காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு பின்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச , ஆறுமுகனின் அமைச்சை பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நகர்வானது மலையக மக்களின் அநேக பிரச்சனைகளை பிரதமரே தீர்த்து , அவருக்கான பாரிய ஆதரவொன்றை பெறுவார் என நம்பலாம். தோட்டத் தொழிலாளர்களது நெடுநாள் பிரச்சனைகளான 1000 ரூபாய் சம்பளம் மற்றும் வீட்டு பிரச்சனைகள் மட்டுமல்ல அநேக விடயங்கள் தீர சாத்தியமுண்டு.
காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானை தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் பிரதமர் பலமாக இருந்ததாக தெரிகிறது. இளம் காளையை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு , தமக்கு சாதகமான ஒரு அரசியலை பிரதமர் செய்யப் போகிறார் என்பதை ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வில் பேசிய பிரதமரது பேச்சிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
யார் என்னதான் குத்தி முறிந்தாலும் தான் நினைப்பதை நடத்தும் பலமான மனிதர் மகிந்த என்பது நாடறிந்த விடயம். அவரை எதிர்த்து யாரும் கட்சியில் இருக்க முடியாது. வெளியிலும்தான். கொரோனா பிரச்சனைக்குள் அத்தனை எதிர்ப்புகளையும் ஒரு சதத்துக்கேனும் மதியாமல் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வை நடத்த பிரதமரே பலமாக இருந்தார். அந்த செயல் திறனான தில் மகிந்தவை தவிர வேறெவருக்கும் இல்லை. அதில் மகிந்த மகிந்ததான். தன்னோடு இருப்பவனுக்காக எதையும் செய்யும் மனிதர் என்றால் அது மகிந்த ஒருவர் மட்டுமே. அதை எதிரிகள் கூட அறிவர்.
எனவே மலையகம் இனி ஒரு மாற்று விடியலை நோக்கி பயணிக்கலாம் என நம்பலாம். எப்படியோ அல்லலுறும் அந்த மக்களுக்கு நல்லவை நடக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றோரது எதிர்பார்ப்பாகும்.
– ஜீவன்.