எண்ணரிய அதிசயங்கள் எத்தனையோ கோடி!…. கவிதை… ஜெயராமசர்மா

விண்ணுக்குள் புதைந்திருக்கும் விநோதங்கள் எத்தனை
மண்ணுக்குள் மறைந்திருக்கும் மகத்துவங்கள் எத்தனை
எண்ணரிய பொக்கிஷங்கள் இவ்வுலகில் எத்தனை
அத்தனையும் எமக்காக அமைந்திட்ட அதிசயம்
விண்மீன்கள் அதிசயம் வெண்ணிலவு அதிசயம்
வெப்பந் தருமாதவனும் மேலான அதிசயம்
கருமேக மதிசயம் காரிருளி மதிசயம்
இடிமின்ன லதிசயம் எல்லாமே அதிசயம்

கோடையிடி யதிசயம் கொட்டுமழை யதிசயம்
நீள்கடலு மதிசயம் நெடியமலை யதிசயம்
நீரூற்று மதிசயம் நெருப்பாறு மதிசயம்
பனிபடர்ந்த இடமெல்லாம் பார்ப்பதற்கு மதிசயம்
வண்ணமலர் அத்தனையும் எண்ணவெண்ண அதிசயம்
மாதுளைக்குள் சுவைமுத்து மறைந்திருக்கு மதிசயம்
காயெல்லாம் முற்றிக் கனியாக உருமாறி
கனிவான சுவையீந்து மாறுவது மதிசயம்
எண்ணரிய அதிசயங்கள் எத்தனையோ கோடி
மண்மீதும் விண்மீதும் நிறைந்துமே இருக்கு
பகுத்தறிவு பேசும் பாரிலுள்ள மக்கள்
நினைக்காத அதிசயமாய் நிற்கிறார் உலகில் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()