கொரோனோ பீதி வீதிகளில் வம்படியாக வந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்க, எந்த அவசியமும் இல்லாத ஆனால் திட்டமிட்ட சதியைப் போன்ற ஒரு சர்ச்சை தமிழகத்தில் ஓரிரு தினங்களாக நடந்து கொண்டிருக்கிறது.
திரு பாண்டே என்ற ஊடகவியலாளர் அப்பழுக்கற்ற அரசியல் தலைவரான தோழர் நல்லகண்ணுவுக்கு நேர்மையாளர் என்ற விருதையும் ரூபாய் ஒரு லட்சம் பண முடிப்பையும் வழங்கப் போவதாக செய்திகள் வந்ததும், தோழர் நல்லகண்ணு திரு பாண்டேயின் விருதை மறுதலித்ததும் நாமெல்லாம் அறிந்த சமாச்சாரம்தான்.
யாரோ ஒருவர் விருதை அறிவித்ததும், உடனே அந்த பரிசுக்குரியவர் ஓடோடிச் சென்று விருதை வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமானது! அறிவிக்கப்பட்ட விருதை விருதுக்கு உரியவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லவா? தோழர் நல்லகண்ணு விருதை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே மறுதலித்துவிட்டார்.
தோழர் மறுதலித்தது நாட்டில் செய்தியாக வலம் வந்தது. வந்த விருதை வேண்டாம் என்று நிராகரித்த காரணத்தால் ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரபரப்பான பதிவுகள் நிறைந்து வழிந்தன.
எந்த விருதாக இருந்தாலும், விருது என்று சொன்னவுடனேயே கால் தடுக்கி விழ விருதை நோக்கி ஓடிச் செல்லுபவர்கள் மத்தியில், வந்த விருதை நிராகரிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் இன்குலாப்புக்குச் சாகித்திய அகாதமி விருது அறிவித்த போது, அந்தப் புரட்சிக் கவிஞன் உயிரோடு இல்லாத காலத்திலும், அந்த விருதை ஏற்றுக்கொள்ள அவருடைய குடும்பம் மறுத்துவிட்டது.
அந்த மறுப்பின் பின்னால் ஒரு தாத்பரியம் இருந்தது.
காலமெல்லாம் அரசுக்கும் அரசினுடைய அதிகாரங்களுக்கும் எதிராகப் போர்ப்பரணி பாடி நின்ற அந்தக் கவிஞன் உயிரோடு இருந்திருந்தால் எப்படி அந்த விருதினை நிராகரித்திருப்பாரோ அதைத்தான் அவருடைய குடும்பமும் செய்தது. இது ஒருவகையில் கொள்கை சம்பந்தப்பட்டது. சம்பந்தப்பட்டவரின் மனசாட்சி சம்பந்தப்பட்டது.
திரு பாண்டே ஆவலோடு அறிவித்த, நேர்மைக்கு இலக்கணமான நல்லகண்ணுவுக்குக் கொடுக்கப் போவதாக அறிவித்த, சாணக்கிய விருதும் சர்ச்சைக்குரிய ஒன்றுதான். திரு பாண்டே அவர்கள் ஒரு ஊடகவியலாளர் என்பதும், அதிலும் குறிப்பாக பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் அறிவிக்கப்படாத ஒரு சித்தாந்தவாதி என்பதும் நாடே அறிந்த உண்மை.
இப்படிப்பட்ட ஒருவர், பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக அன்றும் இன்றும் என்றும் போராடிக் கொண்டிருக்கிற தோழர் நல்லகண்ணுவுக்கு ஒரு விருதை அறிவிக்கும் போது, அதனை அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியுமா? இந்த விருதுக்குப் பின்னால் இருப்பது அப்பட்டமான அரசியல் என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் அரசியல் விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டிய தேவையில்லை.
விவகாரம் வெரி சிம்பிள். நாடறிந்த ஒரு இடதுசாரி தலைவருக்கு, நாட்டையே பிளவுபடுத்தும் வகுப்புவாதத்துக்குத் துணை போகும் ஒரு வலதுசாரி விருதை கொடுக்கும்போது, அது புகையத்தான் செய்யும். இந்த விவகாரம் விருதை அறிவித்த திரு பாண்டே அவர்களுக்குத் தெரியாத சமாச்சாரம் ஒன்றும் இல்லை. அறிவித்த உடனேயே வில்லங்கம் வரும் என்பது அவர் நன்கு அறிந்த விஷயம் தான். அவருடைய நோக்கமும் அதுதான். அவருடைய எதிர்பார்ப்பும் அதுதான். இந்த சூட்சுமத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
விருது அறிவிக்கப்பட்டு, தோழர் நல்லகண்ணு அதனை நிராகரித்ததும் நாடு முழுவதும் எழுந்து வந்த எதிர்வினை தோழர் நல்லகண்ணு நிராகரித்தது மிகச் சரி என்பதாக இருந்தது. இந்த எதிர்வினையை விருதை அறிவித்தவர் இயல்பாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதோ அவர் உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசை அறிவித்தது போலவும், அதனை நல்லகண்ணு நிராகரித்தது மகா குற்றம் என்பது போலவும் ஒரு எதிர் பிரச்சாரம் வகுப்புவாத வட்டாரங்களிலிருந்து கிளப்பியிருக்கிறது.
ஏதோ உலகத்திலேயே இல்லாத ஒரு விருது அறிவித்தது போல, எதிர்க்கருத்து உள்ளவருக்கே விருதை கொடுக்கிறோம் பார்த்தீர்களா என்று தம்பட்டம் அடிக்க நினைத்தவர்களின் விளம்பர திட்டம் தகர்ந்தவுடன், ஏதோ நடக்கக்கூடாதது நடந்தது போல குய்யோ முறையோ என்று ஒரு வட்டாரம் கத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கத்தலில் அரசியல் நாகரீகம் காற்றில் பறக்க விடப்படுகிறது.
அரசியல் நேர்மைக்காக விருது என்று அறிவித்தவர்கள் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அரசு வழங்கியிருக்கிற இலவச வீட்டினை ஒரு சர்ச்சைப் பொருளாக ஆக்கியிருக்கிறார்கள். 80 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இயங்கிய போதும், தனக்கென்று சொத்து சுகங்களை உருவாக்கி கொள்ளாத ஒரு உத்தமர் தோழர் நல்லகண்ணு என்பது ஊரே அறிந்த விஷயம். சுதந்திர போராட்ட வீரர்களில் இன்று இந்தியாவில் வாழும் ஒரு சில தலைவர்களுள் தோழர் நல்லகண்ணுவும் ஒருவர். 96 வயதிலும் மக்களுக்காக இயங்குபவர் போராடுபவர். எந்த பட்டம் பதவிகளுக்குப் பின்னாலும் போகத் தெரியாதவர். நாடே போற்றும் ஒரு தலைவருக்கு அரசு செய்கிற ஒரு மரியாதையாகத்தான் அவருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டை மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் நேர்மைக்கு விருது என்று சொல்லித் தம்பட்டம் அடிப்பவர்கள், இலவச வீட்டை வாங்குவாராம் ஆனால் விருதினை வாங்க மாட்டாராம் என்று நக்கல் செய்யும் போது, அவர்களின் நாகரீகப் பாங்கை நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறோம். இந்த ஒரு விஷயம் போதும் தோழர் நல்லகண்ணு தனக்கு வந்த விருதை மறுதலித்தது மிகச் சரியே என்று உணர்வதற்கு.
இதைப்போல தோழர் நல்லகண்ணுவைச் சுற்றி உருவாக்கப்பட்ட மாய பிம்பத்தை திரு பாண்டே தகர்த்து விட்டார் என்று அவருக்கு நற்சான்று கொடுக்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம். தோழர் நல்லகண்ணு என்ற மனிதர் படிக்கின்ற காலந்தொட்டு இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் வேண்டி ஒரு போராட்டப் பெரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து பயணிப்பவர் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்த அனைவரும் அறிந்த விஷயம். அதற்கு பாண்டேயைச் சார்ந்தவர்களின் நற்சான்று பத்திரங்களை யாரும் கேட்கவில்லை.
என் வாழ்க்கைதான் என் செய்தி என்று தேசத்தந்தை காந்தி மகாத்மா சொன்னார். மகாத்மா அவருக்கே சொன்ன வார்த்தைகள் அப்படியே பொருந்தும் நம் தோழர் நல்லகண்ணுவுக்கும்.
நீங்கள் சகதியை அள்ளி வீசுவதன் மூலம் தோழர் நல்லகண்ணுவின் சரித்திரத்தைத் திருத்தி எழுதிவிடலாம் என்று நினைக்காதீர்கள்.
தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை அக்னி ஜுவாலை போன்றது. அது சுதந்திரப் போராட்ட வேள்வியில் கிளைத்து வந்த ஜுவாலை. தொழிலாளி வர்க்க போராட்டங்களிலும், விவசாய,விவசாய தொழிலாளர் போராட்டங்களிலும் புடம் போட்டு எடுக்கப்பட்ட ஜுவாலை. இந்த ஜுவாலை மக்களுக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக மட்டுமே கனன்று கொண்டிருக்கும் ஜுவாலை.
இந்த ஜுவாலை யாரோ சிலருக்காக, அவர்கள் சுயதம்பட்டம் அடிப்பதற்காக எந்தக் காலத்திலும் தன்னை காவு கொடுக்கப் போவதில்லை என்பதை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் அறிவதற்காக சொல்லி வைக்கிறோம்.
தோழர் நல்லகண்ணு வாழும் ஒரு அரசியல் அதிசயம். உங்களுடைய பிளவு அரசியலின் முறங்களைக் கொண்டு மறைக்கமுடியாத ஒரு அரசியல் அதிசயம்.
அவர் ஒரு கம்யூனிஸ்ட்!
அன்றும் இன்றும் என்றும்!!
SK Gangadharan