புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மன அழுத்தம் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. இதன் விளைவுகளாக கொலைகள், தற்கொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதற்கான அடிப்படை காரணங்கள் ஆளுக்கு ஆள் வேறுபட்டபோதும் இங்குள்ள வாழ்க்கைமுறை பிரதான காரணி எனலாம்..
ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான குடும்பங்களில் கணவனும் மனைவியும் பணிக்குச்செல்கிறார்கள். தமக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தை தொலைக்காட்சியுடனும், தொலைபேசியுடனும் செலவழிக்கிறார்கள். கணவன் மனைவிக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகின்றது. சில வீடுகளில் மனைவி சொல்வதை கணவனோ, கணவன் சொல்வதை மனைவியோ செவிமடுப்பதில்லை. ஓட்டம் ஓட்டம்.. எதை நோக்கி ஓடுகிறோம் ?என தெரியாத ஓட்டம்.. டென்ஷன்..இதனால் முதல் பாதிப்பை சந்திப்பது வாழ்க்கைத்துணை அடுத்தததாக அவர்களின் குழந்தைகள்..
சிலவீடுகளில் தந்தை எப்போது வீடு வருவார் ?? என குழந்தைக்கு தெரியாது. தந்தையின் பணி அப்படியானதொன்றாக இருக்கும். அவர்களிடையான அந்த உறவுமுறை பாழடிக்கப்படுகிறது. இதனால் அந்தக்குழந்தை தந்தை பிள்ளைக்கான பாசத்தை இழந்து விடுகிறது. ஒரு தந்தையின் வழிகாட்டலின்றி வளர்கிறது. தாயின் அரவணைப்பும் அதிகமாக கிடைக்காத பட்சத்தில் அதன் மனம் பாதிப்படைகிறது..
ஒரு குடும்பத்தில் ஒரு உறவில் விரிசல் வந்தால் அது முழு குடும்பத்தையும் பாதிப்படைய செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.. சில தந்தையர்கள் அல்லது தாய்மார்கள் எதற்கெடுத்தாலும் கோபம், பட படப்பு , பொறுமையில்லாமலும் இருந்தால் முதல் பாதிப்பை சந்திப்பது அவர்களின் உடல் .அது உபாதைக்கு இட்டுச்செல்லும். அடுத்து பாதிப்பை சந்திப்போர் அவர்களை சூழ உள்ள குடும்ப அங்கத்தவர்கள். இத்தகைய பாதிப்பை தரும் காரணிகள் என்ன என கண்டறிந்து அதை விட்டு விலகுதல் வேண்டும்.அல்லது மாற்றியமைத்தல் வேண்டும். உதாரணமாக: இரவு பகல் என மாறி மாறி வரும் வேலை, வேலையிடத்து சக தொழிலாளர் பிரச்சனை, மற்றும் வேறு நிர்வாக தொல்லை,அன்னியோன்னியம் இல்லாத தம்பதியர், முற்கோபம், டென்ஷன் , நோய் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் தொடர்ந்து கொண்டு போகுமானால் இறுதியில் அது தன்னைத்தான் மாய்த்துக்கொள்வதிலும் மற்றும் தன்னை சுற்றியுள்ளோரை கொலை செய்யுமளவிற்கு இட்டுச்செல்லும் என்பது உறுதி.
ஆகவே எமது உள்ள உடல் மாற்றத்தை நாமே அறிந்து கொள்ளுதல் அவசியம். அல்லது நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நேரம், காலம் போனால் திரும்பி வரப்போவதில்லை . வாழ்க்கைக்கு வேலை, பணம் அவசியம் தான். அதற்காக வேலை மட்டுமே வாழ்க்கை என ஆகாது.
கணவர்கள் கவனத்திற்கு:
உங்களுக்காக மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக கொஞ்சநேரத்தை ஒதுக்குங்கள். எந்த பிரச்சனையானாலும் மனைவியோடு மனம் திறந்து பேசுங்கள். “சாப்பிட்டியா” என ஒரு தடவையாவது கேளுங்கள். அந்த சின்ன சின்ன வார்த்தைகளுக்கு ஏங்குபவள் அவள். பணியிடத்தில் இருந்து ஒரு போன் செய்ய மறக்காதீர்கள்.
மனைவியர் கவனத்திற்கு:
குடும்பத்தில் பெரும் பொறுப்பு வகிப்பவர்கள் நீங்கள்தான். பணிக்கு சென்றபோதும் சமையல், பிள்ளை பராமரிப்பு என பல பொறுப்புகளை தாங்குவோர். மனம் விட்டு கணவரோடு பேசுங்கள். விட்டுக்கொடுங்கள், இவர் இப்படித்தான் என அனுசரித்து போவதால்தான் சிலர் மணவாழ்வு இறுதிவரை தொடர்கிறது.
கோபம் வந்தால் மனதை படம் ,பாட்டு கேட்பதிலும் எழுத தெரிந்தோர் எழுதுவதிலும் மற்றும் பூந்தோட்ட வேலைகளிலும் திருப்புங்கள். மனம் திறந்து எந்த பிரச்சனையானாலும் நெருங்கிய உறவுகளிடம் பேசுங்கள்.
மன அழுத்தம் சமூகப்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது ஒரு மன நோய். மூளையின் இரசாயனப்பொருளில் மாற்றங்கள், மனதை பாதிக்கும் செயல்கள், மன அழுத்த அறிகுறிகள் ,மன அழுத்தம் தரும் வேறு பல நோய்கள் என பிறிதொரு வெள்ளியில் பார்ப்போம் .
புலம் பெயர் வாழ்வில் பலருக்கு இங்கு சொந்தங்கள் இல்லை. சோகங்களை சொல்லியழ யாரும் இல்லை. அதுவும் ஒரு வேதனையே. மனதினில் கவலைகளை பூட்டி வைப்பதும் மனதினில் ஒரு குண்டை சுமப்பதற்கு ஒப்பாகும். அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம். பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே ஒருவருக்கொருவர் அனுசரணையாக, உதவிகள் புரிந்து நலமாக உள்ளத்தையும் உடலையையும் காப்பது நம் கடமை. எது வந்த போதும் “இதுவும் கடந்து போகும் “என மனத்திடம் கொண்டு புன்னகைத்து வாழ்வோம்…
அன்போடு உங்கள் தோழி
…,ரதிமோகன் டென்மார்க்