‘கறுத்தக்கொழும்பான்’!… ஆசி கந்தராஜா.
இது நான் பல்கலைக் கழக பணி நிமிர்த்தம் எதியோப்பிய தலைநகர் அடிசபாபாவுக்குச் சென்றபோது நடந்தது.
அபேரா, பல்கலைக்கழக கல்விக்கு சர்வதேச நிதி வழங்கும் நிறுவனமொன்றின் தலமை அதிகாரி. எதியோப்பிய பாரம்பரிய உணவு உண்ண, என்னை அவரது வீட்டுக்கு அழைத்திருந்தார். நோத்துடனே அவரது அலுவலகத்துக்குச் சென்றுவிட்டேன். அபேராவுக்கு அங்கு மூச்சுவிட முடியாத வேலை. மனிசன் பாவம். பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார்.
ஒருவழியாக அலுவலகம் முடிந்து இருவரும் வெளியே வந்தால் அடிசபாபா நகர் வீதியில் கிறீஸ்தவ கோவில் ஒன்றின் திருவிழா ஊர்வலம், பயங்கர வாகன நெரிச்சல். அபேராவின் வீட்டுக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
அடக்கமான வீடு. வீட்டின் வெளி விறாந்தையில் யேசுபிரானின் திருச்சொரூபம். அருகே ஒரு சிலுவை. வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக சிலுவையின் முன் மண்டியிட்டு கண்மூடிச் சில நிமிடங்கள் பிரார்த்தித்தார்.
சகல அதிகாரங்களுடன் நல்ல நிலையில் வாழ்ந்தாலும், நல்ல கடவுள் பக்தியுள்ளவர் என்று எண்ணிக் கொண்டேன். தந்தையைக் கண்டதும் குழந்தைகள் ஓடோடி வந்தார்கள். மகன் தான் செய்த கணக்கை காண்பித்தான். மகள் ஆபிரிக்க ஆரம்ப பாடசாலையில் தான் வரைந்த படங்களையும் அன்று நடந்தவற்றையும் ஆதியோடு அந்தமாக விபரித்தாள். மனைவி மகிழ்ச்சியுடன் எதியோப்பிய முறையில் தயாரிக்கப்பட்ட கோப்பியும் பலகாரங்களும் எடுத்து வந்தார். அபேராவின் தாயார் சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்து எனக்கு வணக்கம் கூறினார். அபேராவும் எல்லோருடனும் கலகலப்பாக பேசி மகிழ்ச்சியாக இருந்தார். தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்தார்.
‘இவ்வளவு வேலைப்பளுவுக்கு மத்தியிலும் வீட்டில் உற்சாகமாய் இருக்கிறீர்களே? எப்படி இது சாத்தியமாகிறது’ எனக் கதையோடு கதையாக கேட்டேன்.
‘நான் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு சிலுவையின் முன் கண்மூடி பிரார்த்தனை செய்தது, என்னை ஒரு உண்மையான கிறிஸ்தவனாக காட்டியிருக்கும். ஆனால் அதற்குமேல் இன்னுமொரு விஷயமும் உண்டு. எனது மனதை ஒரு நிலைப்படுத்தி கவலை, ரென்ஷன் எல்லாவற்றையும் அப்போது சிலுவலையில் அறைந்துவிட்டு வந்துவிடுவேன். அலுவலக ரென்ஷனை வீட்டுக்கு கொண்டுவருவதால் வீண் பிரச்சனைதான். வீட்டில் யாரும் இயல்பாகப் பழகமாட்டார்கள். வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். எதியோப்பியர்கள் வாழ்க்கையை மிகவும் இலகுவாக எடுத்தக்கொள்வார்கள். வீடு என்பது சந்தோசமாக இருக்க வேண்டிய இடம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். எமது நாட்டில் வறுமை, பஞ்சம், வியாதி எனப் பல பிரச்சனைகள் இருக்கலாம். இருப்பினும், உள்ளவற்றுடன் திருப்திப்பட்டு மகிழ்ச்சியாக வாழும் கலையில், நாம் வல்லவர்கள்’ என்றார் அபேரா.
உண்மைதான். எதியோப்பியாவில் பஞ்சம் பட்டினி என்பதற்கு அப்பால் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன. நம்மவர்களுள் எத்தனை பேர் நல்ல ‘மூட்’டில் வீடு திரும்பகிறோம்? ‘Home Sweet Home’ (வீடு இனிமையான வீடு) என்கிற நிறைவினை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் குடும்பங்கள் அரிதாகவே எனக்குத் தோன்றுகிறது.
அபேராவின் வீட்டில் இருந்து எனது ஹோட்டல் அறைக்கு திரும்பும்போது சில எண்ணங்கள் என்னை மொய்த்துக் கொண்டன.
புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலே வாழும் இந்துக்கள், வரவேற்பறையில் அலங்காரத்துக்காக பெரிய குத்து விளக்குகளை வைத்திருக்கிறார்கள். இந்துக்கள் என்பதற்கான ஓர் அடையாளமாகவும் அந்தப் பெரிய குத்துவிளக்குகள் பயன்படுகின்றன.
எதியோப்பியாவில் வாழும் அபேராவைப் போல, நாமும் வீடு திரும்பும் பொழுது, அந்தக் குத்து விளக்குகளுக்கு முன்னால் தரித்து நின்று, எங்கள் அலுவலக ‘டென்ஷன்’ அனைத்தையும் வாசலிலேயே விட்டுவிட்டு, இனிய குடும்ப மணத்தை மட்டும் வீட்டுக்குள் கொண்டு வந்தால் என்ன?
(ஆசி கந்தராஜாவின் ‘கறுத்தக்கொழும்பான்’ நூலிலிருந்து)