கவிதைகள்

மெளனமாய் காலன் வாசல்வந்து நிற்பான்!… கவிதை… ஜெயராமசர்மா

ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்தாலும்
ஒருகணமும் யமன் இரங்கிடவே மாட்டான்
யார்தடுத்தும் கேளான் யமதர்ம ராஜன்
எடுக்க வந்தவுயிரை எடுத்தவனும் போவான்

பட்டமும் பாரான் பதவியும் பாரான்
அடுக்குமனை பாரான் அந்தஸ்த்தும் பாரான்
எடுக்க வந்தவுயிரை எடுத்துமே செல்வான்
எல்லோரை இதனை உணர்ந்துவிட வேண்டும்

வெட்டுவே னென்போர் குத்துவே னென்போர்
விடிந்தவுட  னவனை வெடிவைப்பே  னென்போர்
நிரந்தரமே யென்று நெஞ்சேற்றி நிற்பார்
நிலையில்லா நிலமை உணராத நெஞ்சார்

விஞ்ஞானி யானாலும் விட்டுவிட  மாட்டான்
மெஞ்ஞானி யானாலும் விட்டுவிட மாட்டான்
அஞ்ஞானி ஆனாலும் அவனெடுப்பா னுயுயிரை
அந்தகனான் அவனும் அள்ளிக்கொண்டு போவான்

மதத்தலைவர் பாரான் மடத்தலைவர் பாரான்
படைத்தலைவர் பாரான் படித்தவர்கள் பாரான்
அரசாளும் வர்க்கம் என்றவனும் பாரான்
காலம்வரும் வேளை காலன்வந்து கவர்வான்

நிரந்தரமா யிருப்போ மென்றுமே நினைந்து
நெஞ்சமெலாம் ஏற்காத அத்தனையும் செய்வோம்
வருந்தவும் மாட்டோம் மனமெண்ண மாட்டோம்
மெளனமாய் காலன் வாசல்வந்து நிற்பான்  !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண், அவுஸ்திரேலியா 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *