னிசைக்கு ஏற்ப இழைத்து – லயந் தப்பாது முழங்கும் தவிலுடன் கூடி அவனது காதுகளிலும் விழுந்து கொண்டிருந்தது. அந்த இன்னிசை முல்லைப்பற்றுப் பிள்ளையார் கோவிலிலிருந்துதான் வருகிறதென்பதை அவனால் ஊகிக்க முடிந்தது.

ஊருக்குள் நுழைய வேண்டுமென்ற ஆவல் நெஞ்சைக் குடைந்து கொண்டிருந்தபோதிலும் அவனுடன் ஒன்றிப் பிணைந்த லஜ்ஜை குறுக்கிட்டுத் தடை செய்தது. நாடி வந்த இடத்திற்கு செல்ல வேண்டுமானால் ஆரவாரத்தில் அமிழ்ந்து கிடைக்கும் அந்தக் கோவிலைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

நினைவை அடக்கி – ஒடுக்கி நாதஸ்வர இசைக்கு முற்றாகத் தன்னை ஒப்புக் கொடுத்தான் .

இரண்டொரு மாட்டு வண்டிகள் லாந்தர் ஒளி பரப்பிய வண்ணம் அந்தச் சந்தியைக் கடந்து அப்பாற் சென்றன. அவனிருக்கம் இடத்துக்கு வடக்கே இரு ஒளிச் சன்னங்கள். அவை? யாரோ புகையிலைச் சுருட்டைப் பிடித்துக் கொண்டு வரும் அடையாளம்.

மரத்தோடு மரமாக அரவமின்றி ஒடுங்கிக் கொண்டான் காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் பேய் என்று சொல்லுவார்களே,அப்படித்தான் இதுவும்.

”ஏன் அண்ணை, ஊர்வலமும் வாண வேடிக்கையும் எத்தனை மணிக்கு?”

”இன்னும் கொஞ்சத்தில் தொடங்கிவிடும். இது வரைக்கும் தாலிகட்டும் முடிந்திருக்கும்”

”நோட்டீஸ் ஆறுமணிக்கெண்டுதானே போட்டிருக்கு.”

”ஓம்! தெரியாதே நம்மடை ஆக்களுடைய நேரத்தை?”

”இப்படி சிலவழிக்கினமே, இது யார் பொறுப்பு? மாப்பிள்ளை பகுதியோ, பொம்பிளை பகுதியோ!”

”மாப்பிள்ளைக்கு யாரிருக்கினம் பொம்பிளை பகுதிதான்.”

”ஏன்?”

”மாப்பிள்ளைக்கு அப்புவும்மில்லை, ஆச்சியும்மில்லை. அந்த பொடியன் அனாதைப் பள்ளிக்கூடத்தில் படித்து வாத்தியானவன்.”

”என்ன, கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லன்.”

”உந்த மாப்பிள்ளை பொடியன் குமாரசாமி இருக்கிறானே…..

அவன்ரை தகப்பன் மறியலுக்குப் போனவன். ஆளே திரும்பி வரவில்லை. மாத்தளை பக்கத்தில் எவளோ சிங்களத்தியோடை இருக்கிறானெண்டு கேள்வி.”

”ஓகோ! இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னால் விசுவலிங்கம் கொலைவழக்கில் மறியலுக்குப்போன மாரிமுத்துவின்ரை மகனே இவன்? இவங்களுக்கு எப்பிடிப் பிடிச்சுது?”

”ஓய் தகப்பன் செய்ததுக்குப் பிள்ளைக்கு என்ன பொறுப்புக் காணும்? பொடியன் வாட்டசாட்டமாக இருக்கிறான். ஆள் நல்ல குணசாலி..”

அரையும் குறையுமாக விழுந்த சம்பாஷனை சிறிது சிறிதாக காதுகளிலிருந்து விடுபட்டுக் கொண்டது. அந்தக் குமாரசாமி?

”டும்! டும்”

ஆகாச வெடியொன்று ஓலமிட்டது. அதைத் தொடர்ந்து அதிர்வெடி… வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டது. அப்பறம் ஊர்வலம்.

எலி வாணம்; பலநூறு எலிகள் அந்தர வெளியில், ஆகாச வெடி; ஒரே தீப்பிழம்பு ஆகாயத்தில் பலநூறு நட்சத்திரங்கள், வானத்திலிருந்து அந்தரவெளிக்கு இறங்கி விட்டனவா? மத்தாப்பு

அதோ ”டுமீல்” என்னும் ஓசை…மாத்தாப்பு ஒன்று. ஆகா! பச்சை, சிவப்பு, மஞ்சள், கத்தரி நீலம் இத்தியாதி… ஒன்றா, இரண்டா? பல மத்தாப்புக்கள்

மனிதனின் வாழ்க்கையும் இதுபோன்ற மத்தாப்புத்தானா? எத்தனை வர்ணங்கள்? ஒவ்வொன்றும் ஒன்றாக ஒரே குழலிலிருந்து பிரிந்து வானவெளியில் பகட்டுகின்றதே. இப்படியான உணர்ச்சிச் சேர்க்கைகளைப் பல சுருதியில் இணைந்து விடப்பட்ட மனிதனும் வாழ்க்கை வெளியில் பகட்டுகிறான்.

அந்த மனிதக்கூட்டத்துள் ஒருவனான மாரிமுத்துவின் இதயமும் ஒரு மத்தாப்பு அதுவும் பலவர்ணங்களை உமிழ்ந்த மத்தாப்பு.

அதோ! ப்ச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள், கத்தரி, வாழ்க்கையில் பசுமைகாட்டி கருத்துக்கும் கண்ணுக்கும் இதமளித்து கோபத்தீயாகச் சிவந்து இன்பத்தின் நீலவொளியிலே குலவிய காலம் எங்கே?

அந்த ஆலம் விழுதை அணைத்து வீசும் தென்றலின் இதத்தில், நிலவின் தண்ணொளியில் எற்றுண்டு காலமென்ற காட்டாற்றைத் தாண்டி செல்கிறான் மாரிமுத்து.

எவருக்கும் இன்னல்கள் தொடர்ந்து வந்து விரக்தியாகக் கவிந்து விடலாம். ஆனால் அந்த விரக்தியைத் தாண்டிச் சென்றகால இன்பத்தில் லயித்து ஒரு கணமாதல் தன்னை இளமையாக்கிவிடத்தக்க சக்தி பெற்ற நினைவு அவனை விட்டு அகலவில்லை.

ஆண்டுகள் முப்பது கழிவதற்கு முன்…..

வலிவும், வனப்பும் கொண்ட உடலைப் பாகுபடுத்தும் தசைநார்கள் திரண்டு அளவளவாக அமைந்த தோற்றம்; சுருண்ட சிகை; தலையிற் சுற்றிய தலைப்பாகையின் கட்டை மீறி நெற்றியில் விளையாடும் எழில்மிகு வதனத்தில் ஒளி வீசும் கண்கள். பார்ப்பவர் உள்ளத்தை ஈர்க்கும் உடலமைப்புக் கொண்ட மாரிமுத்து, கடலும் – திரையும் என்று பேர்பெற்ற மாடுகள் பூட்டியவண்டியில் குந்தியிருந்தான்.

”எல்லோரையும் போலவே யென்னை

எண்ணலாகு மோடி போடி ”

அக்காலத்தில் யாழ்ப்பாணப்பகுதியில் நாடகமேடைகளில் பிரபலம்பெற்ற அந்தப் பாட்டை, உதடுகள் உச்சரிக்க அந்த இசை இனிமையில் லயித்தவண்ணம் வண்டியை ஓட்டி வருகிறான் அவன்.

ஆதவன் வானவிட்டத்தின் அந்தத்துக்குச் செல்வதற்கு இன்னும் ஐந்து பாகைக்கு மேலிருக்கிறது. வானில் பொற்கொல்லன் அள்ளித் தெளித்த மஞ்சள் வர்ணப்பொடி உதிர்ந்து மண்ணில் ஒவ்வோர் பிரகிருதியிலும் அழகுறப் பரவியிருக்கும் சூழ்நிலை, இதந்தரும் தென்றலின் குளிர்மயில் அக்காலத்து வீதிகளின் இரு மருங்கிலும் நடப்பட்டிருந்த மரங்கள் இழைத்து கொண்டிருந்தன. மோகனமான அமைதியைக் கலக்கி கொண்டு வருகிறது வண்டி.

