உலகம்

இந்தியாவில் இருந்த ஈரானிய கடற்படையினர் நாடு திரும்பினர்!

இந்தியாவின் கொச்சின் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானுக்குச் சொந்தமான ‘ஐரிஸ் லவான்’ (IRIS Lavan) கப்பலில் இருந்த மாலுமிகளில் ஒரு தொகுதியினர்  ஈரான் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

183 பணியாளர்களைக் கொண்ட அந்தக் கப்பலில் இருந்த ஒரு தொகுதியினரை விசேட விமானம் மூலம் ஆர்மீனியாவிற்கு அழைத்துச் செல்ல ஈரான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த மாலுமிகளும், இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் உடல்களும் ஆர்மீனியாவிலிருந்து தரைவழியாக ஈரானுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் கலந்துகொள்ள வந்த மற்றொரு ஈரானியப் போர்க்கப்பலில் இருந்த 204 மாலுமிகள் தற்போது இலங்கையின் வசம் உள்ளதுடன், அவர்கள் வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஈரானிய தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் இடம்பெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துக்கொண்டு மீண்டும் ஈரான் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) கப்பல், இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளானது. இதன்போது கப்பலில் இருந்த 32 மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

அக்கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளின் சடலங்களும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையின் நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சடலங்கள் நேற்று (13) விசேட விமானம் மூலம் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 32 மாலுமிகளில், குணமடைந்த 28 பேர் தற்போது கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். மேலும் நான்கு ஈரானிய மாலுமிகள் தொடர்ந்தும் அந்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *