சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரம்: யாழ்.பல்கலைக்கழக மாணவர் மூவர் விசாரணைக்கு அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கைத் தேசியக் கொடி இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களிடம் வாக்குமூலம் சேகரிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் பல்கலைக்கழகப் பதிவாளர் ஊடாக எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம்-04 ஆம் திகதி இலங்கைச் சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த இலங்கைத் தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் கீழே இறக்கி அதற்குப் பதிலாகக் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இச் சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் மற்றும் காணொளிக் காட்சிகள் சகிதம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குறித்த விவகாரம் தொடர்பாக பல்கலைகழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் அண்மையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இந் நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை வாக்குமூலம் சேகரிக்கப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளமையால் மாணவர்கள் கைது செய்யப்படலாமென்ற தகவல் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கடிதம் இம் மாதம்- 13 ஆம் திகதி திகதியிடப்பட்டு 16 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் நேற்றுச் செவ்வாய்க்கிழமையே கடிதம் பல்கலைக்கழகப் பதிவாளரால் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
![]()