வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் – தலைவரை புகழும் சரத் பொன்சேகா
வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால், அவர் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கருணா போன்றவர்கள் தற்போது சுதந்திரமாக அரசியல் செய்கின்றனர் என்றும் இவ்வாறு தற்போது பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் அவரும் பிரபல நபராக இருந்திருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு அவ்வாறு உயிரோடு இருந்திருந்தால் வடக்கினையும் கிழக்கினையும் ஆளும் நிலையினை அரசியல் ரீதியாக அவர் இணைத்திருப்பார் என்றும் அதற்கு அப்போதைய அரசியல்வாதிகள் அனுமதி வழங்கி இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை சரணடைய ஏதுவாக, சில வெளிநாட்டு தூதர்கள் போர்நிறுத்தத்தின் சாத்தியம் தொடர்பாக ஆராய்ந்தபோதும் பிரபாகரனை உயிருடன் பிடிக்குமாறு அரசாங்கம் ஒருபோதும் தன்னிடம் கேட்டகவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்தார்.
போரின் இறுதிக்கட்டம்வரை பிரபாகரன் களத்தில் இருந்தார் என்றும் தீவிரவாதியாக இருந்தாலும் ஒரு தலைவனாக இறுதிவரை போரிட்டதையிட்டு ஒரு இராணுவ அதிகாரியக தான் மதிப்பளிக்கின்றேன் என கூறினார்.
மேலும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க இராணுவம் தவறியிருந்தால், எதிரி ஈழத்தை அடைந்திருப்பார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பல சந்தர்ப்பங்களில் 300 முதல் 400 ஆட்பலங்களை வைத்துக்கொண்டு தாக்குதலை மேற்கொண்டார். இவ்வாறு சிறிய வாய்ப்புக்கள் கிடைத்தாலும் தாக்குதலை மேற்கொண்டு இலக்கினை நோக்கி நகர முயற்சிப்பார் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை இறுதி யுத்தத்தின்போது கடற்பரப்புக்கள் கடுமையான பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டது என்றும் எனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் எந்தவொரு உயர் அதிகாரிகளும் தப்பிச்ச சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.