கவிதைகள்

பக்குவம் நிறைந்த பதமான காலம்!… கவிதை… ஜெயராமசர்மா

இளமையிற் கல்வி சிலையி லெழுத்து
என்பதை யாவரும் நன்றா யறிவோம்
அறிந்தும் அக்கறை காட்டா விட்டால்
அறிவிலி யாகியே அவமானப் படுவோம்

கற்றோர் முன்னே நின்றிடல் வேண்டும்
கற்றவர் அவையில் இருந்திடல் வேண்டும்
மற்றவர் வியக்க வாழ்ந்திட வேண்டும்
மதிப்புடன் வாழக் கற்றிட வேண்டும்

வளரும் பருவம் இளமைக் காலம்
உடலும் உளமும் உரம்பெறுங் காலம்
கண்டதும் கவர்ந்திடும் காந்தக் காலம்
கற்றலைப் பிடித்தால் கைப்படு மனைத்தும்

இளமையில் எதனையும் புகுத்துதல் எழிது
இளமையில் பற்றினால் என்றுமே நிலைக்கும்
பக்குவம் நிறைந்த பதமான காலம்
படிப்பதைத் தேர்ந்து படித்திட வேண்டும்

இளமை என்பது பெரு வரமாகும்
இருக்கும் காலம் பொன்னான காலம்
பொன்னான காலத்தை மண்ணாக்கி விட்டால்
மண்ணுலக வாழ்க்கை வளமற்றுப் போகும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *