உலகம்

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 10 ஏவுகணைகள் ; பீதியை கிளப்பும் வட கொரியா

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன் – ரஷ்யா போர் என உலகம் அசாதாரண சூழலில் இருந்து வரும் சூழலில் வட கொரியா வழக்கம்போல ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

ஆனால் இந்த முறை ஜப்பான் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்கொரியாவின் தகவலின்படி, வட கொரியாவின் சுனான் (Sunan) பகுதியிலிருந்து மதியம் 1:20 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. சுமார் 10 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டுள்ளன.

இது வடகொரியாவின் வழக்கமான சோதனைகளை விடப் பெரிய அளவிலான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை நோக்கிச் சென்றன. அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த ஏவுகணை வீச்சு குறித்து ஆய்வு செய்யவும், ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதைச் கண்டறியவும், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அவசரக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்தி வரும் வருடாந்திர ராணுவப் பயிற்சிக்கு தனது எதிர்ப்பைக் காட்டவே வடகொரியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்தப் பயிற்சிகள் தொடர்ந்தால் பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *