Featureமுகநூல்

இதுதான் வாழ்க்கை!… முனைவர். கிருஷ்ண திலகா!

அவர் ஒரு மிகப்பெரிய பிசினஸ்மேன். சின்னதாக ஒரு மளிகைக்கடையில் ஆரம்பித்த தொழில், ஜுவல்லரி ஷாப், ஹோட்டல், துணிக்கடை, டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்… என விரிந்திருந்தது.*

நகரத்தில் பெரும் செல்வந்தர், கௌரவத்துக்குரியவர் என்ற பெயரையெல்லாம் பெற்று விட்டார்.

அன்பான மனைவி, இரு ஆண் மகன்கள். ஆனாலும் அவருக்கு நேரமில்லை. யாரையும் நம்பி பிசினஸை ஒப்படைக்க மனமில்லை.

விடிவதற்கு முன் தொடங்கி விடும் ஒரு நாள் பொழுது, நள்ளிரவில் தான் அவருக்கு முடிகிறது.

மனைவி, பிள்ளைகளுடன் உரையாடவோ, பல நேரங்களில் சேர்ந்து சாப்பிடவோ கூட நேரமில்லாமல் தான் அவர் `பிசினஸ், பிசினஸ்…’ என்று அலைந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பிய போது மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்கக் காத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.

வீட்டுப் பணியாளர் தான் கதவைத் திறந்தார். அவர் முகக்குறிப்பை உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார்…

`ஐயா… அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு. ஹாஸ்பிட்டலுக்குப் போய் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் வந்தாங்க. ரூம்ல தூங்குறாங்க…’’

`ஏன்… என்ன ஆச்சு?’’

பிரஷர்னு டாக்டர் சொல்லியிருக்காங்க, ஆனா, பயப்படத் தேவையில்லையாம். மருந்து மாத்திரை சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிடுமாம்.’’

`எனக்கு போன் பண்ணிச் சொல்ல வேண்டியது தானே?’’

`நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். `ஸ்விட்ச்டு ஆஃப்’னே வந்துச்சாம்.’’

அப்போது தான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு தன் மொபைல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.

அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். அந்தப் பெண்மணி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவர், மனைவியின் தலையை ஆதுரமாக வருடிக் கொடுத்தார். சே… இவளை கவனிக்காமல் விட்டு விட்டோமே!’ என்கிற வருத்தம் எழுந்தது.

அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்திருந்த நாள்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வர முயன்றார்.

அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே!. தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்தே வெகு நாள்கள் ஆகிவிட்டது என்பதை நினைத்ததும் அவருக்கு `திடுக்’கென்று இருந்தது.

அறையை விட்டு வெளியே வந்தார். அடுத்த அறைக்கதவைத் திறந்து பார்த்தார். அவருடைய இரு மகன்களும் படுக்கையில் படுத்திருந்தார்கள்.

சத்தமில்லாமல் கதவை மூடினார். மாடியிலிருந்த தன் தனி அறைக்குப் போவதற்காகப் படிகளில் ஏறினார்.

`ஐயா… சாப்பிட ஏதாவது வேணுமா?’’ பணியாள் கேட்டார்.

வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார்.

உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார். `இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோசனம்… நாம் யாருக்காக வாழ வேண்டும்…

பிள்ளைகள், மனைவி இவர்களோடு கூட நேரத்தைச் செலவழிக்க முடியாமல் அப்படி என்ன பிசினஸ்…’ என்னென்னவோ யோசனை வந்தது.

கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். `இன்று தான் கடைசி. இன்றோடு பிசினஸிலிருந்து ஓய்வு பெற்று விட வேண்டும். இனிமேல் வாழ வேண்டும். எனக்காக, என் மனைவிக்காக, என் குடும்பத்துக்காக…’

அப்போது தான் கட்டிலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்திருப்பது அவருக்குத் தெரிந்தது. `கதவைத் தாழ்ப்பாள் போட்டு விட்டுத் தானே வந்தோம்..! இது யார்… எப்படி உள்ளே வந்தார்?’

யார் நீங்க… எப்படி உள்ளே வந்தீங்க?’’ என்று கேட்டார்.

அந்த உருவம் சொன்னது… “நான் மரண தேவதை. உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்.’’

அவர் திடுக்கிட்டுப் போனார்…..

`ஐயா சாமி… நான் இப்போ தான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். இப்போ போய் என்னை கூட்டிட்டுப் போக வந்திருக்கீங்களே..! கொஞ்சம் அவகாசம் கொடுங்க!’’ –

அவர் எவ்வளவோ பேசி, மன்றாடிப் பார்த்தார். தன் செல்வத்தையெல்லாம் கொடுப்பதாகச் சொல்லிப் பார்த்தார்.

மரண தேவதை அவருக்கு செவி சாய்க்க மறுத்தது. அங்கிருந்து நகராமல், அவரை அழைத்துச் செல்ல ஆணியடித்தது போல் அப்படியே உட்கார்ந்திருந்தது.

ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. என் மனைவி, குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு.

அதை முடிச்சிடுறேன். ரொம்ப நாள் பார்க்காம இருந்த என் நண்பர்கள், உறவினர்களைப் பார்த்துடுறேன்…’’ என்று கேட்டார்.

அதற்கும் மரண தேவதை ஒப்புக் கொள்ளவில்லை.

அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார்… “சரி… ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீங்களா? உலகத்துக்கு நான் ஒரு குறிப்பு எழுதணும்…’’

மரண தேவதை ஒப்புக் கொண்டது.

அவர் இப்படி எழுதினார்……

`உங்களுக்கான நேரத்தை சரியான வழியில் செலவழித்து விடுங்கள்.

என்னுடைய அத்தனை சொத்துகளை ஈடாகக் கொடுத்தாலும் கூட எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை.

இது ஒரு பாடம். எனவே, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்!’

அப்போது யாரோ கதவை பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் திடுக்கிட்டு கண் விழித்தார்.

விடிந்து வெகுநேரமாகி விட்டிருந்தது. அவர் எழுந்து போய்க் கதவைத் திறந்தார். பணியாள் தான் வெளியே நின்றுகொண்டிருந்தார்.

`ஐயா… ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க. நீங்க திறக்கலையா..? பயந்துட்டேன். அதான் கொஞ்சம் பலமாகத் தட்டிட்டேன்.’’

அவர் அவசரமாகத் திரும்பி தன் பெட்டுக்கு அருகேயிருக்கும் மேஜையைப் பார்த்தார்.

அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை. பேனாவும், எழுதப்படாத வெள்ளைத் தாளும் தான் இருந்தன.

வாழ்க்கையில் எதை இழக்கக் கூடாது?. யதார்த்தம் சொல்லும் கதை!

நேற்று என்பது போய் விட்டது; நாளை, இனிமேல் தான் வர வேண்டும்; நமக்கிருப்பது இன்று மட்டும் தான். நாம் அதை வாழ்ந்து பார்ப்போம்!’ –

வாழ்வின் யதார்த்தத்தை அழகாகப் புரிந்து கொள்கிறார்.

வாழ்வின் ஓட்டத்தோடு இணைந்து மனிதன் வாழ்க்கையை அனுபவித்து ……வாழ்ந்து விட வேண்டும் என்பதை உணர்த்தும் கதை .. இது…………..!

வாழ்க வளமுடன்..!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.