இலங்கை

பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கப்போகும் ‘கியூ ஆர்’; எதிர்க்கட்சி எச்சரிக்கை

நாடு மீண்டும் கியூ ஆர் (QR) குறியீடு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த குறியீடு எரிபொருள் ஒதுக்கீட்டுக்காக வழங்கப்படுவதால் கட்டாயமாக எரிபொருள் நுகர்வு கட்டுப்படுத்தப்பட்டு அதிருப்தி அதிகரித்து பல பொருளாதார பிரச்சினைகள் உருவாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

கேகாலை தேர்தல் தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் பேசுகையில்

இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் மக்களுக்கு அசௌகரியம் உருவாகியுள்ள இந்த நெருக்கடியிலிருந்து குறுகிய அரசியல் இலாபம் அடைய முயற்சிக்க மாட்டோம். இத்தகைய நிலைமை உருவாகும் என்று பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்து நாம் கூறி வந்த சந்தர்ப்பங்களில் ஆளும் தரப்பு அமைச்சர்கள் எம்மைப் பார்த்து சிரித்து கேலி செய்தனர். எமது கருத்துக்களை விமர்சித்தனர். எமது கருத்துக்களை வைத்து சேறு பூசினர்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் நமது நாட்டுக்கு எழும் சிக்கலான நிலைமை தொடர்பாக மாற்றுத் திட்டமொன்றை வகுக்குமாறு நான் கூறிய சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சர் கூற்றுப்படி நமது நாட்டிற்கு அவ்வாறு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று பிரஸ்தாபித்தார். உண்மையிலேயே நமது நாட்டிற்கு அவ்வாறு பிரச்சினை ஏதும் இல்லையென்றால் இவ்வாறு கியூ ஆர் குறியீடுகளை வழங்க வேண்டிய தேவையில்லை

மேலும் சிலர் எனது பேச்சை வைத்து கேலி செய்தனர். அவ்வாறு கேலி செய்து 12 நாட்கள் கடப்பதற்கு முன்பே கியூ ஆர் குறியீட்டை வழங்க அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ரஷ்யா மீது விதித்த தடைகளுக்கு 30 நாட்கள் காலக்கெடு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், நமது நாட்டிற்குத் தேவையான எரிபொருள் பெறுவதற்கு ரஷ்யாவுடன் பேசி வேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு நான் கூறினேன். அந்நாட்களில் அதை செய்யாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டு பல நாட்கள் கடந்த பிற்பாடு, இப்போது ரஷ்ய தூதுவரை சந்திக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து வருகின்றது. எதிர்க்கட்சி தரும் நல்ல ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு அரசாங்கத்தின் ஆணவ மனப்பான்மையும் அகங்காரமும் பெரிதாகி காணப்படுகின்றன

இந்த அரசாங்கத்திற்கு எவ்வாறு ஆட்சியை நடத்துவது என்பது தெரியவில்லை. ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான அரசாங்கம் மக்களையும் நாட்டையும் ஏமாற்றி, எந்த முன்னாயந்தமும் இல்லாமல் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து ஆட்சியை நடத்தி வருகிறது. வெற்றிகரமான ஆட்சிக்கு அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய மூலோபாயங்களை வகுக்க வேண்டும். இந்த அரசாங்கத்திடம் எந்த மூலோபாய திட்டமிடலும் இல்லை. நாம் இவற்றை கூறும் போது எமது கருத்துக்களை வைத்து சமூக வலைதளங்கள் வழியாக சேறுபூசும் நவடிக்கைகளை முன்னெடுக்க மட்டுமே அரசாங்கத்திற்கு அறிந்த ஒரே விடயமாக உள்ளது

இதுமட்டுமின்றி தரமற்ற மருந்துகளும் நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு போகும் போக்கைப் பார்த்தால், விவசாயிகளின் உரங்களுக்கும் கியூ ஆர் குறியீடு வைக்கப்படுமோ என்று அச்சம் காணப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் ஒழுங்கற்ற, திறனற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *