பலரையும் விவசாயத்தின் பக்கமாகத் திருப்பியுள்ளது. ஒரு யுகப் புரட்சி வரப்போகிறதோ! (எவரைப்பார்த்தாலும் பயிர்களை நடுவதிலும் தோட்டங்களை உருவாக்குவதிலுமே அக்கறையாக இருக்கிறார்கள்)
=+=
நகரங்களின் கதவுகள் மூடப்படுவதில்லை. எங்கிருந்தும் எவரும் எப்போதும் வரலாம், போகலாம் என்பதெல்லாம் பொய்த்து விட்டன. இப்பொழுது நகரங்களின் கதவுகளெல்லாம் மூடப்பட்டு விட்டன. தெருக்கள் எல்லாம் வெறிசோடிக் கிடக்கின்றன. வீடுகளில் சனங்கள் முடங்கி விட்டனர். இது பூட்டப்பட்ட நகரம் என்கிறார் ஒரு எழுத்தாளர்.
=+=
எந்தப் பெரிய ஆயுதமோ அணுக்குண்டோ வைத்திருந்து என்ன பயன்? இப்போது தேவையாக இருப்பது மாஸ்க்கும் வென்ரலேற்றருமே (Mask and Ventilator) என்று கவலைப்படுகிறார் கனடாவிலிருக்கும் நண்பர் ஒருவர்.
=+=
கொரோனா வைரஸ் எல்லோரையும் நிர்க்கதியடைய வைத்திருக்கிறது. வல்லரசு, வளர்முக நாடு, பேரரசு, சிறிய தேசம், பணக்காரர், ஏழைகள், மேற்கு – கிழக்கு, கறுப்பு, வெள்ளை, சிங்களவர்- தமிழர், சீனர் – இந்தியர் என்ற எந்த விலக்குமில்லாமல் எவரையும் தீண்டக் கூடிய வலி சாபம்.
=+=
விவசாயிகளின் பாடுகளை யார்தான் இதுவரை பொருட்படுத்தினார்கள். இப்பொழுது அவர்களே காத்தற்கடவுள்களாகி விட்டனர்.
=+=
மீனவர்களும் கால்நடைகளை வளர்ப்போரும் விவசாயிகளும் இல்லாத உலகம் ஒன்றை இப்பொழுது கற்பனை செய்து பாருங்கள்.
=+=
சில வீடுகளில்இரண்டு மூன்று கார்கள் கூட உண்டு. நான்கைந்து கணினிகள், கைத்தொலைபேசிகள், ஆளுக்கொரு அறை எனப் பலதும் உண்டு. சிலருக்கு இரண்டு மூன்று வீடுகள் கூட இருக்கு. ஆனால், ஒரு மாஸ்க்கு அலைய வேண்டியிருக்கு என்கிறார் லண்டன் வாழ் நண்பர் ஒருவர்.
=+=
நம்பினால் நம்புங்கள், இப்பொழுது சக்தி மிக்க நாடுகளின் இன்றைய திருட்டு என்ன தெரியுமா? மாஸ்க்கும் மருந்துப் பொருட்களும் வென்ரலேற்றருமே.
=+=
சீனாவே சரணம்.
உன்னைத் தாழ் பணிந்தோம்.
எம்மைக் காத்தருள்க மஞ்சள் தெய்வமே!
– அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம்.
=+=
நகரங்களின் இன்றைய இனிய இசை பறவைகளின் சங்கீதம் என்றானது!
=+=
தனித்திருத்தல்
வீட்டுச் சிறை
எல்லாம் போதுமடா சாமி.
ஆங் சான் சூ கியி(Aung San Suu Kyi) க்கு இன்னொரு தடவை நோபல் பரிசு கொடுக்கலாம் என்கிறார் ஒரு நண்பர்.
=+=
இப்படியொரு நீண்ட ஊரடங்கு – உலகடங்கு – வாழ்வு ஐம்பது ஆண்டுகளில் வந்ததில்லையாம். உண்மையா?
=+=
ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் போர்க்களங்களில் கூட நாளொன்றுக்கு இத்தனை படையினர் பலியானதில்லை. ஒரு வைரஸ் தொற்றுக்குப் பயந்தே சாகவேண்டியிருக்கிறது என்று கவலைப்படுகிறாள் அமெரிக்க பெண்ணொருத்தி.
=+=
சுடுகின்ற ஆமிக்கே பயமில்லாமல் சுழித்துக் கொண்டு திரிந்த எங்களுக்கு இந்தச் சுடாத ஆமியென்ன பெரிசா? என்று சிரித்துக் கொண்டு போகிறார் சின்னத்துரை அண்ணர்.
=+=
கொரோனா நாட்டுக்குள் புகுந்து விடும் என்ற எச்சரிக்கையில் கடலோரக் காவலில் கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு (கண்காணிப்பு) நடவடிக்கை.
=+=
அப்பாடா.. இதே போல உலகம் இருந்தால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்டு விடும். உயிரினங்களின் அச்சம் குறையும். இயற்கையின் அழகு இன்னொரு மடங்கு புரியும்.
=+=
இரைச்சலும் அலைச்சலுமில்லாத வாழ்க்கை கிடைத்ததற்காக இந்த நாட்களுக்கு நன்றி.
=+=
மனிதர்கள் ஒரு மோசமான பிராணிகளே. இந்தப் பிரபஞ்சத்தையே அடக்கியாள முற்பட்டவர்களல்லவா! ஆனால், அவர்களால் என்னதான் செய்ய முடியும்? என்றுதான் தெரிந்து விட்டதே.
=+=
எல்லாக் கணக்குகளும் எப்படி ஒரேயடியாகப் பிழைத்தன?