முச்சந்தி

நேபாளத்தில் இளம் பாடகர் பிரதமராகிறார்!… Gen Z எழுச்சியும் புதிய தலைமையும்… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(நேபாள அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பாரம்பரிய கட்சிகளுக்கு எதிராக, இளம் தலைமுறையினர் புதிய அரசியல் அலையை உருவாக்கியுள்ளனர். அவர்களின் பிரதிநிதியாக களமிறங்கிய 35 வயதான ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா தற்போது பிரதமராகிறார்)
நேபாள தேர்தலில் புதிய அலை உருவாகி உள்ளது. பழைய மரபு கட்சிகளை வீழ்த்தி 35 வயது இளம் பாடகரான பாலேந்திர ஷா பிரதமராகிறார்.
 
நேபாள அரசியலில் புதிய திருப்பம்:
நேபாளத்​தில் கடந்த ஆண்டு ஆட்​சிக் கவிழ்ப்​புக்கு வித்திட்ட ஜென் இசட் (Gen Z) இளைஞர்​களின் போராட்​டத்​துக்​குப் பிறகு, அந்​நாட்​டின் முதல் பொதுத் தேர்​தல் மார்ச் 5ம் திகதி நடை​பெற்​றது. நேபாள நாடாளு​மன்​றத்​தின் கீழ​வை​யான பிர​தி​நி​தி​கள் சபை​யில் மொத்​தம் 275 இடங்​கள் உள்​ளன. இதில் 165 இடங்​கள் நேரடித் தேர்​தல் மூல​மும் மீத​முள்ள 110 இடங்​களுக்கு விகி​தா​ச்சார பிர​தி​நி​தித்​துவ முறை​யிலும் உறுப்​பினர்​கள் தேர்ந்​தெடுக்​கப் படுவார்கள்.
நேரடி தேர்​தலில் 3,406 வேட்​பாளர்​களும், விகி​தா​ச்சார முறை​யில் 3,135 வேட்​பாளர்​களும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்தம் 1.89 கோடிக்​கும் அதி​க​மான தகுதிபெற்ற வாக்காளர்​களில் சுமார் 60 சதவீத வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகின என்று நேபாள நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் நேபாளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஆர்எஸ்பி கட்சி, முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் நேபாள அரசியலில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது. நேபாளத்தில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சிகளை புதிய கட்சியான ஆர்எஸ்பியின் வரவு பாரியளவில் பின்னிலை அடையச் செய்துள்ளது.
அதேவேளை கடந்த 27 ஆண்டுகால நேபாள அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 1999இல் நேபாள காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. இருப்பினும் உட்கட்சி அரசியல் காரணமாக ஓராண்டு காலத்தில் அந்த ஆட்சி கவிழ்ந்தது.
இளம் தலைமுறையினர் வெற்றி:
நேபாள அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பாரம்பரிய கட்சிகளுக்கு எதிராக, இளம் தலைமுறையினர் புதிய அரசியல் அலையை உருவாக்கியுள்ளனர். அவர் களின் பிரதிநிதியாக களமிறங்கிய 35 வயதான ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா, தலைமையிலான ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திர கட்சி, நேரடி தேர்தல் நடந்த 165 தொகுதிகளில் 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
விரைவில் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார். நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26ல் சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்தது. ஏற்கனவே அங்கு ஊழல், வேலையில்லா திண்டாட்டம் குறித்து அதிருப்தியில் இருந்த இளைஞர்கள் இதற்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது. 76 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து அந்நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், மார்ச் 5ம் தேதி நேபாளத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் பிரதமர்களான சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் யு.எம்.எல். கட்சி, புஷ்ப கமல் தாகல் பிரசண்டாவின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன், 2022ல் துவங்கப்பட்ட ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி. கட்சி போட்டியிட்டது.
நேபாள தேர்தலில் புதிய அலை:
நேபாள நாடாளமன்றுக்கு மொத்தம் 275 உறுப்பினர்களுக்கு இரண்டு முறைகளில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், 165 தொகுதிகளில் மக்கள் நேரடியாக வாக்களித்து உறுப்பினர்களை தேர்வு செய்வர். மீதமுள்ள 110 இடங்களுக்கான கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் எண்ணிக்கை சதவீதத்தின் அடிப்படையில், விகித்தாச்சார முறையில் நிரப்பப்படும்.
கடந்த ஆண்டு நேபாள நாடு சந்தித்த மிகப்பெரிய போராட்டத்துக்கு பின் நடந்த தேர்தல் என்பதால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்த 5ம் திகதியே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. மார்ச் 6ம் திகதி முதல் முடிவுகள் வெளியாக துவங்கின. தற்போது முழுமையான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நேரடி தொகுதிகளில் 165ல் 125 இடங்களை கைப்பற்றி, பாலேந்திர ஷாவின் ஆர்.எஸ்.பி., கட்சி அபார வெற்றி பெற்றது. மொத்தம் 25 லட்சத்துக்கு மேலான ஓட்டுகளையும் பெற்றுள்ளது. பிற கட்சிகள் எதுவும் 10 இலட்சம் வாக்குகளை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளமன்றில் பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை. பிரதிநிதிகள் சபையில் ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.பி., கட்சிக்கு 50க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும். இதன் மூலம் பாலேந்திர ஷா நேபாளத்தின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார். நேபாள பாராளமன்ற வரலாற்றில் இளம் வயதில் பிரதமர் பதவி வகிக்க உள்ள தலைவராக அவர் உருவெடுத்துள்ளார்.
