எனது நாடு உனது நாடு!….
எனது நாடு உனது நாடு என்று மனிதன் எல்லைகளை வகுத்தது மட்டுமல்ல எனது மொழி எனது மதம் எனது நிறம் பெரிதென்று அடித்துக் கொண்டும் ஆயுதம் கொண்டும் அடக்கியாள முற்பட்டான்.
ஐக்கிய நாடுகள் சபை என ஐக்கியம் பற்றிப் பேசுவான்.ஒரு கையில் அறம் சார்ந்த நூலையும் இன்னொரு கையில் துப்பாக்கியையும் ஏந்துவான்.
இப்படித்தான் உலகம் இருக்கும் என்று வியாக்கியானம் பேசுவான்.
ஆனால் காற்று புயலாக மாறி எல்லைகளைத் துவம்சம் செய்யும்.மழை வெள்ளமாக மாறினால் வேலிகளை சமநிலைப்படுத்தும்.
ஐந்தில் மூன்று பங்குகடல் அனைத்தும் ஒரே நேரத்தில் ஐந்து மீற்றர் உயரத்திற்கு எழுந்தால் வியாழ கிரகத்தின் நிலைமையே பூமிக்கும் ஏற்படும்.
நீருக்குள் வாழும் உயிரினமாக மனித இனம் நீட்சி பெறலாம்.
இப்ப கொரனோ நுண்கிருமி நான் பெரிது நீ சிறிது என்ற எல்லைகளைச் சமப்படுத்தியுள்ளது.ஊர் கடந்து தேசம் கடந்து பரந்து மனித குலத்தை பார்த்து கெக்கலித்துச் சிரித்து உன்னுடைய எல்லை இனி எதுவெனக் கேட்கிறது.
இனியாவது இந்த உலகம் ஆயுதம் தயாரிக்காமல் விடுமா.எங்கள் நாடு இதிலிருந்தாவது பாடம் படிக்குமா.இலங்கையர் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் இனங்களுக்கிடையில் சமநிலை பேணுதல் இடம்பெறுமா.
ஏலையா க.முருகதாசன்.