பலதும் பத்தும்

மீன் வியாபாரிக்கு உதவும் பூனை

வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் தற்போது பூனைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது. விலை உயர்ந்த வெளிநாட்டுப் பூனைகள் முதல் உள்ளூர் பூனைகள் வரை பலரும் பராமரித்து வருகின்றனர். என்னதான் அன்பாக வளர்த்தாலும் சில நேரங்களில் பூனைகளால் தொல்லைகளும் ஏற்படுவதுண்டு. ஆனால், ஓட்டமாவடி – தியாவட்டவான் பகுதியில் மீன் வியாபாரி ஒருவருக்கு உதவியாளராகவே ஒரு பூனை மாறிப்போயுள்ள விசித்திர சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட தியாவட்டவான் பிரதான வீதியில் ‘ஏ.எப்.எச்.’ (AFH) எனும் பெயரில் மீன் கடை ஒன்றினை நடத்தி வருபவர் முகம்மட் முஸ்தபா புஹாரி. இவர் மீன் பிடிப்பாளர்களிடம் மீன்களை மொத்தமாக கொள்வனவு செய்து, உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

தமது அனுபவம் குறித்து முகம்மட் முஸ்தபா புஹாரி கூறுகையில்: “நான் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் காலப்பகுதியில் மக்கள் குடியிருப்புக்குச் சற்று தொலைவில் இந்த மீன் கடையை ஆரம்பித்தேன். வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக மீன்களை ரெஜிபோம் பெட்டிகளில் நிரப்பி வைத்து விட்டுச் செல்வேன். ஆனால், மறுநாள் வந்து பார்த்தால் காட்டு எலிகள் அந்தப் பெட்டிகளைச் சேதப்படுத்தி, மீன்களையும் துவம்சம் செய்திருக்கும். இதனால் எனக்குப் பாரிய நஷ்டம் ஏற்பட்டது. எலிகளைக் கட்டுப்படுத்த எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை,”

“இந்நிலையில், ஒருநாள் கடைக்கு வந்தபோது கடைக்கு முன்னால் சில பூனைகள் நின்றன. சில நாட்களின் பின்னர் ஒரு பெண் பூனையை தவிர மற்றவை சென்றுவிட்டன. அந்த பூனை மட்டும் என்னுடன் நீண்ட காலம் பழகியது போல என் அருகிலேயே நின்றது. நானும் அதனை விரட்டவில்லை. அந்தப் பூனை எனது கடையிலேயே தங்கத் தொடங்கியது. எலிகளை வேட்டையாடி எனது தொழிலுக்குப் பெரும் பாதுகாப்பாக அமைந்தது.”

தற்போது அந்த பூனையின் உதவியால் எலித் தொல்லை முற்றிலும் நீங்கியுள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். அந்தப் பூனை பலமுறை குட்டிகளை ஈன்றுள்ள நிலையில், அதன் அழகைக் கண்டு பலரும் ஆர்வத்துடன் குட்டிகளை வளர்ப்பதற்கு எடுத்துச் செல்கின்றனர்.

“மீன் கடையிலேயே வளர்ந்தாலும், குவிந்து கிடக்கும் மீன்களை அந்தப் பூனை தானாக எடுத்து உண்பதில்லை. நான் கொடுக்கும் மீன்களை மாத்திரமே அது சாப்பிடும். கடைக்கு வருபவர்களை கண்டு அது ஓடுவதில்லை. ஒரு ஊழியரை போலவே எனது தொழிலுக்கு அது உதவியாக இருக்கிறது,” என புஹாரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மனிதர்களுடன் செல்லப்பிராணிகள் ஏற்படுத்தும் பிணைப்பிற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *