இன்றைக்கு அல்டிக்கும் dm என்ற கடைக்கும் போனேன்!
இரண்டு கடைகளிலும் ஒரே சனம் .
சவர்க்காரம் வாங்க dm கடைக்குப் போனேன். சவர்க்காரத் தட்டில் ஒரு ஆளுக்கு மூன்று சவர்க்காரங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. அதனருகில் இருந்த பணிப் பெண்ணும் அதையே சொன்னாள்.
சவர்க்காரத்தை எடுத்துக் கொண்டு காசு கொடுக்கும் இடத்துக்கு வந்து கொண்டிருக்கும் போது என்னையறியாமலே சிரித்தேன் என்னையும் சேர்த்து மனித குலத்தை நினைத்து.
ஏன் சிரித்தேன் என்றால் எனக்கு மற்றைய இனக்குழுமங்களின் அகங்காரங்களின் வடிவங்கள் பெரிதாகத் தெரியாது.
ஓரளவு வெள்ளை நிறத்தவர் தம்மைப் பற்றி நிறவாரியாக பெரிதாக நினைப்பவர்கள்தான் அதற்காக எல்லாரும் அல்ல.
ஆனால் எனது தமிழச் சமூகம் பற்றி அறிந்திருக்கிறேன்.அவர்களின் ஆணவம் பற்றியும் வெண்டரிசன் கதை பற்றியும் தெரியும்.
இன்றைக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு நுண்கிருமி பெரும் எதிரியாக மாறி என்னமாய் மனிதகுலத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
திமிரான பேச்சுக்கள் ஆணவம் அதிகாரமான பேச்சுக்கள் யாவும் இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் தூசு தூசாகிப் போகிறது.
இல்லாமை வந்து பசியோடு போராட வேண்டி வருமோ என்ற அச்சம் எல்லோரையும் கடைகளை மொய்க்க வைத்திருக்கின்றுது.
என் கால் தூசுக்கு நீ சமமா என்றவர்களையும்
என் மயிருக்கு நீ சமம் என்றவர்களையும்
என் வீட்டுப் படியேற உனக்குத் தகுதியிருக்கிறதா என்வர்களையும்
உன் வீட்டில் என் வாழ்வின் பரியந்தம் செம்பு தண்ணி எடுக்க மாட்டேன் என்பவர்களையும் இயற்கை பார்த்து சிரித்து எச்சரித்து மனிதகுலத்தை மண்டியிட வைத்திருக்கிறது.
இதைவிட உலக நாட்டாமைகள் அனைத்து நாடுகளையும் அடக்கி ஆள வேண்டும் என ஆயுதங்கள் தயாரித்து அடக்குவதையும் பார்த்து இயறகை நீண்ட காலம் பொறுமையுடன் இருக்காது.சினம் கொண்டு எதிர்க்கத் தொடங்கியுள்ளது.
இயற்கை வடிவமைத்த உலகத்தை தாம் விரும்பியபாட்டுக்கு வளைத்துக் கொண்டு போனால் இயற்கையின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை இயற்கை உணர்த்தும்.
ஒரு மாபெரும் சக்தி இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம்.
பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து விண்ணோக்கி கிளம்பும் ரொக்கட்டை பார்த்து பிரபஞ்சத்தை ஆளப் போறோம் என்ற விஞ்ஞானத்தின் கர்வத்தை அடித்து நொறுக்கி சரணடைய வைத்திருக்கிறது கண்ணுக்கு தெரியாத எதிரி ஒன்று.
புயல் – சுனாமி – எரிமலை வெடிப்புகள் .- நிலநடுக்கம் என எல்லா எச்சரிக்கைகளைக் கொடுத்தும் மனித குலம் திருந்தியபாடில்லை.
dmக்குள் நின்று என்னையும் சேர்த்து நினைத்து மனதுக்குள் சிரித்தேன்.
இப்ப மனிதா என்னதான் நீ தலைகீழாக நடந்தாலும் வானத்தில் அந்தரத்தில் பறந்தாலும் இயறகையை வெல்லவே முடியாது என்று சொல்லி Haa….hah…haahhaaa …haaahaaa எனச் சிரிக்கிறேன்.
ஏலையா க.முருகதாசன்.