முல்லைப்பற்றுக் கிராமத்துக்கு இன்னும் இரண்டுமைல் தூரமிருக்கின்றது. நேரத்துக்கு போகவேண்டுமென்று தேவையில்லை, இருந்தும் தனது மாடுகளை துரிதமாக ஓடச்செய்வதில் ஒருதிருப்தி அவனுக்கு. அங்குள்ள இளவட்டங்களுக்குள் சிறந்திருந்தானோ, அந்த அளவில் தன் மாடுகளும் ஏனைய மாடுகளுக்கெல்லாம் உயர்ந்தவனாக இருக்கவேண்டும் என்பது அவன் இலட்சியம்.

கிளிக்கோடு மறிக்கையில் அவன் கிளியாக நின்று நடுக்கோட்டில் விரைவில் ஓடி, ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு தாவி எதிர்பக்கத்து ஆசாமியை அடித்து ஆட்டத்தில் வெற்றி கொள்வதில் மிகவும் சமர்த்தனாக இருந்தான். அந்த ஆட்டமெல்லாம் மெல்ல அவனைவிட்டு நகர்ந்துவிட, இந்தக் காளைகளைப் பேணிக்காத்துச் சவாரிப் போட்டியில் வெற்றிபல பெற்று உச்சமடைந்தவனாக வர அவன் அரும்பாடுபட்டான். அந்த பலன் இன்று பாழ்போய்விடவில்லை.

முல்லைப் பற்றிலிருந்து காலை பதினொரு மணிக்குக் கிளம்பியவன் பன்னிரண்டு மைல் தொலைவிலுள்ள மாங்குடி புகையிரத நிலையத்தில் புகையிலைச் சிப்பங்களை கொண்டுபோய் ஒரு மணி வண்டிக்குக்

கொடுக்கமுடியாது, என்று சிலர் தெரிவித்துக் கொண்டார்கள். ஆனால் அவன் ஒரு மணிக்கு முன்னதாகவே கொடுத்துவிட்டு ஆரச்சோர மாடுகளைக் கட்டிவிட்டு, அங்கெல்லாம் அலைந்து திரிந்தான். பின்னேரம் நாலுமணிக்குத்தான் அவன் வண்டியில் மாடுகளை பூட்டினான். அவனது காளைகளை அவன் பேணிக்காப்பதினால் அவை எந்த இடத்திலும் அவனை இளப்பமாகப் போகவிட்டது கிடையாது. இன்றும் அப்படித்தான், ஏறக்குறைய ஒன்பது மைல்களை சாதாரணமாகக் கடந்து வந்த அவன் சற்றுமுன்தான் மாடுகளைத் தட்டி விட்டான். ஆனால் அவைகள் தாவிச் செல்ல வகையற்ற முறையில் வழியில் இடையூறா?

அது என்ன! வண்டியைச் சற்று மெதுவாக விடத் தொடங்கினான்.

சொற்ப தொலைவில் கருமையான காட்சி…. வீதியை அப்படியே கௌவிக் கொண்டிருந்தது. அது என்ன என்று அவன் எண்ணுவதற்கிடையில் வண்டி அந்த இடத்தை அடைந்துவிட்டது. அப்பாற்போக முடியவில்லை.

அங்கு ஐம்பது ஆடுகளுக்குமேல் கூடிக் குமைந்து இடத்தை ஆக்கிரமித்துச் சர்வாதிகாரம் செய்து கொண்டிருந்தன; மாடுகள் வெருட்சி கொள்ளத் தொடங்கிவிட்டன.

”சூ! சூ”

அவைகள் அசைவதாகக் காணோம்.

”ஏய்! ஆரது ஆட்டுக்காரர்? பாதையில் இப்படி ஆடுகளை விட்டுக் கொண்டிருந்தால் வண்டியை அப்பால் விடுகிறதில்லையா?”

பதிலில்லை!

