நீதானே என் பொன்வசந்தம் – 03… ( நாவல் )
”இதை ஒருக்கா வச்சு விடுறிங்களா”
கவிதாதான் கேட்டாள். கையில் சந்தணம் இருந்தது. புலிகளின் மண்டைதீவு ஊடறுப்பினால் ஏற்பட்ட சூழ்நிலை சிக்கல்களுக்கு பின்னர் இன்றுதான் கோவிலில் சந்தித்திருக்கிறோம்.
“அதுக்கு இன்னும் காலம் இருக்கு. இப்ப சந்தணம்தான் வைக்கிறிங்க..”
கவிதா சிரித்துக்கொண்டே சொன்னாள். அவள் நெற்றியில் குங்குமம் இடுவதாக நான் செய்த கற்பனையை எப்படித்தான் புரிந்துகொண்டாளோ. இருவரும் சிரித்துக்கொண்டோம். அடுத்த நாளைய சந்திப்பு, அன்று பேசப்போகும் வார்த்தைகள், காதல், திருமணம், முதலிரவு, குழந்தைகள், அவர்களின் எதிர்காலம்…. இன்னேரன்ன கனவுகள், கற்பனைகள் அத்தனையும் நமக்குள் பகிர்ந்துகொள்வதால் ஒருவரின் எண்ணவோட்டத்தை மற்றவர் புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்கவில்லை போலும்.
கோவில் முன் மண்டபம் வரை யாரும் இருக்கவில்லை. கைகளை கோர்த்தபடி நடக்க ஆரம்பித்தோம். இன்று என்னால் சாப்பிடமுடியும், நிம்மதியாக தூங்கமுடியும். இருவார தவிப்புக்கு பின்னர் என் கவிதாவை பார்த்து பேசிவிட்டேன் அல்லவா !
********************
”தம்பி… இது உங்கட வாழ்க்கை, நீங்கதான் முடிவெடுக்கோணும் எண்டு எத்தினை நாளுக்குத்தான் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறது. இப்பிடியே தொடர்ந்து இருக்கேலாது. கெதியா ஏதும் முடிவெடுங்கோ…”
நித்யாவின் அம்மா குரலில் இருந்தது கோபமா, கவலையா, அழுகையா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பாவம் அவர். அப்பா இல்லை என்று நித்யாவை செல்லமாகவே வளர்ந்தவர். இப்படி ஒரு நிலை அவளுக்கு நடக்கும் என்று கனவில்கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்.
கையில் தேநீருடன் கிச்சனில் இருந்து வந்த நித்யாவின் கோப பார்வை அவரை எழுந்துபோக வைத்துவிட்டது.
“அவோ இப்பிடித்தான் ஏதும் சொல்லிக்கொண்டிருப்பா வருன். நீ எதுவும் யோசிக்காத. நானோ அபியோ உனக்கு இடைஞ்சலா இருக்கமாட்டம். நீ கவிதாவை தேடுற வழியை பார்”
தேநீரை என் கையில் கொடுத்துவிட்டு அபியை தூக்கிக்கொண்டாள். அபியையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படி நித்யா அவ்வளவு இலகுவாக உன்னால் சொல்லிவிட முடிகிறது. கவிதா என் உயிர், என் உலகம்.. அவள் இல்லாத பொழுதுகளை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இப்போது இந்த உலகத்தில் உன்னையும் அபியையும் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை என்பதும் !
“இனி நான் கவிதாவை தேடப்போறதில்லை நித்யா…”
நித்யா எதுவும் பேசாமல் தலையை குனிந்துகொண்டாள். கவிதாவை தேட உறுதுணையாக இருப்பதாக சொல்லிவிட்டு தானே இருவருக்குமிடையில் தடையாய் வந்துவிட்டதாக அவளும், அவளது வாழ்வை கேள்விக்குறியாக்கிவிட்டதாக நானும் பரஸ்பர குற்றவுணர்ச்சியை கொண்டிருந்தோம். அபி அழ ஆரம்பித்திருந்தாள். நாம் அமைதியாகிவிடும்போது ஏதாவது செய்து நம்மை வழமைக்கு மீட்பது அபியின் வேலையாகிவிட்டது.
“சொறி வருன்….”
“நித்யா…. ப்ளீஸ். கவிதா பற்றிய கதைய இத்தோட விடுவம். அவளை கண்டுபிடிப்பன் எண்ட நம்புக்கையும் எனக்கு இல்ல” வார்த்தையை உச்சரிக்கும் ஒவ்வொரு தடவையும் செத்து பிழைப்பது போன்ற உணர்வு. கவி.. நீ எங்க இருக்கிற…!
நித்யா எதுவும் பேசாது எனது இடது கையை பார்த்தாள். சில வருடங்களுக்கு முன்னர் கவிதாபிரிந்துபோன நினைவில் கையை ப்ளேடால் கீறிக்கொண்டதும் அதற்காக நித்யா திட்டியதும் நினைவு வந்தது. அவளுக்கும் அதுதான் நினைவு வந்திருக்கவேண்டும். என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள் சற்று அருகில் வந்து இருந்தபடியே அபியை என்னிடம் கொடுத்தாள்.
என்னை பார்த்து சிரித்துக்கொண்டே என் மூக்கை பிடித்து கிள்ள ஆரம்பித்தாள் அபி !
********************
“இண்டைக்கு இங்கயே நிக்கிறியா வருன்…”
நித்யா எப்போதுமே தனக்கு வேண்டும் என்று எதையும் கேட்டதில்லை. எப்போதாவது ஒரு தடவைதான் கேட்பாள். இப்போது என் அபிக்குட்டியை வயிற்றில் சுமந்தவள் கேட்கிறாள். எப்படி மறுக்கமுடியும்.
“ம்ம்.. நிக்கிறன் நித்யா”
”வேலைக்கு லீவு சொல்ல தேவையில்லையா”
கட்டிலில் சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து சற்று தள்ளி அமர்ந்துகொண்டாள். “இதில இரு வருன்”.
“ஏதும் வாங்கனுமா நித்யா…?”
“ஒண்டும் தேவையில்லடா. நீ இதிலயே இரு ப்ளீஸ்”
அதற்குமேல் நான் எதுவும் பேசவில்லை. அருகில் உட்கார்ந்து அவள் கைகளை பற்றிக்கொண்டேன். அமைதியாக என்னோடு நெருங்கி அமர்ந்துகொண்டவள் என் கைகளை எடுத்து அவள் வயிற்றின் மீது வைத்து தன் கைகளோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள். என் குழந்தையை மெல்ல தடவிக்கொண்டேன். சில மணித்துளிகள் மௌனமாக எம்மோடு கரைந்துகொண்டிருந்தது. வார்த்தைகள் அங்கே தேவைப்படவில்லை.
நீ… நான்.. ஒரு தேவதை !