உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எங்களுக்குத் தெரியும்!; 31ஆம் திகதி வெளியிடுவோம் என்கிறார் உதய கம்மன்பில

இது வரயைில் வெளியிடப்படாமல் இருக்கும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிதான சூத்திரதாரி யார் என்ற தகவல்களை எதிர்வரும் 31ஆம் திகதி வெளியிடுவோம் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் மார்ச் 30 ஆம் திகதி தெனியாயவில் நடந்த உள்ளூராட்சி தேர்தல் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவோம் என்று கூறியிருந்தார். ஆனால் ஒருவருடம் கடக்கின்ற போதும் கூறியவாறு பிரதான சூத்திரதாரி யார் என வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த நாட்டில் 7 வருடங்களாக அரசியல்வாதிகள், மதகுருமார்கள், ஊடகவியலாளர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொலைகளை விற்று அரசியல் செய்கின்றனர். கடந்த வருடத்தில் உயிர்த்த ஞாயிறு நெருங்கும் போது பிள்ளையான் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் கூறியிருந்தனர். ஆனால் அவரிடம் அதுதொடர்பில் ஒரு விசாரணையும் நடக்கவில்லை என்கிறார்கள்.
கடந்த வருடத்தில் பிள்ளையான் நாடகமும் இந்த வருடத்தில் சுரேஷ் சலே நாடகமும் அரங்கேற்றப்படுகின்றது. இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு பங்களித்தவர்கள். இவர்களை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்த முயற்சிக்கின்றனர். 7 வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசாங்கம் அமைக்கவும் மற்றும் அரசாங்கங்களை மாற்றவும் பயன்படுத்தப்பட்டன.
அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதனை மார்ச் 31ஆம் திகதியன்று வெளியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஒன்றரை வருடங்களாக நாங்கள் செய்த ஆய்வுக்கமைய மார்ச் 31ஆம் திகதி அந்த ஆய்வு புத்தகத்தை வெளியிடுவோம். அதில் சாரா ஜஸ்மின் தொடர்பான தகவல்களையும் நாங்கள் வெளியிடுவோம். அத்துடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னால் இந்தியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இருந்ததா என்ற விடயங்களையும் இதில் கலந்துரையாடப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சகல கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் பதில் வழங்கப்படும். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கண்டி தலாதா பெரேஹரா மீது தாக்குதல் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தன. அது தொடர்பான தகவல்களையும் வெளியிடுவோம்.
இதேவேளை சஹரானுக்கு உதவிய அரசியல்வாதிகள் யார் என்ற தகவல்களையும் வெளியிட நடவடிக்கை எடுப்போம் என்றார்.
![]()