முச்சந்தி
டிரம்பின் போர் வெற்றிப் பெருமிதம்!… ஈரானின் போர் நிறுத்த நிபந்தனை சாத்தியமா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரான் போரின் முதல் நாளிலேயே அமெரிக்க வெற்றி பெற்றது என்று டிரம்ப் கூறியுள்ளார். ஈரானில் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கிய 12 நாட்களுக்குப் பிறகும் அதனையே டிரம்ப் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். “நாங்கள் வென்றோம். நாங்கள் பந்தயத்தில் வெற்றி பெற்றோம். முதல் ஒரு மணி நேரத்திலேயே ஈரான் முடிந்துவிட்டது” என டிரம்ப் கூறிய வார்த்தைகள் உலகளவில் நகைப்புக்கிடமாகி உள்ளது)நாங்கள் வெற்றி பெற்றோம் என ஈரானுடனான போரில் டிரம்ப்பின் வெற்றி அறிவிப்புகள் யதார்த்தத்தை மீறுகின்றனவாகவே இருக்கின்றன. எப்போதும் அமெரிக்க ஜனாதிபதி தனது தவறுகளை அரிதாகவே ஒப்புக்கொள்வார். இம்முறையும் அதுவே நடந்துள்ளது. ஆனால் ஈரானுடன் தேவையற்ற போர் என சிஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிரம்ப்பின் வெற்றிக் கொக்கரிப்பு:
ஈரானுடனான போர் தொடங்கியதில் இருந்து டிரம்ப் வெளியிடும் செய்திகள் அனைத்தும் முரண்பாடகவே உள்ளது. அரசியல் பயணம் தொடங்கி அவரது ஆட்சியிலும் வாய்ச்சவாடல் எப்போதும் உண்மைக்கு புறம்பானதாகவே இருக்கும். ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் அவரது அணுகுமுறை இம்முறையும் வேறுபட்டதல்ல.
என்னதான் டிரம்ப் வெற்றிக் கொக்கரிப்பை கூவினாலும்,மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் புதிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.

எப்போதும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் வெற்றி பெறுவதாகச் சொல்லும் பழக்கம் கொண்டவர். அவர் பொருளாதாரம் பற்றி விவாதித்தாலும் சரி அல்லது சர்வதேச அரசியல் பற்றி விவாதித்தாலும் சரி, அடிப்படை உண்மைகள் மிகவும் நுணுக்கமாக இருந்தாலும் சரி, அவர் பெரும்பாலும் வெற்றியை அறிவிக்கும் வழக்கம் கொண்டவர் என்பது வெளிப்படை.
ஆனால் ஈரானுடனான நடந்து வரும் போரை “வெற்றி” என்று அவர் அடிக்கடி கூறுவது குறிப்பிடத்தக்க அபாயங்களை உருவாக்கி இருக்கிறது என பென்டகன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலை நிர்வகிப்பது குறித்த பொதுமக்களின் கருத்துக்கு மட்டுமல்ல, அவரது பரந்த இராஜதந்திர உத்திக்கும் இது பாரிய தோல்வியை விளைவுக்கும் சாத்தியங்கள் உள்ளன.
இந்த போரின் முதல் நாளிலேயே அமெரிக்க வெற்றி பெற்றது என்று டிரம்ப் கூறியுள்ளார். ஈரானில் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கிய 12 நாட்களுக்குப் பிறகும் அதனையே டிரம்ப் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். “நாங்கள் வென்றோம். நாங்கள் பந்தயத்தில் வெற்றி பெற்றோம். முதல் ஒரு மணி நேரத்திலேயே ஈரான் முடிந்துவிட்டது” என டிரம்ப் கூறிய வார்த்தைகள் உலகளவில் நகைப்புக்கிடமாகி உள்ளது.
வான் தாக்குதல்கள் தீவிரம்:
அதேவேளை அமெரிக்க – இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஈரான் வெளியிட்டுள்ள போர்நிறுத்த நிபந்தனைகள் வெறுமனே ஒரு பேச்சுவார்த்தை ஆவணமாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக அது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை போல் தெரிகிறது என ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
போரை நிறுத்த ஈரான் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒவ்வொன்றும் வளைகுடா நாடுகளின் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெஹ்ரான் அரசின் முக்கிய போர் நிறுத்த நிபந்தனைகள் தொடர்பாக அரபு நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் பல ஆசிய, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளன.
ஈரானின் பதில் தாக்குதல் வியூகம்:

ஈரானின் பதில் தாக்குதல் என்பது போரை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு வியூகத்தை பிரதிபலிக்கிறது. போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளை தோற்கடிக்க முயற்சிப்பதற்கு பதிலாக, ஈரான் மோதலை புவியியல் ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் விரிவுபடுத்துவதாகத் தெரிகிறது.
ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், ஈரான் அரசின் ஆதரவு பெற்ற குழுக்கள் பல்வேறு கட்ட தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தியுள்ளது. அதே நேரத்தில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளி குழுக்கள் மேற்கத்திய ராணுவ நிலைகள் குறி வைத்து தகர்த்து வருகின்றன.
இந்த முறை ஈரான் கணிக்க முடியாத தாக்குதலை நம்பியிருப்பதை காட்டுவதாக சர்வதேச ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். போர்க்களத்தை விரிவுபடுத்துவதன் மூலம், எதிரிகளுக்கு அரசியல் மற்றும் பொருளாதார பேரிழப்புகளை ஏற்படுத்த முடியும் என ஈரான் நம்புகிறது.
ஈரான் போர் நிறுத்த நிபந்தனை
ஈரானின் போர் நிறுத்த நிபந்தனைகளாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ICC) ஒப்படைக்க வேண்டும், இஸ்ரேல் தனது படைகளை அக்டோபர் 7-க்கு முந்தைய எல்லைகளுக்குத் திரும்பப் பெற வேண்டும் என்பன முக்கியமானவையாகும்.
