அன்புள்ள புருஷா. . .
இதுவொரு கடிதமல்ல. இது ஒருத்தியின் புலம்பலும் அல்ல. என்னை போன்ற ஏனைய பெண்களின் ஏக்கமும் கைகூடாத எதிர்ப்பார்ப்பும் எனலாம். அனைத்து வண்ணங்களையும் தொட்டு சித்திரம் வரைவது போல நிறைய குறைகளை கோர்த்து ஒரு உன் முன்னே உடைத்து விடுகிறேன். இதை எழுதும் போது உடைக்கிறேன்.
ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள் என்பது வெறும் பழமொழி என்றுதான் நினைத்து இருந்தேன். அதிகாலையில் இழுத்து அணைத்து உன் தோள் மீது தூங்க இடம் தருவாயே அதெல்லாம் இப்போது அதிகம் நிகழ்வதில்லை என்னும் போது அந்த பாழாய் போன பழமொழி உண்மைதானோ என்று நினைக்க தோன்றுகிறது.
ஏக்கமாய் என் பெயரை உச்சரித்த உன் உதடுகள் இப்போது சர்வ அதிகாரமாய் காப்பி எங்கே என்று கேட்கிறது. சில நேரங்களில் ஆற வைத்து கொடு என்றும்! பல நேரம் சூடாய் கொடு என்றும் ஒரு ஒட்டல் சர்வரை போல ஓட விடுகிறாய். பத்தினியின் பணிவிடைகள் பட்டியல் பெரிது என்கிறாய்.
அலுவலகம் புறப்படுகையில் ஒரு முத்தம் கேட்பாய். வாசற்படி இறங்கி பறக்கும் முத்தம் விடுவாய். அலுவலகம் சென்றதும் பத்திரமாக வந்து விட்டேன் என்று ஒரு தொலைப்பேசி அழைப்பில் உன் இருப்பை உறுதி செய்வாய். மதிய லன்ச் பிறகு கொடுத்தனுப்பிய சாப்பாட்டை பாராட்டுவாய். இடையில் ஒரு முறை அழைத்து என்ன செய்கிறாய் என்பாய். அதுவொரு அழகிய கனாகாலத்தில் இத்தனையும் சேர்த்து விட்டாய்.
இப்போதும் தொலைப்பேசியில் அழைக்கிறாய்! எதையாவது ஞாபக மறதியில் விட்டு சென்றதை விசாரிக்க அழைத்து அதை மட்டுமே கேட்டு வைத்து விடுவாய். அதற்கு மேலும் நீயும் பேசுவதில்லை. நானும் கேட்பதில்லை. இல்லாத ஒன்றை என்னவென்று நான் கேட்பேன்!
எனக்கு பாடல்கள் பிடிக்கும். பாடவும் பிடிக்கும். என் மடியில் சாய்ந்து ரெண்டொரு வரிகள் பாட சொன்னால் தான் என்னவாம்! எனக்கு கவிதை பிடிக்கும். கவிதையும் எழுதுவேன். எழுதிய வரிகளுக்கு கொஞ்சம் சபாஷ் போட்டால் தான் என்னவாம்?
சாப்பாடு மேஜையின் சுவரில் வரைந்து இருக்கும் ஆயில் பெயிண்டிங் நான் வரைந்தது தான் என்றேன். உனக்கு வரைய வருமா என்று ஒரு ஆச்சரியக்குறி தோன்றியதோடு சரி. ரொம்ப நல்லாயிருக்கு என்று சொன்னால் வாயில் இருந்து முத்து கொட்டிவிடுவது போல நகர்ந்து விடுவாய்.
ப்ரியமானவர்களின் பாராட்டுகளை விட பெரிய சன்மானம் எதுவுமில்லை. ஒருநாளும் நீ அந்த சன்மானத்தை எனக்கு தந்ததே இல்லை.
கடந்த காதலர் தினத்தில் உனக்கு பரிசளிக்க ஒரு ரோஜாவை வாங்கியிருந்தேன். இதெல்லாம் எதற்கு என்றாய்! உன்மீதான காதலை கொண்டாட இதுப்போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தேவைதானே என்பதும் உனக்கு புரியவில்லை. இப்போது உன் முத்தங்கள் கூட எனக்கு பிடிப்பதில்லை. அதில் பகலில் சிகரெட் நாற்றமும் இரவில் விஸ்கி நெடியும் வருகிறது. எதற்கு இந்த பழக்கம் என்றேன்! இதுவரை பதில் இல்லை.
தினமும் ஒரு பொடி நடை வேண்டும் என்றேன். நேரமில்லை என்கிறாய். மாதத்தில் ஒரு நாள் ஒரு தூர பயணம் அழைத்து போ! வெறும் ஜன்னலில் எவ்வளவுதான் வேடிக்கை பார்ப்பது! மனம் ஒரே விஷயத்தில் குழம்பி கூடு கட்டுகிறது.
ஹோலியின் போது உன்மீது கொட்டிய வண்ணங்களை தூசு போல தட்டிவிட்டு உன் வேலை பார்க்க போகிறாய். அப்போது நான் வண்ணமிழந்து விட்டேன். தினமும் நான் போடும் கோலம் தாண்டிதான் உன் பைக் எடுத்து உதைக்கிறாய். ஒருநாளும் அதை அழகு என்று ரசித்தது இல்லை.
நிறைய புறகணிப்புகளுக்கு சொல்லப்படுகின்ற சமாதானங்கள் என்ன தெரியுமா? எனக்கு ஆயிரம் வேலைகள். ஏகப்பட்ட பிரச்சனைகள்! ஆனால் எனக்கு நீயொன்று தானே! நீ மட்டும் தானே. எனக்கான ஆறுதலை வேறு எங்கு தேடுவது?
இப்போது கூட எனக்கு பேஸ்புக்கில் சர்வதேச பெண்கள் தின நல்வாழ்த்துகள் குவிகிறது. இன்னும் கூட உன் வெளிச்சம் என் பாதையில் விழவே இல்லை.
(இதோ என் முதல் அடியை 👣 எடுத்து வைக்கிறேன் நான் நீயாக, நீ நானாக மாற…..நான் உன் அடிமை அல்ல, புராண கண்ணகியும் அல்ல, பாரதியின் புதல்வி)