முச்சந்தி
அமெரிக்க இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு சவால் தரும் ஈரான் போர் வியூகம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஈரானின் பதிலடி, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவால் கட்டுப்படுத்தப் படவில்லை எனவும், மோதல் பல மாதங்கள் அல்லது அதற்கு மேலும் தொடரக்கூடும் என்றும் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவை போலன்றி, ஈரான் ஒரு நீண்ட போருக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரான்
யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பையும் நிராகரித்துள்ளது.

இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வழக்கமான ராணுவ மேலாதிக்கத்தை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட ஈரானின் நீண்டகால சமச்சீரற்ற போர் கோட்பாட்டைப் பிரதிபலிப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈரானுக்குள்ளும் உலகளவிலும் இந்த மோதலின் விளைவாக ஏற்படும் பொருளாதார விளைவுகள், போர் எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு தீர்க்கமான முடிவை எவரும் எதிர்பார்க்க முடியாது.
ஈரான் இராணுவ அதிகாரிகள் நீண்டகால மோதலுக்குத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி அமெரிக்க, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்துவதாகவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க நிதி மற்றும் தளவாடச் செலவுகளை அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மெதுவாக எதிரியை பலவீனப்படுத்தல்:
ஈரான் பயன்படுத்தும் போரியல் உத்தியை அட்ரிஷன் என்றும் சில நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் பொருள் விரைவாக வெற்றி பெறுவதற்குப் பதிலாகக் காலப்போக்கில் எதிரியை மெதுவாகப் பலவீனப்படுத்த முயல்வதாகும்.
இஸ்ரேலிய இலக்குகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஈரான் ஏவுகிறது. இந்தத் தாக்குதல்களில் பல இலக்குகள் வளைகுடாவில் குறிவைக்கப்படுகின்றன.
ஈரானின் போர் உத்தியாக, முதலாவதாக, அவை அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி உள்ளே நுழையும் ஏவுகணைகளைத் தடுக்க கட்டாயப்படுத்துகின்றன. எம்.ஐ.எம்-104 பேட்ரியாட், தாட் போன்ற அமைப்புகள் மிகவும் மேம்பட்டவை. ஆனால், அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன.
பெரும்பாலும் ஈரானிய தாக்குதலை நிறுத்தப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், அவை அழிக்கும் ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளைவிட அதிக விலை கொண்டவை. இரண்டாவதாக, தொடர்ச்சியான தாக்குதல்கள் எதிரியின் ஆயுத விநியோகம், போக்குவரத்து அமைப்புகள், ராணுவ தயார்நிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மோதலின் முதல் வாரத்துக்குள் அமெரிக்க படைகள் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையிலான துல்லியமான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஈரான் அதிகாரிகள் தங்கள் ஆயுத விநியோகம் நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள். தற்போதைய விகிதத்தில் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தங்கள் ராணுவம் அதிக தீவிரம் கொண்ட போரைத் தொடர முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஈரான் தளபதிகள் தங்கள் ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுப் பல உற்பத்தித் தளங்களில் அதிக எண்ணிக்கையில் சேமித்து வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வளைகுடாவில் இதன் காரணமாக, ஈரான் காலப்போக்கில் அதன் தாக்குதல்களைப் பரவலாக்கி வருவதாகத் தெரிகிறது. இது அதன் எதிரிகளை ஒரேயொரு பெரிய தாக்குதலை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு கட்டாயப்படுத்துகிறது.
ஈரான் – ஈராக் இடையிலான போருக்குப் பிறகு, ஈரான் போருக்கு தயாராகும் வகையில் அதிகளவில் முதலீடு செய்தது. இந்த வகையான போர், பாரம்பரிய வழியில் போராடாமல் வலுவான ராணுவங்களுக்கு சவால் விடக்கூடிய முறைகளில் கவனம் செலுத்துகிறது. இந்த யுத்த உத்தியை ஈரான் பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் ராணுவ அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்.
ஒரு வலுவான எதிரியை நேரடியாகத் தோற்கடிப்பது அவர்களின் இலக்கு அல்ல. மாறாக, போரை நீண்டதாகவும், செலவுமிக்கதாகவும், கடினமானதாகவும் அவர்களுக்கு மாற்றுவதே ஆகும் என்று ஈரான் கூறுகிறது.
ஈரான் இராணுவ தளபதிகள் கருத்து:
ஈரான் அதிகாரிகள் தங்கள் நாடு ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருப்பதாகத் தொடர்ந்து கூறிவருகின்றனர். இது நீண்ட போருக்கு ஏற்ற வகையில் தயார்நிலையில் ஈரான் இருக்கிறது என்ற செய்தியை வெளிப்படுத்துகிறது. ஈரான் உச்ச தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் அலி லாரிஜானி நீண்ட கால மோதலுக்கான தயார் நிலையை அறிவித்தார்.
மேலும் ஈரான் நிச்சயமாக போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. ஆக்கிரமிப்பாளரை தண்டிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கபிபாஃப் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ஈரான் படைவலு இன்னமும் சிதையவில்லை என கூறப்படுகிறது. இஸ்ரேலுடன் தீர்க்கமான முடிவை வைப்பதற்கான போரில் ஈடுபட்டுள்ளது என்றும் ஈரான் கூறியுள்ளது.
அதேபோல் ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரெசா தலாய்-நிக், எதிரி எதிர்பார்ப்பதைவிட பல மடங்கு நீண்ட காலம் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பை ஈரான் தக்க வைத்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது ஆயுதங்களைப் பயன்படுத்தும் விதத்தை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி வருவதாகவும், தனது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உடனடியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் தனது மேம்பட்ட ஆயுதங்களில் சிலவற்றைப் போரின் பிந்தைய கட்டங்களுக்காகச் சேமித்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரால் பொருளாதார விளைவு ?
ஒரு நீண்ட போர் ஈரானில் மட்டுமல்ல, வளைகுடாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். அதில் முக்கியக் கவலை எரிசக்தி விநியோகம் என்பது தான். உலகின் எண்ணெயில் பெரும்பகுதி பொதுவாக ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. இது உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கை வழங்குகிறது.
இந்த போர் தொடங்கியதில் இருந்து, இந்தக் குறுகிய பாதை வழியாகக் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இது உலகளவில் மக்கள் மற்றும் தொழில்களுக்கான எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகளை உயர்த்தக்கூடும். பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் மூடப்பட்ட வான்வெளியும் இந்தப் பகுதியில் வர்த்தகப் பாதைகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன.
ஈரானுக்குள்ளும் பொருளாதார அழுத்தம் உள்ளது. பல ஆண்டுகளாக சர்வதேச தடைகளால் அந்த நாடு ஏற்கெனவே பலவீனமடைந்துள்ளது. அரசாங்கம் ராணுவத்துக்கு அதிக பணம் செலவிட வேண்டியிருப்பதாலும், தேசிய நாணயம் நிலையற்றதாக இருப்பதாலும், வர்த்தகம் மற்றும் சேவைகள் சீர்குலைவதாலும் போர் ஏற்கெனவே நிலவும் நிலைமையை மேலும் கடினமாக்குகிறது.
மேலும் போர் நீண்டகாலம் தொடர்ந்தால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும், நாட்டுக்குள் பொதுமக்களின் கோபம் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறும் நிபுணர்கள், இது நாட்டின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர்.
மேலும் ஈரான் அரசாங்கம், குடிமக்களை போர் முயற்சிகளை ஆதரிக்க ஊக்குவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு உதவுவது ஒரு தேசிய கடமை எனக் கூறி, அரசுக்கு பொதுமக்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கிறது.
போரால் அரசியல் நெருக்கடி:

போர் நீண்டகாலம் தொடர்வது, அனைத்து தரப்பினருக்கும் அரசியல் அபாயங்களைப் பெரிதாக அதிகரிக்கும். குறிப்பாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கவலை கொண்டுள்ளன. ஈரான் இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களின் சொத்துகள் மற்றும் தளங்கள் என்று தான் அழைப்பதைக் குறிவைத்து வருகிறது. இதன் காரணமாகப் பல வளைகுடா நாடுகள், இந்த மோதல் ஒரு பெரிய பிராந்திய போராக மாறி கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சுகின்றன. இந்த நாடுகளில் சில ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளன.
அதே நேரத்தில், போர் பிராந்தியத்தில் அரசியல் உறவுகளை மாற்றக்கூடும். சில அண்டை நாடுகள் ஈரானின் நிரந்தர எதிரிகளாக மாறக்கூடும்.
ஈரானை பொறுத்தவரை, போரைத் தொடர்வது என்பது அதன் ராணுவ திட்டங்களை அதன் பொருளாதாரத்தை நிலையானதாக வைத்திருப்பது மற்றும் உள்நாட்டில் ஆதரவைப் பேணுவது ஆகியவற்றுடன் சமநிலைப்படுத்த முயல்வதாகும்.
ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பொறுத்தவரை, சவால்கள் வேறுபட்டவை. அவர்கள் தங்கள் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர வேண்டும், அதே நேரத்தில் ஒரு நீண்ட போரின் நிதிச் சுமை, உள்நாட்டு அரசியல் அழுத்தம், உலகளாவிய விளைவுகள் ஆகியவற்றையும் கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
![]()