அத்துடன் அரபு மண்ணில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவ தளங்களும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதுவரை விதிக்கப்பட்ட அனைத்து பொருளாதாரத் தடைகளுக்கும் ஈரான் இழப்பீடு பெற வேண்டும் மற்றும் அதிபர் டிரம்ப், ஈரானியத் தலைவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.
மற்றொரு முக்கிய நிபந்தனையாக அதிபர் டிரம்ப்பின் காசா திட்டத்தை (Gaza plan) ரத்து செய்ய வேண்டும். ஈரான் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்கி, முடக்கப்பட்ட நிதியைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரானின் அணுசக்தி உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். லெபனான், சிரியா மற்றும் ஏமன் நாடுகளிலிருந்து (வெளிநாட்டுப் படைகள்) வெளியேற வேண்டும். அதிபர் டிரம்ப், அயதுல்லா காமேனியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஈரான் போர் நிறுத்த நிபந்தனைகளை விதித்துள்ளது.
அத்துடன் வளைகுடாவில் நீண்ட காலமாப பொருளாதார தடைகளை எதிர்த்து போராடிய ஈரான், இதுவரை விதிக்கப்பட்ட ஒவ்வொரு பொருளாதாரத் தடைக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.2026-ஆம் ஆண்டின் மார்ச் மாதம் உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. இப்போது கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்காவின் அதிநவீன ரேடார் அமைப்புகளை ஈரான் செயலிழக்கச் செய்ததும், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததும் மத்திய கிழக்கின் அதிகார மையத்தையே மாற்றி அமைத்துள்ளது.
ஈரான் வெல்ல முடியாத சக்தியா ?
பொருளாதாரத் தடைகள், ஏவுகணைத் தாக்குதல்கள் என அனைத்தையும் தாண்டி, தற்போது தங்களை ஒரு ‘வெல்ல முடியாத சக்தியாக’ அவர்கள் கருதுகிறார்கள். அத்துடன் அவர்கள் எதற்கும் துணிந்துவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும் அமெரிக்காவின் நவீன போர் தொழில்நுட்பங்களையே (Radar blinding) முடக்கிய பிறகு, அவர்களுக்கு இந்த நிபந்தனைகள் சாத்தியமற்றதாகத் தெரியவில்லை.
தற்போது உலகம் ஒரு விளிம்பில் நிற்கிறது. ஈரானின் இந்த நிபந்தனைகளை ஏற்றால், அது பல தசாப்தங்களாக நிலவி வந்த மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும். மறுபுறம், இதை நிராகரித்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் (Energy Supply) முடங்கி, உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயம் உள்ளது.
ஈரான் இப்போது வெறும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; அவர்கள் மேற்குலக நாடுகளின் கைகளை முறுக்கி தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்கிறார்கள். மேற்குலகின் மிரட்டல் காலம் முடிந்துவிட்டது, இப்போது வளைகுடாவில் ஈரான் அரசியலை தீர்மானிக்கும் காலம் தொடங்கிவிட்டது என்றும் சில அரபு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிபந்தனைகளை அமெரிக்கா அப்படியே ஏற்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், இவற்றை முழுமையாக நிராகரிக்கவும் முடியாத ஒரு இக்கட்டான சூழலில் உலகம் இருக்கிறது.
தேவையற்ற போரென சிஐஏ எச்சரிக்கை!
சிஐஏ முன்னாள் இயக்குநர் ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் குறித்து மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜோன் ஓ பிரன்னன் (John O. Brennan ) நடைபெறும் யுத்தம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய தவறு என்றும். அமெரிக்கா இந்த நூற்றாண்டில் இரண்டு மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.ஒன்று 2003 இல் நடைபெற்ற ஈராக் மீதான யுத்தம், மற்றொன்று இப்போது ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல். அவரின் கருத்துப்படி, ஈராக் போரின் தவறை மீண்டும் அமெரிக்க செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த போர் தேவையற்றது, இந்த தாக்குதல் தேவையற்ற உயிரிழப்புகளை அதிகமாக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும் டிரம்ப் அரசாங்கம் காரணங்களை உருவாக்குகிறது என்பது அவரின் குற்றச்சாட்டாகும். ஈரானால் உடனடி ஆபத்து (imminent threat) இல்லை. ஆனாலும் போரை நியாயப்படுத்த அமெரிக்க நிர்வாகம் காரணங்களை உருவாக்குகிறது. இதுவே இஸ்ரேல் மேற்கொள்ளும் அரசியல் தாக்கம் காரணமாக அமெரிக்க தேவையற்ற போரை நடாத்துகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு நீண்ட காலமாக ஈரான் மீது தாக்குதல் நடத்த விரும்பினார். அவர் டிரம்பை இந்தப் போர் நடவடிக்கைக்கு இழுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு நிலைமை மேலும் மோசமாகும் என்பது அவரின் எச்சரிக்கையாகும்.
ஈரான் ஒரு பெரிய நாடும், 90 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.இந்த போர் பல வருடங்களுக்கு நீடித்தால், பிராந்திய குழப்பத்தை உருவாக்கலாம். ஈரான் போர் ஒரு பெரிய அரசியல் தவறு.
இது 2003 ஈராக் போரின் போதான தவறுகளை மீண்டும் அமெரிக்கா செய்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த போர் தேவையற்றது. போருக்கான காரணங்கள் இஸ்ரேலிய அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டவை. மத்திய கிழக்கில் நீண்டகாலக் குழப்பம் ஏற்படும் வகையில் இந்த போர் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
![]()
