உலகம்

ஐரிஸ் தேனா மீதான தாக்குதல் – இலங்கையில் இருந்து ஈரானுக்கு அனுப்படும் சடலங்கள்

இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதன்படி, 84 பேரின் உடல்கள் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த கடற்படை வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து ஈரான் நோக்கி சென்று கொண்டிருந்த ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்து.

காலியில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த கப்பலில் 180 பேர் வரையில் இருந்தாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலின் பின்னர் இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 32 பேரை மீட்டிருந்தது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.

மேலும், இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 84 பேரி சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு நடமாடும் குளிர்பதன சேமிப்புப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 11ஆம் திகதி காலி தலைமை நீதவான் சமீர தொடங்கொட இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இதற்கிடையில், தற்போது இலங்கையின் பராமரிப்பில் உள்ள ஈரானிய மாலுமிகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்க அதிகாரிகளுக்கும் இலங்கையில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

காலி கடற்பரப்பில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஐரிஸ் தேனா தேனா கப்பலில் இருந்து மொத்தம் 32 மாலுமிகள் மீட்கப்பட்டனர், மேலும் ஐரிஸ் தேனா புஷேர் கப்பலில் இருந்து 204 மாலுமிகள் மீட்கப்பட்டு தற்போது இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், ஈரானிய மாலுமிகள் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் குறித்து குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, மனிதாபிமான அடிப்படையில் ஈரானிய மாலுமிகளுக்கு அரசாங்கம் ஒரு மாத இலவச விசாக்களை வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *