சமீபகாலமாக இந்தியாவுக்குள் என்றால் கேரளாவையும், உலகத்தில் என்றால் கியூபாவையும் பற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டிய தேவை எழுந்து கொண்டே இருக்கிறது.
கேரளாவும் கியூபாவும் கம்யூனிசம் என்பதால் மட்டுமல்ல. மிக இக்கட்டான சூழல்களில் கடவுளின் நாடான கேரளாவும், ஃபிடல் காஸ்ட்ரோவின் நாடான கியூபாவும் மக்கள் பிரச்சினையில் நடந்து கொள்ளும் விதம் நாடே போற்றக் கூடிய வகையில் இருக்கிறது. உலகமே வியக்கக்கூடிய நிலையில் இருக்கிறது. மனிதாபிமானத்தின் உச்ச நிலையில் நின்று கொண்டு கேரள அரசும், கியூபா அரசும் செய்து வருகின்ற மக்கள் பணிகள் வரலாற்றுப் பணிகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் நடந்த நிகழ்வுகளை நாம் எடுத்துச் சொன்னால் இங்கே பலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.
நிகழ்வுகளின் தாத்பரியத்தைப் புரிந்து கொள்ளாமல்,
தங்கள் நினைப்புக்கு மாற்றாக வருவதை அங்கீகரிக்க முடியாமல், வயிறுகளில் புளி கரைய, கை நிறைய சகதிகளை அள்ளி அள்ளி நன்மைகளின் மீது வீசுகிறார்கள். ஏனெனில் நாம் மானுட தர்மம் பேசுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு மனுதர்மம் போதும். நான் ஒசத்தி நீ தாழ்த்தி என்று பேசுகிற ஜாதீய வெறி போதும். சரி, அவர்கள் செய்வதை செய்துவிட்டுப் போகட்டும்!
இதோ பாருங்கள்! கொரோனா பிசாசு இந்தியாவில் அறிமுக நிலையில் இருந்த காலத்தில், எல்லாவிதமான முன்னேற்பாடுகளையும் முன்கூட்டியே செய்துவந்த மாநிலம் கேரளம் மட்டுமே. அது எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருந்தது. வெறும் வாய்ச் சவடால்களாக அல்லாமல், மக்களை வீட்டுக்குள் முடங்கி இருங்கள் என்று சொல்லிவிட்டு வாளா இருக்கவில்லை. அன்றாட ஜீவிதத்துக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் மாநில அரசே முன்னின்று செய்தது. வீடுகளில் உள்ளவருக்கு நிவாரணம் செய்தால் போதாதே! தெருக்களையே வீடாக்கி கொண்டவர்களுக்கோ? அவர்களுக்கும் அன்ன ஆகாரங்கள் எட்டிப் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும் எல்லாவற்றையும் செய்த மாநிலம் கேரளா.
அதன் முதல்வராக இருக்கிற நம் அன்புத் தோழர் பினாராய் விஜயன் ஒரு மாநில முதல்வர் என்பதை காட்டிலும், இந்திய மக்களின் மனங்கவர்ந்த முதல்வராக மலர்ந்து கொண்டிருக்கிறார். ஈஎம்எஸ் நம்பூதிரிபாட், அச்சுத மேனன், பிகே வாசுதேவன் நாயர், ஈகே நாயனார், அச்சுதானந்தன் என்ற வரலாற்று புகழ்மிக்க முதல்வர்களின் வரிசையில் முன்னணியில் நிற்கிறார். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து போராட்டங்களினூடே தியாகங்களைச் செய்தவாறு, என்கடன் மக்கள் பணி செய்து கிடப்பதே என்பது போல பணியாற்றும் தோழர் பினராய் விஜயன் லேட்டஸ்ட்டாக செய்திருக்கிற காரியம் என்ன தெரியுமா?
வீடுள்ளவர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் கொரானா காலத்தில் அன்றாட வாழ்க்கைக்கு உத்திரவாதத்தைச் செய்த கேரளா மாநிலம், வாயில்லா ஜீவன்களான பிராணிகளுக்கும், விலங்குகளுக்கும் அன்ன ஆகாரம் அளித்திட ஏற்பாடு செய்திருக்கிறது. தக்கலைத் தோழர் சதன் முகநூலில் இட்ட பதிவு, தோழர் சாகுல் அமீது வழியாக இதோ உங்கள் பார்வைக்கு. நீங்களே படித்துப் பாருங்கள்!
#பகிர்வுப்பதிவு
By Sadan
கேரளாவில்….உணவு கிடைக்காமல் பசியால், தெருவில் அலைந்து திரியும் நாய்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றும், அவைகள் உணவின்றி பசியால் அலைந்து திரிவதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் நேற்று முன்தினம் முதல்வர் பிணராயி விஜயன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது வேண்டுகோள் விடுத்ததை அடுத்து தெருவில் அலைந்து திரியும் நாய்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…
அதேபோன்று சில கோயில்களில், அங்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் உணவுகளை உண்டு வாழும் குரங்குகள், தற்போது பக்தர்கள் வருகை இல்லாததால் உணவு கிடைக்காமல் பசியால் வாடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது…
இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை நோக்கி அவை படையெடுக்க ஆரம்பித்த காரணத்தால் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது….என்பதையும் முதல்வர் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
சம்பந்தப்பட்ட கோயில்களின் நிர்வாகங்கள், கோயில் வளாகத்தைச் சுற்றி வாழும் குரங்குகளுக்கு உணவளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்…
இதனைக் கேள்விப்பட்ட சாஸ்தாங்கோட்டை என்னும் ஊரில் உள்ள, கோவில் அமைந்திருக்கும் பகுதியில் DYFI தோழர்கள் உடனே களத்தில் இறங்கினார்கள்.
சாஸ்தாங்கோட்டை கோயிலை சுற்றி வாழ்ந்து வரும் குரங்குகளுக்கு உணவு ஏற்பாடு செய்து, கோவில் வளாகத்தில் அவைகளுக்கு உணவை இலைகளில் வைத்து பரிமாறினர். அத்துடன் தர்பூசணி ஆரஞ்சு போன்ற பழங்களையும் கொடுத்தனர். கோயில் வளாகத்தில் உணவு கிடைத்ததைத் தொடர்ந்து குரங்குகள் மீண்டும் கோயில் வளாகத்திலேயே வந்து குவியத் தொடங்கியுள்ளன…
அது போல குடியிருப்பு பகுதிகளில் பறவைகளுக்கு உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடு செய்து வைக்கும் நடவடிக்கைகளையும் DYFI ஏற்பாட்டில் பரவலாக நடந்து வருகிறது…
இதுபோன்று ஒவ்வொரு சிறு சிறு பிரச்சனைகளையும் கூர்ந்து கவனித்து, அவற்றுக்குத் தீர்வு கிடைக்கும் நடவடிக்கைகளைச் செய்கின்ற கேரள அரசின் இத்தகைய அணுகு முறைகளை அனைவரும் பாராட்டுகின்றனர்…!
SK Gangadharan
நன்றிகள்
#SadanThuckalay
Shahul Hameed