கல்…புல்…காகம்!…41 (நாவல்)…..சங்கர சுப்பிரமணியன்.
மனோகரன் அப்படிச் சொன்னதும் விமலாவும் சளைக்காமல் அவனுக்கு வெறுப்பேற்றினாள்.
அப்படியா? நல்லதா போயிற்று அம்மாவும் அதைத்தான் சொன்னாள். தூரத்து சொந்தத்தில்
இருந்து நல்ல சம்பந்தம் வந்திருப்பதாக. நீ உன் அம்மாவிடம் சம்மதம் கேட்டு அது நடக்கும்
வரை காத்திருப்பதைவிட இந்த இடம் நாளைக்கே திருமணம் என்றாலும் தயராக இருக்கிறார்கள்.
நீ இப்போது சொன்னதைக் கேட்டதும் எனக்கும் பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப்போல்
இருக்கிறது என்றாள்.
என்னடா இது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாகி விட்டதே என்பதை உணர்ந்த
மனோகரன்,
“இதுக்குத்தான் ரெம்பவும் நல்லவனாக இருக்கக்கூடாது. நான் அப்படியெல்லாம் நடந்து
கொள்ளாததால்தான் நீ இப்படியெல்லாம் பேசுற” என்றாள்.
“ஓ அப்படியெல்லாம் நினைப்பிருக்கோ. அப்படியெல்லாம் நடந்துடுவீங்களோ. மூஞ்சிய பார்த்தா
எங்களுக்கு தெரியாதா? சமத்துப்பையன் என்பதால்தான் பழகினோமாக்கும்”
“சரி, சரி, சாரி. ஒருத்தரை ஒருத்தர் சீண்டியது போதும். நானே விசயத்துக்கு வருகிறேன்.” என்று
சொல்லி சீண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
இருவரும் சிரத்தையாக பேச ஆரம்பித்தைத் தொடர்ந்து மனோகரன் தன் அம்மா திருமணத்துக்கு
சம்மதமளித்ததை சொன்னான். அதைக்கேட்டதும் விமலா ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றாள்.
தன்னைத்தானே கிள்ளிப்பார்த்து வலியால் “ஆ” என்ற சத்தத்துடன் நடப்பதெல்லாம் உண்மைதான்
என்பதை உணர்ந்தாள். அதனால் அவன் மேலே அவளுக்கு கோபம் வந்து,
“என்ன மனுசன் நீ. இந்த மகிழ்ச்சியான செய்தியையல்லவா நீ முதன்முதலில் சொல்லியிருக்க
வேண்டும்” என்றாள்.
“மன்னிச்சுடு விமலா. உனக்கு ஒரு எதிர்பாரா மகிழ்ச்சியை கொடுக்கவேண்டும் என்பதால்தான்
இப்படிச் செய்தேன்” என்றாள்.
“மன்னிப்பாம், மன்னிப்பு. யாருக்கு வேணும் உன் மன்னிப்பு. அதைக்கொண்டு குப்பையில போடு.
இந்த மாதிரி நான் நடந்திருந்தா உனக்கு எப்படி இருக்கும்? நினைச்சுப்பாரு”
“சரி…சரி, அதான் மன்னிப்பு கேட்டுட்டேனே, வேணும்னா அதுக்கு தண்டனையா உன்னை தூக்கிக்
கொண்டு நம்ம பள்ளிக்கூட மைதானத்தை ஒரு தடவை வேண்டுமானால் சுற்றிவராட்டுமா? டீல்
ஓகேயா?” என்றான்.
“ரெம்பவும்…ஆசைதான் உனக்கு. இதுக்கு பேரு தண்டனையா இல்லை தண்டனைங்கிற பேருல
உன் ஆசையை சொல்றியா?” என்று அவள் சொன்னதும் இருபக்கமும் சிரிப்பு அடங்க சற்று நேரம்
ஆகியது.
அதன்பின் அவள் அவனுக்கு தந்து மகிழ்ச்சியை தெரிவித்து அதற்கு நன்றியாக கைபேசியிலேயே
கொடுக்க அவனும் பெற்றுக்கொண்டு பதிலை அனுப்பிவைத்தான். அதன்பின் விமலா இந்த
மகிழ்ச்சியான செய்தியை அவளது அம்மாவிடம் சொல்லிவிட்டு மேற்கொண்டு நாம் செய்ய
வேண்டியதை நம் பெற்றோர்களிடமே விட்டு விடுவோம் என்றாள். என்னதான் நாம் இருவரும்
காதலித்து இருந்தாலும் நம் திருமணத்தை அவர்களிடமே விட்டு நடத்தி வைக்கச் சொல்வத்குதான்
முறை என்றாள். நாம் இருவரும் எதையும் மறைக்காமல் நம் காதலை நம் பெற்றோரிடம் சொன்னோம்.
அவர்களும் பத்தாம் பசலித்தனமாக இல்லாமல் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் நம் காதலை ஏற்றுக்
கொண்டனர். இடையில் என்னன்னவோ நடந்துவிட்டது. இப்போது உங்கள் அம்மாவின் சம்மதமும்
கிடைத்து விட்டது. சரி, இந்த நல்ல செய்தியை மிகவும் ஆவலோடு என் திருமணத்துக்காக
காத்திருக்கும் அம்மாவிடம் சொல்லவேண்டும். வைக்கட்டுமா? என்று அவன் சம்மதத்துடன்
இணைப்பைத் துண்டித்தாள்.
இப்போது அவளது மனம் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. தன் கால்களுக்கு அடியில்
தரை இருக்கிறதா? அல்லது காலின் அடியில் மேகங்கள் ஊர்ந்து செல்ல வானத்தில் மிதக்கிறோமா?
என்று எண்ணம் தோன்ற குதித்து ஆடினாள். இதைப்பார்த்துக் கொண்டிருந்த விமலாவின் தாய்
அடியே விமலா என்ன ஆயிற்று உனக்கு? சின்னக் குழந்தைபோல் வீட்டில் துள்ளிக் குதிக்கிறாய்.
அப்படி என்ன கொண்டாட்டம் அது? வயதுக்கு வந்த பெண்ணா லட்சனமா இல்லாமல் குதிக்கிறாய்.
உன் வயது பெண்களுக்கெல்லாம் கல்யாணமாகி கையில் ஒருபிள்ளையும் இடுப்பில் ஒரு
பிள்ளையுமாய் வலம்வந்து கொண்டிருப்பது உனக்கு கொஞ்சாமாவது மனதை உறுத்தினால்
இப்படி குதிப்பாயா? என்றாள்.
_சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்)