தேர்தலில் 14 பெண்கள் வெற்றி!
நேபாள நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுதேர்தலில் பல பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர். நேபாள நாடாளுமன்றத்துக்கு பொது தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. நேபாளத்தில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் நேபாள நாடாளுமன்ற தேர்தலில் 14 பெண்கள் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. அவர்களில் 13 பெண்கள் பாலேந்திரா ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் நேபாளி காங்கிரஸ்(என்சி) கட்சியை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இந்த 14 பெண்கள் என்பது மொத்தமுள்ள இடங்களில் 8 சதவீதம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் தோல்வி:
இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை எதிர்த்து போட்டியிட்ட பாலேந்திர ஷா, 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை தோற்கடித்தார். மற்றொரு முன்னாள் பிரதமரான மாதவ் நேபாள் என்பவரும் ஆர்.எஸ்.பி., வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். இந்தத் தேர்தலில், 14பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் பதின்மூன்று பேர் ஆர்.எஸ்.பி., கட்சி யைச் சேர்ந்தவர்கள். பாரம்பரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் 17 இடங்களிலும், நேபாள கம்யூனிஸ்ட் யு.எம்.எல்., 7 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி மற்றும் அரசியலில் மாற்றம் போன்ற கோரிக்கைகள் இந்த தேர்தலில் இளம் தலைமுறையினரால் முன் வைக்கப்பட்டன. அதையே தேர்தல் களத்தில் பிரதிபலித்த ஆர்.எஸ்.பி.,க்கு புதிய வாக்காளர்கள் இடையே அமோக ஆதரவு கிடைத்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Gen Z இளைஞர் புரட்சி :
1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலை முறையினர் என்று நேபாளத்தில் வரையறுக்கப்படும் இளைஞர்கள், வேலையின்மை, வறுமை, மற்றும் அரசின் அப்பட்டமான ஊழல்கள் என பல்வேறு பிரச்சனைகளால் அவர்கள் விரக்தியின் உச்சத்தில் கடந்த ஆண்டு பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பிரதமர் இல்லத்தை அடித்து நொறுக்கியதுடன், பாராளமன்றத்தை தீ வைத்து கொளுத்தினர். இதையடுத்து நேபாள அதிபர், பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்தனர். நேபாள பிரதமர் நாட்டை விட்டு வெளியேறினார்.
நேபாளத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் 2008-ம் ஆண்டு மே மாதம் இந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 239 ஆண்டுகளாக இருந்து வந்த மன்னராட்சியை அகற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்துக்கு அப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் 16,000 பேர் உயிரிழந்தனர்.
உணர்ச்சிபூர்வமான இளைஞர் புரட்சியால், கொந்தளிக்கும் நிலைக்கு நேபாளம் சென்றது. சமூக வலைத்தளங்கல் தடை செய்யப்பட்ட நிலையிலும் உணர்ச்சிபூர்வமான இளைஞர் போராட்டம் நேபாளத்தில் தொடர்ந்தது.
இளைஞர் எழுச்சியும் புரட்சியும்:
நேபாள அரசு, Facebook, Instagram, YouTube உள்ளிட்ட 26 முக்கிய சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்ததால்தான் இந்த ஆவேசப் போராட்டம் வெடித்தது. இந்த தளங்கள் நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்படாததே தடைக்கான காரணம் என அரசு கூறினாலும், இளைஞர்கள் இதை நம்பவில்லை.
ஆயினும் உண்மையான காரணம் இதுதான். சமூக ஊடகத் தடை என்பது ஒரு தீப்பொறிதான். பல ஆண்டுகளாக நேபாள இளைஞர்கள் மனதில் குமுறிக் கொண்டிருந்த கோபம்தான் இந்த போராட்டம். வேலையின்மை, வறுமை, மற்றும் அரசின் அப்பட்டமான ஊழல்கள் என பல்வேறு பிரச்சனைகளால் அவர்கள் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். இதற்கிடையில், #NepoKid (#ஊழல்_பிள்ளைகள்) என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவி, அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கை முறையையும், சாதாரண மக்களின் வறுமையையும் ஒப்பிட்டு, அவர்களின் கோபத்தை மேலும் தூண்டியது.
போர்க்களமான தலைநகர்:
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் காத்மண்டுவில் கூடி, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். காவல்துறை அடக்குமுறை தொடர்ந்தது. போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறை தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியது. சில இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் அதிர்ச்சியூட்டும் மரணங்களாக போராட்டங்களில் பல இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
காத்மண்டூவில் மாற்றம் எங்கள் தலைமுறையில் தொடங்க வேண்டும் என இளைஞர்கள் ஆவேசமாக முழங்கினர். வெறும் சமூக ஊடகங்களுக்காக மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்திற்காகவே இந்த போராட்டம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தினர். கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்ட்த்தின் விளைவாக, இந்த தேர்தலில் நேபாள வரலாற்றில் அரசியல் மற்றும் சமூக அமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *