முச்சந்தி

கார்க் தீவை தாக்கி அமெரிக்கா கைப்பற்றுமா?… ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முடங்குமா?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

( ஈரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கார்க் தீவு திகழ்கிறது. நாட்டின் தெற்கே உள்ள எண்ணெய் வளமிக்க சாதகமான கடல் சூழல் மற்றும் பெரிய எண்ணெய் கப்பல்கள் வந்து செல்லத் தேவையான ஆழம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு மிகவும் பொருத்தமான இடமாக கார்க் தீவு கருதப்படுகிறது)
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் முக்கிய மையமான கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றி எடுக்கப் போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது, வளைகுடா யுத்தத்தை மேலும் மோசமடையச் செய்திருக்கிறது.
அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை (Kharg Island) அமெரிக்க இராணுவம் கைப்பற்றும் திட்டத்தை பரிசீலித்ததாக சர்வதேச ஊடகங்களும் பாதுகாப்பு ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.
கார்க் தீவில் அமெரிக்கா தாக்குதல்
ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது, வளைகுடா யுத்தத்தை மேலும் மோசமடையச் செய்திருக்கிறது. ஈரானின் மொத்த மசகு எண்ணெய் ஏற்றுமதியின் பெரும்பகுதி இந்த கார்க் தீவு வழியாகவே நடைபெறுகிறது. எனவே இந்த தளத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரிய தடங்கல் உருவாகும் அபாயம் உள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் திடீரென உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஈரான் பதிலடியாக மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது.
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தினால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் சாம்பலாக்கி விடுவோம் என்று ஈரான் இராணுவம் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கார்க் தீவு என்பது பாரசீக வளைகுடாவின் வடபகுதியில் அமைந்துள்ள சிறிய தீவு. சுமார் ஐந்து மைல் நீளமுள்ள இந்த தீவு, ஈரானின் முக்கிய கடல்சார் மூல எண்ணெய் ஏற்றுமதி நிலையமாக செயல்படுகிறது. ஈரானின் குஸெஸ்தான் (Khuzestan) மாகாணத்திலுள்ள நிலத்தடி எண்ணெய் களங்களிலிருந்தும் வளைகுடா கடல்பரப்பிலுள்ள எண்ணெய் களங்களிலிருந்தும் குழாய்கள் இத்தீவுக்குள் இணைக்கப்பட்டுள்ளன. இவை பெரும் சேமிப்பு தொட்டிகளுக்கும் ஏற்றுமதி தளங்களுக்கும் எண்ணெயை கொண்டு வந்து, நாளொன்றுக்கு பல மில்லியன் பேரல்கள் அளவிலான மூல எண்ணெயை உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவுகின்றன.
ஈரானின் மூல எண்ணெய் ஏற்றுமதி
ஈரானின் எண்ணெய் வருவாயில் 90% வரை இங்கு இருந்தே பெறப்படுகிறது. அத்துடன் ஈரானின் மொத்த மூல எண்ணெய் ஏற்றுமதியின் 90 முதல் 98 சதவீதம் வரை கார்க் தீவு வழியாகவே நடைபெறுகிறது. மேலும் ஈரானின் அரச வருவாயில் சுமார் காலாண்டு முதல் இரண்டில் ஒரு பகுதி வரை எண்ணெய் வருவாயிலிருந்தே கிடைக்கிறது. இந்த வருவாயில் முக்கிய பங்கினைப் பெறுபவர்களில் ஈரானிய புரட்சி படை அமைப்பும் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
ஈரான் போர் ஆரம்பிக்கும் முன்பு அமெரிக்காவில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படும் இராணுவத் திட்டம் தற்போது கசிந்து உள்ளது. சில பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் ஊடகத் தகவல்களின் படி, அமெரிக்க நிர்வாகத்தினுள் டிரம்ப் காலகட்டத்தில் கார்க் தீவை கைப்பற்றும் திட்டம் குறித்து ஆலோசனைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில், அமெரிக்காவின் முக்கிய 82வது வான் படை பிரிவு (82nd Airborne Division) ஈடுபடக்கூடியதாக எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, கார்க் தீவு, அருகிலுள்ள நிலப்பரப்பு எண்ணெய் வழங்கும் நிலையங்கள், கடலடிப் குழாய்கள் என அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நாளொன்றுக்கு சுமார் 2.7 மில்லியன் பீப்பா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தக்கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் திட்டமிடப்பட்டது.
கார்க் -ஈரானின் உயிர் நாடி:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போருக்கு முன்பே, ஈரானின் சாத்தியமான இலக்குகளின் பட்டியலில் கார்க் தீவின் பெயர் இடம்பெற்றிருந்தது. இம்முறை, டெஹ்ரான் மற்றும் கரஜ் எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதலுக்கு மறுநாள், இஸ்ரேலின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான யாயிர் லேபிட்-இன் சமூக ஊடக பதிவைத் தொடர்ந்து, கார்க் தீவு மீதான கவனம் மேலும் அதிகரித்தது. கார்க் தீவில் உள்ள ஈரானின் அனைத்து எண்ணெய் வயல்களையும் எரிசக்தித் தொழில்துறையையும் இஸ்ரேல் அழிக்க வேண்டும். இது ஈரானின் பொருளாதாரத்தை அழித்து, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் எழுதியிருந்தார்.
