முச்சந்தி

தேசிய ஒருமைப்பாட்டுக்கு தன்னாட்சி அதிகாரமே வழி! – ஏகாதிபத்திய எதிர்ப்புடன் இணையுமாறு செந்தில்வேல் அழைப்பு

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படுவதே நிலையான தீர்வாக அமையும் என்று புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா. செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் மத்திய குழுவின் சார்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“மார்க்சிச லெனினிசக் கொள்கைகளில் உறுதியாக நின்று செயற்படும் எமது கட்சி, எக்காலத்திலும் சந்தர்ப்பவாத அரசியலை ஏற்றுக்கொண்டதில்லை. இலங்கையின் தற்போதைய இக்கட்டான சூழலில் ஏகாதிபத்திய மற்றும் நவகாலனித்துவக் கட்டுப்பாடுகளே நாட்டின் முன்னேற்றத்திற்குப் பிரதான முட்டுக்கட்டைகளாக உள்ளன.

அத்துடன், சாதியக் கட்டமைப்பு மற்றும் மதவாத அரசியல் செல்வாக்கு போன்ற நிலப்பிரபுத்துவ மிச்சங்கள் இன்றும் சமூக ஒடுக்குமுறைக்குக் காரணமாக அமைகின்றன. இவற்றுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இலங்கையை நான்கு தேசிய இனங்களையும் ஏனைய சிறுபான்மைக் குழுக்களையும் கொண்ட ஒரு பல்லின நாடாக அங்கீகரிக்கத் தவறுவதே இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கான முக்கிய தடையாகும். சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதிகள் இருதரப்பினருமே இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி, தன்னாட்சி அதிகாரங்களை வழங்குவதன் மூலமே நாட்டில் உண்மையான தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும். இந்தப் போராட்டமானது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *