விடுதலைப் புலிகள் கூட என்னை கௌரவமாக நடத்தியிருப்பர்; சுரேஷ் சலே வேதனை- கம்மன்பில தெரிவிப்பு

விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்றிருந்தாலும் இந்தளவுக்கு கீழ்த்தரமான முறையில் என்னை நடத்தியிருக்கமாட்டார்கள். இராணுவத்தில் இருந்த எனக்கு அவர்கள் உரிய கௌரவத்தை வழங்கியிருப்பர்கள். ஆனால் இப்போது நான் சாதாரண கைதிக்கு கிடைக்கும் வசதிகள் கூட இல்லாத அறையில் வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கின்றேன் என்று கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலே தன்னிடம் தெரிவித்ததாக பிவிதுறு ஹெல உறுமய தலைவரான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை நேற்று புதன்கிழமை பார்வையிட்ட பின்னர் ஊடாகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கம்மன்பில இதனை கூறியுள்ளார்.
இதன்போது கம்மன்பில ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய சுரேஷ் சலே நாட்டின் மதிக்கப்பட வேண்டிய வீரர். அவரை தற்போது பார்வையிடுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவரின் சட்டத்தரணியாக நான் இன்றைய தினத்தில்(நேற்று )குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தேன். அவர் கவலைக்கிடமான நிலைமையிலேயே இருக்கின்றார்.
அவர் என்னை சந்தித்த போது, ”சேர் என்னை விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்றிருந்தாலும் இந்தளவுக்கு கீழ்த்தரமான முறையில் நடத்தியிருக்கமாட்டார்கள். நான் யுத்தக் களத்தில் என்ன செய்தேன் என்பது அவர்களுக்கு தெரியும். இதற்காக அவர்கள் எனக்கு உரிய கௌரவத்தை வழங்கியிருப்பர்” என்று என்னிடம் கூறினார்.
பாதாளக் குழுக்களை சேர்ந்த பலரும் பல்வேறு அறைகளில் இருக்கும் நிலையில், சுரேஷ் சலே மலசல கூடத்திற்கு முன்னால் உள்ள தண்டனை அறை என்று கூறப்படும் கூடத்திலேயே இருக்கின்றார். அங்கு மலசல கூடம் முன்னால் இருப்பதால் அடிக்கடி நாற்றமடிப்பதுடன், இரவில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கின்றது என்று தெரிவிக்கின்றார். அவர் பத்திரிகையை கீழே விரித்து உறங்குகின்றார். அந்த அறையில் காற்று இல்லை, சூரிய வெளிச்சமும் கிடைப்பதில்லை. புத்தகங்கள், பத்திரிகைகளும் வழங்கப்படுவதில்லை. அவர் சாதாரண சிறைக் கைதிகளுக்கு கிடைக்கும் வசதிகள் கூட இல்லாத நிலையில் பெரும் கஸ்டத்துடனேயே இருக்கின்றார். நாட்டை மீட்டெடுத்த இராணு வீரருக்கு உயிரே வேண்டாமென்ற நிலைமையே உள்ளது என்றார்.
![]()