இம்முறை போரில் கார்க் தீவை கைப்பற்றி ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக மார்ச் 7-ஆம் திகதி அமெரிக்க அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘ஆக்சியோஸ்’ செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. பென்டகனின் முன்னாள் மூத்த ஆலோசகர் மைக்கேல் ரூபின் கடந்த வாரம் ‘பொலிட்டிகோ’விடம் (Politico) பேசுகையில், கார்க் தீவின் முக்கியத்துவம் மற்றும் அதை ஆக்கிரமிக்கும் விஷயம் குறித்து டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் பேசியதாகத் தெரிவித்தார்.
ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளுக்கு அப்பால் ஈரான் மீதான அழுத்தத்தை டிரம்ப் அதிகரிக்க விரும்பினால், கார்க் தீவைக் கைப்பற்றுவது ஈரானிய ஆட்சியின் மிக முக்கியமான நிதி ஆதாரத்தைப் முழுமையாக முடக்கும் என்று கூறப்படுகிறது.
உலக பொருளாதார அபாயம்:
இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், ஈரானின் முக்கிய வெளிநாட்டு நாணய வருவாய் தடைபட்டு சில வாரங்களுக்குள் ஈரானில் பாரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் இதேவேளை, இந்த நடவடிக்கை ஈரானின் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை தூண்டி, வளைகுடா பகுதியிலுள்ள ஆற்றல் கட்டமைப்புகளுக்கு தாக்குதலுக்கு உட்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவே உலக பொருளாதாரத்திற்கும் ஏற்படும் மிகப்பெரிய அபாயம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் உலகளாவிய எண்ணெய் விலைகளில் திடீர் உயர்வு போன்ற விளைவுகளை உருவாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை தற்போது தொடரும் போரால் அமெரிக்காவின் அவசர எண்ணெய் கையிருப்பில் (Strategic Petroleum Reserve) சேமித்து வைக்கப்பட்டிருந்த எண்ணெய்யை சந்தைக்கு விடுவிக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக சந்தையில் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தவும், எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகளை சமாளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர் காரணமாக உலகளவில் எண்ணெய் வழங்கலில் சிக்கல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கார்க் தீவின் எண்ணெய் வயல்:
கார்க் தீவு கடலால் சூழப்பட்ட சுமார் இருபது சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட ஒரு பவளத் தீவாகும். இது ஈரானின் தென்மேற்கில் அமைந்துள்ளது. அந்த நாட்டின் நிர்வாகப் பிரிவுகளில் புஷெர் மாகாணத்தின் ஒரு பகுதியாகும்.
இங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அருகே மான்கள் உலவுவதைக் காணலாம். இத்தீவு மான்களின் வாழ்விடத்திற்கும் இனப்பெருக்கத்திற்கும் சாதகமான இடமாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு விடப்பட்ட மான்களின் எண்ணிக்கை, சமீபத்திய அறிக்கைகளின்படி தீவின் கொள்ளளவை விட அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
மிகச் சிறிய அளவிலான தீவாக இருந்தாலும், ஈரானுக்கு கார்க் தீவு மிகவும் முக்கியமானது, குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதியில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஈரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கார்க் தீவு திகழ்கிறது. நாட்டின் தெற்கே உள்ள எண்ணெய் வளமிக்க பகுதிகளுக்கு மிக அருகாமையில் இருப்பது, சாதகமான கடல் சூழல் மற்றும் பெரிய எண்ணெய் கப்பல்கள் வந்து செல்லத் தேவையான ஆழம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு மிகவும் பொருத்தமான இடமாக கார்க் தீவு கருதப்படுகிறது.
கார்க் தீவை ஈரானின் எண்ணெய் வயல்களின் மையப்புள்ளியாகக் கருதலாம். கச்சா எண்ணெயைச் சேமிப்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் இது ஒரு முக்கியமான தளம் என்பதே இதன் சிறப்பம்சமாகும். கார்க் தீவிற்கு மேற்கே சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் ஈரானின் மிகப்பெரிய கடல்சார் எண்ணெய் வயலான அபுசார் அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவில் ஈரானின் பெரும்பாலான எண்ணெய் உற்பத்திக்கான ஆதாரமாகும்.
அபுசார் எண்ணெய் வயலில் மூன்று முக்கிய உற்பத்தித் தளங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நாளொன்றுக்கு 80,000 பீப்பாய்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அபுசார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் கார்க் தீவில் அமைந்துள்ளது. இதன் காரணமாக, ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு மையங்களில் ஒன்று கார்க் தீவில் அமைந்துள்ளது.
வளைகுடா யுத்தத்தை மேலும் மோசமடையச் செய்யும் வகையில், ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் மொத்த மசகு எண்ணெய் ஏற்றுமதியின் பெரும்பகுதி இந்த கார்க் தீவு வழியாகவே நடைபெறுகிறது. எனவே இந்த தளத்தில் பாரியசேதம் ஏற்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரிய தடங்கல் உருவாகும் அபாயம் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *