வெற்றி பெறும் நோக்கம் வலுவாக இருந்தால் தோல்வியால் உங்களை வெல்ல முடியாது

வெற்றி பெற வேண்டும் என்ற உங்கள் நோக்கம் வலுவாக இருந்தால், தோல்வி உங்களை ஒருபோதும் வெல்ல முடியாது. எனவே கல்வியை ஒரு சுமையாகக் கருதாமல் உங்கள் சிறகுகளை விரிப்பதற்கான சக்தியாகப் பாருங்கள் என மாணவர் மத்தியில் உரையாற்றிய சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த மேலும் பேசுகையில்,
கல்வி என்பது வெறும் மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமல்ல, அது உங்கள் குணாதிசயத்தைச் செதுக்கும் ஒரு கருவி என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். ஆடு ஆடாக இருந்தால் வெட்டப்படும், அதுவே சிறுத்தையாக இருந்தால் யாராவது நெருங்க முடியுமா? ஆகவே நீங்கள் சிறுத்தையாக மாறுவதற்கு ஒரே வழி கல்விதான். எனவே உங்கள் கனவுகளைப் பெரிதாகக் காணுங்கள். உங்கள் உழைப்பால் அந்த கனவுகளை நனவாக்குங்கள். இந்த தேசம் உங்களை நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார் .
தொடர்ந்து போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும், இல்லங்களுக்கான வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கினார்
ஆரம்பப் பாடசாலைகளின் வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட பாடசாலையாக, மிகச் சிறந்த ஒழுக்கத்துடனும் நேர்த்தியான ஒழுங்குபடுத்தலுடனும் வித்தியாலயத்தின் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
வித்தியாலய முதல்வர் அன்ரண்டயஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக சிறீதரன் எம்.பி.யும் , சிறப்பு விருந்தினராக கரைச்சிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு. தர்மரத்தினம் கௌரவ விருந்தினராக கிராம சேவகர் திருமதி ந. வாசுகி ஆகியோரும் கலந்துகொண்டதோடு, அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
![]()