வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை முறைமையையும் நிரந்தரமாக யார் மாற்றிடப் போகின்றார்கள்?
இந்த சிறுவனின் படம் வேறு எந்த நாட்டிலும் எடுக்கப்பட்ட படம் அல்ல. எங்களுடைய தாயகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இந்த சிறுவனின புகைப்படத்தை பொதுவெளியில் பகீர்வதற்கு மனம் வருந்துகின்றேன். பிழை இருந்தால் பொறுத்துக் கொள்ளவும். சொல்ல வேண்டிய சில விடயங்களைச் சொல்லாமல் கடந்து போக முடியாது
கடந்த வாரம் யாழ்.எய்ட் கிழக்குக்கான இடர்கால மனிதாபிமான உதவிகளின் முதற் கட்டத்தினை மேற்கொண்டிருந்தது. இப் பணிகளை முடித்து வந்து கொண்டு இருந்தோம். வரும் வழியில் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் கதிரவெளிப்பகுதியில் வீதியோரங்களில் சிறு கற்களை உடைத்துக்கொண்டு இருந்தவர்களைக் கண்டவுடன் நண்பன் கமலக்கண்ணன் வாகனத்தை நிறுத்தும்படி கூறினான்.
ஒரு மரத்தின் கீழ் ஒரு 75 வயதான ஒரு அம்மா, கணவனால் கைவிடப்பட்ட தனது மகள் மற்றும் தன்னுடைய மகளின் மகள் ஆகியோர் இருந்தனர். அந்த வயதான அம்மா, சிறு வயதான தனது பேர்த்தி சேகரித்து வரும் கற்களை ஒரு சிறு சுத்;தியலால் சிறு சிறு கற்களாக உடைத்து ஒரு இடத்தில் சிறிது சிறிதாக சேமித்துக் கொண்டிருந்தார்.
இவ்வாறு உடைத்த கல் சேர்க்கப்பட்ட ஒரு ரக்ரர் லோட் ஆன பின்னர் அதனை 6000 ரூபாவுக்கு விற்கின்றார்கள். ஆனால் ஒரு ரக்ரர் லோட் கல்லு உடைத்து சேமிப்பதற்கு ஒரு மாதகாலம் ஆகுமாம் அந்த வயதான தாய்க்கு. இதுவே தினமும் அவர்களின் வாழ்வாதாரம்.
அவர்களுக்கு சற்றுத் தொலைவில் இன்னொரு குடும்பம் தந்தையுடன் படத்தில் உள்ள அந்த சிறுவனும் கல்லுடைத்துக் கொண்டிருந்தான். தாய் கல்லுடைக்கின்ற கணவனுக்கும் தன் சிறு மகனுக்கும் தேனீர் ஆற்றிக் கொண்டு இருந்தாள். அருகில் அவர்கள் வீட்டு நாய்யும் படுத்திருந்தது.
கற்கை நன்றே கற்கை நன்றே புச்சைபுகினும் கற்கை என்றே என்று உரைக்கின்ற எம்மால் கல்லுடைக்கும் அந்த சிறுவனிடம் கல்வி பற்றி கதைக்கவே மனம் வரவில்லை. அவன் கண்களில் இருந்த ஏக்கம் முகத்தில் இருந்த கல்லின்தூசுகள் அனைத்தும் எங்களுடைய முகத்தில் கரிபூசியது போல் இருந்தது.
உலகப்போர் ஒன்றிலே போரின் கொடுமை தாங்காமல் ஓடி வந்த ஒரு பிள்ளையின் புகைப்படம் போரின் கொடுமையை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டியது போருக்குப் பிற்பாடும் எங்களுடைய சமூகம் இருக்கின்ற நிலையை இப்புகைப்படம் சுட்டிக்காடுகின்றது.
60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறாக தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஒட்டு மொத்த குடும்பம் குடும்பமாக வீதியில் இருந்து உழைக்கின்றார்கள். இவர்களுக்கு உதவி செய்வதற்கும் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கும் வானத்தில் இருந்து தேவதைகள் வரப்போவதில்லை. இந்த மண்ணில் பிறந்த நாங்கள் ஒவ்வவொரு வரும் தான் இவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும். அதுவே எங்களுக்கு இருக்கின்ற பொறுப்பும் கடமையும்.
ஒரு மாதத்திற்கோ அல்லது இரு மாதத்திற்கோ தேவையான உலர் உணவுகளை அடுத்து வரும் நாட்களில் யாழ்.ஏய்டால் வழங்கிட முடியும் அதை வழங்கும். ஆனால் அவர்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை முறைமையையும் நிரந்தரமாக யார் மாற்றிடப் போகின்றார்கள்? அந்த பொறுப்புக்குரியவர்கள் யார்? என்ற விடை தெரியாத பல வினாக்கள் எம்மிடம்
இலையுதிர்காலம் வந்தால் துளிர்காலம் வராமலா போகப்போகுது என்றுரைப்பது இவர்கள் வாழ்வில் எப்போது சாத்தியமாக போகின்றது.