இலங்கை

கோட்டாபயவை உருவாக்கிய நரிகள் இன்று எம்மைக் குற்றம் சொல்கின்றன!; விமல் அணியினரை விளாசும் சஜித் தரப்பு

“குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம்” என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில்  சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்ஷ முகாமிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷவை உருவாக்கி, அவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டபோது எதிர்க்கட்சிக்கு வந்து அவர்களுக்கு எதிராகவே கூச்சலிட்ட நரிகள்தான் இன்று எமது எதிர்க்கட்சியைக் குற்றம் சொல்ல எத்தனிக்கின்றனர்.

விமல் வீரவன்ச போன்ற அந்தப் போலித் தலைவர்களை நாட்டு மக்கள் ஏற்கனவே ஒதுக்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். எனவே, எதிர்க்கட்சியின் பொறுப்பை நாங்கள் முறையாக நிறைவேற்றுவோம்.

எமக்கு ஒரு சிறந்த எதிர்க்கட்சியும், பலமான எதிர்க்கட்சித் தலைவரும் உள்ளனர். கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில், இந்த அரசில் உள்ள எவராலும் எமது எதிர்க்கட்சியில் ஒரு திருடன், ஊழல்வாதி அல்லது மோசடிக்காரன் இருப்பதாக நிரூபிக்க முடியவில்லை. அந்தளவுக்கு நாம் தூய்மையான அரசியலை முன்னெடுத்து வருகின்றோம்.

அநுரகுமார திஸாநாயக்க அல்லது ஜே.வி.பி. செய்ததைப் போல், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தைச் சிதைத்து, அதன் மூலம் எழும் மக்களின் போராட்டங்களைப் பயன்படுத்தி, வீடுகளுக்குத் தீ வைத்து, மனிதர்களைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.

ஒன்றிணைந்து அரசைக் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்தைத் தயாரியுங்கள். அதை விடுத்துக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்காதீர்கள் என விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் என்று சமிந்த விஜேசிறி மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *