இலங்கை

மாகாணத் தேர்தலை இழுத்தடிக்கவே நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஏற்பாடு – எதிரணி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அரசு நியமித்திருக்கின்றது என்று இன்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நால்வரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.

தெரிவுக் குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்றது.

ஏற்கனவே எட்டாவது நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், முன்னர் இருந்த தேர்தல் முறைமைகளின் கீழ் மாகாண சபைத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கு வழி செய்யும் விதத்தில் கொண்டு வந்த தனி நபர் சட்டமூலத்தை அப்போது ஜே.வி.பி. எதிர்க்கவில்லை.

ஒன்பதாவது நாடாளுமன்றிலும் அதே போன்று சுமந்திரன் கொண்டு வந்த தனிநபர் சட்டம் மூலத்தை ஜே.வி.பி. எதிர்க்கவில்லை.

அச்சமயத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றிய ஜே.வி.பி. அதே நிலைப்பாட்டைப் பேணியது.

ஆனால் இப்போதும் புதிதாக தெரிவுக் குழு அமைத்து தேர்தல் தொடர்பில் முடிவெடுக்க வேண்டும் என்று அது காலத்தை இழுத்தடிக்கின்றது என எதிர்க்கட்சி தரப்பில் இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றிய மனோ கணேசன், நிஸாம் காரியப்பர், இரா.சாணக்கியன், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் தெரிவித்தனர்.

இருக்கின்ற தேர்தல் முறைமையை இல்லாமலாக்கி, தேர்தல் நடத்துவதை தள்ளிப் போடச் செய்தவர்கள் இப்போதைய எதிர்க்கட்சியினர் அடங்கிய முன்னைய அரசுகள்தான் என்று ஆளும் தரப்பில் இன்றைய கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மாகாண சபைத் தேர்தல் முறைமை வந்த போது அதற்கு எதிராக இரத்தக் களறியை ஏற்படுத்தி அந்த முறைமையையே முறியடிக்க முயன்றவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள் என்று ரஞ்சித் மத்தும பண்டார இக்கூட்டத்தில் ஆளும் தரப்புக்கு நெற்றியடியாகப் பதில் கொடுத்தார்.

நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பது பற்றிய முடிவெடுக்கப்பட்டு, முதலாவது கூட்டத்துக்கே இரண்டு மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டன. அதுவரையில் அரசு தரப்பு தெரிவுக் குழுவுக்கான தனது பிரதிநிதிகள் பெயர்களைச் சமர்ப்பிக்காமல் விடயத்தை இழுத்தடித்தது. அந்த நோக்கத்துக்காகத்தான் இந்த தெரிவுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று இரா.சாணக்கியன் குற்றம் சாட்டினார்.

பழைய – முன்னைய – முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தாம் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலத்தை தொடர்ந்து முன்னெடுத்து அடுத்த மாதமே தேர்தலை நடத்துவதற்கான நிலைமையை உருவாக்க முடியும். அதற்கு அரசுத் தரப்பு இணங்கி வர வேண்டும் என்று அவர் கோரினார்.

ஆயினும் கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் விஜித ஹேரத் அதற்கு இணங்கவில்லை. அடுத்த மாதம் தெரிவுக் குழுவின் கூட்டத்தின் போது இவ்விடயத்தை ஒட்டி சட்டமா அதிபர் மற்றும் தேர்தல் ஆணையாளரின் கருத்துக்களை செவிமடுப்பதற்காக அவர்களை கூட்டத்துக்கு அழைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *