’போராடுபவர்களையெல்லாம் ஜெயிலில் போடுங்கள்..,பத்து வருடம் தண்டனைத் தாருங்கள்,வாழ்க்கையில் அவர்கள் பாத்திராத அளவிற்கான கடும் தண்டனையை தாருங்கள்…மாகாண கவர்னர்களே! இன்னும் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை களத்தில் இறக்கி,ஒரு வழி பண்ணுவேன்…’’என்று கர்ஜிக்கிறார் ட்ரம்ப்!
இந்தக் கர்ஜனையையும்,கடுமையையும் அநியாயமாக ஜார்ஜ்பிளாய்டைக் கொன்றானே.., அந்த வெள்ளை போலீஸ் மீது மட்டும் டிரம்ப் காட்டியிருப்பாரேயாகில், அமெரிக்காவில் இவ்வளவு கலவரமே வெடித்திருக்காது!
ஒரு அரசு ஊழியர்,அதுவும் சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய போலீஸ், பட்டப் பகலில் பகிரங்கமாக ஒரு கொலையை செய்கிறது. அந்த வெள்ளைப் போலீஸ் தன் காலுக்கு கீழே,உயிர் மூச்சு நிற்கும் வரை நசுக்கினானே,அது அவன் வெறுக்கும் கறுப்பினத்தவனின் கழுத்து மட்டுமல்ல,’உண்மையில் அமெரிக்காவின் கவுரவம்’ என்பது இன்னும் கூட டிரம்ப்பிற்கு புரியவில்லையே!
அது புரிந்திருந்தால்,மக்களுக்கு வந்த அறச்சீற்றமும் புரிந்திருக்கும். ஆனால்,டிரம்பிற்குள் நிறைந்திருக்கும் மரபின் வழியிலான நிறவெறி,அந்த ஒற்றை வெள்ளை போலீசை பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும் தண்டிக்கக் கூட தயங்காத மனநிலையைத் தான் தந்துள்ளது.இது வரையிலான போராட்டத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டும், ஆயிரத்திற்கு மேலானவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு கைது செய்ப்பட்ட நிலையிலும் கூட, டிரம்பிற்கு நிறவெறியால் நாடு அசிங்கப்படுவதை அவதானிக்க முடியவில்லையே!
ஒரு சின்ன நினைவூட்டல்.சில ஆண்டுகளுக்கு முன்னால்,மைக்கேல்பிரவுன் என்ற கறுப்பின இளைஞர் சாலையின் நடுவில் போலீஸ் எச்சரித்தும் கேளாமல் நடந்தாராம்!அதனால்,அவரை, நட்ட நடுவீதியில் ஆறு குண்டுகளை பாய்ச்சி ஒரு வெள்ளை போலீஸ் கொன்றான்! அப்போதும் போராட்டம் வெடித்தது.
’’சரி,நடுவர் குழு அமைத்து விசாரிக்கிறோம்’’ என்றனர். அந்த நடுவர் குழுவோ, ’’துப்பாக்கி சூட்டில் தவறே இல்லை’’என்று தீர்ப்பளித்தது! அந்த நடுவர் குழுவில் 9 பேர் வெள்ளையர்! மூவர் மட்டுமே கறுப்பர்.ஒன்பது பேர் ஒரு தீர்ப்பை சொன்னால்,அது செல்லும் என்று சட்ட அங்கீகாரம் தந்துள்ளார்கள்.
இதனால்,தான் ஆண்டுக்கு சுமார் 200 கறுப்பினத்தவர்கள் அமெரிக்க வெள்ளைப் போலீசால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டுள்ளன.
அந்த வகையில், இன்றைய சீற்றத்தின் பின்னணியில், நெடுங்காலமாக பொதுவெளியில் தாங்கள் பெற்ற அவமானங்கள்,துன்பங்கள் ஆகியவை காரணமாக கருப்பர்களின் அடிமன ஆழத்தில் புதைத்திருந்த கோபம் வெடித்து கிளம்பியதாகத் தான் அர்த்தம்…!
அமெரிக்காவில் ஒரு கருப்பர் எவ்வளவு சாதித்தாலும்,அவர் வெள்ளையினத்தவரோடு சரிசமமாக தன்னைக் கருதிக் கொண்டுவிட முடியாது. இதற்கு அன்றைய குத்துச் சண்டை வீரர் முகமது அலி தொடங்கி,இன்றைய ஹாலிவுட் கலைஞர்கள் வரை விதிவிலக்கல்ல!
2016 ஆம் ஆண்டு,அமெரிக்காவின் கருப்பின திரைக்கலைஞர்கள் ஆஸ்கார் விருதை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த சம்பவமே ஒரு எடுத்துக் காட்டாகும்!
ஆபிரகாம் லிங்கன்,மார்டின் லூதர்கிங், மால்கம் எக்ஸ்..என்று எத்தனையெத்தனையோ போராளிகளை தின்று செரித்தும் இன்னும் அடங்கவில்லையே நிறவெறி!
அமெரிக்காவின் இன்றைய கொரானா சாவுகளில் கொத்துக் கொத்தாக அதிகம் மடிந்து கொண்டிருப்பது கருப்பர்களும்,சிறுபான்மையினத்தவர்களான ஹிஸ்பானிக் இனத்தாருமே! இவர்களை அமெரிக்க அரசு எந்த உதவிகளும் செய்யாமல் முற்றிலுமாக கைவிட்டுவிட்டது என்ற கொடூரத்தை அமெரிக்க பத்திரிகைகளே எழுதி கண்டிக்கின்றன!
ஒரே ஒரு ஆறுதல்! கருப்பர்களுக்காக கணிசமான வெள்ளையர்களும் களத்தில் உயிரைக் கொடுத்து போராடுவது தான்! கொலைகார அந்த வெள்ளைப் போலீசை விவகாரத்து செய்து, தன் தார்மீக ஆதரவை வெளிப்படுத்தினாளே அவன் மனைவி கெல்லே சாவின்! அவளை எவ்வளவு வாழ்த்தி,வணங்கினாலும் தகும்! அமெரிக்காவின் ஆகச் சிறந்த பண்புகளில் இந்த அறச்சீற்றம் முக்கியமானதாகும்!
எவ்வளவு செல்வம் இருந்தென்ன? படிப்பிருந்தென்ன?அந்தஸ்த்து இருந்தென்ன?அறிவியலில் வளர்ந்தென்ன? மனதில் உள்ள நிறப்பாகுபாடு என்ற அழுக்கை அகற்றமுடியாத வரை,அமெரிக்காவிற்கு தன்னை ஒரு நாகரீக நாடென்று சொல்லிக் கொள்ளும் அருகதை கிடையாது தானே!
சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர்.