”என்ன நான் சொல்கிறன் யாரையும் காணவில்லை…”

வீதியோரத்துக்குத் தூரத்தே நின்ற பூவரச மரத்தில் கொக்கைத் தடிகொண்டு குழைபறித்துக் கொண்டிருந்த உருவம் திரும்பியது. பச்சை வர்ணப்புடவை கொண்டைக் கால் வரை மறைக்க, பொன்நிறப் பாதத்தை வெளிப்பாதசரம் அணி செய்ய, திரும்பிய அந்த உருவத்தைக்கண்டு சொக்கிச் சுழன்று விட்டானா? என்ன? அத்தகைய அழகுள்ள பெண்களை அவன் முன்னப்போதாவது பார்த்தது கிடையாதா?… பின் ஏனிந்த லயிப்பு? கடுமையான தொனியில் எவரையும் வெருட்டும் அவனது குரல் அடைத்து விட்டதா? அந்த அழகு… அதில் ஒரு வகைப் பிடிப்பு … பிடிப்பிலே குழைந்து செல்லும் மனம்.

சற்றுநேர மௌனந்தான், ஆனால் அது ஏதோ நீண்ட நேர கனவுகளை அவன் உள்ளத்தில் உற்பத்தி செய்து கொண்டிருந்தது. அந்தப் பெண் என்ற தேனில் விழுந்த ஈயாகி விட்டான் மாரிமுத்து. அவள் அவனது நெஞ்சக் குளத்தில்

நீச்சலடிக்கத் தொடங்கி விட்டாள். அந்த அலைகள் உருண்டு திரண்டு கரையில் தொட்டு மடிந்து அவனுள் எத்தனையோ வர்ணக் கனவுகளை எழுப்பிவிட்டன.

அதோ! இன்னொரு மத்தாப்பு. அந்த மத்தாப்பிலிருந்து வெளிவரும் ஒளிப்பந்துப் பூக்கள் வானிற்பரவி வெடித்துப் பலவகை வர்ணங்களை உதிர்த்து விட்ட போதிலும் அந்த பச்சை வர்ணமே முழுவதையும் ஆக்கிரமித்தது போன்ற ஒரு உணர்ச்சி.

அந்தக் கல்யாண ஊர்வலத்தில் முக்கிய பங்கு கொள்ளும் மாப்பிள்ளைக்கு வாழ்க்கை பசிய நினைவுகளையும் உல்லாசத்தையும் உவந்தளிப்பதற்கு அது-அந்தப் பச்சை சூசகமாக அமைந்ததா?

அன்றி இங்கே மரத்தடியில் குந்தியிருந்து கடந்த காலச் சம்பவத் தீனியை இரைமீட்கும் தனக்கு அந்த பழைய இன்ப நினைவுகளை நினைவூட்டுவதற்காகத்தான் அப்படி தோன்றுகிறதா?

இடுப்பில் கையை வைத்துப் புகையிலையை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள முனைந்த அவனது கரங்களில் தட்டுப்படுவது எது? தட தடத்துப்போன துன்ப வாழ்க்கைக்குப்பின் புனர் ஜென்மமும் இன்பமும் அளித்து இன்னொருத்தியின் ஞாபக சின்னமாக இருக்கும் சங்கிலி.

அந்த சங்கிலியை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் திரும்பவும் வந்தபோது மாரிமுத்துவுக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது. பசுமையான அந்த நினைவு….

வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்தான். ”எனக்கு ஏற்ற ஜோடி” மாரிமுத்துவின் மனம் அப்படித்தான் சொன்னது.

”என்ன ஆளைப்பார்க்கிற பார்வை?” என்ற வார்த்தைகள் அவனைக் கற்பனை உலகத்திலிருந்து பூலோகத்திற்கு இழுத்து வந்தது. அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் அவள் அடுத்துச் சொன்ன வார்த்தைகளும் சிரிப்பும்….

”ஆடுகளை இப்படியே கண்டு மிரண்டு போச்சே உங்கடை மாடுகள்… உதுகளும் ஒரு மாடுகளா?…. ஆருக்கேனும் கண்ட விலைக்கு கொடுத்துவிட்டு நடந்து போங்கோ” என்று சொல்லிச் சிரித்தாள்… கடகடவென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பு உப்பரிகையில் நின்று சிரித்த சீதையின் சிரிப்பா? அல்லது இராசசூய யாகத்தில் துரியோதனனின் தடுமாற்றத்தைக் கண்டு சிரித்த பாஞ்சாலியின் சிரிப்பா?…. அவள் சிரிப்பு என்ன விளைவைக் கொண்டு வரப்போகிறதோ! யார் கண்டார்கள்?….

( தொடரும் )

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.